கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

பஞ்சு திரி

 அப்பா வாங்கி தந்த பஞ்சு திரியில்

அப்பாவிற்கே அவள் விளக்கேற்றினாள்;

ஒளியின் நுனி தொட்டாள்;

“அம்மா, கதவ மூடிக்கோ நானும் அப்பாவும் கடைக்கு போயிட்டு வரோம்!” - என்று கிளம்பினாள்.

“சீக்கிரம் வந்திடுங்க பாப்பா கதவு திறந்தே இருக்கட்டும்”, என்றாள் அம்மா.

விளக்கின் ஒளி இன்னும் பிரகாசித்தது.

செவ்வாய், 25 மார்ச், 2025

ஒத்திசைவு

வெட்டப்பட்ட மரம்

சரிந்திருந்தது;

சரீரத்தை விட்டு

உயிர் விலகியிருந்தது!

அதன் நீண்ட 

உடல் மீது அமர்ந்து

தன் தாயின் அருகில்

கையலைந்து சிரித்தது

அந்த குழந்தை;

அருகில் ஒரு துளிர்

அதனிதழில் ஒரு துளி!

புதன், 19 மார்ச், 2025

தொடர்ச்சி


ஆற்று பாலத்தில் நின்றுகொண்டு

ஓடும் நீரில் அப்பாயிக்கு 

பொறி கலவை வீசினேன்;

அவன் அந்த கருப்பு வாகனத்தில்

என்னை பின்தொடர்ந்தான்..

நான் ஓட ஓட என்னை நெருங்கினான்

அவன் நெருங்க நெருங்க 

என்னை அடையா வண்ணம் 

நான் எட்டிச் சென்றேன்..

ஓரிடத்தில் நின்றுவிட்டேன்..

என் எதிரே மக்கள் திரள்; 

என் அருகே ஒரு பேருந்து; 

திரும்பி நின்றேன், என் எதிரே அவன்..

பத்தடி தூரம் இருவருக்கமிடையில்;

அவன் கண்களால் என்னை காண இயலவில்லை;

கத்தி அரற்றுகிறான், நான் அவனை நோக்குகிறேன்;

பேருந்து கிளம்ப ஆயத்தமாயிருந்தது! 

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

மரபிலக்கிய வகுப்பு (ஜனவரி 17,18,19) - அனுபவ வெண்பாக்கள்

எனது ஆசிரியரின் ‘முழுமையறிவு’ தளத்தில், கீழ்க்கண்ட எனது வெண்பாக்கள் வெளிவந்தன:


இணைப்பு :  https://unifiedwisdom.guru/200905



விரிமலைகள் வாயில்முன் மாமகளி தழ்நகைக்க

நேர்விழி வானர் குலம்வழி - நிற்க

வளையெறும்பர் சீரமைத்து மண்மகளை சூழ

நித்யவன தாள்பணிந் தேன்


நெய்குருவி செம்பருந்தோ டுச்சேதி சேர்த்திட

சேய்பருந்தோ விண்மீன்கள் கைக்கோர்த்து - ஆய்ந்திட

வெள்ளி முளைவில்கூ தல்உரைக் கம்மண்

மரபுழ வன்எழுந் தார்


பாரதித்தொ டங்கி இருதா சனுடனல்கி

பாரதத் தில்லுருகி கம்பர்முன் - நற்றணுகி

அவ்வை கவியுடன் மென்னடை வந்துவந்து

காலனையே பந்தடித் தோம்


காளமேகத் திற்மிதந்து ரெட்டையரு டன்னகைத்து

பிள்ளைத் தமிழோடசைந்து காற்சிலம்பாழ்- நல்மணியாம்

மேகலையை கோர்த்தெடுத்து  நட்குறள றிந்தோம்

இயலிசைக்க டல்நனைந் தோம்


நறுக்கலையின் கொம்பனாய்அ டுக்களையின் வீரனாய்

நற்சுவையாறில் ஆவலாய் ஆரணியக் காவலாய்

எம்பசிநீக் கும்மிருவர் பல்சுவைக்கோ அங்கொருவர்

அந்தியூர் தந்த மணி


முப்பதெட்டு நாழிகைகள் ளாய்பாகாய் தாய்தமிழ்

அப்பாயு னைத்தொட்டு நின்முன்னே ஒப்படைத்து

சுட்டிடர்க ளைத்து உணர்வுகளால் கட்டுண்டு

கட்டவிழ் காற்றாயா னேன்



புதன், 8 ஜனவரி, 2025

வருகை

மேகம் சேர்ந்த மாலை வேளை

பசிபிக் கடற்கரையில் உன் பெயர் எழுதினேன்

மேகம் நெகிழ்ந்து சூரிய கிரணங்கள்

அதன் மேல் ஒளிர்ந்தன

நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்

மழை பெய்தது!

புதன், 31 ஜூலை, 2024

பறவை பார்த்தல்

அவள் நடுத்தர வயதை நெருங்குபவள்

தினமும் மாடியில் நடை மேற்கொள்கிறாள்

கம்பி கதவை திறந்து மொட்டை மாடி வரும்போது

தனது வலப்பக்கம் சூரியனை கண்டு கை அசைக்கிறாள்;

பின்பு அந்த மொட்டை மாடி நடுவில் உள்ள

வீட்டு விமானத்தை பிரகாரத்தில் சுற்றி சுற்றி வருகிறாள்;

சூரிய வெளிச்சம் கூசினாலும் ஆகாயத்தை

ரசிப்பதை அவள் நிறுத்துவதில்லை;

அந்த சமயத்தில் வானில் விமானம் பார்த்தால்

கருநீல முகத்தில் நிலாவின் சாயல்;

உற்சாகத்தில் உடனடியாய் உயர்த்தியும், 

பின் இழுத்தும், 

அக்கம் பக்கம் சுற்றி பார்த்து மீண்டும் உயர்த்தியும் கை அசைக்கிறாள் 

அது செல்லும் திசை நோக்கி;

பின்பு வானில் நீள அகலத்தில் காற்றில் கோடு கிழித்து, 

தனக்குள்ளே திசையை உறுதிப்படுத்திக் கொள்கிறாள்; 

கீழே குனிந்து உள்ளூற உவகை கொள்கிறாள்;


ஆடி காற்று அவள் உவகைக்கு இதமாய் 

தென்னையின் மூச்சினை அவள் மேல் இறக்குகிறது;


அச்சமயம் அவள் தென்னைகளையும், அதனொன்றில் இருக்கும் என்னையும் பார்ப்பதுண்டு;


நான் பார்ப்பது அவளுக்கு தெரியாது..

அவள் என்னை பார்த்து கொண்டே இருப்பாள்

நான் யார் என்று தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியாது..


அவள் திரும்புகையில் நான் மெளனமாய் அவள் பார்க்குமாறு பறந்து எதிர்திசைக்கு செல்வேன்.

ஞாயிறு, 28 ஜூலை, 2024

தரிசனம்

விடியலில் எழுந்து 

அமர்ந்திருக்கிறேன்

என்முன் 

விரிசலுற்ற கண்ணாடி

விரிசலின் மத்தியில் 

என் கண்கள் சிக்கிக்கொண்டன

கண்முன் கண்டேன் 

என் மூதாதையரின் தரிசனம்!

சனி, 27 ஜூலை, 2024

காட்சி

இளஞ் செந்நிறத் தீற்றல்

பின் மாலை வானில்

முயல் ஒன்றின் வாயில்;

எங்கோ இருந்த

அந்த பறவைக்கு தெரிந்திருக்கிறது,

அதன் சிறகுகள் அதற்கு சாமரமாய்

சாவதானமாய் தங்கள் வருகையை

அறிவித்தவாறே இருவரையும் நோக்கி

பயணிக்கிறது;

முயல் ஒரு ஓரப்பார்வையை

தந்துவிட்டு திரும்புகிறது!

வெள்ளி, 26 ஜூலை, 2024

வீடு

பிறை தெளிந்த வானத்தில் 

நால்புறத்தில் இருந்தும்

பறவைகள் ஒலி எழுப்பிய வண்ணம்

அங்கும் இங்கும் பறந்து கொண்டே

இருக்கின்றன..

கூடடையும் நேரம்..

கூட பிறந்தவர்களையும்

கூட வாழ்பவர்களையும்

பெற்றவர்களையும் தேடுகின்றன

அறிவிப்பு செய்கின்றன

நடுத்தெருவில் நின்று அண்ணாந்து

பார்த்து கொண்டிருக்கிறேன்

அங்கே என் வீடு

யாருமற்று பூட்டிக்கிடக்கிறது!

புதன், 24 ஜூலை, 2024

அதற்கு பதிலாக

பின்னங்காலின் காயத்தை

நாவால் நக்கி நனைத்து

தலை தாழ்த்தி பார்த்து

கண் சொருகி சுகம் காண்கிறது

எதிர்வீட்டு வாசற்கல்லில்

படுத்திருக்கும் கருப்பி.

எழுத்தில் உருக்கிய வலியை

நான் வாசித்து கொண்டிருக்கிறேன்

வாசிக்க வாசிக்க

வலியை தேடுகிறேன்

வரிகளே வழி மறிக்கிறது

கருப்பி என்னை கண்டு எழுந்தது!

மனம்

அந்த உயிர் இன்னும் இருக்கிறது

தூங்கியபடியே விழித்திருக்கிறது

ஒரு கணம், 

இதோடு முடிவதல்ல இதன் பயணம்

என்று நெஞ்சு தெம்புறுகிறது..

முடிந்தாலும் அது விடுதலையே

என்று தத்துவ விசாரம் பழகுகிறது

அடுத்த நொடி செயலை நோக்கி

எட்டுவைக்கிறது மனம்

எங்கோ ஒலிக்கிறது அவ்வரிகள்

வரிகளில் எழுந்து வருகிறது

ஒரு பிரம்மாண்ட கடந்த காலம்

மண்ணின் வயிற்றுக்குள் அமிழும்

பல மாடி கட்டிடமாய்

குலைந்து குருணையாகிறது

மனம்!

திங்கள், 22 ஜூலை, 2024

இயல்பு

இந்த கட்டிட வளாகத்தில்

சுற்றி சுற்றி வருகிறேன் 

மின்தூக்கி மேலையும் கீழேயும்

ஏறி இறங்குகிறது வெகு மெதுவாக;

நோயுற்ற உடல்

முடியாமல் இழுத்து இழுத்து

மூச்சு விட்டு

உயிரை பிடித்து வைத்துக்கொள்ள

பிரயாசைப்படுகிறது

அதைப்பற்றி எல்லாம்

அதற்கென்ன தெரியும்

அது ஏறி இறங்குகிறது

வெகு மெதுவாக!

ஞாயிறு, 21 ஜூலை, 2024

காத்திருப்பு

நஞ்சு நாக்கு 

நக்கும்

மானுட நொய்மை

கந்தலுற்ற உடம்பு

காய்ந்த மனது

நோயின் நெடி

காலத்தின் கணக்கு

அகாலத்தில்…

வெள்ளி, 29 மார்ச், 2024

கதிர் அவன்!

Mar 29, 2024


குறைக்கிறாய்

பின் ஏற்றுகிறாய்

மறுபடி அணைத்து

ஏற்றுகிறாய்

ஒளியில் ஒலிக்கிறாய்

உன் பால்வெளி 

பயணத்தின்

எதிரே எவர் 

வருகிறார்?

நீ அவருக்கு

என்ன சொல்கிறாய்?

எங்கள் ஊரூருக்கும்

நாடொன்றுக்கும்

அது மாறும்;

உன் உலகத்தில்

அதற்கு அர்த்தம்

எதுவோ?

செவ்வாய், 26 மார்ச், 2024

பார்வை

 Mar 26, 2024


சிலிர்ப்பூட்டும் மழை!

சன்னல் வழியும் 

தொடர் துளிகள் வழி;

நெளிந்து தவிக்கிறது 

அரும்பிய‌ மொட்டுக்கள்;


காற்று கைகள்

துளிகள் துடைக்க‌;

களித்து சிரிக்கிறது

துளிர்த்திடும் வசந்தம்!

தவிப்பு

Mar 26,2024


அண்டாவின் விளிம்பில்

வட்டங்களிடும் நீர்த்துளிகள்;

அந்த ஒரு துளி

பெரும் பிரயர்த்தனப்படுகிறது

தன் இரு கால்களை மேல்நோக்கி

பின்னிக்கொண்டு தவிக்கிறது

எப்படியேனும் அவ்வுலகத்தில் வாழ்ந்துவிட

அடுத்த துளி 

விழ இருக்கிறது!