சாத்தான்குட்டிப்பிள்ளையின் பயணம் - அகங்காரத்தில் உழல்கிறது அவனது அறிவு என்று இரு இடத்தில் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அவனுக்கு அகங்காரம்தானா?
கிணறு தோண்ட தேர்ந்தெடுக்கும் இடத்தை, அவன் சாஸ்திரப்படி கேள்வி எழுப்புகிறான்.. அவன் சாஸ்திரம் தரும் சொல்லை நம்புகிறான். அனுபவஸ்தர்கள் சொல்லும் சொல்லை அல்ல. தான் அறிந்த சொற்களை. அந்த கற்றல் தந்த அனுபவத்தை. தன் அனுபவம் எப்படி பொய்யாகும் என்ற முரண்டு. ஆகையால் மற்றவர் கணக்கில் நம்பிக்கை இல்லை. ஒரு வகையில் அகங்காரம் தானோ?அறியாமையினால் முளைக்கும் அகங்காரம். அல்லது, அந்த அறியாமையை ஒத்துக்கொள்ளாததால் விளையும் அகங்காரம்.
“படிப்பு நல்லதாக்கும். ஆனா படிப்பு பாம்புமாதிரி இருக்கணும். தலையிளுக்க உடல் செல்லும் திக்கில நேரா போணும். நண்டு மாதிரி நாலுதிக்கும் போவப்பிடாது”
அதன்பின் அவன் அந்த அகங்காரத்தால் துரத்தப்படுகிறான். அந்த துரத்தலின் கனம் தாளாமல், தோல்வியினை ஒத்தும் கொள்கிறான். அந்த அகங்காரம் அவனுக்கு அறிவை நோக்கி ஒரு தேடலை தொடங்கி வைக்கிறது. அறிய முற்படுகிறான், அதற்கான நபர்களை பின்தொடர்கிறான். சிலர் அரணாய் (அரனாய்) இவனை பின்தொடர்கின்றனர். அறிந்து கொள்கிறான். அப்போதும் அவன் விழைவு மேலும் அறியாமையையே துரத்தி சொல்கிறது.
“சக்கரத்தை அறிய சுழிமுனையைத் தொடலாமா? சக்கரமிருப்பது சுழற்சியிலே அல்லவா? சக்கரத்திலே சுழலாமலிருக்கும் சுழிமுனை சக்கரமேயில்லை”
அவனிடம் ஞானம் பெற்றவனாய்,ஞானமுத்தன். பிற்காலத்தில் அவனிடமே இவன் குமுறி அழுகிறான். வாசிக்கையில், “ச்சீ என்னடா இது” என்று சுளித்தேன். இப்போது தொகுக்கையில் தோன்றுகிறது, அதற்கு ஒரு வான் விரிந்த மனம் வேண்டும். தான் அறிந்த எதுவும் எல்லையில்ல, அதை தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது என்ற பதற்றமே, அதனை அறிய முடியா இயலாமையே அவனை நடுங்க செய்கிறது, குலைய செய்கிறது. அவனை சுற்றி வரும் அனைவரும், ஏதோ ஒன்றை அறிய விழைந்தாலும், ஒரு வரையறைக்குள் நின்று விடுகிறார்கள். நாடார் முதல் முத்தன் வரை. அவ்வளவுதான் அறிய கூடுவது என்ற ஞானமா அது ?அல்லது அவ்வளவும் அறிந்தாகிவிட்ட அகங்காரமா அது ? அல்லது, அவர்கள் லெளகீக வாழ்க்கைக்குத் தேவையான தேடல் மட்டுமேவா?
ஆனால் பிள்ளையின் தேடல் வேறு. அது நிறைவளிக்காத தேடல். அது நிறைவடையாதுதான். இந்த அண்டத்தின்பெரு ரகசியத்தை ஒரு பிறவியின், ஒரு வடிவின், ஒரு உயிரின் பயணத்தில் அறிந்திட நினைப்பதல்லவா மாபெரும் விழைவு, மாபெரும் அகங்காரம். அந்த அகங்காரம் கெட்டது அல்ல. அது அவனுக்கு அடங்கியதும் அல்ல. அவனே நினைத்தாலும், அவனை விட்டு அது நீங்காது.
“இந்த ஒரு வட்டத்துக்குள்ளே என்னென்ன ஓடுதுண்ணு அறிஞ்சிடுவீரோ? என்னென்ன சக்திகள், என்னென்ன தெய்வங்கள். சென்றதும் நடப்பதும் வருவதும். முக்காலமுமான இக்காலம். உலகைத்தேடி அலைஞ்சு எங்கே போகப்போறீர்? இந்த எடத்தை அறியும். இங்கே இருக்கு உம்ம ஞானம். மூலாதரம் கனிஞ்சு முளைக்கும் முழுநிலவு இங்கே உதிக்கும்”….
அவன் விழைவு, அடங்கி அல்லது திசை மலுங்கி இருந்த நாகம்மையின் அருகாமையே, அந்த தருணங்களே, அந்த விழைவின் அகங்காரம் நுழையாத ஆழம். அந்த ஆழத்தின் ஸ்பரிஸம் நினைவில் மீள்கையில், அவன் வலம் வந்துகொண்டிருக்கும் மாபெரும் சுழற்சியினை கண்டுகொள்கிறான், அதில் அமைதி கொள்கிறான். முழுவதும் அறியமுடியாது என்ற அறிவே அவனை அமைதி கொள்ள செய்கிறது எனலாமா? அல்லது, அவன் அந்த சுழற்சிதோறும் தான் அறிந்து கொள்வதாய் அறிந்து கொள்ளும், அல்லது அவ்வாறு கொள்ளும் பாவனை, அவனை அமைதி கொள்ள செய்தது எனலாமா? அல்லது அவன் அமைதி கொண்டானா? அல்லது அனைத்தும் அறிந்து கொண்டானா? அதன் விளைவாகத்தான் புஷ்கலமாய் பூத்து கனிந்து நின்றானா?
“…………………
…………………
………………….
தேவர்களோ
சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!
அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?
யாருக்குத்தெரியும் அது?
அதை யார் உண்டுபண்ணினார்கள்
அல்லது உண்டுபண்ணவில்லை?
ஆகாய வடிவான அதுவே அறியும்
அல்லது
அதுவும் அறியாது!”