பூன் முகாம், மாலை நடையில், பின்னிருந்து வந்து என் நடையுடன் இணைந்து கொண்டு, மெல்லிய குரலில், என்னிடம் பேசிய விசு என் கண் முன்னே தோன்றுகிறார். அதற்கு முன்னரே பிரமோதினியும் நானும் ஒருவாறு பழக ஆரம்பித்து இருந்தோம். முதல் நாள் மாலை அறிமுக அரங்கில், செளந்தர் அண்ணா, ஜெ உடனான விசுவின் பயணம் பற்றியும் அதை ஒட்டிய அவரது அனுபவ பகிர்வு விரைவில் வரப்போவது பற்றியும் கூறியிருந்தார்.
ஒரு அழகான, நிறைவான முதல் படைப்பு. தனது ஆதர்ச ஆசிரியருடனான பதினைந்து நாள் சாலை வழிப்பயணம், ஒரு பரந்து விரிந்த அனைத்து மாதிரியான நிலப்பரப்பில். மிக எளிமையான, நேர்மையான ஓர் அனுபவ பதிவு. நூலின் வெற்றி என நான் பார்ப்பது, ஆர்ப்பாட்டமில்லாத நம்ம வீட்டு பாட்டி, திண்ணையில் உட்கார்ந்து, பூ கட்டுவது போலான ஒரு அனுபவம்.
விசுவின் எழுத்தில் நகைச்சுவை உணர்வு இயல்பாகவே இருக்கிறது. பல இடங்களில் சிரித்தேன். மேலும் அவர் வழி நெடுக கூறியிருக்கும் நூல்களும், குடிகளின் வரலாறுகளும், இந்த புத்தகத்தை என்றென்றுக்குமான ஒரு உ.சா.துணையாக மாற்றுகிறது. இந்த புத்தகத்தை வாசித்தப்பின், நானும் பிரேமும், இவ்வழியில் ஒரு பயணம் மேற்கொள்வோமா என்று பேசிக்கொண்டோம்.
தனது வாழ்வின் அனுபவங்களையும், நிலத்தின் வரலாற்றினையும், அவற்றை ஒட்டுமொத்த உலக நிகழ்வுகளுடன் பொருத்தி பார்த்து ஒரு வரைபடம் தருவதும், நூல் முழுதும் விரவியிருக்கிறது. மிகவும் கவனத்துடன், ஒருமையுடன் எழுதியிருக்கிறார். எங்கும், எதிலும் மிகையில்லை. Diet Control-ல் இருக்கும் ஹீரோ போல், நூல் கட்டுடலுடன் இருக்கிறது. அவரின் ஒவ்வொரு வெளிப்பாடிலும், ஒரு கவனமான மாணவனின் தோற்றம் வெளிப்படுகிறது.
எனக்கு மிக பிடித்த விஷயம், ஒவ்வொரு கட்டத்திலும், ஜெ உடனான அவரது உரையாடல். அவர் கேட்ட கேள்விகளும், அதற்கு ஜெ அளித்த பதில்களும் முக்கியம் வாய்ந்தவை. அதை அவர் கையாண்டிற்கும் வடிவமும் அழகு.
இலக்கிய வாசகர்கள் பற்றிய அவரது அவதானிப்பு, பெருமளவிற்கு உண்மை என்றே தோன்றுகிறது. என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு நபர், எனது ஆசிரியர் என்று ஆகிவிட்ட நிலையிலும், இது வரையிலும் அவரை நேரில் பார்க்கும்போது, என்னுள்ளே உள்ள நடுக்கம் தணியவில்லை. அந்த நடுக்கம் பயமில்லை. ஒரு மாமலை முன் மடுவாய் உணருகிறேன். ஆனால், எனக்குள் இப்போது எல்லாம் சொல்லிக் கொள்வதுண்டு, “அந்த பிரமிப்பை நெஞ்சோரத்தில் சேமித்து வைத்துவிட்டு, அவர் முன் சென்று நில்”, என்று. அந்த வகையில், விசுவிடம் இன்னும் பிரத்யேகமான ஒரு வாஞ்சை உருவாகிறது. அவரது இந்த முன்னெடுப்பு, ஆசிரியர் முன் தயக்கத்தை களைத்து, முழுவதுமாய் ஒப்புக்கொடுக்கும் மாணவனின் மனநிலையை உருவாக்கி தந்து எனக்கு ஒரு வகையில் ஊக்கமளிக்கிறது.
மேலும், இப்பயணத்தை பற்றி குறிப்பாக சொல்லியாக வேண்டும். ஒவ்வொருவரின் ஆர்வமும், அந்த ஆர்வத்தை குலைத்திடாத மற்றவரின் அனுசரிப்பும், இவை அனைத்திற்கும் தடையிடாது, தலையிடாது பயணத்திற்கு மட்டுமே பயணம் என்ற நிலைக்கு ஒப்புக்கொடுத்து, அதன் விளைவாய் கிடைத்த ஒட்டுமொத்த அனுபவங்களையும் தனது நண்பர்களுக்கு பொக்கிஷங்களாய் மாற்றிய ஜெ மற்றும் அருணா அக்கா, தேரில் அமர்ந்திருக்கும் உற்சவர்களாகவும், இலக்கியம் என்ற வடத்தில் அணிவகுத்து, ஒருங்கிணைந்து தேரிழுத்த நண்பர்கள், பக்தர்களாகவும் தோன்றுகிறார்கள். (மறுபடி மறுபடி இதே படிமம், என்னுள் எழுந்துவந்து கொண்டே இருக்கிறது, அது சரி, திருவரங்கத்தில் இருந்து கொண்டு திருவீதி உலா பற்றி நினைக்காமலா?)
இலக்கிய ஞானிக்கு, அவரது சீடர்கள் சார்பில் விசு கொடுத்த இந்த சியமந்தகம், என்றும் ஓங்கி ஒளிர்வது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.