முட்டத்து மக்களும், கடற்கரையும், ஒவ்வொரு கதாப்பாத்திரமும், காற்றில் அடித்து கிளம்பிய மணற்துகள்களும், வழிந்து கொட்டிய தண்ணீர் துளிகளும், அறுத்து எரிந்து மண்ணில் விழுந்த தங்க சங்கிலியின் பொத்தென்ற ஒலியும், இவையனைத்தையும் விட, ஒவ்வொரு கணமும் அவளுள் அதிர்ந்து உருக்குலையும் உசுரும், அது தரும் விம்மலும், கதை முழுக்க என்னுள் இருந்தன.
எஸ்தர் தன் அப்பாவை அனைத்து அழும்போதே காரணம் புரிந்து, அந்த விம்மல் என்னுள் பற்றிக்கொண்டது.
லூர்தம்மாளின் உள் நின்று உடற்றும் பிணியின் காரணம் புரிந்த அவள் மருமகள், (அவள் மருமகளே. இன்று கூட அவர்கள் இருவருமாய் சேர்ந்து மீன் குழம்பும், அவியலும் செய்து கொண்டிருக்கிறார்கள்)அந்த பிணியை பிடுங்கி எறிந்ததும், உச்சத்தில் அவள் கூறும் அந்த வார்த்தை - அவள் பிணி நீங்கியதை என்னுள் உணர்த்தியது.
கதையில் நான் அடைந்த உச்சங்கள் எத்தனை எத்தனை!
“அவன் கொடுத்த முத்தங்களை தேகம் முழுதும் தேடிய அவளை நான் அணைத்தபோது”
“குடிச்சு குடிச்சு ரெண்டு கிட்டினிய கொன்னா. இனி உனக்குத் தர எனக்கக் கிட்னிதாம்ப்லே உண்டு.” (இதில் தெரிந்து விடுகிறது, லூர்தம்மாளின் எதார்த்தமும், அவள் பிணி வேறு என்றும்)
“ஜெனிஃபரைக் கண்டவுடன் தாமஸ் ஓடி வந்து அணைத்துக் கொண்டு, கூறியபோது”
சீமோன் உண்மையிலேயே சீமான் தான். அவனின் அந்த உச்ச காட்சி என் கண்திரையிலிருந்து அகலவில்லை.
ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும், ஒரு shot-க்கான நேரமேயாயினும், நுணுக்கமாய், அணுக்கமாய் என்னுள் மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறார்கள்.
முட்டத்து பசங்களும், ஊர்மக்களும், கடற்கரையும், வீற்றிருக்கும் மணற்பரப்பும், ஜெனிபரும், லூர்தம்மாளும், ஊர் பசியாற்றும் அவளின் மீன் குழம்பு வாசமாய், இனி என்றென்றும் என்னுளிருந்து எழுந்து வருவார்கள்.
மிக கச்சிதமான, ஆழத்தை தொடக்கூடிய ஓர் படைப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.