May 16, 2020
1
May 16, 2020
1
ஒரு கதையில் முதல் வரியிலேயே வாசகனின் புருவமுயர்த்த முடியும் என்பதை இதுவரை நான் வாசித்ததிலேயே இதில்தான் முதன்முறையாக உணர்ந்தேன். முதல் பத்தியில் விரும்பியே அதன் ஆழத்திற்கு என்னை ஒப்புக்கொடுத்துவிட்டேன். அதன்பின் எனக்கு தெரிந்தவையெல்லாம் ஒளிகளின் நடனம்தான். இதனை அறிவியல் பூர்வமாய் முழுதுணர அவ்வறிவியல் கோட்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை. ஆனால், ஒரு கற்பனைவாதியாய் என்னால் இதில் திளைக்க முடிந்தது. அறிவியல் கதைக்கு ஜெ கூறும் அடிப்படைகளில் இது ஒன்று என்பது சமீபத்தில் தெரிந்துக் கொண்டேன்.
இணை பிரபஞ்சங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தாங்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்று நினைக்கையில், தங்களின் வரையறை (limitations) தெரிய வருகிறது. இது எதிர்காலத்தில் நடப்பதாய் எடுத்து கொள்ள வேண்டுமா, அல்லது சமகாலத்தில் வேறு கோள்களா, அல்லது ஒளியின் பயண வேகம் பொருத்து, எந்த பிரபஞ்சத்தின், எந்த பகுதியில், எந்த தொலைவில் இது நடக்கிறது, அது நமக்கு நிகழ்ந்த காலமாய் எடுத்து கொள்ள வேண்டுமா என்று எனக்கு தோன்றியது.
ஒவ்வொரு வரியும் ஆழ்ந்த தத்துவம் பொதிந்த அர்த்தங்களோடு வெளிப்பட்டன. எனக்கு இவ்வொரு கதையில் மேலை தத்துவவாதிகளின் கோட்பாடுகளுக்கிடையில் ஒரு கோடிழுத்துவிட்டதாய் தோன்றியது. Schelling naturphilosophie முதல் Schopenhauer மற்றும் ஹெடக்க்கரின் கோட்பாடுகள் எனக்குத் தோன்றின. கான்ட் பற்றி கதையில் வந்துவிடுகிறது.
“இது அவ்வளவு எளிதானது அல்ல. ஆம், நாம் படைப்பாளி. ஆனால் நாம் படைத்த ஒவ்வொரு பிரபஞ்சமும் அதன் சொந்த விதிகளையும், நியதிகளையும் கொண்டுள்ளது. அவற்றை மீறி நான் தலையிட முடியாது.
“படைப்பாளியாக இருப்பது என்பது அதிகாரம் மட்டுமல்ல, பொறுப்பும் கூட. நாம் படைத்த ஒவ்வொரு உயிரினமும் அதன் சொந்த தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.”
“அவற்றின் கண்களில் கோடி ஆண்டுகளின் ஞானமும், எல்லையற்ற கருணையும் பிரகாசித்தன”.
எனக்கு பிடித்த விஷயம், கதைக்குள் மனித உணர்வுகளால் சிடுக்கு ஏற்படுத்தி, அதற்கான விடுதலையை ஆன்மிகத்திலும், தத்துவத்திலும் தேடி தந்தது.
“நாம் தனித்தனி தீவுகள் அல்ல. நாம் ஒரே பெருங்கடலின் அலைகள். ஒவ்வொரு அலையும் மற்றொரு அலையை உருவாக்குகிறது, முடிவில்லா நடனத்தில்.”
ஆயிஷா வாசகனின் குரலாய் வருகிறாள். வாசகன் தவறவிடாத வண்ணம் அவளே எடுத்தும் சொல்லிவிட்டாள்.
நமது ஆராய்ச்சி இப்போது வெறும் அறிவியல் கண்டுபிடிப்பு மட்டுமல்ல. இது ஒரு தத்துவ பயணம், ஒரு நெறிமுறை கற்றல், ஒரு ஆன்மீக அனுபவம்.”
இவ்வருடத்தில் நான் வாசித்து திகைத்த, திளைத்த மிகச் சிறந்த கதை. கோதுமை மணி ஒரு தளத்தில் மனதிற்கு நெருக்கம் என்றால், இது வேறொரு தளத்தில் இன்னும் நெருக்கமாய். இந்த கதையை நான் மீள்வாசிப்பு செய்து கொண்டிருப்பேன் என்று தோன்றுகிறது.
இலக்கியத்தில், உருவாக்கும் படைப்பு என்பது வாசகனின் சிந்தனைக்கான ஒரு திறப்பாய், வாயிலாய் அமைய வேண்டும். அதன் தொடர்பான சாத்தியங்களை, வரலாறுகளை, நிகழ்வுகளை, தத்துவங்களை தேடி அவன் செல்ல வேண்டும்.
இக்கதையை வாசித்தபின், என் சிந்தனைகளை தொகுக்க முற்பட்டபோது, அது மூன்று வகையாக பிரிந்திருப்பதை உணர்ந்தேன்.
ஒன்று, கருப்பொருளின் சாத்தியம் மற்றும் அதன் தொடர்பான நிகழ்வுகள், தரவுகள் நோக்கிய என் பயணம்.
இரண்டு, கதைக்கொடுத்த மனித உணர்வுகள், கேள்விகள்
மூன்று, அந்த கேள்விகளின் வழியிலான ஒரு தத்துவ பயணம்
முதலாவதாக நான் சொன்னது, பொதுவாக யார் சென்று தேடினாலும் கிடைக்க கூடியவையே. அது இங்கு அவசியமல்ல.
இரண்டாவதான - மனித உணர்வுகளும், கேள்விகளும்
கதையில் ரேவன் என்ற மூத்த ஆராய்ச்சியாளர், தனது இளவலான ஆராய்ச்சியாளர் நிதன் உலகிற்கு தந்த தீர்வு, எதிர்காலத்தில் அல்லது நிகழ்காலத்தின் அதன் செயல்பாடு குறித்த தனது அனுமானங்களை,அல்லது தனக்கு உண்மையென்று தோன்றுபவையெ, ஒரு நிருபரின் வழியே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அந்த நிருபர், வாசகனுக்கான உருவகம். கதை போக்கில் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எவ்வித உணர்வுகளுக்கு ஆளாகிறோமோ அவையெல்லாம் அவன் வெளிக்காட்டுகிறான். அல்லது, அவன் வழியே அவ்வுணர்வுகளை நம் மூளையில் முடுக்கி விடுகிறார் என்று சொல்லலாம்.
கதையின் முடிவில்,
ரேவன் சொல்வது முற்றிலும் நம்பக்கூடியதா அல்லது அவரின் காழ்ப்புணரச்சியினால் சொல்லக்கூடியதா? என்ற கேள்வி எழுகிறது.
அதே சமயத்தில், சுருதி, அனுமானத்திற்கு பின் பிரத்யட்சம் இருக்கத்தானே செய்யும், அப்போது அவர் சொல்வதை நம்பாமல் இருக்க இயலவில்லை என்றும் தோன்றுகிறது.
வேர்முள் - வெளிப்படையாகத் தெரியாத, ஆனால் ஆழமாகச் சிக்கியிருக்கும் பிணைப்பு – அது நினைவாக இருக்கலாம், உறவாக இருக்கலாம், அல்லது வலியாக இருக்கலாம்.
இவை மூன்றிலும் பிணைக்கப்பட்டவளாய் அனுபமா!
தன் பருவக் காலந்தொட்டே தன்னுணர்வுகளையும் விட, தன் தாயின் உணர்வுகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் கட்டுண்டு வளர்ந்த ஒரு பெண். தனது ஆசைகளையும், தேவைகளையும் தாண்டி, தன் தாயை முன்னிருத்துபவளாய் இருந்திருக்கிறாள். ஏதேனும் ஒரு கட்டத்தில் அந்த கட்டுப்பாடு தளர்ந்ததா என்றால் இல்லை. திருமணம் ஆன பின்பும் கூட, தன் மகளை தன்னுணர்வுக்கு ஏற்றவாறு ஆட்டுவிக்க நினைப்பவளாய் கலையரசி, அனுபமாவின் தாய்.
போலி கெளரவத்தில் உழன்று திரிபவள். எழுத்தாளர் ஒரு வரியில் அவள் குணத்தை உடைத்துவிடுகிறார். திருமணம் முடிந்து வந்து தன்னறையில் நுழைகையில், தன் நாத்தனாரின் ஒரு பொருளை அப்புறப்படுத்தும் விதம் அவளை அப்பட்டமாய் காட்டிவிடுகிறது. பொதுவாக, அப்பா கெளரவ வசனங்கள் பேச கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம், அது பெரிதாய் பாதிக்காது. ஆனால் அம்மா அவ்வாறு செய்கையில் அதன் வீச்சம் அதிகம்.
அவ்வாறான தன் தாயின் பேச்சு, அந்த பேச்சு தந்த வலி, அனுபமாவை , தன் மேலேயே கழிவிரக்கம் கொள்ள வைக்கிறது.
அந்த கழிவிரக்கம், அவளை நினைவுகளுக்குள் இழுக்கிறது. அந்த நினைவுகளும் வலி தருகின்றன.
அந்த வலி நினைவில் தோன்றியதும், தான் விரும்பிய உறவு மனதில் அலைமோதுகிறது. உண்மையில் அந்த உறவை அமைத்து கொள்ள விரும்பினாளா? அல்லது அவளது ஆழம் அவள் தாயுடன் பிணைக்கப்பட்டிருந்ததா?என்ற கேள்வி என்னுள்.
தன் தாயின் முடிவுகளுக்கு எல்லாம் ஒத்துக்கொண்டது, தனது இயலாமையினால்தான் என்று ஒப்புக் கொள்கிறாள். ஆனால் எனக்கோ , அவள் தனக்கு வேண்டும் என நினைத்தது, உண்மையில் தன் அடி ஆழத்தில் அவ்வாறு நினைக்கவில்லை போலும் என்றும் தோன்றியது.
அவ்வுறவின் நினைவலை மோதினாலும் , அதனை இயல்பாக கடந்து செல்கிறாள்.அதில் ஆசுவாசமும் பெறுகிறாள். எந்த சலனமும் இல்லை.
சென்ற வாரம், ஜெ தளத்தில் ஒரு கட்டுரை. இக்கதையோடு ஒப்புநோக்க முடிபவை. கட்டுரையின் பெயர் - ஒரு உறவு, ஒரு நினைவு, ஒரு நூல். இருகதையிலும் கதை மாந்தர்கள் ஒரு விஷயத்தையே கையாளுகிறார்கள். ஆனால், கையாளும் கோணங்கள் வேறுபடுபவை. இரு வேறு கோணம்.
அதில் கதைநாயகன் சொல்வதாக ஒரு வரி - “சில விஷயங்கள் அப்படித்தான், அவை தோன்றி முற்றிலுமென மறைவதே அவற்றுக்கான ஒருமை (முழுமை).நகக்கீறல்மேல் பனிக்கட்டியை வைத்ததுபோல மெல்லிய ஒரு நிம்மதி”.
இங்கும் அனுபமா, நகக்கீறல்மேல் பனிக்கட்டியைத்தான் வைக்கிறாள். ஆனால் பனிக்கட்டியாய், தான் அடையாத உறவின் நினைவையே வைக்கிறாள் - Nostalgic Catharsis - நினைவின்வழி உளவெளியேற்றம்.
நினைவுகள் முள்ளாய் முளைவிடும்போது, அந்த துருத்தலில் சில நொடிகள் ருசித்திருந்துவிட்டு, அதனை களையும் வலி தெரியாமல் களைந்தெறிந்துவிட்டு , கரைக்கு மீள்வது.
பூன் முகாம், மாலை நடையில், பின்னிருந்து வந்து என் நடையுடன் இணைந்து கொண்டு, மெல்லிய குரலில், என்னிடம் பேசிய விசு என் கண் முன்னே தோன்றுகிறார். அதற்கு முன்னரே பிரமோதினியும் நானும் ஒருவாறு பழக ஆரம்பித்து இருந்தோம். முதல் நாள் மாலை அறிமுக அரங்கில், செளந்தர் அண்ணா, ஜெ உடனான விசுவின் பயணம் பற்றியும் அதை ஒட்டிய அவரது அனுபவ பகிர்வு விரைவில் வரப்போவது பற்றியும் கூறியிருந்தார்.
ஒரு அழகான, நிறைவான முதல் படைப்பு. தனது ஆதர்ச ஆசிரியருடனான பதினைந்து நாள் சாலை வழிப்பயணம், ஒரு பரந்து விரிந்த அனைத்து மாதிரியான நிலப்பரப்பில். மிக எளிமையான, நேர்மையான ஓர் அனுபவ பதிவு. நூலின் வெற்றி என நான் பார்ப்பது, ஆர்ப்பாட்டமில்லாத நம்ம வீட்டு பாட்டி, திண்ணையில் உட்கார்ந்து, பூ கட்டுவது போலான ஒரு அனுபவம்.
விசுவின் எழுத்தில் நகைச்சுவை உணர்வு இயல்பாகவே இருக்கிறது. பல இடங்களில் சிரித்தேன். மேலும் அவர் வழி நெடுக கூறியிருக்கும் நூல்களும், குடிகளின் வரலாறுகளும், இந்த புத்தகத்தை என்றென்றுக்குமான ஒரு உ.சா.துணையாக மாற்றுகிறது. இந்த புத்தகத்தை வாசித்தப்பின், நானும் பிரேமும், இவ்வழியில் ஒரு பயணம் மேற்கொள்வோமா என்று பேசிக்கொண்டோம்.
தனது வாழ்வின் அனுபவங்களையும், நிலத்தின் வரலாற்றினையும், அவற்றை ஒட்டுமொத்த உலக நிகழ்வுகளுடன் பொருத்தி பார்த்து ஒரு வரைபடம் தருவதும், நூல் முழுதும் விரவியிருக்கிறது. மிகவும் கவனத்துடன், ஒருமையுடன் எழுதியிருக்கிறார். எங்கும், எதிலும் மிகையில்லை. Diet Control-ல் இருக்கும் ஹீரோ போல், நூல் கட்டுடலுடன் இருக்கிறது. அவரின் ஒவ்வொரு வெளிப்பாடிலும், ஒரு கவனமான மாணவனின் தோற்றம் வெளிப்படுகிறது.
எனக்கு மிக பிடித்த விஷயம், ஒவ்வொரு கட்டத்திலும், ஜெ உடனான அவரது உரையாடல். அவர் கேட்ட கேள்விகளும், அதற்கு ஜெ அளித்த பதில்களும் முக்கியம் வாய்ந்தவை. அதை அவர் கையாண்டிற்கும் வடிவமும் அழகு.
இலக்கிய வாசகர்கள் பற்றிய அவரது அவதானிப்பு, பெருமளவிற்கு உண்மை என்றே தோன்றுகிறது. என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு நபர், எனது ஆசிரியர் என்று ஆகிவிட்ட நிலையிலும், இது வரையிலும் அவரை நேரில் பார்க்கும்போது, என்னுள்ளே உள்ள நடுக்கம் தணியவில்லை. அந்த நடுக்கம் பயமில்லை. ஒரு மாமலை முன் மடுவாய் உணருகிறேன். ஆனால், எனக்குள் இப்போது எல்லாம் சொல்லிக் கொள்வதுண்டு, “அந்த பிரமிப்பை நெஞ்சோரத்தில் சேமித்து வைத்துவிட்டு, அவர் முன் சென்று நில்”, என்று. அந்த வகையில், விசுவிடம் இன்னும் பிரத்யேகமான ஒரு வாஞ்சை உருவாகிறது. அவரது இந்த முன்னெடுப்பு, ஆசிரியர் முன் தயக்கத்தை களைத்து, முழுவதுமாய் ஒப்புக்கொடுக்கும் மாணவனின் மனநிலையை உருவாக்கி தந்து எனக்கு ஒரு வகையில் ஊக்கமளிக்கிறது.
மேலும், இப்பயணத்தை பற்றி குறிப்பாக சொல்லியாக வேண்டும். ஒவ்வொருவரின் ஆர்வமும், அந்த ஆர்வத்தை குலைத்திடாத மற்றவரின் அனுசரிப்பும், இவை அனைத்திற்கும் தடையிடாது, தலையிடாது பயணத்திற்கு மட்டுமே பயணம் என்ற நிலைக்கு ஒப்புக்கொடுத்து, அதன் விளைவாய் கிடைத்த ஒட்டுமொத்த அனுபவங்களையும் தனது நண்பர்களுக்கு பொக்கிஷங்களாய் மாற்றிய ஜெ மற்றும் அருணா அக்கா, தேரில் அமர்ந்திருக்கும் உற்சவர்களாகவும், இலக்கியம் என்ற வடத்தில் அணிவகுத்து, ஒருங்கிணைந்து தேரிழுத்த நண்பர்கள், பக்தர்களாகவும் தோன்றுகிறார்கள். (மறுபடி மறுபடி இதே படிமம், என்னுள் எழுந்துவந்து கொண்டே இருக்கிறது, அது சரி, திருவரங்கத்தில் இருந்து கொண்டு திருவீதி உலா பற்றி நினைக்காமலா?)
இலக்கிய ஞானிக்கு, அவரது சீடர்கள் சார்பில் விசு கொடுத்த இந்த சியமந்தகம், என்றும் ஓங்கி ஒளிர்வது.
“நினைக்கவே இனிமையாகத் தான் இருக்கிறதல்லவா? நாம் சற்று பொறுமையாக இருந்தால் போதும்நம்மிடமிருந்ததெல்லாம் நிச்சயமாகத் திரும்பி வந்து சேர்ந்துவிடும்”.
இவ்வரியை வாசித்து முடிக்கையில் மனதில் ஒரு சிறு அதிர்வுடன் கூடிய நிறைவு. என்னை விட்டு பிரிந்த உறவுகள் என் தோள் தொட்டு கூறிய ஆறுதல். அடுத்த சிலநிமிடங்கள் நான் அந்த நிறைவுடன் சுழன்று கொண்டிருந்தேன்.
அந்த ஒன்பது நாட்கள் நீலம் சூழ அவள் வாழ்ந்திருந்த கணங்கள், அந்த நீலத்தை மீண்டும் மீண்டும் உள்ளத்தில் மீட்டியபடி இருக்கிறாள். தன் வாழ்நாள் முழுவதுமாய். இறுதியில் அந்த நீலம் மட்டுமே போதுமானதாய் இருந்திருக்கிறது. கதையை வாசித்து முடிக்கையில், எனக்கும் Titanic படக்காட்சிதான் நினைவில் தட்டியது.
தனக்கு நெருங்கிய உறவில் இருந்தவர் என்றாலும், தனது தந்தையே ஆயினும், அந்த தருணத்தில் தன்னைத் தனியே விட்டுச்சென்றுவிட்டதை நினைத்து அவள் திகைத்திருக்கக்கூடும். அந்த சந்தர்ப்பத்தில் மனம் அவரை விட்டு அந்நியப்பட்டிருக்கும். அப்போது அவள் அண்டத்தையே தனது சொந்தமாக்கி கொள்கிறாள். அந்த மாலுமியை கூட அவள் அவ்வண்டத்தின் ஓர் அங்கமாய் மட்டுமே பார்த்திருக்கலாம். அவளது தேடல் மனித இருப்பை தாண்டிய ஒன்றாக இருந்திருக்கலாம். இருப்பு (Being) என்பது மட்டுமாக இருந்திருக்கலாம்.
அவளுக்கு காலம் என்பது ஒட்டாத நேர்கோடுகள் அல்ல. நூலின் ஒரு நுனியை கொண்டு மறு நுனியுடன் வளைத்து இணைக்கிறாள். ஒரு நுனி அவள் வாழ்ந்த காலம்(Past), மறு நுனி அவள் எதிர்நோக்கும் காலம்(Future), இணைப்பு – அவள் அதை நோக்கி குவித்த செயல்பாடு (Present). ஆகையால்தான், அவளால் எளிதாய் காணமுடிகிறது, பூமி கோளின் மறுபுறம் அவளுக்கான பயணத்தை.
சில நாட்களுக்கு முன்பு, என் நண்பருடன் உரையாடலில் இருந்தபோது, என் தந்தையின் இழப்பு பற்றிய பேச்சு வருகையில் நான் அவரிடம், “ சில நேரங்கள் எனக்குத் தோன்றும். பூமி கோளின் இந்த பக்கம் நானிருக்கிறேன், சற்று சுத்திச் சென்று மறுபக்கம் பார்த்தால் அவர் இருப்பார். ஆகையால், ஆசுவாசமாய் இருக்கிறேன் “ என்றேன். அப்போது எனக்கு ஐசக் டெனிசனையும் தெரியாது, ஹடெக்கரின் தத்துவமும் தெரியாது.
“அங்கே பூமிக் கோளத்தின் மறுபுறம் ஒரு கப்பல் பயணம் செய்கிறது. அதனுடன் நான்இணைக்கப்பட்டிருக்கிறேன்”.
“மூழ்குதல் என்பதே உங்களின் வார்த்தை. நான் உறுதியாகக் கூறுவேன். கடலில் கீழ், மேல் என்று எதுவும்கிடையாது. அந்த மையத்தில் நாங்கள் சந்தித்துக் கொள்வோம்”.
சைதன்யாவின் கட்டுரைகள் வழி, அதற்கான ஜெ-யின் எதிர்வினை பதிவை வந்தடைந்து அதிலிருந்து அருணா அக்காவின் (நீல ஜாடி) மொழிப்பெயர்ப்பில், ஐசக் டெனிசனை கண்டுக்கொண்டேன். ஒருவகையில், இவரும் எனது பிரதிபலிப்பே. இப்போது யோசிக்கையில், இச்சிந்தனையும் கச்சிதமாய் பொருந்துவதை உணருகிறேன்.
“ஆழ்கடலில் பரஸ்பர பிரதிபலிப்பு போலத்தான் நாங்கள்”.
அவளது தேடல் அவளை வந்தடைந்ததும், அவள் நிறைவுறுகிறாள். நம்மை அந்த நீலமாய் தொடர விரும்புகிறாள். இக்கட்டுரையை முடித்து கொள்ள எத்தனிக்கும்போது, மீண்டும் அவ்வரி என்னுள் எழுகிறது. மேலும் என்னை ஒரு அகவிரிவுக்கு இட்டுச்செல்கிறது.
“நம்மிடமிருந்ததெல்லாம்” நிச்சயமாகத் திரும்பி வந்து சேர்ந்துவிடும், என்கிறார். ‘நமக்குள்ளவை’ என்று எதிர்காலத்தை சொல்லவில்லை. நம்மிடம் இருந்தவை என்று நிகழ்ந்த காலத்தை சொல்கிறார்.
நித்திய மறுவாழ்வை (Eternal recurrence) நோக்கும் தைரியமும்,நம்பிக்கையும் அவள் வார்த்தையில் உள்ளது. வாழ்வதற்கான பெரு விழைவும், வீரியமும் கூடிய வார்த்தை.
இக்கட்டுரை ஜெ-யின் தளத்தில் : https://www.jeyamohan.in/214344/
முட்டத்து மக்களும், கடற்கரையும், ஒவ்வொரு கதாப்பாத்திரமும், காற்றில் அடித்து கிளம்பிய மணற்துகள்களும், வழிந்து கொட்டிய தண்ணீர் துளிகளும், அறுத்து எரிந்து மண்ணில் விழுந்த தங்க சங்கிலியின் பொத்தென்ற ஒலியும், இவையனைத்தையும் விட, ஒவ்வொரு கணமும் அவளுள் அதிர்ந்து உருக்குலையும் உசுரும், அது தரும் விம்மலும், கதை முழுக்க என்னுள் இருந்தன.
எஸ்தர் தன் அப்பாவை அனைத்து அழும்போதே காரணம் புரிந்து, அந்த விம்மல் என்னுள் பற்றிக்கொண்டது.
லூர்தம்மாளின் உள் நின்று உடற்றும் பிணியின் காரணம் புரிந்த அவள் மருமகள், (அவள் மருமகளே. இன்று கூட அவர்கள் இருவருமாய் சேர்ந்து மீன் குழம்பும், அவியலும் செய்து கொண்டிருக்கிறார்கள்)அந்த பிணியை பிடுங்கி எறிந்ததும், உச்சத்தில் அவள் கூறும் அந்த வார்த்தை - அவள் பிணி நீங்கியதை என்னுள் உணர்த்தியது.
கதையில் நான் அடைந்த உச்சங்கள் எத்தனை எத்தனை!
“அவன் கொடுத்த முத்தங்களை தேகம் முழுதும் தேடிய அவளை நான் அணைத்தபோது”
“குடிச்சு குடிச்சு ரெண்டு கிட்டினிய கொன்னா. இனி உனக்குத் தர எனக்கக் கிட்னிதாம்ப்லே உண்டு.” (இதில் தெரிந்து விடுகிறது, லூர்தம்மாளின் எதார்த்தமும், அவள் பிணி வேறு என்றும்)
“ஜெனிஃபரைக் கண்டவுடன் தாமஸ் ஓடி வந்து அணைத்துக் கொண்டு, கூறியபோது”
சீமோன் உண்மையிலேயே சீமான் தான். அவனின் அந்த உச்ச காட்சி என் கண்திரையிலிருந்து அகலவில்லை.
ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும், ஒரு shot-க்கான நேரமேயாயினும், நுணுக்கமாய், அணுக்கமாய் என்னுள் மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறார்கள்.
முட்டத்து பசங்களும், ஊர்மக்களும், கடற்கரையும், வீற்றிருக்கும் மணற்பரப்பும், ஜெனிபரும், லூர்தம்மாளும், ஊர் பசியாற்றும் அவளின் மீன் குழம்பு வாசமாய், இனி என்றென்றும் என்னுளிருந்து எழுந்து வருவார்கள்.
மிக கச்சிதமான, ஆழத்தை தொடக்கூடிய ஓர் படைப்பு.
குறுந்தொகை என் வீட்டு நூலகத்தில் நெடுநாளாய் இருக்கிறது. என்னிடம் ஒரு பழக்கம், எதை எடுத்தாலும் அதை வரிசைப்படி வாசிக்க வேண்டும், ஒன்றையும் விடாமல் வாசிக்க வேண்டும் என்று எண்ணியே பெரும்பாலும் அதை எடுக்காமல் இருந்து விடுவேன். சிறுகதைகளிலும் இதே கோளாறுதான் எனக்கு. கமலா அக்காவின் இந்த நூல், என் பழக்கத்தை மாற்றிக்கொண்டு இதில் வரும் குறுந்தொகை உட்பட மற்ற தொகை நூல்களில் இருந்து அவர் தேர்ந்தெடுத்து தந்த சங்கப் பாடல்களை நான் தெரிந்து கொள்ள வாய்ப்பாய் அமைந்தது.
நாங்கள் இருவரும் சந்தித்தபோது, கமலா அக்கா “நாம சந்திக்கணுன்றது நம்ம அப்பாக்கள் ஓட விருப்பம் போல பா” , என்றார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனை உளப்பூர்வமாய் உணர்ந்தேன், இப்புத்தகம் வாசித்தப்போது.
கண்டி கதிர்காமத்து… என்ற பத்தியிலே அப்படியே என் அப்பாவின் குரல்தான் கேட்டது. பின்பு மகள் அப்பாவிடம் கொண்டுள்ள நெருக்கமாகட்டும், அப்பா, மகளை கூப்பிடும் வழக்கம் ஆகட்டும், இப்படி வழிநெடுக, அவர்-அவர் ஐயாவின் அருகிலேயே நான் என் அப்பாவின் கைப்பிடித்து நடந்து சென்றேன்.
அகமும் புறமுமாய் செங்காந்தள் மலரை உவமையாக்கியது பேரழகு.
என்னை பாதித்த ஒரு முக்கியமான வரி, ‘தந்தைக்குப்பின் யாரிடமும் நமக்கு பிடித்த தின்பண்டங்கள் கேட்பதில்லை’ என்பது. அது நூற்றுக்குநூறு உண்மையே. அந்த வரியில் நெஞ்சடைத்து நின்றேன்.இது போல் பல இடங்களில், தன் அகத்தை எழுத்து மூலம் புறவயமாக்கி, வாசகர் அகத்தின் அகமாய் அதை மாற்றுகிறார். அந்த வகையில் இந்நூல் முக்கியமான நூல்.
என்னை மேலும் இந்நூலுடன் நெருக்கமாக்கியது, அவர் தாய் வழி தாத்தனும், என் தந்தை வழி தாத்தனும் பிழைக்க சென்ற கண்டியோ, அவர் தன் தோழியின் காதலை கண்டு கொண்ட என் ஊரோ, இன்றும் அறிவு கொடை நல்கும் வெங்கட்ராமன் டாக்டரை நானும் அறிந்திருந்ததோ, எனக்கு இன்று நினைத்தாலும், உலகிலேயே நான் சந்தோசமாய் இருந்த இடமான சித்திரைப்பட்டியை அவர் வரியில் கண்டதோ என்று யோசித்து பார்க்கிறேன். நான் உணர்வது இந்த படைப்பில் உள்ள உண்மை தன்மை. அவர் விரித்து வைத்த காட்சிகள். அவையே என்னை நெருக்கமாக்கின. ஒவ்வொருவருடனும் நான் அருகிருந்தேன். மேலும், நிவேதாவை நான் நேரில் பார்த்து பேசியிருப்பதால், அவரின் முக பாவனைகளும், குரலும் துல்லியமாய் விரிந்தன.
தன் பாட்டியுடன் வயகாட்டில் அவர் கதை கேட்டது போலவே, சித்திரப்பட்டியில் என் அப்பாயியுடன் கயிற்று கட்டிலில் படுத்துக்
கொண்டு, நிலவை கண்டு, நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு அவரது சிலோன் வாழ்க்கையை கேட்டிருக்கிறேன்.
ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு உயிரை அடையாளமாக்கியதும், ஒவ்வொரு வார்த்தைக்கும் அதற்கான உணர்வின் உருவத்தை அப்படியே படம் பிடித்து காட்டியதும் அபாரம். தாபதம் என்று உச்சரிக்கும்போது நான் எவ்வாறு உணர்ந்தேன் என்று அவர் எழுதியிருக்கிறார்.
ரங்கநாயகியை தேடி, நாரயணசாமி ஶ்ரீரங்கம் தானே வந்து சேர வேண்டும் என்று சொல்லத் தோன்றியது. மேலும், அல்லி அரிசி சோறு கொடுத்ததும், எருக்க மாலை போட்டு கிடத்தியதும், மடலேறுதலையும் வாசிக்கையில் உள்ளே சிறு அதிர்வுகள்.
இதில் எனக்கு மனதிற்கு நெருக்கமான இன்னொரு விஷயம், நான் அண்மையில் எழுதிய வெண்பாவில் கையாண்ட ஒரு சித்திரம், ஒரு சங்க பாடலில் கண்டதுதான். எம் மூதாதையரின் சிந்தனை தொடர்ச்சியே நான்.