ஞாயிறு, 31 மார்ச், 2024

பிரதிமை [யானம் - சிறுகதை, ஜெயமோகன்]

Mar 31,2024


யானம் வாசிக்க‌


சிந்தை வாகனத்தில் ஏறி பயணிக்கும் மனம் அது போக நினைக்கும் இடத்திற்கு போக முடியாமல் சிக்கி கொண்டிருப்பதை உணர்த்தும் குறீயீடாய், ராம்‍ - லட்சுமி காரில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு நிற்பது.

சமூகத்தில் கற்பு, கட்டுப்பாடு, திருமணம் என்ற விழுமியங்கள் தோன்றுவதற்கு காரணங்கள் என்னவாய் இருந்திருக்கும் என்று நான் யோசித்ததுண்டு. அதிலும் முக்கியமாக பெண்களுக்கு அவ்விதிகள் விதிக்கப்பட்டதற்கு காரணங்கள் என்னவாய் இருந்திருக்கும்? 

ஆதிக்காலத்தில், குல அமைப்பில் மக்கள் வாழ்ந்திருந்த போது, ஒரு பெண்ணானவள் அவளுக்கு விருப்பமான ஆணுடன் உறவு கொள்வதும், ஒன்றுக்கும் மேலான ஆண்களுடன் உறவுக்கொள்வதும் வழக்கமாய் இருந்திருக்கிறது. 

அப்படியான சூழ்நிலையில் பிறந்த குழந்தைகளை, பொறுப்பின்மையினாலும், பொருளாதாரமின்மையினாலும் சரிவர காத்து வளர்க்க முடியாமல் போயிருக்கலாம். இவன் எனக்கு பிறந்தவனா? நான் ஏன் இவனுக்கு சேர்த்து பொருள் ஈட்ட வேண்டும் என்ற கேள்வி வந்திருக்கலாம். 

இதற்கு எல்லாம் பதிலாகத்தான், பெண்ணிற்கு கற்பு விழுமியம் கற்பிக்கப்பட்டிருக்கும். 

இயற்கையின் படைப்பில் உடற்கூறுகளால், அவளே இன்னும் கவனமாக இருக்க வேண்டிய சூழலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாள். பரிணாம வளர்ச்சியில், கற்பு என்பது மனவொழுக்கம் சார்ந்தது, அது இருபாலருக்கும் பொருந்தும் என்று கற்பிக்கப்பட்டாலும், எந்த அளவிற்கு அது எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது என்பது கேள்விக்குறியே!

இந்த ஏற்றத்தாழ்வுகளினூடே தலைமுறை தலைமுறையாக பிறந்து, பார்த்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் பெண் சமூகம், ஒரு கட்டத்தில் இருத்தலியல் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டு, உளவியல் ரீதியில் சலிப்படைகிறார்கள் போலும். இதன் அறுநிலையாய் (Breaking Point) எதற்கெடுத்தாலும் சமநிலைக்கான‌ போராட்ட குணம் மேலோங்கி இருக்கிறார்கள் பெண்கள். 

சில வருடங்களுக்கு முன்னால் பெண்கள், ஆண்களை போல் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதற்கான சாதனம், சந்தைக்கு வந்தபோது, அதற்கான விளம்பரமே, 'ஆணுக்கு பெண் சளைத்தவரில்லை' என்பதுதான். அந்த சாதனத்தின் பயன்பாடு உண்மையிலேயே பல பெண்களுக்கு, பல தருணங்களில் உற்றதாய் இருந்தாலும்,  மக்கள் மனதில் புகுத்திடும் விதம் அதுவல்ல என்று தோன்றியது. 

இங்கு ராமிற்கு எதிராக,  லட்சுமி எடுப்பது, அது போல‌ ஒரு சமநிலைக்கான போராட்டமா? 

"ஏலைன் கிட்ட உனக்கு ரிலேஷன் இருந்ததைச் சொல்லவேண்டியதுதானே"  

அவன் ஏலைன் உடன் தொடர்ப்பு வைத்திருந்ததால், தானும் சளைத்தவள் அல்ல என்று காண்பிக்கும் பொருட்டு எடுக்க கூடியதா? அல்லது, இவன் மட்டும் இன்னும் மாப்பிள்ளை போல் சுற்றி வருகிறான், நான் மட்டும் பிள்ளைகளை பார்த்து கொள்ள வேண்டுமா என்ற சலிப்பா? அல்லது, " I don't believe in this value system. My inner peace is important " என்ற நோக்கில், "நான் அவனுடனும் இருப்பேன்" என்று கூறுகிறாளா? 

இதன் மூலம் அவள் எதிலிருந்து விடுதலை அடைய நினைக்கிறாள்? பல்லாண்டு கால பண்பாட்டிலிருந்தா? அல்லது பழையதென நினைக்கும் உறவிலிருந்தா? அல்லது, பல்லாண்டு காலமாக கலாச்சாரம் என்ற பெயரில் செய்யப்பட்ட, செய்யப்படுகிற ஒடுக்குமுறைக்கு எதிராக வெடித்தெழும் விடுதலையா?

Female Genital Mutilation - எனப்படும் பெண் பிறப்புறுப்பு சிதைவு செயல்முறை. இதன்படி, இரு மடிப்புகளாக இருக்கும் பெண்ணின் கருவாய் எனக்கூறப்படும் Labia minora and Labia majora என்ற உறுப்புகளை வெட்டி எடுத்துவிடுவது. 

இதன் மூலம், பெண்ணிற்கு உண்டாகும் பாலியல் இச்சையை கட்டுப்படுத்த முடியுமெனவும், அவ்வாறு செய்து கொண்ட பெண்களே, திருமண வாழ்விற்கு தகுதியானவர்கள் எனவும் பல கலாச்சாரங்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

எகிப்திய மம்மிகளின் சான்றுகள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு இச்செயல் நடைமுறையில் இருந்ததாகக் கூறுகிறது.

2011‍ம் ஆண்டு வெளிவந்த Child Abuse and Neglect (Edited by Carole Jenny) இதழின் குறிப்பின்படி, உலகில், ஜிபூட்டி, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, காம்பியா, கினியா, மாலி, சியரா லியோன், சோமாலியா மற்றும் சூடான் போன்ற நாடுகளிலும், மத்திய கிழக்கு, ஆசியா, மற்றும் லத்தீன் அமெரிக்காவிலும், இச்செயல்முறை நடைமுறையில் இருப்பதாகவும், 3 மில்லியன் பெண்கள், அவர்களில் பெரும்பாலோர் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இக்கொடுமை செயலுக்கு ஆளாகிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு கணக்குரைக்கிறது.

இவையனைத்தையும் ஒரு சரடில் கோர்த்தால், ஏன் கற்பை பற்றிய நிலைப்பாடு, மேற்கத்திய நாடுகளில் வேறொரு முனையில் இருக்கிறது என்ற ஒரு யூகம் பிறக்கிறது . சொல்லப்போனால், இன்றைய அவர்களின் நிலைப்பாடும் இந்த ஒடுக்குமுறையிலிருந்து பெற்று வந்த விடுதலையாகவே எண்ண‌த் தோன்றுகிறது.

புலம்பெயர்ந்தவர்களிடம் ஒரு போராட்டம் உண்டு. தான் வழிவழியாய் வந்த பண்பாட்டினை தொடர்வதா, அல்லது வந்தேறிய நாட்டு பண்பாட்டினை புகுத்தி கொள்வதா என்று.

நானும், பிரேமும் எங்கள் இந்தியத் தோழி ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தபோது, தோழி எங்களிடம் கேட்டது, ' So, you guys don't even drink wine? Interesting!'. ஏன், நானே பிரேம்‍‍_ஐ முதன்முறை சந்தித்து பேசியபோது, 'Are you not even a Social Drinker?' என்று கேட்டிருக்கிறேன். இத்தனைக்கும் நான் இந்தியாவில் இருந்தேன் திருமணத்திற்கு முன்பு. அதை நான் 'லிபரேஷன்' என்று நினைத்துக் கொண்ட  காலம். 

இதில் இருவரும் அவ்வார்த்தையை சொல்லிவிட்டு தத்தம் இருபுறமும் இறங்க நினைப்பது நான் ரசித்த குறியீடு. அழகாய் காட்சி விரிந்தது.

பிடிக்காத உறவில் இருப்பதை காட்டிலும், பிரிந்து போவது நல்லது என்பது ஒரு வாதமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும், அந்த சுதந்திரம் இரண்டு பேராக மட்டும் இருக்கும்வரை சரி. குழந்தைகள் என்று நம்மை நம்பி ஜீவன்கள் வந்த பிறகு, அப்படி சடாரென்று முடிவெடுப்பதுதான் 'Modern Love'-ஆ?  

"...பின்னாடி ரெண்டு படுத்திருக்கே… அதுகளை என்ன பண்ணப்போறே?”

"ஹாஸ்டலிலே விட்டுடலாம்”

என்று கூறும்போது நான் அண்மையில் கண்ட பல ஜோடி சோக விழிகள் என் விழியில் உலவுகின்றன. எல்லாம் பதின்ம வயது பிள்ளைகள், உலகளவில், குறிப்பாக மேலை நாடுகளை சேர்ந்தவர்கள், பெற்றோரின் அரவணைப்பின்மையால் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் நகரும் நிலைகளை பற்றி தாங்களே முன்வந்து பதிவு செய்திருக்கும் காட்சிகள். சில பேர் தங்கள் முகங்களை காட்டியும், சில பேர் அதற்கு விருப்பமில்லாமலும்.  Humans by Brandon Stanton என்ற புத்தகத்தில்தான் அத்தகைய பதிவுகள்.

என் உறவினரில் ஒரு பெண், எனக்கு சகோதரி முறை. அவள் லட்சுமியின் அசல் என்று கூறுவேன். ஒரு வித்தியாசம் என்னவென்றால் இவளுக்கு ஒரு ஆண் குழந்தை. அக்குழந்தை காவல் நிலையத்தில், அவள் கால் பிடித்து கெஞ்சி 'வீட்டிற்கு வந்துடுமா' என்று கதறுகிறது. அவள் அவ்விடம் விட்டு விலகி போய், பிள்ளையை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை என்று என் உறவுக்காரர் ஒருவர் என்னிடம் சொன்னபோது, அக்குழந்தைக்காக மனம் விம்மியது. அக்குழந்தை எனக்கும் மகன் முறையே. 

அவனை ஏறெடுத்து பார்ப்பதற்கு இன்றும் நான் கூச்சம் கொள்கிறேன். காரணம், அச்சம்பவம் நடந்தேறிய சில நாட்களில் அவன் பெற்றவள் வழி தாத்தா வந்து கூப்பிட்ட‌தற்கு, 'அம்மாவே போயிட்டா, நீ யாரு எனக்கு' என்று கேட்டிருக்கிறது அந்த 8 வயது பிள்ளை. அவளின் செயலானது, அந்த சிறுவனை, தன் உறவுகள் மீதிருந்த நம்பிக்கை மேல் ஒரு கல் எறிய செய்தது. அவன் எறிந்த கல்லில் விரிசலுற்ற கண்ணாடியாய் உணர்கிறேன்.

மேலும், எனக்கு சு.ரா.வின் 'அகம்' அகத்தில் தோன்றியது. இந்த லட்சுமியையும், அந்த அம்புஜத்தையும் நினைத்து பார்த்தேன். லட்சுமி ஒரு வேளை பிள்ளைகளிடம் சொல்லியிருந்தால், பிள்ளைகள் ஜானுவுடன் கைக்கோர்த்திருப்பார்களோ? அல்லது, அம்புஜம் அந்த சூழலை தன்னலத்தோடு அணுகியில்லாது, லட்சுமி சொல்வது போல் காத்து இருந்திருந்தால், ஜானு நிறை ஆயுள் வாழ்க்கை வாழ்ந்திருப்பாளோ?

"நம்ம அப்பா அம்மாக்களும் ஒண்ணும் சந்தோஷமா இல்லை. எங்கம்மா எல்லாத்தையும் சகிச்சுட்டு வாழ்ந்தது எனக்காக… அதே விதிதான் நமக்கும். ஏன்னா நாம இண்டியன்ஸ்… அமெரிக்கா வந்து காருக்குள்ளே உக்காந்துட்டா மட்டும் நாம லிபரேட் ஆயிட மாட்டோம்" ‍ 

- என்று ராம் இந்திய 'பண்பாட்டு மரபு' தோலை கீறி அவள் தாய்மையை லேசாக கசிய செய்கிறானோ?

மரபுக்குள்தான் ஒருவர் வாழ வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், குறைந்தப்பட்சமாய், நம் சுயநலத்தால் முளைத்த விதை மரமாகும் வரையிலாவது மரபுக்குள் இருத்தல் அவசியம் என்றே சொல்லத் தோன்றுகிறது.


கூடுதல் தகவல் : 

ஆசிரியர் ஜெ அவர்களின் தளத்தில், இக்கட்டுரை April 4, 2024 அன்று வெளிவந்தது. 

வெள்ளி, 29 மார்ச், 2024

கதிர் அவன்!

Mar 29, 2024


குறைக்கிறாய்

பின் ஏற்றுகிறாய்

மறுபடி அணைத்து

ஏற்றுகிறாய்

ஒளியில் ஒலிக்கிறாய்

உன் பால்வெளி 

பயணத்தின்

எதிரே எவர் 

வருகிறார்?

நீ அவருக்கு

என்ன சொல்கிறாய்?

எங்கள் ஊரூருக்கும்

நாடொன்றுக்கும்

அது மாறும்;

உன் உலகத்தில்

அதற்கு அர்த்தம்

எதுவோ?

செவ்வாய், 26 மார்ச், 2024

பார்வை

 Mar 26, 2024


சிலிர்ப்பூட்டும் மழை!

சன்னல் வழியும் 

தொடர் துளிகள் வழி;

நெளிந்து தவிக்கிறது 

அரும்பிய‌ மொட்டுக்கள்;


காற்று கைகள்

துளிகள் துடைக்க‌;

களித்து சிரிக்கிறது

துளிர்த்திடும் வசந்தம்!

தவிப்பு

Mar 26,2024


மூடியிருக்கும் 

குழாயின் வழி

சொட்டுக்கள்..

அண்டாவின் விளிம்பில்

வட்டங்களிடும் 

நீர்த்துளிகள்;


அந்த ஒரு துளி

பெரும் பிரயர்த்தனப்படுகிறது

தன் இரு கால்களை 

மேல்நோக்கி

பின்னிக்கொண்டு தொங்குகிறது;

எப்படியேனும் 

அவ்வுலகத்தில் வாழ்ந்துவிட!

அடுத்த துளி 

விழ இருக்கிறது!

ஞாயிறு, 24 மார்ச், 2024

கங்காவுடன் நான்

Mar 24, 2024

இன்று ஆசிரியர் ஜெ - யின் தளத்தில், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலின் எனது அனுபவக் கட்டுரை வெளிவந்தது. மனதிற்கு நிறைவு.


https://www.jeyamohan.in/197933/



வியாழன், 21 மார்ச், 2024

Letters to a Young Poet (ரில்கேயின் கடிதங்கள்) - ரெய்னர் மரியா ரில்கே

March 16, 2024


ஜெ‍ - யின்  தளத்தில் சென்ற மாதம் வெளிவந்த 'எழுத்தாளனாக விரும்பும் இளைஞனுக்கு' என்ற கட்டுரை அவரின் பல முக்கியமான கட்டுரைகளுள்  ஒன்று என்று கருதுகிறேன்.

‘செயல் எனில் விளைவும் உண்டு. நாம் செய்வது நன்று. அந்த நம்பிக்கை நமக்கு வேண்டும்.அந்த நம்பிக்கை இருந்தால் எழுத்தாளன் என்பது ஒரு சிம்மாசனம். அதில் அமர்வது ஒரு பிறவிநற்கொடை. காலத்தின் மேல் நமக்கொரு இருக்கை அமர்கிறது. நம் காலடியில் வரலாறு ஒழுகி மறைவதை நாம் காண்போம். நம் சூழலில் கொண்டாடப்படும் பல மனிதர்கள் அதில் கணக்குமிழிகளென மறைய நாம் விண்மீன்களென இருப்போம் என அறிவோம்'  ‍ - இதனை மீண்டும் மீண்டும் வாசித்து கொள்கிறேன்.

மேலும், அக்கட்டுரையில், 'Letters to a Young Poet' (ரில்கேயின் கடிதங்கள்) என்ற புத்தகத்தை பற்றி கூறியிருந்தார். அப்புத்தகத்தை வாசித்தேன்.

மலை முகட்டின் பின்னிருந்து அவரது குரல் அசரீரியாய் ஒலிக்க‌, காலம் என் கையில் இட்ட ஒன்றாய் தான் அதை பார்க்க தோன்றுகிறது.

எனக்கு சிறு வயது முதல் எழுத பிடிக்கும். பள்ளியில் தமிழ் வகுப்பு என்றால் ஒரு உற்சாகம் வெளி குதித்து, கால் மடித்து, மேஜைமேல், என் தோள் கட்டி உட்கார்ந்து கொள்ளும்.

ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளில் தமிழ் தேர்வுகளில், 'கட்டுரை வரைக' என்று மூன்று தலைப்புகளை கொடுத்து, ஏதேனும் ஒன்றை எழுத சொல்வார்கள். அதற்காக உள்ளம் துள்ளி கொண்டு காத்திருக்கும். ஆறு தன் வரலாறு கூறுதல், மரம் தன் வரலாறு கூறுதல், சுதந்திர போராட்டம் போன்ற தலைப்புகளில், எழுதி முடித்து கடைசியில் இரு வரிகள் அல்லது நான்கு வரிகளில் எதுகை மோனையோடு ஏதேனும் கிறுக்குவேன் (அதை கவிதை என்றும் நினைத்துக் கொள்வேன்). அதை எழுதுவதற்காகவே, வேக வேகமாக மற்ற வினாக்களுக்கு விடையளித்து விட்டு வருவேன்.

தேர்வுத்தாள்கள் திருத்தி வரும்போது, பெரும்பாலும் கட்டுரை பக்கத்தில், எனது ஆசிரியர் மரிய சுந்தரம் மிஸ், நான் எழுதியதை பாராட்டி ‘மிக நன்று’ என்று எழுதி, பத்துக்கு ஒன்பது மதிப்பெண்கள் போட்டிருப்பார். இப்படி என் எழுத்து ஆர்வத்தை, தமிழ் ஆர்வத்தை வளர்த்தவர் பலர்.

அவரது பதிவை படித்த அந்த வார இறுதியில்,  Fort Wayne Community Library சென்றிருந்தேன். அங்குதான் முதலில் அப்புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். முன்னுரை முடித்து, முதல் கடிதம் வாசித்து முடித்ததும், நான் மேற்கூறியது போல், காலத்தின் கணக்கு என்று தோன்றியது.

பின், என்னுடைய நடைபயிற்சியின்போது, ஒலி வடிவில் கேட்டு முடித்தேன். இருப்பினும், அது போதவில்லை. அடுத்து, University of Notre Dame சென்று அங்குள்ள நூலகத்தில், புத்தகங்களை எல்லாம் பார்த்துவிட்டு, சிறிது நேரம் வாசித்துவிட்டு வரலாம் என்று சென்றிருந்தோம். அங்கு மீண்டும் இரண்டாம் முறையாக புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன்.

ரில்கே தனது முதல் கடிதத்திலேயே, You ask me if your verses are good? You ask me that? என்று கேட்டு, அதற்கு கூறிய பதிலே, பெரும் திறப்பாய் இருந்தது.

நீ எழுதுவதற்கு காரணத்தை அகவயமாக தேடு, மற்றவர்களின் ஆமோதிப்பை எதிர்பார்த்து நிற்காதே என்று அவர் கூறியிருந்தது, எனக்கு பிடித்திருந்தது.

முக்கியமாக கவிதைகளுக்கான தலைப்பை எங்கிருந்து எடுக்கலாம் என்பதையும், ஒவ்வொரு மனிதனின் சிறு வயது நினைவுகளும், அனுபவங்களும் மாபெரும் கதை களஞ்சியங்கள் என்று அவர் கூறியதும் எவ்வளவு உண்மை என்று தோன்றின.

எழுத்தாளனுக்கு தோன்றும் முரண்களும், ஒரு கட்டத்தில் அந்த முரண்கள் எவ்வாறு, எழுதுவதற்கு ஊக்கிகளாய் மாறும் என்று கூறியதும், அபாரம்.

சமீப காலமாக தீவிர இலக்கியத்தில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள ஒவ்வொரு நாளும் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றிலும் ஒரு தெளிவும், அதனுடன் சேர்ந்து ஒரு குழப்பமும் பின் தொடர்ந்து கொண்டே இருப்பதாய் உணர்கிறேன்.

ப‌ல சமயங்களில், 'உனக்கு என்னத்த தெரியும்னு எழுத வந்துட்ட'‍, என்று என் மூளை என்னிடம் கேள்வி கேட்கும். அதற்கு பயந்தே எழுதுவதை தள்ளி போடுவேன். ஆனால், மனதுக்குள் ஆயிரம் கதைகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

சரி எழுதுவோம், எழுதி பார்ப்போம் என்று, எனக்கு தோன்றும் முரண்களை மீறி எழுத அமர்வேன். ஒரு கட்டத்தில், அந்த முரண் கலைந்து, எழுதுவதே நானென்று ஆகியிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

இதில் என்னை மிகவும் கவர்ந்த அவரின் ஒரு சிந்தனை, 'The Future is Fixed, We move around in Infinite space' என்பது. அது என்னுள் பல சிந்தனைகளை கண நேரத்தில் தோற்றுவித்தன.

எதிர்காலம், காரண காரியம் அல்லது விதி போன்ற காரணிகளால் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகத் தோன்றினாலும், நமது இருப்பு, சாத்தியக்கூறுகளின் பரந்த எல்லைக்குள் வெளிப்படுகிறது.நமது அனுபவங்களின் வழி, வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலைகளை நோக்கத்துடன் வழிசெலுத்த வலியுறுத்துகிறது.

விதியின் கட்டுப்பாடுகள் மற்றும் நமது ஆற்றலின் வரம்பற்ற எல்லைகள் இரண்டையும் தழுவி, நமது பாதைகளை எண்ணம் மற்றும் நெகிழ்ச்சியுடன் வடிவமைக்க ஊக்குவிப்பதாகவே எண்ணுகிறேன்.

காப்பஸிற்கு ஒரு ரில்கே போல், என்னை மாதிரி பல பேர்களுக்கு ஜெ.

குறிப்பாக எனக்கு அவர், தமிழ் இலக்கியத்தை நான் கண்டறிய உதவிடும் ஒரு மாபெரும் கோட்டை வாயில்!


 

புதன், 13 மார்ச், 2024

எழுத்து எனும் கலை


இன்று காலை 4:55 மணி. தூக்கம் கலைந்துவிட்டது. வாசிக்கலாம் என்று எடுத்தபோது, அலைபேசியில்  Journal செயலியை பார்த்தேன்.  அது கொடுத்த இன்றைய கேள்விகளுள் ஒன்று, பிடித்த கலை எது? ஏன்?

எழுத்து எனும் கலை. காரணம் கேட்கும்போதுதான் யோசிக்கிறேன். ஏன் எனக்கு எழுத்து பிடித்திருக்கிறது?  சத்தமன்றியும் வலிமையாய் பேசமுடிவதாலா? அல்லது எனக்கு நல்லா எழுத வரும் என்று நானே நினைத்துக் கொள்வதாலா? அல்லது மொழி மீது கொண்ட பற்றினாலா? அல்லது எழுத பிடித்ததாலா?  என்னவோ வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், நான் எழுதுகிறேன்.

எண்ணங்களும், படிமங்களும், கட்டற்ற வெள்ளமாய் கரை புரண்டோட, அதனை ஓர் ஒழுங்குக்கு கொண்டு வர உதவுவது எழுத்து.நூற்றாண்டு கால சிந்தனைகளை, வளர்ச்சிகளை, வாழ்க்கையினை காட்டும் ஒளியாய் நான் எழுத்தை பார்க்கிறேன். இப்போது யோசித்து பார்க்கிறேன். மனிதன் எப்போது எழுத தொடங்கியிருப்பான்? மொழியை கண்டுபிடித்ததன் பின்? முதலில் எழுத தான் தொடங்கியிருப்பானா? 

மொழி வந்தபின்தான் எழுத்து சாத்தியம். மொழி வருவதற்கு முன்பே அவன் பேச தொடங்கியிருப்பானே? ஊ ஆ என்று சத்தம் கொடுத்திருக்கலாம், உடற்மொழியே ஆதி மொழியாய் இருந்திருக்கலாம். அதன்பின், சித்திரம் வரைய ஆரம்பித்திருக்கலாம். இப்போது நினைவுக்கூர்ந்தால், கல்கி நாவலில் எல்லாம் ‘சித்திரம் எழுதுகிறான்’ என்ற சொல்லாடல் இருப்பது தெரிகிறது.கண்ணுக்கு தெரிந்த மலையினை கண்டு மண்ணில் முதலில் கோடு இழுத்திருப்பானோ? அப்படியென்றால் அது ஓவியமா, கணிதமா? ஓவியம் என்னும் கணிதமா? கணிதம் என்னும் ஓவியமா?

இப்போது எழுத்தின் நிலை என்ன? இன்னும் மனிதன் எழுதுகிறானா? எழுதுகிறான் தான். எழுதுபொருள்கள் ஆயிரம். எழுதுபொருள்களும் ஆயிரம். கணிப்பொறி வழி எழுதுதல், எழுதுகோல் வழி எழுதுதல், தூரிகை எழுத்து, நாம் சொல்ல சொல்ல, கணிப்பொறியே தட்டச்சு செய்யும் எழுத்து என்று வளர்ந்துவிட்டன. இன்னும் சொல்லப்போனால், எதை வேண்டுமானாலும் இப்போது எழுத்து வடிவில் மாற்ற முடிவதை பார்க்கிறோம். 

Laura Wilson-ன் ' The Writers' புத்தகத்தில் ஒரு புகைப்படம் இருந்தது. A.S.Byatt-ன், 'Possession' என்ற‌ புக்கர் பரிசு பெற்ற புத்தகத்தின் 25 ஆண்டு நிறைவினை கொண்டாடும் வண்ணம்,  chatto and windus என்ற‌ பதிப்பு நிறுவனம், புத்தகத்தின் சிறப்பு பிரதியை பரிசாக கொடுத்திருக்கிறது. அதில் சிறப்பு என்னவென்றால், புத்தகத்தின் பக்கங்கள் 25 என்ற எண் வடிவத்தில் கிழிக்காமல் மடிக்கப்பெற்றிருந்தது.25 என்று பெரிதாக தோற்றமளிக்கும் வண்ணம், அவரது அலமாரியில் விரித்தும் வைக்கப்பட்டிருந்தது. ஒரு கணம் அதனை கண்டு வியந்தேன்.

அந்த புகைப்படத்தில், எழுத்து எனும் கலை ஓவியம் என்ற கலையை உள்ளடக்கியுள்ளதாகவே பார்க்கிறேன். அந்த கைவினை எனக்கு ஓவியமாகவே தெரிந்தது. அந்த ஓவியம் 25 என்ற எழுத்துக்குள் இருந்தது. எழுத்து நம் சிந்தனையை மட்டுமின்றி, நமக்குள் இருக்கும் அழகியல் உணர்வினையும் வெளிப்படுத்துகிறது. ஒரு அழகான வாழ்வனுபவமாய் மாற்றுகிறது.எழுத்தை கண்டுபிடித்த அந்த ஆதி மனிதன் யார்? தெரியவில்லை.

சுமர் என்பது டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளுக்கு இடையில் அமைந்துள்ள,மெசபடோமியா பகுதியில் நிறுவப்பட்ட ஒரு பண்டைய நாகரிகமாகும். கிமு 3200 இல் பண்டைய சுமேரில் முதல் அறியப்பட்ட எழுத்து வடிவம் தோன்றியது. அதன் பெயர் கியூனிஃபார்ம் (Cuneiform) கையெழுத்துப்படிவம்(Script).

கிமு 3100 இல், எகிப்தியர்கள் ஹைரோகிளிஃப் என்னும் எழுத்துமுறையை பின்பற்றினர். இது முதன்மையாக‌ மத மற்றும் நினைவுச்சின்ன கல்வெட்டுகளுக்கு பயன்படுத்தினர்.

சீன எழுத்துக்கள் கிமு 1200 இல் தோன்றின. கிமு 1050 இல் ஃபீனீசியன் (Phoenician) எழுத்துக்கள் பெரும்பாலான நவீன எழுத்துக்களுக்கு அடித்தளம் அமைத்தன. 

மெசோஅமெரிக்காவில் உள்ள மாயன் கிளிஃப்கள், இந்திய துணைக்கண்டத்தில் சிந்து எழுத்துகள் மற்றும் மத்தியதரைக் கடலில் கிரேக்க மற்றும் லத்தீன் எழுத்துக்கள் உட்பட உலகளவில் எழுதும் முறைகள் பன்முகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்-பிராமி அல்லது தமிழி என அழைக்கப்படும் தமிழ் எழுத்துகள் கிமு 3 ஆம் நூற்றாண்டில் தோன்றின, இது இன்றும் பயன்பாட்டில் உள்ள பழமையான எழுத்துகளில் ஒன்றாகும். தமிழ்நாடு, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் உள்ள பல்வேறு தொல்பொருள் தளங்களில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செழுமையான இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் எழுத்துப்படிவம் முக்கிய பங்கு வகுக்கிறது. எழுத்துகளின் பரிணாமம், மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதோடு,  நாகரிகத்தின் நீடித்த மரபுக்கு சான்றாக நிற்கிறது.



மனப் புழுக்கங்கள்

 Apr 9, 2018


பங்குனி புழுக்கத்தை தாங்குவதற்கு ஏதுவாய்,ஏசி பஸ்ஸில் பயணத்தை தொடர்ந்த மனதின் புழுக்கம் தீராமல் ஏதேதோ எண்ணங்களின் ஓட்டம்.
ஓடும் திசை அறிகிலேன்,விசை அறிகிலேன்..எங்கு தொடங்கி,எங்கு முடிப்பேன்?,எண்ணுவதையெல்லாம் எண்ணியவிதம் கண்ணியமாய் சொல்லிவிடுவேனா?..அல்லது கனத்த இதயத்தின் வலி தாங்காமல் கண்ணியம் தவறிவிடுவேனா?..என்ற கேள்விகளுக்கு பதில்களை அசை போடக்கூட நேரமில்லாது,’என்னை பற்றி நினை’...’என்னையும் மறந்திடாதே..’ ‘இதையும் பேசிவிடு’ என்று முட்டிக்கொண்டு முந்தியது மனதை அரிக்கும் அப்புழுக்கங்கள்.
1.காவிரி மேலாண்மை வாரியம்..

2.விவாசாயிகளின் வாழ்வாதாரம்..

3.ஸ்டெரிலைட் போராட்டம்..

4.கருவேல மரங்களை போல், புதுக்கோட்டை பகுதியில் 5 லட்சத்திற்கும் மேலான,அரசாங்கம் நட்ட,தைல மரங்களும்,அதனால் 500 அடி ஆழத்திற்கு சென்ற நிலத்தடி நீரும்.ஒரு தைல மரம்,நாளொன்றுக்கு 7.5லிட்டர் தண்ணீர் உறிஞ்சி,அந்த பகுதியை வறட்சிக்குள்ளாக்குவதும், விவசாயம் அத்து போய் கொண்டிருப்பதும்..

5.விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கான விடியலை யாரோ தேடி தருவார் என மனம் தேற்றி,தோனியின் வருகையிலும்,வெற்றியிலும்,நான் உவகை கொண்டு பொறுத்திருந்தாலும்,தினசரி வீட்டு குப்பை வாங்க வரும்,’விவசாய’ குடும்பத்தை சேர்ந்த, ‘துப்புரவு தொழிலாளர்’ கஸ்தூரி அக்காவின் வயிறும் ,வறுமையும் பொறுக்கவில்லை.

விவசாயம் செய்து,நமக்கு சோறு போட்ட பாவத்திற்கு,இன்று வீட்டுக் குப்பைக்காக கையேந்துகிறார் என்று நினைத்தபோது,என் கை நடுங்கி, குப்’பை’ கீழே விழுந்த கணத்தில், ரணத்தை மறைத்து,நகைத்து பேச முயற்சித்ததில் மற்றுமொரு அதிர்ச்சி.

அரசாங்கம் அவர்களுக்கு தினசரி ரூபாய் 500 கூலி என்று பகட்டாக அறிவித்திருந்தாலும்,அவர்கள் கையில் கிடைப்பது என்னவோ 245 ரூபாய் மட்டுமே என்று அறிந்த நொடியில் ஒடிந்தது மனம்.

மனம் தாளாது கேட்கலானேன்,’ஏங்கா இப்படி ஏமாத்துறத பொறுத்துகிட்டு இருக்கிங்க..??புகார் கொடுக்கலாமே’ என்று. அதற்கு கிடைத்த பதில், ‘இல்லம்மா இந்த வேலையும் பறி போயிடும்’.இதற்கு மேல் என்ன பேசுவது என்றறியாமல் அவ்விடம் அகன்றதும்,

6.காவிரி பிரச்சினையில் நமக்காக பாடுபடுவதாய் படம் காட்டும் தலைவர்களின் பேச்சுகளும்,
தப்பித்தவறி அந்த பேர்களில்,சிலர் நியாயமாய் கருத்து ஏதும் சொன்னாலும்,சொன்னவர் நம்மவர்,நமக்கான நல்லதும் அதில் இருக்கலாம் என்றுணராமல்,தான் சேர்ந்த கட்சிக்கு ‘விசு’வாசமாய்,(தினசரி சட்டையில்)
தேசியக்கொடி குத்தி,தேசியத்தை குத்தி சாகடிப்பவர்களின் பேச்சுகளும்,

7.பத்திரிக்கைத்துறையின் பொம்மலாட்டங்களும்,
8.நம் தேசிய வியாதியான ‘மறதி’யும்

-தொடரும்

SPB எனும் மருத்துவர்

 Sep 26, 2020


SPB அவர்களின் உடல் ஓய்ந்த செய்தி- கடந்த 18 மணி நேரமாய், என் தொண்டையில் துக்கம் அடைத்து, மனதை துளைத்துக் கொண்டிருக்கும் ஒரு உணர்வு. அந்த அழுத்தம் கொடுக்கும் பாரம். இறக்கி வைக்கும் வழியாய், இதோ என்ன வரிகள் வந்து விழப்போகிறது என்று அறியாத இந்த தொடக்கம்.
தொடக்கம்- ஆம், முடிவென்பதும் ஆரம்பமே.
எதற்கான ஆரம்பம் என்பதை நாம்தான் தேட வேண்டும். சுமார் 40,000 பாடல்களை பாடியுள்ளாராம்..அதில் 10% பாடல்கள் ஏற்கனவே நான் கேட்டுவிட்டதாக வைத்துக்கொண்டாலும், மிச்ச பாடல்களை கேட்டு முடிக்க எனக்குத் தேவையான நேரத்தை நினைத்துப் பார்க்கையில் - மற்றவரை வெறுக்கவோ,ஒதுக்கவோ,நிந்திக்கவோ,
தண்டிக்கவோ,பழி சொல்லவோ,பழி ஏற்கவோ,தனக்கென உடைமைக் கொள்ளவோ,உரிமை கொள்ளவோ நேரமில்லை என்று மட்டும் தெரிகிறது.
இந்த ஒரு மகா கலைஞனின் சாதனையை புரட்டி புல்லரித்திடவே எனக்கு அவ்வளவு நேரம் தேவையென்றால், நம் நாட்டில் கலை ஜாம்பவான்களுக்கோ பஞ்சமில்லை - என் தேடலை இனி தாமதிக்க நேரமில்லை.
மேலும், எல்லா இறப்புகளும் நம்மை பாதித்து விடுவதில்லை. எல்லா இறப்புகளும் இழப்புகளாக நிலைத்துவிடுவதில்லை. சிலது மறந்துவிடும். சிலது, இழப்பு என்பதையே மறக்கடிக்கும் வண்ணம், இதயத்தில் கலந்துவிடும். அப்படி கலந்திருக்கும் SPB அவர்களின் குரல் பாவங்கள் (Baavangal) அலைகளாய் மோதிக்கொண்டிருக்கின்றன,மனதில்.
‘வானுயர்ந்த சோலையிலே’ பாடலில் வரும் ‘வீற்றிருக்கும் நிலப்பரப்பு வேதனையை கூட்டுதடி..’ என்ற வரியில்(ன்) வேதனையைக் கூட்டிய..
‘கண்ணம்மா கனவில்லையா’ பாடலில் வரும் ‘இனிக்கலயா’ என்ற வார்த்தையில் வார்த்த..
‘பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள’ பாடலின் முதலாம் சரணத்தில் சிரித்து சிலாகித்த..
‘என் காதலே.. என் காதலே’ பாடலில் ‘கிள்ளுவதை கிள்ளிவிட்டு’ என்று விம்மிய..
‘வந்தனம் என் வந்தனம்’ பாடலில் அந்த சூழலுக்கு ஏற்றவாறு விக்கி மன்னிப்பு கோரிய..
‘வத்திக்குச்சி பத்திகாதடா’ பாடலில் (யாரும் வந்து) ‘உரசர’ என்ற வார்த்தையில் தன்னம்பிக்கையை பற்ற வைத்த..
‘ராஜ தீபமே’ பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கொட்டி கொடுத்த..
அந்த பாவங்கள்...
அலைகளாய் மோதிக்கொண்டிருக்கின்றன...
அலைகள் ஓய்வதில்லை!!!

ஞாயிறு, 10 மார்ச், 2024

என்றென்றும் கவிதை

Feb 27, 2024


இன்று என் தோழியின் மகன் தன் வீட்டின் தரை விரிப்பில் அமர்ந்துக் கொண்டு, இரு கால்களையும் நீட்டிக் கொண்டு, தன் இரு கைகளை கால் முட்டிகளில் தத்தம் வைத்துக் கொண்டு, தொலைக்காட்சியில் அவனுக்கு பிடித்த பொம்மை படம் ஓடிக்கொண்டிருக்கையிலும், தன் வலப்பக்கமிருக்கும் பிரம்மாண்ட பிரஞ்சு சன்னலின் வழி நோக்கி கொண்டிருந்த காட்சி, என்றென்றும் எம்மனதில் கவிதையாய் மிளிரும் என்று தோன்றுகிறது.


அந்த ஒன்றரை வயது பிஞ்சு மனதில், அந்த கண்ணாடியும், புற்பரப்பும், அதை தாண்டிய வானின் வெண்மையும், மனதில் என்ன எண்ணங்களை கொடுத்திருக்கும்? அதை என் தோழி காணொளியில் காட்டியதும், அந்நொடியே என் மனம் அவனை கட்டியணைக்க துடித்து ஓடோடி அவனருகில் சென்று தயங்கியது. ஒரு ரசிகனின் தவத்தை கலைத்திட மனம் ஒப்பவில்லை.


ஆனால், அந்த மனதிற்கு என் மனம் புரிந்திருந்தது. சட்டென திரும்பியது என் திசை நோக்கி. இரண்டும் ஆலிங்கனம் செய்து கொண்ட ஓரிரு நொடிகளுக்குப்பின், என் மனம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவன் மனம் அவனை கைப்பிடித்து, என்னை நோக்கி அழைத்து வந்து, என் கண்களுக்கு விருந்தளித்தது. அவன் சிரித்து நோக்கினான். கண் வழியாய் மீண்டும் என் மனம் நிறைந்தது!



புதன், 6 மார்ச், 2024

சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்


பிரபுவும், கங்காவும் பெரும்பாலும் என் எண்ணங்களில் இப்போதும் அலைந்துக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன். காரில் நான் பயணம் செல்லும்போதோ, சென்னை LIC கட்டிடத்து சன்னல் வழியில், காட்சிகளை மனதில் விரித்துக்கொள்ளும்போதோ, இரவு நேரத்து மழையின்போதோ அது நிகழும்.

நேற்று, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை கண்டேன். படம் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே நாவல் கண்களில் விரிய, மனதில் சில‌ எண்ணங்களும், பிம்பங்களும், கேள்விகளும் அலைமோதிக்கொண்டிருந்தன. அவற்றை தொகுத்துக்கொள்ள‌ வேண்டும் என்று தோன்றியது.

அக்னி பிரவேசம் கதையின் முடிவே ஒரு சிறந்த சிந்தனை. அதுவும் அச்சிந்தனையை கங்காவின் தாய் வழியில் அவர் சொன்ன விதம் இன்னும் என்னை வியக்க வைத்த ஒன்றாய் நினைத்ததுண்டு.

இப்போது நினைத்து பார்த்தால், அவள் தாய் அதை பெருஞ்சிந்தனையாய் நினைத்து சொன்னதுபோல் தோன்றவில்லை.

அம்மா தன் சொந்தப்பந்தங்கள் மத்தியில், 'என்ன பையன் நல்ல படிக்கிறானா? என்ன பொண்ணுக்கு நல்ல வரன்கள் வருதா?' போன்ற கேள்விகளுக்கு எல்லாம், என்ன நடைமுறை உண்மையோ அதை சொல்லாமல், கற்பனாசக்தியின் ஊதலில் சுடர்விடும் கங்குகளில், வடை சுடும் வண்ணம் பதில் சொல்வதை போல்தான், கங்காவின் தாய் சொன்னதும் இருந்திருக்குமோ என்ற எண்ணம் வருகிறது. தன் சுற்றுப்புறத்திற்கு பயந்து அல்லது தன் மகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அந்த தண்ணீரை ஊற்றி, அனற்கங்குகளை அணைத்தாளோ?.

கங்காவின் தாய், ஒரு வேளை அதை சொல்லாமல், உண்மையை சொல்லியிருந்தால் கங்கா எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டிருப்பாள் என்பதுதான் நாவலாய் விரிந்திருக்கிறது.

என்னை பொறுத்தவரை இதை சொல்வதற்குத்தான் பெருந்தைரியம் வேண்டும். அந்த புள்ளியில்தான், வாழ்க்கையை அணுகும் விதத்தில் தன் நிலைப்பாடை, மாறுபாடை சில மனிதர்களை கொண்டு சில நேரங்களை உறைய வைத்திருக்கிறார், JK.

சொல்லப்போனால், பொதுவாய், பெரும்பான்மையினர் சிந்தனையுடன் இருக்கும் தாயாகவே தன் தாய் இருக்க வேண்டும் என்று கங்கா எதிர்ப்பார்த்திருக்கிறாள்.

கங்கா, அந்த நிர்வாண இரவில், நொடிப்பொழுதின் ஆளுமையில், பெண்மையை உணர்ந்ததால், கற்பின் வழி அதை இழந்ததாய் அரற்றுகிறாள். தனக்கான ஆண்முன், தன்னை முழுதளித்த ஒரு பெண்ணாய், உடலாய், உணர்வாய், அவ்வுண்மை நிகழும் ஒரு உலகிலிருந்து இறங்கி, அவள் வாழும் நிகழ் உலகிற்கு வரும்போதுதான், சுற்றமும், உலகமும், வகுத்திருக்கும் ஓர் உண்மைக்கு (அல்லது சமூக விழுமியங்களுக்கு) அஞ்சி நடுங்குகிறாள்.

அந்த நடுக்கம் தொடர்கிறது. அவள் அண்ணன் வீட்டை விட்டு துர‌த்தும்போது நிர்கதியாய் நின்ற நடுக்கம், தன் தாய்மாமன் வந்து அரவணைத்து சென்ற போதும், பின் ஒவ்வொரு முறை அரவணைத்த போதும் எழுந்த நடுக்கம் என‌.

ஆனால், இங்கு ஒரு தெளிவடைகிறாள் கங்கா. தன் சூழ்நிலைக்கருதி, தனக்கு வரும் இக்கட்டுகளை கையாளும் முறையினை பிடித்துக் கொள்கிறாள். சபலமுற்ற மாமாவின் உதவியால், அவர் சபலத்திற்கு பலியாகாமல், சாமர்த்தியமாக பட்டதாரியாகி பதவியில் அமர்ந்துவிடுகிறாள்.

இவள் சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அவரும், அவர் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்ட‌ இவளும் - சில நேரங்களில் சில மனிதர்கள்.

தன் மனைவியிடம் கிடைக்காத ஒரு அனுசரணை, அடிப்படை கவனம், கண்முன் தெரியாமல் கடந்து வந்த ஒருத்தியிடம் கிடைக்கப் பெற்றதும், அந்த உறவின் முறையோ, பெயரோ, ஆயுளோ கவனத்தில் இல்லாமல், அக்கணத்தில் மட்டுமே வாழும் பிரபுவும், தன்னை இழக்கச் செய்த‌ ஒருவன் எந்நிலையில் இருந்தாலும், அவன் தான் MY MAN என்று சொல்லி, நிறமற்ற தன் வாழ்வை மட்டுமே கருத்தில் கொண்டு, நிகழ் கணத்தில் வசந்தத்தை காண தவிக்கும் கங்காவும் - சில நேரங்களில் சில மனிதர்கள்.

மகளின் வாழ்க்கையை நல்லமுறையில் அமைத்துவிட நினைக்கும் தாயும், தன் மனத்தேவையை அறிந்திடாத தாயை தாய் என்றே அழைக்கமறந்த கங்காவும் - சில நேரங்களில் சில மனிதர்கள்.

கங்காவின் நிலைமை பொருட்டு ஆதங்கப்படத் தோன்றவில்லை. பரிதாபம்தான் மேலெழுகிறது. 'அவளுக்கு சாமர்த்தியம் இருந்தால், கெடுத்தவனையே தேடி கண்டுபிடித்து ஊர் சுற்ற வேண்டியதுதானே' என்ற வெங்கு மாமாவின் வயிற்றெரிச்சல் வார்த்தையின் அடிப்படையில், தன் வாழ்க்கையின் தேடலை (?) தொடங்குகிறாள். அவனையே கண்டும்பிடித்து விடுகிறாள்.

சூழ்நிலையின் பலவீனத்தை பயன்படுத்தி பலன் தேடிக்கொண்ட ஒருவனை தேடி போவது, 'கட்டினவன் எப்படியிருந்தாலும், பொறுத்து போகத்தான் வேண்டும்' என்ற நம் சமூகத்தின் முந்தையதலைமுறை சிலரின் சிந்தனையை ஒத்ததாய் பார்க்க வைத்தது. சிலஇன்றையினரும் கூடஅதற்கு விதிவிலக்கல்ல‌.

'You can only be a concubine, நீ ஒருத்தனுக்கு வைப்பாட்டியாய் தான் இருக்கமுடியுமே தவிர, பெண்டாட்டி ஆகமுடியாது’ என்று தன்னை முறையின்றி அடைய துடிக்கும் ஒருவனின் பிதற்றலை நம்பி, தான் அப்படித்தான் இருக்க முடியும் என்று நம்பும் கங்காவிடம், அவளின் பலவீனத்தையே காணமுடிகிறது.

'என் மகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடுமோ உனக்கு செய்த பாவத்தால்' என்று பதறும் ஒரு தந்தையாய், விலகியிருந்து, கங்காவை அவள் வாழ்க்கை பற்றிய முடிவெடுக்க வற்புறுத்தும் பிரபுவிடம் மன்றாடும் கட்டம் - அவளின் உச்சக்கட்ட பலவீன பிரஸ்தாபம்.

கடைசியில் அவள் தேடிக்கொள்ளும் வாழ்க்கையானது, அதுவரை வரையறையிலும், வாழ்வுமுறையிலும் கட்டுண்டுது அவிழப்பட்டு விடுதலை அடைந்த‌ மனதின் நிலையா? அல்லது மனசிக்கலின் உச்சக்கட்டமா?

ஒவ்வொரு கட்டத்திலும் கங்காவின் குற்ற உணர்வும், அதனோடு கூடிய மன சிக்கலும் அதை ஒவ்வொரு கட்டத்திலும் அவள் உடைத்தெறிய முற்படுவதும் எனக்கு இக்கேள்விகளையே தருகின்றன‌.

ஒரு குழந்தை , தன் பெற்றோரிடம் பெறும் தண்டனையிலேயே, குற்ற உணர்வுக்கு முதன்முதலில் ஆளாவதாய் டாக்டர் சிக்மண்ட் பிராயிட் கூறுகிறார்.

ஒருவன், தன் சமூக வரையறைக்குட்பட்ட, நீதி, கோட்பாடு அல்லது விழுமியங்களை தாண்டி சென்றிருக்கும்போது, முதன்முதலில் குற்றவுணர்விற்கு ஆளாவதாய் டாக்டர் ஹேரோல்ட் ஹாங் குறிப்பிடுகிறார்.

கங்காவிடம் பெங்களூர் வரன் பற்றி பேச வரும் சர்மாவை, தன் தாய், தமையனை பார்க்கச் செய்கிறாள். அதை பார்த்து முடிக்க அவள் குடும்பத்தார் நினைக்கும்போது, அவள் அதற்கு தயாராக இல்லை. தனக்கு இது நடக்க நினைக்க மாட்டார்கள் என்று தீர்மானமாய் எண்ணித்தான் அவர்களிடம் பேசும்படி சர்மாவை அனுப்பி வைக்கிறாள். இதில் பரிதாபம் என்னவென்றால், அவளை சுற்றி அனைவரும் அவளுக்கு ஒரு எதிர்காலத்தை பார்க்கிறார்கள், அவளை தவிர.

கடந்த கால அனுபவங்களின் முடிச்சிலிருந்து விடுவித்துக் கொள்ள அஞ்சி, அம்முடிச்சுகளை இன்னும் இறுக்கி கொள்ளவே கங்கா விரும்புகிறாள்.

அந்த வரன் அமைந்து பின்னாளில் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது தனி கேள்வி. ஆனால், குறைந்தபட்சமாய் அந்த சிந்தனையை கருதும் மனம் கூட கங்காவிடம் இல்லை. இதற்கு அவளை முழுவதுமாய் பழி சொல்லிட முடியுமா?

இன்று நடைமுறை வாழ்வில் எத்தனை கங்காவை பாரர்க்கிறோம். என் கண் முன்னே என் தோழி ஒருத்தி இருக்கிறாள், தன்னை அழித்துக்கொள்ளும் முயற்சியில், செயல்முறையில் இருக்கிறாள். தான் தேர்ந்தெடுத்த ஒருவன் தனக்கு செய்த துரோகத்தின் தீயில் சிக்குண்டு மனதளவில் சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறாள். அவனை விட்டு சட்டபூர்வமாக விலகி வந்துவிட்ட போதிலும், 'நீ விரும்பி தேடிக்கொண்டதுதானே என்று தாய், ஒவ்வொரு முறை (யுத்தியாய்) சொல்லும்போதும், குற்றவுணர்விற்கு ஆளாகி கூனி குறுகி போகிறாள். அவளை எப்படி இதிலிருந்து மீள செய்வது என்றறியாமல் வருந்துகிறேன்.

கங்காவின் தாய் கையாண்ட‌ முறையும், என் தோழியின் தாய் கையாளும் முறையும் ஒன்றே - ‍கையாலாகாத‌ தருணத்தில், கையாளும் வியூகம், தங்களின் ஒத்த‌ குறிக்கோளினை நோக்கி.

இதற்கு அடுத்த பாகமாய் 'கங்கா எங்கே போகிறாள்'. அதை நான் வாசித்ததில்லை. கங்காவை, வாழ்க்கை எந்த கோடி வரை இட்டுச்சென்று அலைக்கழிக்க இருக்கிறது என்று என் மனதில் ஒரு ஓட்டத்தை நிகழ்த்த நினைத்தே, புத்தகத்தை வாசிக்காமல் இருக்கிறேன். பார்ப்போம், என் கங்கா எங்கே போக இருக்கிறாள் என்று.

வெள்ளி, 1 மார்ச், 2024

ஒரு நாள் - க.நா.சுப்ரமண்யம்

தனது மாமாவின் கடிதத்திற்கு ஒப்புதலாய், மேஜர் மூர்த்தி, சாத்தனூர் கிராமத்திற்கு ஒரு நாள் செல்வதனால் அவனுக்கு ஏற்படும் அனுபவங்களையும், வாழ்க்கை புரிதல்களையும், மாறுதல்களையும் உள்ளடக்கிய புனைவு கதை.

எது வாழ்க்கை?, என்ற கேள்விக்கு, பல இடங்களில் தத்துவ ரீதியில்,அவர் பக்கத்தை எடுத்து வைப்பதாய் பார்க்கிறேன். ஸ்பினோசா என்ற தத்துவ வாதியையும் எனக்கு ஒரு வரியில் அறிமுகப் படுத்தியதோடு, அக்காலத்து அரசியல் நிலை, போர் காலத்தில், உலக நாடுகளின் பாதிப்பு மற்றும் சாத்தனூர் கிராமத்தின் நிலை பற்றிய கலந்துரையாடல்கள் இடம் பெற்றிருந்தது நன்றாக இருந்தது.

கதையின் முதலில் வரும் ஒரு கைம்பெண்ணை பற்றிய பின் தொடரும் உரையாடல்கள் சிந்திக்க வைப்பதாயிருந்தது. நான் கூட, தமிழ் சினிமாவின் வழக்கமான திரைக்கதை போன்று, அவள்தான் மூர்த்திக்கு ஜோடியாக போகிறாள் என்றெல்லாம் அனுமானித்திருந்தேன். மேலும், இதில் முடிவாய் அமைத்த விதமும் ரசிக்கும்படியாய் இருந்தது. அம்முடிவு எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதை சாத்தனூர் கிராமத்தில், மூர்த்தியுடன் காலாற நடந்துவிட்டு வந்த, நம்மிடையே விட்டுவிட்டனர்.


பிடித்த சில வரிகள்: 

‘ஒரு நிரந்தரமான உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணுகிறேன்’.

‘பலமா, பலமில்லாமையா என்று தீர்மானிப்பது அவரவர்களுடைய நோக்கைப் பொறுத்தது. தாக்குதலைச் சமாளிக்கத் தெம்பு போதவில்லை. என் கதாநாயகன் சிந்திக்க முயன்று முயன்று தடுமாறுகிறான். பலவீனமான, பழைய வாழ்வேதான் என்றாலும் நிலைக்கிற மாதிரியான ஒரு வாழ்வுக்கு அடிகோலிக்கொள்ள வேண்டும் என்று அவனுக்குத் தோன்றுகிறது’.

‘அறிவும் அனுபவமும் ஒரு மனிதனுடைய ஆயுளில் சற்றேறக்குறைய அவனுடைய முப்பதாவது வயசில் கூடுகின்றன என்று சொல்ல வேண்டும். சாதாரணமாகத் தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட அதிகமில்லாத மனிதனும்கூட, அந்த வயசில் சற்று அதிகமாகத் தத்துவ விசாரத்தில் அடிப்படையான மேன்மை ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறான் என்பது என் அனுபவம்’.

‘பிறர் துயரத்தைப்பற்றி நினைப்பதால் தன் துயரம் மாறிவிடாது என்பது பங்கஜம் அனுபவபூர்வமாக அறிந்த விஷயம்தான். ஆனால், பிறர் துயரில் பங்கிட்டுக்கொள்வதில் தன் துயரை மறக்கமுடிவதையும் அவள் அனுபவபூர்வமாகக் கண்டிருந்தாள்’.

‘வேறு என்ன செய்தாலும் அகலாத ஒரு துயரம் பிறர் துயரத்திலே மங்கி, மக்கி, மறைந்துவிடுகிறது. வாழ்க்கையிலே துயரை அதிகமாக அனுபவித்தவர்களின் மனம் கனிந்து இருப்பதற்கு இதுதான் காரணமோ? சுயநலம் காரணமாகவே அவர்கள் பிறர் துயரில் பங்கெடுத்துக்கொள்ள நேர்ந்ததோ?’

‘துயரங்களை ஒன்றன்பின் ஒன்றாக, நேருக்கு நேர் சந்தித்துப் பார்த்துவிட்டவர்களுக்குத் தானாகவே ஒரு தத்துவ விசாரவேகம் அமைந்துவிடுகிறது’.

‘இன்றும் சரி, நேற்றும் சரி, இனி வரப்போகிற நாட்களிலும் சரி, அனுபவத் துயரம்தான் கலாசாலைப் பேராசிரியர்களைவிடப் பெரிய தத்துவ ஆசிரியன் என்பதில் சந்தேகமில்லை’.

‘எதுவும் பிரமாதமான சிந்தனையல்ல. சிந்தனையற்றிருப்பதே ஓரளவுக்கு பிரமாதமான விஷயமாக இருந்தது இந்த நாட்களில்’.

‘ஒவ்வொரு மனிதனும் வாழுகிற ஒவ்வொரு நாளுமே அவனவனுக்கு, அவனவன் அளவில், ஒவ்வொரு விதத்தில் முக்கியமான நாட்கள்தான். இந்த உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுதான் மனிதன் ஒவ்வொரு நாளுமே வெற்றிகர மான வாழ்க்கை நடத்த முடிகிறது - எவ்வளவு வெற்றிகரமாக அந்த நாளின், அந்த நாழிகையின், அந்த விநாடியின் செயலிலே ஈடுபடுகிறான் என்பதைப் பொறுத்துதான் வாழ்க்கையில் வெற்றி’.

‘உலகத்தில் மனிதன் தோன்றிய நாள் முதலாக இதுதான் மனிதனுடைய லட்சியம். குடும்பத்தை லட்சியமாகக்கொண்ட இடத்தில்தான் மனித குலத்தின் உயர்ந்த கிளைகள் தோன்றியிருக்கின்றன. அந்தக் கிளைகளில்தான் மகோன்னதமான தனி மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள்’.

‘கடவுளின் ஆட்சி என்கிற ஆதரவு மனிதனுக்கு இருக்கிற வரையில் உலகில் ஏழைகள் என்கிற ஜாதியினர் என்றும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். ஏழைப் பங்காளன் என்கிற பெயர் கடவுளுக்கு நிலைக்க வேண்டுமே, அதற்காக வேரும்…’

“உலகில் எங்கேயும் மிருகங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. சாவு என்கிற கோரத் தாண்டவத்தின் மத்தியிலே, தென் பிரான்சு தேசத்தில், எங்களுக்கெதிர்ப்பட்ட ஒரு பசுங்கன்று எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. பசு மனிதனுக்கு இரையாகிவிட்டது. கன்று மட்டும் எப்பொழுதும்போல, மனிதன் மனிதனுக்கு இழைக்க முயன்றுகொண்டிருந்த தீமையை உணராமல், துள்ளி விளையாடிக்கொண்டிருந்தது. 

“அந்த மாதிரி ஒரு விநாடியை ஓர் ஆயுள் முழுவதும் நீட்டிக்க முடியாமல் இருப்பதுதான் மனிதன் சோக வாழ்வுக்கே சிகரமாக அமைகிறது”

“கடவுள் மனிதனைப் படைத்தான் என்று வைத்துக்-கொள்வோம் - மனித சுபாவத்தையும் படைத்தான் - மனிதனுக்கு ஒரே கண்ணையும் அக்கண்ணுக்கு ஒரே நோக்கையும் படைக்காததுதான் கடவுளின் பிசகு.”

“நிழலைப் பின்பற்றிப் பின்பற்றி மனிதன் நடந்து பழகிக்கொண்டிருக்கிறான். நிழல் விழுகிற பக்கத்துக்கு எதிர்ப்பக்கம் திரும்பி நடந்தால், தன் நிழல் தன்னைத் தொடரும் என்று மனிதனுக்குத் தெரிவதில்லை. நிழலைத் தொடர்ந்துகொண்டே காலத்தைக் கடத்தி வருகிறான். எதிர்ப்பக்கம் திரும்பினால் வெளிச்சம் கண்ணில் பட்டுவிடும் - ஆனால், எப்படியோ மனிதன் திரும்பாமலே காலம் தள்ளிவிடுகிறான்”

“முன்னேயும் பின்னேயும் பார்த்துக்கொண்டு, குறுகிய அளவிலேதான் என்றாலும், முன்னேறுபவன்தான் மனிதன்.”

“என் வாழ்வில் நான் கண்டவரையில், ஆசைப்படாதவனே அதிர்ஷ்டசாலி என்று சொல்ல எனக்குத் தோன்றுகிறது”

“அப்படியும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லையே!“

ஆசைப்படுகிறவன் ஏமாறுகிறான் என்கிற அர்த்தத்தில் சொன்னேன் நான்” 

அது சரி, ஆனால் ஆசையற்றவன் மனிதனே அல்ல”

வாழ்க்கையின் அடிப்படையான ஆதாரமான எந்த விஷ யத்தையும் பற்றி எவ்வளவு பேர் எத்தனை நாள் தான் எவ்வளவோ அறிவோடு விவாதம் நடத்தினாலும் தீர்மானமான முடிவு கண்டுவிட முடியாது என்பதுதான் அந்த நிச்சயம். ஆகவே, கூடியவரையில் நான் யாருடனும் எவ்வித விவாதமும் நடத்துவது கிடையாது.

எமர்ஸன் இதையே சொன்னான்: ‘நீ எங்கே சென்றாலும் உன்னையேதான் அழைத்துப் போகிறாய்’

உன் நோக்கின் மேன்மையைப் பொறுத்தது, உன் லட்சியத்தின் திடத்தைப் பொறுத்தது, இவ்வுலகின் எந்த இடத்திலிருந்தும் உனக்குக் கிடைக்கிற லாபம்” என்றார் சிவராமையர்.

வேறு காரியம் இல்லாததனால்தான் போலும் அவனுக்குச் சதா பேச்சு தேவையாகவேதான் இருந்தது. வாய்விட்டுப் பேச யாரும் அகப்படாவிட்டால் தனக்குத் தானே, ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கிற இரண்டாவது மனிதனுடன், பேசிக்கொள்ளத் தொடங்கிவிடுவான்.

“ஏதோ கதைகள் சொல்கிறார்களே தவிர, இந்தக் காவேரி நதியின் கரைகளை மனிதன் கட்டியதில்லை-இந்தக் கரைகளுக்குள் ஓடு என்று யாரும் காவேரி நதிக்கு ஆணையிட்டுக் கட்டுப்படுத்தவில்லை. இந்தக் கரைகளைத் தன் தேவைகளை உத்தேசித்து, தன்போக்கை அறிந்து, தன் லட்சியத்தை மனசில் ஏற்றுக்கொண்டு காவேரி நதி இந்த இரண்டு கரைகளையும் ஏற்படுத்திக்கொண்டது. வெள்ளம் வருவதுண்டு சில சமயம்; கரை உடைவதுண்டு; உடைந்துவிட்ட கரையைச் செப்பனிட மனிதன் மண்ணும் கூலியும் உதவுவதுண்டு. ஆனால், இந்தக் கரைகளைக் காவேரியாறு தானாகச் சிருஷ்டித்துக் கொண்டதுதான். கரைகளை மீறக்கூடாது என்கிற சிந்தனை தூய்மையானது.