சனி, 17 மே, 2025

வேர்முள்- மாலினி ராஜ்

 வேர்முள் - வெளிப்படையாகத் தெரியாத, ஆனால் ஆழமாகச் சிக்கியிருக்கும் பிணைப்பு – அது நினைவாக இருக்கலாம், உறவாக இருக்கலாம், அல்லது வலியாக இருக்கலாம்.

இவை மூன்றிலும் பிணைக்கப்பட்டவளாய் அனுபமா!


தன் பருவக் காலந்தொட்டே தன்னுணர்வுகளையும் விட, தன் தாயின் உணர்வுகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் கட்டுண்டு வளர்ந்த ஒரு பெண். தனது ஆசைகளையும், தேவைகளையும் தாண்டி, தன் தாயை முன்னிருத்துபவளாய் இருந்திருக்கிறாள். ஏதேனும் ஒரு கட்டத்தில் அந்த கட்டுப்பாடு தளர்ந்ததா என்றால் இல்லை. திருமணம் ஆன பின்பும் கூட, தன் மகளை தன்னுணர்வுக்கு ஏற்றவாறு ஆட்டுவிக்க நினைப்பவளாய் கலையரசி, அனுபமாவின் தாய்.


போலி கெளரவத்தில் உழன்று திரிபவள். எழுத்தாளர் ஒரு வரியில் அவள் குணத்தை உடைத்துவிடுகிறார். திருமணம் முடிந்து வந்து தன்னறையில் நுழைகையில், தன் நாத்தனாரின் ஒரு பொருளை அப்புறப்படுத்தும் விதம் அவளை அப்பட்டமாய் காட்டிவிடுகிறது.  பொதுவாக, அப்பா கெளரவ வசனங்கள் பேச கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம், அது பெரிதாய் பாதிக்காது. ஆனால் அம்மா அவ்வாறு செய்கையில் அதன் வீச்சம் அதிகம்.


அவ்வாறான தன் தாயின் பேச்சு, அந்த பேச்சு தந்த வலி, அனுபமாவை , தன் மேலேயே கழிவிரக்கம் கொள்ள வைக்கிறது. 

அந்த கழிவிரக்கம், அவளை நினைவுகளுக்குள் இழுக்கிறது. அந்த நினைவுகளும் வலி தருகின்றன. 


அந்த வலி நினைவில் தோன்றியதும், தான் விரும்பிய உறவு மனதில் அலைமோதுகிறது. உண்மையில் அந்த உறவை அமைத்து கொள்ள விரும்பினாளா? அல்லது அவளது ஆழம் அவள் தாயுடன் பிணைக்கப்பட்டிருந்ததா?என்ற கேள்வி என்னுள்.


தன் தாயின் முடிவுகளுக்கு எல்லாம்  ஒத்துக்கொண்டது, தனது இயலாமையினால்தான் என்று ஒப்புக் கொள்கிறாள். ஆனால் எனக்கோ , அவள் தனக்கு வேண்டும் என நினைத்தது, உண்மையில் தன் அடி ஆழத்தில் அவ்வாறு நினைக்கவில்லை போலும் என்றும் தோன்றியது.


அவ்வுறவின் நினைவலை மோதினாலும் , அதனை இயல்பாக கடந்து செல்கிறாள்.அதில் ஆசுவாசமும் பெறுகிறாள். எந்த சலனமும் இல்லை.


சென்ற வாரம், ஜெ தளத்தில் ஒரு கட்டுரை. இக்கதையோடு ஒப்புநோக்க முடிபவை. கட்டுரையின் பெயர் - ஒரு உறவு, ஒரு நினைவு, ஒரு நூல். இருகதையிலும் கதை மாந்தர்கள் ஒரு விஷயத்தையே கையாளுகிறார்கள். ஆனால், கையாளும் கோணங்கள் வேறுபடுபவை. இரு வேறு கோணம்.

அதில் கதைநாயகன் சொல்வதாக ஒரு வரி - “சில விஷயங்கள் அப்படித்தான், அவை தோன்றி முற்றிலுமென மறைவதே அவற்றுக்கான ஒருமை (முழுமை).நகக்கீறல்மேல் பனிக்கட்டியை வைத்ததுபோல மெல்லிய ஒரு நிம்மதி”.

இங்கும் அனுபமா, நகக்கீறல்மேல் பனிக்கட்டியைத்தான் வைக்கிறாள். ஆனால் பனிக்கட்டியாய், தான் அடையாத உறவின் நினைவையே வைக்கிறாள் - Nostalgic Catharsis - நினைவின்வழி உளவெளியேற்றம்.


நினைவுகள் முள்ளாய் முளைவிடும்போது, அந்த துருத்தலில் சில நொடிகள் ருசித்திருந்துவிட்டு, அதனை களையும் வலி தெரியாமல் களைந்தெறிந்துவிட்டு , கரைக்கு மீள்வது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.