அஜிதன் நிகழ்த்திய மேலைத் தத்துவ வகுப்பில் பங்குப்பெற்றதன் அனுபவ பகிர்தல், எனது ஆசிரியரின், முழுமையறிவு தளத்தில் கீழே:
வியாழன், 20 மார்ச், 2025
செவ்வாய், 18 மார்ச், 2025
தனிமையின் பெருங்கூட்டம்
மலைகளை போல் தனிமையானது உலகில் எதுவும் இல்லை என்று ஜெ கூறுவதுண்டு. அது உண்மைதான் என்று அந்த காட்சியின் உணர்வுகளை மீட்டெடுக்கையில் தோன்றியிருக்கிறது.என் தனிமையில் அங்கு சென்று நிற்கையில், ஒரு சமயம் அது என்னை அரவணைத்து கொள்கிறதாய் உணர்கிறேன். ஒரு சமயம் அதன்மேல் கை போட்டுக்கொண்டு படுத்திருப்பதாய் எண்ணிக்கொள்வேன். ஒரு சமயம் அப்போதுதான் என் தனிமையின் கீறல்களை உணர்வேன். முட்டிக் கொல்லும் அழுகையை முழுங்கிய தருணங்களும் உண்டு. விடுதலையாய் வழிய விட்ட தருணங்களும் உண்டு.
தொன்மையான மலையின் மீது எழுப்பப்பட்ட கோட்டையே எனது நகரம் என்றாலும், அதனை பார்க்கையில், மலை என்பதன் பிரம்மாண்டம் என்னை தீண்டியிருக்கவில்லை. இன்றும், நகரத்தின் நடுவில் அழகாய் வீற்றிருக்கும் ஓர் அங்கமாய் மட்டுமே அதனுடனான என் உணர்விருக்கிறது.
முதன்முதலில் என் வாழ்வில் நான் மலைகள் என்று பார்த்து பிரமித்தது எங்கு என்று எண்ணிப்பார்க்கிறேன். சிறு வயதில் என் தந்தை ஊரான துறையூருக்கு செல்லும் வழியில் உள்ளது நான் கண்ட முதல் மலைகள். மலைகள் அல்ல குன்றுகள். அந்த வயதில் அவை எனக்கு மலைகள். பேருந்தில் செல்லும் வழியில் இருக்கும் மலைகளில், சில இடங்களில் வெள்ளை சுண்ணாம்பில் பிரம்மாண்டமாய் சிலுவை எழும்பி காட்சியளிக்கும். சில இடங்களில் கல்லூரியின் பெயர் மற்றும் படிக்கும் ஆண்டு என சேர்த்து ‘ஜெயராம் காலேஜ் III year B.E’ என்பது போல் குறிப்புகள் கண்ட நினைவுண்டு. நம்ம ஊருக்குள்ளேயே மலைகள் உள்ளதா என்ற ஆச்சரியம் அப்போது. பச்சை மலைத்தொடர் அடியில் உள்ள ஊர்,துறையூர். திருச்சியிலிருந்து 47 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் அவ்வூரிலே பச்சை மலைத்தொடரின் அங்கமான பெருமாள் மலை உண்டு. மலை மேல் வண்டியில் சென்றபோது அடைந்த பரவசத்தையும், அந்த சிறுமியின் முகத்தையும் இப்போது நினைவு கூர்கிறேன். பின்பு, வின்ச்சில் பழனி. அடிக்கடி சென்றதுண்டு. குதூகலமும், குறுகுறுப்பும் நிறைந்த அனுபவங்களாய் எஞ்சியிருக்கின்றன.
முதன்முதலில் தொடர் மலைகளை நான் கண்ட நாள் ஜூன் 8, 1998.மேட்டடர் வண்டியில் அம்மா, அப்பா, பெரியப்பாக்கள், மாமாக்கள், பெரியப்பா மகள்கள் என கூட்டமாய் நாங்கள் சென்ற ஒரு திருமண நிச்சயதார்த்தம். கோயம்புத்தூர் வழியாய் பாலக்காடு சென்றோம். அப்போது தூரமாய் அமைதியாய் நின்றுகொண்டு என்னை பார்த்து கொண்டிருந்தன மலைகள். பனி மூட்டங்கள் வளர்ந்தும், களைந்தும் அலைந்து கொண்டிருந்தன. கையில் சித்தப்பாவின் யாஷிகா கேமராவில் முதன்முதலாய் படங்கள் எடுத்து கொண்டிருந்தேன். என் பெரியப்பா மகள் கேட்டபோது கொடுக்காது, என் கையை இழுத்து கொண்டதை நினைக்கையில் இப்போது வலிக்கிறது. அவள் அந்த ஏக்கத்தை மறந்து ‘அதோ அதை எடு’ என்று உற்சாகமாய் மலையை சுட்டிக்காட்டியது தீயாய் சுடுகிறது. இக்கணம் அவளிடம், நான் அந்த கேமராவையும், ஜன்னல் சீட்டையும் விட்டுத் தருகிறேன்.
அடுத்த பயணம் தொட்டபேட்டா. மலை உச்சியில் அப்பா, அம்மா, மாமா, தம்பியுடன் நின்றதும், என் அப்பா அங்கிருந்து அவர் அம்மாவிற்கு போன் செய்து தன் இன்பத்தை பகிர்ந்து கொண்ட காட்சியும் மாறாமல் என்னுள் நிலைத்திருக்கிறது.
2010-ல், புவியின் குடும்பத்தோடு வேங்கட மலை(திருப்பதி) பயணம். ஏழுமலைகளுள் ஒன்றான அம்மலை பயணமும், அனுபவமும் முற்றிலும் எனக்கு புதிது. என் குடும்பத்தை விட்டு தனியாக வேறொரு குடும்பத்தோடு நான் செய்த முதற்பயணம். அந்த பயணம் எனக்கு மகிழ்வான பயணமே என்றாலும் கூட, ஏதோ ஒரு நொடியில் என் குடும்பத்தை அவர்கள் முகத்தில் தேடியதன் தீற்றல் என் கண்ணில் தென்படுகிறது. என் குடும்பத்தில் கலகலப்பாய் ஆடிப்பாடி குதூகலிக்கும் வாய்ப்பு கிடையாது. அப்பா கண்டிப்பானவர். பழைய பாடல்களின் அறிமுகமும்,ரசனையும் அவரிடமிருந்தே வந்தன என்றாலும், பாடல்களின் உணர்வுகளை வெளிக்கொட்டி குதூகலிக்கும் இடமாய் என் குடும்பம் இருக்கவில்லை. அவ்விடத்தை நிரப்பிய பெருமை அவளுக்கும், அவள் குடும்பத்திற்குமே. அவள் பெரியம்மா பசங்களோடும், உடன்பிறந்தவர்களோடும் நான் என்னையும் இணைத்து கொண்டு மகிழ்ந்திருந்த தருணங்கள். முதன்முதலில் இசைஞானியின் ‘ஏகாந்த வேளை..இன்பத்தின் வாசல்’ பாடல் கேட்ட பயணமது. திரும்பி வரும் வழியில், தொடர் (ஏழு) மலைகளை பார்த்தபோது, அரங்கநாதர் சயனம் கொண்டிருப்பதாய் தோன்றியது.
அதை விஞ்சும் ஓர் அழகு ஒரு நாள் இரவு அந்த அழகிய முழுநிலவொளியில். எப்போதையும் விட, அந்த வானில் அன்று நிலாப்பொலிவு, பொலிவென்பதை கடந்து வழிந்து கொண்டிருக்க கண்டேன். நான் அருகில் அமர்ந்திருக்க, பிரேம் அக்கருக்கிருட்டில் எங்களுக்கு இரவு உணவிற்காக வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறான். என்னிடம் எதுவோ சொல்லிக்கொண்டே வருகிறான், நான் ‘ம்ம்’ கொட்டி கொண்டே, நிலவை வெறித்து வந்து கொண்டிருக்கிறேன்.
அதீத ஒளியின் பிரவாகம் என் பார்வையின் தொடு வளைவை தாண்டியிருந்தபோதும், உடல் வளைத்து, குனிந்து நிமிர்ந்து அதனை நோக்கி கொண்டிருந்தேன். மனம் கிளர்ச்சியுற்றிருந்தது. ஒரு இடத்தை கடக்கும்போது, என் கண்கள் இமைக்கவில்லை. ஆம் உண்மையிலும் இமைக்கவில்லை.
சந்திரனின் வரம்பு மீறிய பொலிவின் ரகசியம், புலப்பட ஆரம்பித்தது. அரனின் ஒளி ஒழுகலில், அவளை கண்டேன்.அவன் விரகத்தில், அவள் முலைகள் எழுந்தமைய, தன் இடக்கையை தலை மேல் அமர்த்தி, இடக்காலை மட்டும் சற்று ஊனி,சற்றே ஒருக்களித்து, பனிவுடல் திறந்திருக்க, கொதித்திருக்கிறாள் அந்த மலைமகள்.ஆனந்த களியாட்டத்தின் தொடக்கப்புள்ளி. புடவியின் பெருவிளையாட்டு. தீரா பெருங்கனவு. காணுந்தோறும் பெருகி வழியும் கனவு. ஆடுந்தோறும் முடிவில்லா விளையாட்டு. அண்டத்தின் பெருங்கருணை, அதனை நான் காண பெற்றது என்று பிறகு சொற்வடிவம் கொடுத்து கொண்டேன்.
ரெயினியர் மலைக்கு சியாட்டலில் இருந்து காரில் சென்றிருந்தோம். அரை மணி நேர பயணத்திலேயே, மலைகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. ஒரு புறம் காஸ்கேட் பனிமலைத்தொடர்கள், மறுபுறம் ஒற்றை பனிமலையான ரெயினியர் மலை, அழகான ஓவியம்போல். தொலைவில் இருபுறமும் கிளர்ச்சியூட்டக்கூடிய பனிமலைகளின் அணிவகுப்பு, அருகில் வாஷிங்டன் ஏரியின் ஒளிப்பரப்பு, அன்னையின் கர்ப்பத்திலிருந்து வெளியேறும் மகவுகளாய், நாங்கள் இருவரும் மிதவை பாலத்தில்.
பெட்ரமாக்ஸ் விளக்கின் மேன்டிலாய் தெரிந்த அந்த ஓவியம், அருகே செல்ல செல்ல, விரிந்தெழுந்து நிமிர்ந்த ஒற்றை பிரம்மாண்டம். அதன் நீள அகலத்தில் ஓடியோடி பார்த்தும் அது தீரவில்லை. மகவுகளாய் அன்னையின் இடுப்பை, சுற்றி சுற்றி தீராத வேட்கையுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரம், பசித்தது. அப்போதுதான் அந்த ஆனந்த களியாட்டின் விருந்து.
அடுத்த நாள் காலை அன்னையின் மேலேறி உலவினோம். ஒருவாறான உச்சியில் நின்று சுற்றிலும் பார்க்கையில் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை பனிமலைகள் மட்டுமே. கோமல் கண்ட கைலாயம் போல். அப்போது மனதில் ஒரு அமைதி, ஒரு விடுதலை.
அங்கேயே சரிந்து உட்கார்ந்து சுற்றிலும் பார்த்துக்கொண்டேயிருந்தேன். இப்போதும் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். காண காண என் கண்முன் தீராது வளர்ந்து வருவது. அப்படியே படுத்துக்கொண்டேன். உள்ளே ஓராயிரம் வருடங்களின் அனல் தகித்து கொண்டிருந்த போதிலும், எனக்கு அவள் குளிர்ந்திருந்தாள். இருந்தாலும் அவள் தகிப்பை நான் உணராமல் இல்லை. அதை உணர்ந்த தருணம் என்னுள் ஒரு விதிர்ப்பு எடுத்தது.
அடுத்த நாள் மாலை, ஒலிம்பிக் தேசிய பூங்கா. அங்கு சென்று சேரும்போதே நேரமாகிவிட்டது. மேலும், பனி புயல் இருக்கப்போவதாக கூறி, நாங்கள் செல்ல வேண்டியிருந்த மலை வழியை அடைக்கப்போவதாய் கூறினார்கள், பார்வையாளர்கள் நிலையத்தில் (Visitor Centre). முக்கால் மணி நேரமிருந்தது என்று நினைக்கிறேன். பிரேம் , “வா போகலாம், போய் பார்ப்போம்” என்றான். எனக்கும் அது எப்படித்தான் இருக்கும், போய்தான் பார்ப்போமே என்ற குறுகுறுப்பு. அழகான, குறுகலான வளைவுகள் கொண்ட மலை பாதை. வளைவுகள் மிகவும் ஆழமாக, அபாயகரமாக, அதுவும் இருவழி சாலைகளாய் மட்டுமே இருந்தது. ஒரு புறம் சிறிது தள்ளி வண்டியை ஒடித்தாலும், மலையின் கீழே இன்னோர் உலகத்துக்குள் சென்றடைவது உறுதி. அதுவே மறு புறம் திரும்பி வருகையில், மலை பாறைகள் உருண்டு வழியில் விழக்கூடிய அளவிற்கு பலத்த காற்று. ஒருவாறு அந்த காற்றில் நீந்தி கார் பார்கிங் சென்று வண்டியை நிறுத்தினான். வண்டியில் இருந்து முதல் காலடி வைத்த கணம் ஆசிர்வதிக்கப்பட்டதாய், அன்றைய பனி பொழிவு. கீழே பள்ளத்தாக்கு முழுதும் பனியால் நிரப்பப்பட்டதாய் இருந்தது. நன்கு குளிருங்கூட.
சற்று நேரத்தில், காவலர் வந்து அனைவரையும் மலை இறங்க சொல்லிவிட்டார். திரும்பு வழியில் நான் சிறிது தூரம் வண்டியை ஓட்டிக்கொண்டு, பிரேமை அந்த தருணத்தை அனுபவிக்க செய்தேன். மீண்டும் ஒரு இடத்தில் பார்கிங் செய்து, சற்று நேரம் நின்றோம். ஹரிக்கேன் மலை தொடர்கள் அவை. மிக பிரம்மாண்டமான முடிவுகளற்ற மலைகள். எண்ண எண்ண எண்ணிக்கை தவறிக்கொண்டே இருந்தவை. ஒரு கட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு எண்ணுவதை கைவிட்டேன்.
திரும்பும்போது எதிர்காற்றில், பனி துளிகள் சிறு சிறு மேகத் துண்டுகளாய், என்னை சூழ்ந்த இன்பமாய், என்னிடம் நோக்கி வந்தன. என்னை அடையாது கண்ணாடியில் பட்டு தெறித்து வழிந்தன. அதன் வெளியின் மறுபுறம் நான் நின்று அதை ஸ்பரிசித்தேன். உடைந்த சில துளிகள், மேல்நோக்கி நகர்ந்தன. நானும் நகர்ந்தேன்.
புதன், 1 ஜனவரி, 2025
மீன்வானம்பாடி
எவருக்கும் உரிய ஆசைதான் என்று தோன்றும். சிறு வயதில் அண்ணாந்து பார்த்த, விமானத்தில் பறக்க வேண்டும் என்பது. அதில் பறந்த பின்பும் கூட, வளர்ந்த பின்பும் கூட, அடங்காது வளரும் சிறு வயது தாகம், அதை அண்ணாந்து பார்த்து மகிழ்வது. இப்போதும் கார் ஓட்டி கொண்டு செல்லும்போது கூட குனிந்து பார்ப்பதுண்டு. அதுவும், விமான நிலையத்தின் அருகில் பயணிக்கும் போது இன்னும் நெருக்கமாய் பார்க்க கிடைத்திடும். அதன் தரையிறங்கும் அழகும், வான் ஏறும் மிடுக்கும் அதில் இருப்பதை காட்டிலும், அதன் இருப்பை காண்பதே அழகு என்று தோன்றும். இம்மாதிரி எனக்கு மலை ஏறும்போதும் தோன்றியிருக்கிறது. மாமலைகளும் கூட, அதில் பயணம் செய்யும்போது, அதன் பிரம்மாண்டம் சற்று மட்டுபட்டு, தட்டுப்படும் பாதையிலேயே கவனம் செல்லும். மாபெரும் மலையின் கர்ப்பத்தில் இருக்கிறாய் என்ற பிரக்ஞை வந்து மோதும் போது, ஒரு புன்னகையும், ஒரு செயலுமாக அது கடந்து கொண்டிருக்கும். தள்ளி நின்று பார்க்கையில் அதன் பிரம்மாண்டம் மீண்டும் வந்து மனதில் அப்பிக் கொள்ளும். கூடவே அதில் நான் நடந்திருக்கிறேன் என்ற உண்மையும் பிரம்மாண்டமாய் உருவெடுக்கும். பிரம்மமும் அப்படித்தானோ என்று தோன்றியதுண்டு.
என் முதல் விமான பயணம் எனது 30 வயதில். இந்தியாவில், சென்னையிலிருந்து பூனே சென்ற பயணம். திவியுடன் (திவ்யா என்பதன் சுருக்கம்) சென்றிருந்தேன். விமானம் வானேறும்போது, அவள் என் பயத்தை கண்டு, தற்செயல் போல், கரம் பற்றிக் கொண்ட சூடு என் உள்ளங்கையில் இப்போது எழுகிறது. அந்த உயரத்திலிருந்து, மெரினா கடற்கரையை பார்த்தது, எனக்கு நான் கொடுத்து கொண்ட சிறந்த பரிசு என்று தோன்றும். அவள், என்னை அடுத்த இரு வருடங்களிலேயே இன்னும் உயர பறந்து, அகன்ற நிலப்பரப்பை காண தள்ளினாள். அமெரிக்க பயணம், அவளின் வற்புறுத்தலாலேயே நடந்தது. முதல்முறை தனியாய், முப்பத்தைந்தாயிரம் அடி உயரத்தில், புள்ளியில் புள்ளியாய், ஆகாயத்தில் நிச்சலனமாய்.
இருளும் மாலை, விடியப் போகும் இரவு, விடிந்து முதிர்ந்த பகல் என்று காலநிலை முன்னும் பின்னுமாய் நாட்டியம் ஆடியது. என் வீட்டில் ஓயாமல் கேட்கும் ஒரு பழமொழியுண்டு. ‘இந்த நொடி போய்ட்டா அவ்வளவுதான், திரும்ப கிடைக்காது. காலம் பொன் போன்றது’ என்பது அது. ஆனால், அந்த விமான பயணத்தில் எனக்குத் தோன்றியது, காலத்தில் நான் பின்னோக்கி போகிறேன் என்று. வாழ்ந்த நொடிகளில், மீண்டும் வாழ்கிறேன் என்று. மினுங்கும் ஆகாயத்தில், காலம் பொன் தான். அதை நேரில் காண்கிறேன் என்று.
எனக்கு மேலே நட்சத்திரங்கள் சிதறித்தொங்கின.எனக்கு கீழே மேகங்கள் பஞ்சு மூட்டைகளாய், மிட்டாய்களாய், ஊர்வலமாக வந்து கொண்டிருந்தன. அந்த மேக நிலத்தில், ஒரு இரவின் முழுநிலவில், வாழைத்தோட்டத்தில், குலைகள் தள்ளியிருப்பதாகவும், சற்று தள்ளி தென்னைகள் ஓங்கியிருப்பதாகவும், ஒரு உழவன் கலப்பையை தூக்கி செல்வதாகவும் காட்சிகள் விரிந்தன. வாழை வரிசையிடுக்கில், தன் ஒளிந்திருக்கும் தம்பியைத் தேடி அந்த சிறுமி கண்ணாமூச்சி ஆட கண்டேன். அவர்களை நோக்கி கலப்பை ஏந்திய அந்த
தகப்பனின் பார்வை.
சற்று தூரம் கடந்ததும், ஒரு மேகம், எனக்கு மேலே, ஒரு கோட்டை வாயிலின் வளைவாய் வளைந்திருந்தது. அதில் பிரமித்து உள் நுழைகையில், சூரிய கிரணங்கள் அந்தி சாயும் செந்தூரத்தில், வானை சிவக்க வைத்து கொண்டிருந்தன. இன்னும் சற்று தள்ளி, மேகங்கள் மாமலைகளாய் தொலைவில் வீற்றிருக்க, அதை தாண்டி தொடுவானம் நீள்ந்திருந்தது. சுற்றிலும் மேகமலைகள் அரண்களாய், அதற்கு நடுவில், பிரம்மாண்ட மேக ஆறு, சிறு அலைகள் தழும்ப, நிரம்பி ஓடுக்கொண்டிருந்தது. என் சித்தம், தரையிறங்கி, மேக படுகையில் கால் நடந்து அதன் அலைகளை தொட்டு சிலிர்த்தது. தூரத்தில் அருவியாய் எழுந்திருந்த மேக கங்கையில் குளித்து, குதூகலித்து, குளிர்ந்து இருக்கைக்கு மீண்டது.
அவ்வுயரத்திலிருந்து பார்க்கையில் சில நேரம், கடல் நிலமாகவும், நிலம் கடலெனவும் மனம் குழம்பியிருக்கிறது. பாலைநில மணற்பரப்புகளின் வெம்மையை உள்ளிருந்தவாறே உணர்ந்திருக்கிறேன். பாலையை பார்த்தால், தவறாமல் என் சிந்தையில் வந்து ஒட்டிக்கொள்வான் குட்டி இளவரசன். அதை நினைக்கையிலேயே மனம் இனித்து விடுகிறது. இரவு நேரத்தில் நகரத்தின் மேல் பறக்கையில், நான்கு வழி சாலைகளில், வரிசையில் நகரும் வாகனங்கள், பட்டுத்துணியில், வெள்ளை கற்களும், மஞ்சள் கற்களும், சிகப்பு கற்களும் பதித்து தைத்த அங்கியோரம் (Blouse Border) போன்று காட்சியளித்தன. ஒரு வழிச்சாலையில் மெதுமெதுவாய் வால் பிடித்தவாறு ஊரும் வாகனங்கள், ஒரு நீண்ட கம்பளி பூச்சியாய் தென்பட்டன.
விமானம், நிலையத்தில் நிற்பதை காண்கையில், அதன் வாய் மீனினை ஞாபகப்படுத்தும். மீனிற்கு, இறக்கை கொடுத்து, வானுக்கு ஏத்திவிட்டதை போல் தோன்றும். (இதை எழுதும்போது, மதன் கார்க்கியின் ஒரு பாடல்வரி நினைவிற்கு வருகிறது- “மீன தூக்கி ரெக்க வரஞ்ச..வானம் மேல வீசி எறிஞ்ச..பறக்க பழக்குறீயே” ). முதன்முறை விமானத்தின் இறக்கையை அருகில் பார்த்தபோது, ‘என்ன இது, உடஞ்ச மாதிரி லூசா எடுத்துட்டு இருக்கே’ என்று எனக்குள் சற்று பதற்றம் கொண்டேன். ஆனால், பறக்கும்போது, மேகங்களையும், ஆகாயத்தையும் பார்க்கும் மகிழ்வுக்கு நிகரானது, அந்த இறக்கை காற்றின் விசையை கிழித்து அடக்கி முன்னகர்வதை காண்பது.
விமானத்தில் இருக்கும்போது, என் விமானம் மட்டுமே ஆகாயத்தில் இருப்பதாய் எண்ணம். இப்போதும் கூட அப்படித்தான். அந்த மாயையில் இருக்கும்போது எதார்த்தமாய் ஒரு விமானம் என் எதிரில் கடந்து போகும். அதை உணரும்போதுதான், நாம் பறக்கும் அந்த வெளியில், அதே நேரத்தில் எத்தனை ஆயிரம் விமானங்கள் பறந்து கொண்டிருக்கிறது என்ற பிரக்ஞை எட்டும். எட்டியதும், நான் கண்ட பட்டு சரிகை போல், வான் வெளி சாலையில் மின்மினிகளாய் தொடரும் விமானங்களை, எனக்கு பல அடுக்குகள் மேலேயிருந்து காணும் என் சந்ததியினரை, ஜன்னல் வழியே கண்டுக்கொண்டிருப்பேன்.
ஜன்னலை சொன்னதும், விமானத்தின் அழகு சன்னலில் மனம் நிலைக்கிறது. அதற்கு திருஷ்டி வைத்தாற்போல் என்ன ஒரு பொட்டு அல்லது அது ஓட்டையா என்று மனதில் எண்ணம். அது ஏதும் ஆணியா? அல்லது ஸூக்ரூவா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். பின் அதைப்பற்றி படித்தபோதுதான், மூன்றடுக்கு கண்ணாடிகளால் செய்யப்பட்டது விமான ஜன்னல்கள் என்பதும், அந்த துவாரம், உள்-வெளி காற்றழுத்தத்தை சமன் செய்வதற்காக என்பதும் தெரிய வந்தது.
இந்த முதல் நீண்ட தனி பயணம், அடுத்த வருடமே என் மேலாளரை, என்னை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்க வைத்தது. என் அப்பாவிற்கு ஒரு நம்பிக்கையை அளித்தது. மகள் தனியாய் எங்கு வேணாலும் சென்று இருந்து கொள்வாள் என்று. வீட்டிற்கு சொல்லாமல்தான் முதல் அமெரிக்க பயணத்தை ஒருங்கு செய்தேன். டிக்கட் ரத்து செய்ய முடியாது, பணம் திரும்பி கிடைக்காது என்று சொல்லித்தான், அவர்கள் மனதை தயார் செய்தேன். என்னை பயணம் அனுப்பி வைக்க யாரும் வரவில்லை. அது குறையென்றும் தோன்றவில்லை.
வியாழன், 31 அக்டோபர், 2024
ஆயிரம் கரங்கள் நீட்டி..
பின்னிரவில் தூங்கி இருந்தாலும் காலை 6 மணிக்கு முழிப்பு வந்துவிட்டது. பனிக்காலத்தை நெருங்கி கொண்டிருக்கும் ஊரானது சற்று கம்பளியை மேலிழுத்து கதகதப்பாய் உறங்கிக் கொண்டிருந்தது.
இரண்டு மூன்று முறை புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. பிரேம் எழுந்துவிட்டான். நான் ஐ பேடில் எதையோ தேடிக் கொண்டிருந்தேன். புத்துணர்வு கொண்டு வந்து, நான் ஓடி விட்டு வருகிறேன், வெளியில் 18 பாகை செல்சியஸ் என்றான் . நான் தூக்கம் களைந்திருப்பதை பார்த்து, டேபிள் லேம்ப் போட்டவனை, கையசைத்து நிறுத்த சொல்லிவிட்டு, கதவை மூடிவிட்டு போ என்று ஐ பேடில் மூழ்கினேன். சிறிது நேரத்தில் நன்றாக முழிப்பு வந்து, எழுந்து புத்துணர்வு கொண்டு, படுக்கையை சரி செய்து, அறையின் திரை விலக்கியபோது, மனதில் சிறு துள்ளல். செம்மையும், இளஞ்சிவப்புமான மார்னிங் ஹீயுஸ் கொடுத்த பரவசம் அது.
வானிலை செயலி எடுத்து சூரியோதயம் எப்போது என்று பார்த்த போது, 8:18 என்றிருந்தது. மணி அப்போது 8:06. உடனே உடை மாற்றிக் கொண்டு, தலையை கட்டி, காலுறை எடுத்துக் கொண்டு, ஹாலுக்கு வந்து, புதிதாக வாங்கியிருந்த ஷூவை பழக்க வேண்டும் என்ற எண்ணமும், புது ஷூ போட்டு நடைக்கு செல்லும் உற்சாகமும் சேர, கதவை பூட்டிவிட்டு வெளியே வந்தேன்.
ஏறத்தாழ ஆறு மாதம் கழித்து, இந்த காலை நடை இங்கு வார்ஸாவில். இறங்கி நடந்த என் கால்களுக்கு தானாக விரைவு கூட, கிழக்கை நோக்கிக்கொண்டே நடக்கலானேன். ஓட்டம் முடித்து வழியில் பிரேம் வர, என்னுடன் சூரியோதயம் பார்க்க இணைவான் என்று நினைத்தேன். ‘9 மணிக்கு மீட்டிங் ஸ்டார்ட் ஆகுது டா, நான் குளிச்சு, ஜாயின் பண்ண சரியா இருக்கும்’ என்றான். சரிடா பாரு என்று சற்றும் தாமதிக்காமல், என்னை தன்பால் நோக்கி இழுத்துக் கொண்டிருந்த இயற்கையின் மாயக்கரங்களை பற்றலானேன்.
ரவுண்ட் அபவுட் என்று கூறக்கூடிய நாற்சந்திப்பின் மேடை பகுதியில் சென்று நின்றவாறே அந்த மாயாஜாலத்தை பருகலானேன். கீழ் வானத்தில் இருந்து மெல்ல மெல்ல அவன் எழுகிறான். தினமும் அது நடக்கிறது. ஒவ்வொரு முறை காண கூடும் போதும், ‘என்ன ஒரு பெருங்கருணை! என்ன ஒரு பெருங்கணம்! இனி இதனை வாழ்நாளில் தவறவிடக்கூடாது’ என்று தோன்றும். இன்று எனது அப்பாவையும், தம்பியையும் நினைத்துக் கொண்டேன். கதிரவன் முழுதாய் மேலெழுந்து வந்து நின்றதும், நான் நடையை தொடரலானேன்.
எனக்கு பிடித்த ஒரு நடைபாதை. போய்வர இரண்டு மைல்கள் தூரம் கொண்ட ஒரு கச்சிதமான பாதை என்று சொல்லலாம், ஊரை போலவே. நாற்சந்திப்பின் வலதுபுறம், அதாவது மேற்கை நோக்கி திரும்பினால், மெயின் ரோட்டின், இடது புறமாய் நீண்டு செல்லும் அப்பாதை. பைக்கிங் (நம்மூர் சைக்கிள்) பாதையும் அதுதான்.
ஏற்றம் இறக்கம் கொண்டு இருக்கும் அப்பாதை ஓ(ட்)டுபவர்களுக்கும், நடப்பவர்களுக்கும், தாங்கள் ஏதோ பெரிய பயிற்சி செய்துவிட்ட பாவனையை அளிக்க வல்லது. ஆறு மாதங்களுக்கு முன்புதான் நடைபாதையை புதுப்பிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இன்று பாதை புதிதாக கருப்பு கம்பளம் விரித்திருந்தது.
விடியும் காலை கொடுத்த எழுச்சியா, அல்லது, ஆள்மனப்புழுக்கத்தின் அயர்ச்சியில் இருந்து விடுபட துடிக்கும் முயற்சியா என்று தெரியவில்லை, நடந்த என் கால்கள் மெல்லமாக ஓட்டம் பிடித்தன. அவ்வப்போது நடக்கும் போது ஓடவும் செய்வதுண்டு. ஆனால் இன்று இருந்த அந்த சிறிய தூர ஓட்டம் வேறு. அது முன்பு போன்றது இல்லை என்பது மட்டும் உறுதி. அந்த நிமிடம் ஜெ (எனது ஆசான் திரு.ஜெயமோகன்) அவர்களை நினைத்துக் கொண்டேன். நினைத்து கொண்டேன் என்று சொல்வதைவிட அவராய் நடந்தேன். அவரது சுறுசுறுப்பும், சிரித்த முகமும் நினைவில் வந்தன. சிறிது தூரத்தில் நின்று, திரும்பி கதிரவனை நோக்கினேன். திரும்பி மீண்டும் என் திசையில் நடந்தேன். யாருமற்ற நடைபாதை. இலையுதிர் கால சருகுகள் வழியில் நிறைந்திருக்க, என் தூரத்தை காணாது, காலடியை மட்டுமே கருத்தில் கொண்டு நடக்கலானேன். டிப்பிகன்னோ ஆறு இருபுறமும் ஓட, நடுவில் அமைந்த சிறு பாலத்தை கடக்கையில் சற்று தூரத்தில் ஒரு பெண் வருவதை கண்டேன்.
சிறு பதற்றம் உள்ளுக்குள். ஒரு வேளை நமக்கு தெரிந்தவரா? நமக்கு யார் இங்கு தெரிந்தவர், உமேஷ், நிதர்ஷினியை தவிர. நிதர்ஷினி இன்னும் சற்று உயரம். மேலும் இந்த காலை வேளையில் சித்தாந்தை பள்ளிக்கு கிளப்பி கொண்டிருப்பார். நடைக்கு எங்கே வரப்போகிறார், அவராக இருக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, அப்பெண்மணி என்னை நெருங்க, இருவரும் ஒருவருக்கொருவர் காலை வணக்கம் சொல்லி கடந்தோம். அவருக்கு கொடுத்த மென்னகையின் ஒளித் துகள்கள் என் இதழோரம் ஒட்டியிருப்பதை உணர்ந்தேன்.
மேடேறி நடக்கலானேன். இடதுபுற பெரிய கட்டிடத்தின் நீள் கண்ணாடியில் என் உடல் எடையை கண்ணளவு எடுப்பது என் வழக்கம். மூன்று நீள் கண்ணாடிகளை கடக்கும்போதும் அதை செய்து கொண்டே, வலது புறம் அமைதியாய் அமர்ந்திருந்த மேடிசன் எலிமெண்டரி பள்ளி வளாகத்தை கண்டேன். அதன் பார்க்கிங்கில் சில கார்கள் நின்றன. நான் முதன் முதலில் கார் எடுத்து ஓட்ட, இல்லையில்லை முதன்முதலில் பார்க்கிங் செய்ய கற்றுக் கொண்ட இடம். தினமும் ஒரு மணி நேரம் முழுவதும் வெறும் பார்க்கிங் மட்டுமே செய்த நாட்கள் உண்டு. எனது வாகன பயிற்சியாளர் திரு. பிரேம் அவர்கள் பயிற்சியின் ஆரம்ப நாட்களில் வெறும் பார்க்கிங் மட்டுமே செய்ய கற்றுக் கொடுத்தார். அந்த வகையில் இந்த பள்ளி என் மனதிற்கு நெருக்கம். எதிர்புறம் பள்ளி இருக்க, அதோடு என் நடைபாதை எல்லை முடியும். ஆனால், அதன்பின் மீண்டும் ஒரு நாற்புற சாலை சந்திப்பு தாண்டி, பாதை சென்று கொண்டுதான் இருக்கும்.
நான் திரும்பி இப்போது கிழக்கு நோக்கி, வந்த வழியில் நடக்கலானேன். கதிரவன் இந்த பதினெட்டு நிமிடங்களில் ஓரளவு உயரத்திற்கு வந்துவிட்டான். என் கண்களில் என் தந்தையின் சிரித்த முகம். நடந்து வந்து கொண்டிருக்கையில், இடதுப்புறம் இன்னும் பனிக்காற்றின் கைகள் தீண்டப்படாத, கதிரவனின் கண்ணொளியில் மங்கிடாத , செவ்விலை மரங்களும், மஞ்சள் நிற மரங்களும், மோனேயின் ஓவியம் போல நிலைத்திருக்க, நெஞ்சம் சில நொடிகள் அதில் நிலைத்திருந்தது.
அவ்வழியில் சில சமயங்களில் நானும் பிரேமும் எதிரெதிரே சந்தித்து கொள்வதுண்டு. அவன் ஓட்டத்தின் வழிதடத்தில், என் நடையின் பாதை சந்தித்து கொள்ளும் தருணங்கள். அவ்வாறு சந்திக்கும் ஒரு சில வேளைகளில் தூரத்திலிருந்து, நான் அவனை நோக்கி, 90களில் வெளிவந்த கேட்புரீஸ் விளம்பரத்தில் வரும் பெண், மைதானத்தில் இறங்கி ஆடுவது போல் சேட்டை செய்வதும், இருவரும் 80களின் பாரதிராஜா பட கதாநாயகி, நாயகர் போல் ஸ்லோ மோஷனில் ஓடி வருவது போன்ற பாவனை செய்து சிரிப்பதும் மனதில் மலர்ந்தன.
பின்பு என் வழியில் ரில்கேயும், முராகமியும், பஷீரும், நாமக்கல் கவிஞரும், கல்கியும், அருணா அக்காவும், (அருண்மொழி நங்கை), பெருமாள் முருகனும் அலைமோதுகிறார்கள். அவ்வழித் தடத்தில் இப்படைப்பாளிகளின் புத்தகங்களை கேட்டவாறு நடந்த அனுபவங்கள் சேர்ந்து வந்து, தோள் தொட்டன.
ரில்கேயுடன் பாரீஸில் அமர்ந்து, கடிதங்களுக்கு அவர் பதில்களை கேட்டதும், முராகமியுடன் நியூயார்க்கில் நான் ஓடியதும், நாமக்கல்லாரால், எம்.ஜி.ஆருடன் மலைகளை தாண்டியதும், கல்கியின் பூங்குளம் கிராமத்தில் வாழ்ந்ததும், அருணா அக்காவின் பால்ய நாட்களை அருகிருந்து பார்த்ததும், குமரேசன், சரோஜாவை பார்த்திட வேண்டுமே என்று நான் பதற்றப்பட்டதும், மஜீதும் சுகறாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கும் அவ்விரவில், விவஸ்தை இல்லாமல் நான் அவர்களுடன் இருந்ததும் ஒரு சேர அணிவகுக்க,மென்னகையுடன் நான் நடக்கலானேன். சூரிய கிரணங்கள் என் மீது விழ, நான் மீண்டுமொரு மேடேறினேன்.
ரவுண்டு அபவுட்டின் எதிர்புறம் கடக்கையில், புல்வெளி, உதிர்ந்த செவ்விலைகளால் மலர்ந்திருந்தது கண்ணில் பட்டது. என் தலைக்கு மேல், அழகான ஓசையுடன், அணிவகுத்து, கனடியன் நாரைகளும், ஃபின்சுகளும் (குருவியினம்) கிழக்கு நோக்கி பறந்தன. எனது இடது பக்கம் புதிதாக நம்மூர் பன்னீர் ரோஸ்கள் மலர்ந்திருந்தன.என் வீடு, கை விரித்து என்னை வரவேற்றது.
*
வியாழன், 10 அக்டோபர், 2024
என் வினையை கண்டேனே!
சில்க் போர்டு பாலத்திற்கு முன் 2:15 மணிக்கு திருச்சிக்கு பஸ். மதிய வேளையாய் இருந்தும் ஸ்லீப்பர் பஸ் தான் புக் பண்ணியிருந்தேன். மாமானார் என்னை ஏற்றிவிட வந்திருந்தார். கையில் வைத்திருந்த கட்டை பையை எவ்வளவு கேட்டும் கொடுக்கவில்லை. பெங்களூர் என்றாலும் வெயில் வெளுத்து வாங்கி கொண்டிருந்தது. அங்கு இருந்த பஸ் நிறுத்தத்தில் ஐந்து நிமிடங்கள் நின்றிருந்திருப்போம். எனக்கான பஸ் வந்துவிட்டது. ‘வா மா பஸ்
வந்திருச்சு’ என்று சொல்லிக்கொண்டே, எனக்காக காத்திருக்கவில்லை, சிறு பையனை போல் சுறுசுறுப்பாய் முன்னே சென்று கை போடுகிறார். அந்த நடையில் அவர் குணம் தெரிந்தது. ‘மாமா பாத்து, பஸ் நிக்கும்’ என்றேன். அவர் கேட்கவில்லை, அவருக்கு கேட்கவில்லை. அருகே சென்று பையை வாங்கிக்கொண்டு, தேங்க்ஸ் மாமா, உடம்ப பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு, பஸ்ஸில் ஏறி என் இருக்கைக்கு சென்றேன். செருப்பு காலோடு பஸ் இருக்கையில் கால் வைக்க ஒப்பவில்லை. செருப்பை கழற்றிவிட்டு காலை மேலே வைக்கலாம் என்றால், டிரைவர் ஆக்ஸிலேட்டரை அழுத்தினால், செருப்பு அடியில் எந்த கிடுக்கில் மாட்டிக் கொள்ளும் என்று தெரியாது. கை எட்டாத தொலைவிற்கு சென்று சிக்கிக்கொண்டால், அதை எடுப்பதற்கு தொழுவது போல் பிரயத்தனப்படவேண்டும். இவையெல்லாம் அரை வினாடியில் மனதில் விரிந்திட, செருப்பை கழற்றாமல் ஒருவாறு வளைந்து அமர்ந்துக்கொண்டு, திரையை விலக்கி கண்ணாடி வழியில் கையாட்டினேன். மாமா கண்ணாடி அருகில் வந்து நின்று தலையாட்டினார், புன்னகைத்தார். இரண்டு நிமிடங்களில் பஸ் புறப்பட்டுவிட்டது.
பேக்பேக்கை இருக்கையின் இடதுப்பற கால் பகுதியில் வைத்துவிட்டு, கட்டை பையை என் இருக்கையின் இடதுப்புற நடுப்பகுதியில் சரி செய்து வைத்துக்கொண்டேன்.
அடுத்து என் பாதுகையை பாதுகாக்கும் திட்டம். குனிந்து அடியில் பார்த்தேன். ஏற்கனவே நான் அடியில்தான் இருந்தேன். லோயர் பர்த் வேண்டும் என்று ஒரு நாள் தள்ளி பதிவு செய்திருந்தேன். இது லோயர் இல்லை.லேயர் என்று சொல்லலாம். என் படுக்கையை உரித்துவிட்டு பார்த்தால் பஸ் சக்கரம் தெரியும் என்று நினைக்கிறேன். இதுவும் ஒரு மாதிரி நல்லாதான் இருந்தது. ஜப்பானியர்களின் பண்பாட்டில் மெத்தையை கீழே போட்டு தூங்கும் வழக்கம்போல். நானும் என் வீட்டில் அப்படித்தான் தூங்குவேன். சில சமயங்களில் ஒருகளித்து படுத்து வலது கையை தரையில் வைத்து கொள்வேன். அதில் ஒரு சொகுசும் இருக்கு, நிலத்தை ஸ்பரிசிக்கும் நிம்மதியும் இருக்கு.
பாதுகைக்கு பாதகம் இல்லை. கீழே இரண்டு பகுதிகளாய் பிரிந்திருந்தது. ஒன்றின் நீளமும், அகலமும் அதிகம். அதில் செருப்பு மாட்டினால் நான் நிச்சயமாய் தொழுகைதான் நடத்த வேண்டும். இன்னொரு பகுதி செருப்பு வைப்பதற்காகவே என்று, சிறியதாய், சற்று இறக்கத்தில், நீளம், அகலம் கம்மியாக இருந்தது. எழ முடியாமல் பஸ் ஓட்டத்தில் ஆடி எழுந்து அதில் கழற்றி வைத்தேன். ஏற்கனவே வெளியில் கழற்றி போட்டுவிட்டு எனக்கு எதிர் இருக்கையில் படுத்திருந்த பெண்மணி, என்னை பார்த்து, செருப்பை எடுத்து அவருக்கு உண்டான அந்த பகுதியில் வைத்துவிட்டு என்னை பார்த்தும் பார்க்காதது போல் படுத்துக் கொண்டார்.
இருக்கையின் திரையை இழுத்து வெல்குரோவை ஒட்டிவிட்டு, தலையணையை நிமிர்த்தி வைத்துக்கொண்டு, ராணி தோரணையாய் கால் நீட்டி சாய்ந்து நீள்மூச்செடுத்தேன்.
மனதில் ஒரு அவசரம், அதை நினைக்கையில் பரவசம். கிளம்பும்போது, என் ஓப்பிடியார், மாமனாரிடம் சொல்லி, என் பயணத்திற்கு Dairy Milk Silk சாக்லெட்டை வாங்கி வரச் செய்திருந்தார். பயணத்தில் எனக்கு அதை சுவைக்கப் பிடிக்கும். பசியாறவும் நான் தேர்ந்தெடுப்பது அது. அது என் கைப்பையில் இருக்கு என்று நினைக்கும்போதே பரவசம் தான். அதன் ஆடை முழுவதுமாய் களையப்படாமல், முதலிரவில் தன்னை முழுதளிக்க இருக்கும் பெண்மையை, தயங்கி,நெருங்கி, பாங்காய் வெளிக்கொணரும் ஆண்மையாய் என் கைகள் மாறும். என்ன ஒரு தேவையற்ற கற்பனை. சாக்லெட் சாப்பிடும் சபலத்தை சற்று தள்ளிப்போட்டேன். பஸ் தன் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
நான் இந்த முறை கையில் புத்தகங்கள் எதுவும் எடுத்து வரவில்லை. கிண்டிலில் வாசித்து கொள்ளலாம். மேலும் 3 மாத காலமாக பாடல்களே கேட்காமல் இருந்த காரணத்தினால் பயணத்தில் பாடல்கள் கேட்கலாம். இல்லை எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்க வேண்டும் என்றெல்லாமான எண்ணங்களோடுதான் இரண்டு நாள் பயணமாக வந்திருந்தேன்.
அமைதியாய் அந்த வெயிலில், அகன்ற கண்ணாடி சன்னல் வழியில் கடைகளையும், மனிதர்களையும், மரங்களையும், சின்ன சின்ன குன்றுகளையும் பார்த்துக்கொண்டே சென்று கொண்டிருந்தேன். மதிய வெயில் பொதுவாய் என் மனதில் ஒரு வெறுமையை பரப்பும். மக்கள் நடமாட்டம் மங்கியிருக்கும் அந்த இரண்டு மூன்று மணி நேர இடைவெளியில், நிலம் வெறித்திருப்பதாய் தோன்றும். மேலும், மூடியிருக்கும் சன்னல் வழியே பார்க்கும்போது, எட்ட இருக்கும் நிலப்பரப்பும், நான் அங்கு நடந்து கொண்டிருப்பது போலவும் மனதில் காட்சி விரியும். அது தனிமையின் உணர்வையும், ஏகாந்தத்தையும் ஒரு சேர தருவதாய் தோன்றும். அந்த உணர்வின் சிறகில் நகர்ந்துக்கொண்டேயிருந்தேன்.
லேசாக பசிக்க ஆரம்பித்தது. சாக்லெட்டை பிரித்து சுவைத்துக் கொண்டே பாடல்கள் கேட்கலானேன். எனக்கு என்றுமே அது ஒரு சுகானுபவம். சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தேன். பயணத்தின் போது தண்ணீர் பொதுவாக கம்மியாக குடிக்கும் வழக்கம். இந்தியாவில், பொது கழிப்பிடங்கள் இன்னும் பெரிதாக இல்லை. இருந்தாலும் அது பயன்படுத்தும் அளவுக்கு பராமரிக்கப்படுவதில்லை.மேலும், பஸ் பயணத்தில் அவன் ஒரு ஹோட்டலில் ஹால்ட் போடுவான். அந்த இடத்தின் முகப்பை பார்த்தாலே நமக்கு போகத் தோன்றாது. இருந்தாலும் பின்னால் தொல்லை கொடுக்கும் பல் வலியை நினைத்து, கொஞ்சம் தண்ணீர் குடித்து, பல்லில் ஒட்டியிருக்கும் சாக்லெட்டை சுத்தம் செய்தேன்.
ஐ போனில் முழு மின்தேக்கம் வைத்திருந்தாலும், பயணம் முழுதும் அதை வைத்துக்கொள்ள வேண்டி, இணையத்தை இணைக்காமல், போனிலிருந்த சில பாடல்களை முதலில் கேட்போம் என்று,
‘நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பார்த்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல’ என்ற பாடலை கேட்கலானேன். மனம் ‘ஏந்திழையில்’ லயித்தது. என்ன அருமையான சொல்லாடல்! வாலியை நினைத்தேன். பின் அந்த வார்த்தை வேறு எந்த பாடல்களில் வருமென்று யோசிக்கலானேன். ஏதோ ஒரு பழைய பாடலில் அவ்வார்த்தையை கேட்ட ஞாபகம்.சட்டென நினைவுக்கு வரவில்லை. சங்க இலக்கியத்தில் எங்கு வருகிறது என்று தேடி பார்த்ததில், புறநானூற்று பாடலில் (பாடல் 66)
“ஏந்திழை வில்லொடு
இருஞ்சரு நாணுடை
கொடிய செருத்தவொடு"
என்று வருகிறது.
இதை பிசிராந்தையர் பாடியுள்ளார். இப்பாடல் கொடியரசர் நன்னன் மீது பாடப்பட்ட இகைப் பாடலாகும்.
இது எப்படி இந்த இடத்தில் பொருத்தமாகும்? பாடலில் கதாநாயகன், தன் நாயகிக்காய் காத்திருக்கிறானே என்று மேலும் தேடியதில்,அழகிய ஆபரணங்களை அணிந்த பெண் என்றும் பொருள் கொள்ளப்படுவதாய் ராமன் என்பவர் தன் வலைப்பூவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் அதற்கு நாலாயிர திவ்யபிரபந்தத்திலிருந்து அச்சொல் பயன்பாட்டை மேற்கோள் காட்டி, அதனை நாடோடி தென்றல் படத்தில் இசைஞானி தன் பாடலான ‘மணியே மணிக்குயிலே’ பாடலில் பொருத்தமாய் பயன்படுத்தியிருந்ததை சுட்டிக்காட்டியிருந்தார். (http://loginramanan.blogspot.com/2016/07/blog-post.html?m=1)
சில்வர் டப்பாவி்ல், தேவி (என் ஓப்பிடியார்) தோல் நீக்கி, கருக்காமலிருக்க மேலே லேசாக உப்பு தூவி, வெட்டி வைத்திருந்த ஆப்பிள் துண்டுகளை கொரித்தவாறே , அதை வாசித்து மூடிவிட்டு அப்படியே வானத்தை பார்த்துக்கொண்டே மனதில் எங்கோ அலைந்திருந்தேன். நேரம் கடந்தது.
அந்தி வானம். இரவு இன்னும் தன்னை விரித்துக்கொள்ளவில்லை. என்றாலும் அழகான பிறை நிலவு தெரிய ஆரம்பித்திருந்தது. அதனருகில் சிறு துண்டு மேகம். அந்த மேகத்தின் நுனி பிசிறுகளின் தொடுகை அந்த பிறை மேல். மனதில் ஒருவித ஆசுவாசம், ஒரு கிளர்ச்சி, சிறு புன்னகை, பெருங்கர்வம் என்று உணர்வுகளின் அலைக்கழிப்பில் தள்ளாடியபடி நகர்ந்திருக்க, பஸ் இடைவேளைக்காய் மேலூரில் நிறுத்தப்பட்டது.
இறங்க வேண்டுமா என்று உடம்புடன் ஒரு சிறு உரையாடல் நிகழ்த்தி, வயிறு மிக லேசாக முட்ட ஆரம்பித்திருந்த போதிலும், இன்னும் 3 மணி நேரம் தான் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லி அதன் வாயடைத்துவிட்டிருந்தேன். பஸ் மீண்டும் கிளம்பியது.
இருட்ட தொடங்கியிருந்தது. வண்டி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
முழுமையறிவு யூ டியூப் சேனலில், ‘நாத்திகத்திற்கு தத்துவம் உண்டா? என்ற தலைப்பில் (https://youtu.be/G30OGroEBOI?si=uerbnGwldzRsZ_g_) ஜெ-யின் உரை கேட்கலானேன். முடியும்வரை முழு கவனம் அதிலிருந்தது. முடிந்தபின்தான் உடலின் மீது கவனம் திரும்பியது. என் உடல் லேசாக அசெளகரியம் அடைய தொடங்கியிருந்தது. இடைவேளை நிறுத்தம் கடந்து அரை மணி நேரம் ஆகியிருக்கும். என் அடி வயிறு நிரம்பிக் கொண்டிருந்தது. சரி அதில் கவனம் கொள்ள வேண்டாம். கொஞ்சம் மனதை திசை திருப்புவோம் என்று மீண்டும் வானத்தை பார்க்கிறேன். இம்முறை எந்த அழகும், உணர்வுகளும் தோன்றவில்லை. எனக்குத் தேவையெல்லாம் சீக்கிரம் மணி ஒன்பது ஆகவேண்டும். அப்போதுதான் பஸ் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வந்து சேரும். ஆகையால் அது மட்டுமே புத்தியில் ஓடிக்கொண்டிருந்தது. மணி பார்த்தேன். இரவு 7:15 ஆகியிருந்தது. குளிர தொடங்கியிருந்தது. தலைக்கு மேல் இருந்த Knob-ஐ சுற்றி, ஏ.சி யை நிறுத்திவிட்டேன்.
மனதில் அரை மணி நேர முன்பான கடந்த காலத்திற்கு சென்று, இடைவேளையில் நின்றிருந்த பஸ் விட்டு இறங்கி, சிறுநீர் கழித்துவிட்டு வந்து அமர்ந்துக்கொண்டேன். ஆஹா, எவ்வளவு நிம்மதியாய் இருந்திருக்கும் செய்யாமல் விட்டுட்டோமே என்று பொருமினேன். பொறுமையிழக்க தொடங்கியது. இருந்தாலும் கர்வத்தோடு, நம்மால் மூன்று மணி நேரம் தாங்கிவிட முடியும் என்று அமர்ந்திருந்ததற்கு இந்த பதற்றம் தேவைதான். அனுபவி என்று புத்தி கோபத்தை கக்கி கொண்டிருந்தது.
மனம் எழுந்து , இல்லாமையின் பாதையில், உடலை செலுத்தி, பஸ்ஸின் பின்பக்கம் கழிவறையை நோக்கி செல்கிறது. அங்கு கழித்துவிட்டு வந்து அமர்ந்து ஆசுவாசமாகிறது.
வண்டி பைபாஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தது. இரு பக்கமும் கடைகளும் இல்லை, காடுகளும் இல்லை. கால் மடக்கி குதிகாலை அண்ட கொடுத்து ஒருவாறு ஆசுவாசம் கொள்ள தவிக்கிறேன்.
வேர்க்க ஆரம்பித்தது. ஏசியை போட்டேன். சரிந்து படுத்து கொள்வோம். மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது. இன்னும் ஒரு மணி நேரம்தான் என்று முயற்சி செய்தேன். முடியவில்லை. மீண்டும் அதே நிலையில் அமர்ந்துக்கொண்டேன். சரி இப்ப என்ன பெட்ரோல் பங்கில் பஸ்ஸை நிறுத்த சொல்வோம். இல்ல வேணாம், மற்றவருக்கும் இதனால் வீடு செல்வது தாமதமாகுமே. நம்மள மாரி அர கிறுக்கு, அந்த நிறுத்தத்துலயும் போகாம, வயிறு முட்டி அவதிப்பட்டா? பட்டா உனக்கென்ன? ஓ உடம்ப மதிக்க துப்பு இல்ல, அடுத்தவனுக்கு கரிசனம். ஆ, இதோ ஒன்று வரும் போலையே. லைட் எரியுதே Indian Oil போர்டில். எழுந்து போக குதிகாலை கீழை வைக்கிறேன். வயிறு அவ்வளவு கனமாய். எழுந்து நிற்கவே பயமாக இருந்தது, முடியவில்லை. அடி வயிறு வலிக்க ஆரம்பித்துவிட்டது. சரி அடுத்ததில் நிறுத்த சொல்வோம். வண்டி சட்டென்று சாலையின் மத்தியில் ஓரங்கட்டப்பட்டது. கடை ஏதும் இருக்கோ? நமக்கு முன்னாடி யாரோ கேட்டு நிறுத்திட்டாங்க போலயே என்று சற்று ஆனந்தம். திரை விலக்கி பார்த்தேன். கட தண்ணீ ஏதுமில்லை. அந்த இருட்டு சாலையில், வண்டியில் இருந்த இன்னொரு டிரைவர் இறங்கினார்.அந்த வெட்டவெளியில் சிறுநீர் கழிக்கலானார். திரையை மூடிக்கொண்டேன். பத்து நிமிட இடைவெளியி்ல் மீண்டும் வண்டி நின்றது. திரை விலக்கி பார்த்தால், அதே டிரைவர் இறங்கி மீண்டும் கழித்தார்.
இப்போது சற்று பரவாயில்லை போலிருந்தது.
அடுத்த பங்க் வரவேயில்லை. மணி 8:20. சரி இன்னும் நாற்பது நிமிடங்களில் திருச்சி சென்று விடுவோம் என்று தேற்றிக்கொண்டேன்.
வண்டி குளித்தலையை நெருங்கி கொண்டிருந்தது. இப்ப என்ன, அப்படி முட்டி கழித்துவிட்டாலும் பாதகமில்லை. இது என்ன எனக்கு மட்டும்தான் இந்த உபாதையா என்ன? உலகில் யாருக்கும் நிகழ்ந்திருக்காதா என்ன?
வண்டியின் ஆட்டத்தில் என் பேக் பேகின்
வலது ஓரத்தில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் ஆடுகிறது. ஆப்பிள் தின்று முடித்து, செருகியிருந்த காலி டப்பாவை கண்கள் தொட்டு திரும்புகின்றன.
இவ்வளவு யோசிக்கிற உனக்கு, கேட்டு வண்டியை நிறுத்த என்ன பயம்? பயமா? அவமானமா?
எனக்கென்ன பயம்? இதிலென்ன அவமானம்? நிறுத்தாவிட்டால்தான் அவமானம். இல்லையில்லை அசூயை, மற்றவருக்கு.
எழுந்து டிரைவர் அருகில் சென்றேன். ‘அண்ணா பாத்ரூம் போகணும். கொஞ்சம் நிறுத்துங்க ணா’.
இங்க ஏதும் இடம் வந்தா நிறுத்துறேன்.
சரி என்று வந்து எனது படுக்கையில் அமர்ந்துக்கொண்டேன். ஒரு இரண்டு நிமிட இடைவெளியில், ஒரு ஆள் அரவமற்ற சாலையில், வண்டி இடதுப்புறமாக திரும்புகிறது. பெட்டவாய்த்தலை பை பாஸ் ரோடாக இருக்கக்கூடும். அந்த இருட்டில் ரோடு தெரிவதே பெருசு. கொஞ்சம் கடந்ததும் சாலை நான்கு புறமும் விரிகிறது.
நாற்சந்திப்பின் இடதுப்புறம் பஸ் மெதுவாக சென்று ஓரங்கட்டப்பட்டது. அது எனக்காகதான் என்று புரிந்து, முட்டும் வலியுடன் எழுந்து, கதவருகில் சென்றேன். டிரைவர் வலதுப்புறம் கைக்காட்டி, அந்த சந்துக்குள்ள போ மா என்றார். நான் அவர் காட்டிய திசையை பார்த்தேன்.
அந்த நாற்சந்திப்பில், சாலையின் எதிர்புறம் அந்த பெரிய டீ கடை. ஒரு வேளை கடைக்குள்தான் கை காட்டுகிறாரோ என்று நினைத்து இறங்கலானேன். படிக்கட்டில் கிளீனர் நின்றுக்கொண்டு, பஸ் நின்ற சாலையின் இடதுப்புறம் கை காட்டினான்.
அங்க எங்க?
அப்படியே ஓபன் ல தான் மேடம்.
சொன்ன அவன் கண்களில் ஒரு கர்வம் மின்னி மறைந்தது. என் கண்களில் திமிரு திமிரியது.
மேலும், அவன் சொன்ன திசையில் இரண்டு லோடு லாரிகள் ஓரங்கட்டப்பட்டிருந்தன.
ஆனால், மனதளவில் அங்கு நெருங்கி, பேண்ட் கழற்றி எனது பிட்டம் தெரிய கழித்துவிட்டேன்.
டிரைவர் இருக்கை விட்டு இறங்கி எனது பக்கம் வந்து,வா மா என்று கூப்பிட்டு கொண்டே டீ கடை நோக்கி சென்றார்.
அவர் காண்பித்த அந்த சந்தின் வாசப்படியில் ஒரு வெள்ளை நாய் படுத்திருந்தது.
அண்ணா ஓபன் ல இருக்கானா, இருட்டா இருக்கே, நாய் வேற இருக்கே..
அதுலாம் ஒன்னுமில்லமா வா..
இருங்க நான் கடைக்குள்ள இருக்கான்னு கேக்குறேன்னா.. என்று சொல்லிக் கொண்டே முன்னால் சென்றேன்.
டீ மாஸ்டர் முதற்கொண்டு, கடையில் இருந்த அனைவரும் என்னை திரும்பி பார்த்தனர்.
அண்ணா பாத்ரூம் இருக்கா?
இந்த பாருமா சைடுல என்று மாஸ்டர் கை காட்டினார்.
லைட் இல்லையா ணா?
இல்லமா. அதுலாம் பயமில்ல வாங்க..
அவர் என் முகத்தை கூட பார்க்கவில்லை. பார்த்திருந்தாலும் என் கண்கள்தான் தெரிந்திருக்கும். மாஸ்க் போட்டிருந்தேன், கழிப்பிடம் செல்கிறோமே என்று.
நாய் வேற இருக்கேண்ணா.உள்ள இருந்துச்சுன்னா?
அதுலாம் ஒன்னுமில்லமா என்று சொல்லி கொண்டு நடக்கையிலேயே அந்த நாய் எழுந்து விலகி போனது.
அவர் கதவை திறந்து வைத்து, கை காண்பிக்க, சற்று தயக்கத்துடனும், பிறகு தைரியத்துடனும், பேண்ட பாக்கெட்டிலிருந்து எனது போனை எடுத்து, லைட்டை போட்டுக்கொண்டே மெதுவாக திறந்திருந்த கழிவறைக்குள் சென்றேன். கதவுக்கு தாழில்லை.உள்ளே நாய், பூனை, பூச்சி என்று எதுவுமில்லை. மாறாக கழிவறை சுத்தமாகவும், வாடையின்றியும், நிரம்பிய தண்ணீருடனும், நல்ல பிளாஸ்டிக் மக்குடனும் இருந்தது எனக்கு பேரமைதியை தந்தது.
அப்போது என் உள்ளம் அறிந்திருந்தேன். அந்த சூழ்நிலையிலும் மனதுக்குள் ஏதோ அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றின் இருத்தல், இல்லாமை என்றதன் முதுகின் பின்னால் ஒளிந்திருந்தது தெரிந்தது.
அடி வயிறு லேசாக சில நிமிடங்களானது. வெளியில் வந்து பார்த்தால், கடையின் வெளிச்சத்தில், எதி்ர்புறம் நிற்கும் பஸ்ஸில், டிரைவர் அதற்குள் உள்ளே ஏறி அமர்ந்துவிட்டார்.
எனக்கு, இப்போது கடையினுள் சென்று அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாய் ஏதேனும் வாங்க வேண்டும். ஆனால், கடை சற்று பெரிது. கொஞ்சம் உள்ளே நடந்து செல்லவேண்டும். டிரைவர் என்ன இவ்வளவு நேரம் என்ற தோரணையில் கடு கடுவென பார்த்துக் கொண்டிருப்பதாய் தோன்றியது. வேறு வழியின்றி என் கால்கள் பஸ் நோக்கி நடந்தது.
என் முதுகிற்கு பின்னால் இரண்டு கண்கள் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறது. பழுப்பு நிற முண்டா பனியன் போட்டிருந்த, மெலிந்த தேகம். தாடி வளர்ந்திருந்த, நரை முடிகள் கூடிய, களைந்த தலையும், ஒட்டிய கன்னங்களும், நீண்ட முகமும் கொண்ட நடுத்தர வயது அண்ணனாகிய அந்த டீ மாஸ்டரின் முகம். நான் திரும்பி அவரை நோக்கி கையாட்டினேன்.அவரும் பதிலுக்கு கையாட்டினார். நடந்து வந்து பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.
*