சனி, 17 மே, 2025

எல்லையற்ற நடனம் - விவேக் சுப்ரமணியன்

ஒரு கதையில் முதல் வரியிலேயே வாசகனின் புருவமுயர்த்த முடியும் என்பதை இதுவரை நான் வாசித்ததிலேயே இதில்தான் முதன்முறையாக உணர்ந்தேன். முதல் பத்தியில் விரும்பியே அதன் ஆழத்திற்கு என்னை ஒப்புக்கொடுத்துவிட்டேன். அதன்பின் எனக்கு தெரிந்தவையெல்லாம் ஒளிகளின் நடனம்தான். இதனை அறிவியல் பூர்வமாய் முழுதுணர அவ்வறிவியல் கோட்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை. ஆனால், ஒரு கற்பனைவாதியாய் என்னால் இதில் திளைக்க முடிந்தது. அறிவியல் கதைக்கு ஜெ கூறும் அடிப்படைகளில் இது ஒன்று என்பது சமீபத்தில் தெரிந்துக் கொண்டேன்.


இணை பிரபஞ்சங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தாங்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்று நினைக்கையில், தங்களின் வரையறை (limitations) தெரிய வருகிறது. இது எதிர்காலத்தில் நடப்பதாய் எடுத்து கொள்ள வேண்டுமா, அல்லது சமகாலத்தில் வேறு கோள்களா, அல்லது ஒளியின் பயண வேகம் பொருத்து, எந்த பிரபஞ்சத்தின், எந்த பகுதியில், எந்த தொலைவில் இது நடக்கிறது, அது நமக்கு நிகழ்ந்த காலமாய் எடுத்து கொள்ள வேண்டுமா என்று எனக்கு தோன்றியது.


ஒவ்வொரு வரியும் ஆழ்ந்த தத்துவம் பொதிந்த அர்த்தங்களோடு வெளிப்பட்டன. எனக்கு இவ்வொரு கதையில் மேலை தத்துவவாதிகளின் கோட்பாடுகளுக்கிடையில் ஒரு கோடிழுத்துவிட்டதாய் தோன்றியது. Schelling naturphilosophie முதல் Schopenhauer மற்றும் ஹெடக்க்கரின் கோட்பாடுகள் எனக்குத் தோன்றின. கான்ட் பற்றி கதையில் வந்துவிடுகிறது.


இது அவ்வளவு எளிதானது அல்ல. ஆம், நாம் படைப்பாளி. ஆனால் நாம் படைத்த ஒவ்வொரு பிரபஞ்சமும் அதன் சொந்த விதிகளையும், நியதிகளையும் கொண்டுள்ளது. அவற்றை மீறி நான் தலையிட முடியாது.


“படைப்பாளியாக இருப்பது என்பது அதிகாரம் மட்டுமல்ல, பொறுப்பும் கூட. நாம்  படைத்த ஒவ்வொரு உயிரினமும் அதன் சொந்த தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.”


“அவற்றின் கண்களில் கோடி ஆண்டுகளின் ஞானமும், எல்லையற்ற கருணையும் பிரகாசித்தன”.


எனக்கு பிடித்த விஷயம், கதைக்குள் மனித உணர்வுகளால் சிடுக்கு ஏற்படுத்தி, அதற்கான விடுதலையை ஆன்மிகத்திலும், தத்துவத்திலும் தேடி தந்தது. 


நாம் தனித்தனி தீவுகள் அல்ல. நாம் ஒரே பெருங்கடலின் அலைகள். ஒவ்வொரு அலையும் மற்றொரு அலையை உருவாக்குகிறது, முடிவில்லா நடனத்தில்.


ஆயிஷா வாசகனின் குரலாய் வருகிறாள். வாசகன் தவறவிடாத வண்ணம் அவளே எடுத்தும் சொல்லிவிட்டாள்.


நமது ஆராய்ச்சி இப்போது வெறும் அறிவியல் கண்டுபிடிப்பு மட்டுமல்ல. இது ஒரு தத்துவ பயணம், ஒரு நெறிமுறை கற்றல், ஒரு ஆன்மீக அனுபவம்.”


இவ்வருடத்தில் நான் வாசித்து திகைத்த, திளைத்த மிகச் சிறந்த கதை. கோதுமை மணி ஒரு தளத்தில் மனதிற்கு நெருக்கம் என்றால், இது வேறொரு தளத்தில் இன்னும் நெருக்கமாய். இந்த கதையை நான் மீள்வாசிப்பு செய்து கொண்டிருப்பேன் என்று தோன்றுகிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.