திங்கள், 19 மே, 2025

சிலிர்ப்பு - தி. ஜானகிராமன்

 May 16, 2020

1

இரண்டு நாட்களுக்கு முன்பு, எனது தோழி கூற எனக்கு தெரிய வந்தது, திரு.ராஜா (பட்டிமன்ற பேச்சாளர்) அவர்களது Youtube channel மற்றும் அதில், திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் புகழ்பெற்ற சிறுகதைகளை வாசிக்கும் பேருதவியை செய்து வருவது.புத்தகங்கள் வாசிப்பதின்பால் புதிதாய் பிறந்த காதலினால்,இந்த channel-ஐ subscribe செய்தேன். கதைகள் கேட்க தொடங்கினேன்.
நேற்று மாலை வரை இரு கதைகள் கேட்டு முடித்த நான், பின்னிரவில் (May 16,2020 | 1:00 AM) தொட்டது ‘சிலிர்ப்பு’ - திரு.தி.ஜானகிராமன் 1953-ல் எழுதிய கதை. ஏறத்தாழ 70 வயது நிரம்ப காத்திருக்கிறது. இந்த வயதிலும், படித்தவர் (படிக்க கேட்டவர்) மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், அது எடுத்தப் பிறவிக்கு பயன் சேர்த்துக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
திருமதி. பாரதி பாஸ்கர் இக்கதையை 10 முறைக்கு மேல் படித்திருக்கிறாராம். இன்று அவர் படித்துமுடித்தப் போதும், முதன்முறை கேட்ட என் விழிகள் போல் அவர் குரல்-விழி கலங்கியிருந்தன.
கதையின் நாயகன் தன் 6 வயது பிள்ளையுடன் பெங்களூரிலிருந்து கும்பகோணத்திற்கு செல்லும் ரயில் பயணத்தில், திருச்சி சந்திப்பில் (Junction), 10 வயது பெண்ணை சந்திக்கிறார். அவளது வாழ்க்கை,வறுமையின் காரணமாய் மேற்கொள்ளப்போகும் நீண்டப் பயணத்தை பற்றி அறியவரும் வேளையில், தனக்குள் நேர்ந்த வலியையும்,தன் பிள்ளை முடிவில் செய்த செய்கையால் சிலிர்த்த நொடிகளையும் பதிவு செய்திருப்பார்.
அந்த பெண் பெயர் காமாட்சி. அவளை வர்ணித்தபோதும்,அவள் குடும்ப சூழல் பற்றி விவரித்த போதும்,என் மனதில், 20 வருடங்களுக்கு முன்னால், எங்கள் வீட்டில் வேலை செய்த செல்வி அக்கா மற்றும் அவரது 5 பெண் பிள்ளைகள்தான் நினைவுக்கு வந்தார்கள்.

2
செல்வி அக்காவின் இரண்டாம் பிள்ளை - பெயர்,மாரியம்மாள். கிட்டத்தட்ட இக்கதையில் வரும் காமாட்சியை போன்றே அவளது உருவம். செல்வி அக்காவிற்கு வருடத்திற்கு ஒரு பிள்ளை பெறுவது வாடிக்கையாயிருந்தது. கேலி பேசவில்லை.அவர்களது சூழல் அப்படி. புருசன்,ரிக்‌ஷாக்காரன்.

பகலில் பாவங்கள் சுமக்கும் மனிதர்களை சுமப்பவன்,இரவின் சுமையை, கட்டியவள் வயிற்றில் கூட்டுகிறான்-வறுமையின் பிடியிலிருப்பவர்களின் ஒரே Anti-Depressant.விளைவு காமாட்சியை போன்ற வாழ்க்கையை ஏற்கும் நிலையில், பெற்ற பிள்ளைகள்.
செல்வி அக்கா வராத நாட்களில்,வீட்டு வேலைகளை செய்ய எங்கள் வீட்டிற்கு வருவாள் மாரி.சில சமயங்களில் அவளது அக்காவும் வருவதுண்டு. அப்போது எனக்கு 12 வயதிருக்கும். மாரிக்கு ஏறத்தாழ 8 அல்லது 9 வயதிருந்திருக்கக்கூடும். நான் கட்டிலில் படுத்திருக்க, அல்லது Sofa-வில் டிவி பார்த்துக்கொண்டிருக்க, அவள் வீட்டை கூட்டி சுத்தம் செய்ததை இப்போது நினைக்கையில்,என் மேல் எனக்கே கோபம் வருகிறது, அருவருப்பாயிருக்கிறது. ஆனால் நான் அந்த வயதிலேயே செல்வி அக்காவிடம் சொன்னதுண்டு - அக்கா பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாதீர்கள்,அது தப்பு என்று. என் அப்பாவிடமும் சொன்னதுண்டு,வேலையை விட்டு நிறுத்துங்கள் என்று. கருத்துக்கள் மிக தாமதமாய் சபையேறியது.
அப்போது நினைத்ததுமுண்டு அந்த பிள்ளைகளுக்கும் நம்மை போன்ற ஆசைகள் எல்லாம் இருக்கமல்லவா என்று. சில நாட்களில் நானும் மாரியும்,அவளின் அக்கா ஈஸ்வரியும் சேர்ந்துக்கொண்டு படங்கள் பார்த்ததுண்டு. காதல், காமெடி வசனங்களுக்கு அவர்கள் சிரித்ததை பார்த்து நான் மகிழ்ந்ததுமுண்டு.
ஆதலால் நான் சமத்துவம் பழகியவள் என்றெல்லாம் பொய் கூறமாட்டேன். முதலாளித்துவ பாதிப்பு எனக்குமிருந்ததால்தான் மேற்கூறிய அருவருப்பு உணர்வுக்கு தள்ளப்பட்டேன்.அந்த குற்ற உணர்வினால்தான், இந்த கதையை படித்தபின் என்னால் கடந்துபோக இயலவில்லை என்றே தோன்றுகிறது.
கதையில் (உண்மையில் ஆசிரியர் பெற்ற அனுபவமே கதையாயிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்) ஒரு கட்டத்தில்,நாயகன் இரு பிள்ளைகளையும் ரயில்வே ஸ்டேஷன் ஹோட்டலில் சாப்பிட வைத்துக்கொண்டிருப்பார். அப்போது அவர் ஒரு வரி கூறியிருப்பார். “இரண்டு அனாதைகள் உண்ணுகின்றனர்”என்று. ஆம்,அவரை பொருத்தமட்டில் தாயை விட்டு பிரிந்திருந்த தன் பிள்ளையும் அவருக்கு அனாதையாய் தெரிந்திருக்கிறான்.
மேலும் அடுத்த வரியாய் அவர் வடித்திருந்ததே என் கண்கள் வடித்ததற்கு காரணம்.
“ஒரு அனாதை தன் தாய் இருக்கும் திசை நோக்கி பயணிக்கிறது, ஒரு அனாதை தன் தாய் விட்டு எதிர்திசையில் பயணிக்கிறது” என்ற அர்த்தத்தில் அவ்வரிகள்.காமட்சியின் இடத்தில் ஒரு நிமிடம் என்னை வைத்து பார்த்தேன், என் இதயம் கனத்தது.
ஆனால் காமாட்சியோ, உண்ணும் வேளையில், அந்த வேகாத ரயில்வே ஹோட்டல் (1953-லும் அதே நிலைமைதான் போலும்) சோற்றை தன் கைகளால் பிசைந்து அந்த 6 வயது சிறுவனுக்கு ஊற்றி,வாய் துடைச்சுவிட்டு ஒரு தாய் ஸ்தானத்தை அடைகிறாள். பின்பு கைப்பிடித்து ரயிலேறி அமர்ந்தவளாய், எதார்த்தமாய் தனக்கு அமைந்த வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொண்டவளாய் காட்சியில் விரிகிறாள். அந்த சிறுவன் ஊட்டிக்கொண்ட பாசத்தில், பதபதக்கிறான், அவளது நெடுந்தூர பயணத்தை புரிந்துக்கொண்டு.
கல்கத்தாவிற்கு பிள்ளை பார்த்துக்கொள்ள சென்றவள்,கண்டிப்பாக தனக்கான உறவுகளுடன் தன் வாழ்வின் பிற்பகுதியை நிம்மதியாய் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.
“உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல..” (திரு.பழனிபாரதி வரிகள்)

பின்குறிப்பு:
சிலிர்ப்பு சிறுகதை பற்றிய எனது அனுபவ பதிவை படித்த எனது வாசக நண்பர் ஒருவரின் இதயம், காமாட்சியை நினைத்து கனத்த என் இதயம்போல் கனத்திருக்கிறது, மாரியம்மாளை நினைத்து.
என்னிடம் அவர் கேட்ட கேள்வி, ‘காமாட்சியை நினைத்து கனத்த உம் இதயத்திற்கு, மாரியை பற்றிய நினைவில்லையா? மாரி தற்போது எப்படி இருக்கிறார்?’ என்பது.
அவருக்கு பதிலுரைத்தேன்- மாரி மற்றும் பதிவில் குறிப்பிட்டிருந்த ஈஸ்வரி இருவரும், திருமணமாகி வெளியூரில் இருப்பதாகவும், செல்வி அக்கா, ஶ்ரீரங்கத்தில் பூ கட்டி விற்று தன் மகன் மற்றும் இரு இளைய மகள்களுடன் வசிப்பதாகவும்,ரிக்‌ஷாகார கணவனின் வாழ்க்கை சவாரி முடிந்துவிட்டதாகவும்.
அவரின் கேள்வியில் மனதிற்கு நிறைவு இருந்தது. கடைசியாய் நான் மேற்கோளிட்டிருந்த பழனிபாரதியின் வரிகளை நினைத்துக்கொண்டேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.