வெள்ளி, 1 மார்ச், 2024

ஒரு நாள் - க.நா.சுப்ரமண்யம்

தனது மாமாவின் கடிதத்திற்கு ஒப்புதலாய், மேஜர் மூர்த்தி, சாத்தனூர் கிராமத்திற்கு ஒரு நாள் செல்வதனால் அவனுக்கு ஏற்படும் அனுபவங்களையும், வாழ்க்கை புரிதல்களையும், மாறுதல்களையும் உள்ளடக்கிய புனைவு கதை.

எது வாழ்க்கை?, என்ற கேள்விக்கு, பல இடங்களில் தத்துவ ரீதியில்,அவர் பக்கத்தை எடுத்து வைப்பதாய் பார்க்கிறேன். ஸ்பினோசா என்ற தத்துவ வாதியையும் எனக்கு ஒரு வரியில் அறிமுகப் படுத்தியதோடு, அக்காலத்து அரசியல் நிலை, போர் காலத்தில், உலக நாடுகளின் பாதிப்பு மற்றும் சாத்தனூர் கிராமத்தின் நிலை பற்றிய கலந்துரையாடல்கள் இடம் பெற்றிருந்தது நன்றாக இருந்தது.

கதையின் முதலில் வரும் ஒரு கைம்பெண்ணை பற்றிய பின் தொடரும் உரையாடல்கள் சிந்திக்க வைப்பதாயிருந்தது. நான் கூட, தமிழ் சினிமாவின் வழக்கமான திரைக்கதை போன்று, அவள்தான் மூர்த்திக்கு ஜோடியாக போகிறாள் என்றெல்லாம் அனுமானித்திருந்தேன். மேலும், இதில் முடிவாய் அமைத்த விதமும் ரசிக்கும்படியாய் இருந்தது. அம்முடிவு எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதை சாத்தனூர் கிராமத்தில், மூர்த்தியுடன் காலாற நடந்துவிட்டு வந்த, நம்மிடையே விட்டுவிட்டனர்.


பிடித்த சில வரிகள்: 

‘ஒரு நிரந்தரமான உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணுகிறேன்’.

‘பலமா, பலமில்லாமையா என்று தீர்மானிப்பது அவரவர்களுடைய நோக்கைப் பொறுத்தது. தாக்குதலைச் சமாளிக்கத் தெம்பு போதவில்லை. என் கதாநாயகன் சிந்திக்க முயன்று முயன்று தடுமாறுகிறான். பலவீனமான, பழைய வாழ்வேதான் என்றாலும் நிலைக்கிற மாதிரியான ஒரு வாழ்வுக்கு அடிகோலிக்கொள்ள வேண்டும் என்று அவனுக்குத் தோன்றுகிறது’.

‘அறிவும் அனுபவமும் ஒரு மனிதனுடைய ஆயுளில் சற்றேறக்குறைய அவனுடைய முப்பதாவது வயசில் கூடுகின்றன என்று சொல்ல வேண்டும். சாதாரணமாகத் தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட அதிகமில்லாத மனிதனும்கூட, அந்த வயசில் சற்று அதிகமாகத் தத்துவ விசாரத்தில் அடிப்படையான மேன்மை ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறான் என்பது என் அனுபவம்’.

‘பிறர் துயரத்தைப்பற்றி நினைப்பதால் தன் துயரம் மாறிவிடாது என்பது பங்கஜம் அனுபவபூர்வமாக அறிந்த விஷயம்தான். ஆனால், பிறர் துயரில் பங்கிட்டுக்கொள்வதில் தன் துயரை மறக்கமுடிவதையும் அவள் அனுபவபூர்வமாகக் கண்டிருந்தாள்’.

‘வேறு என்ன செய்தாலும் அகலாத ஒரு துயரம் பிறர் துயரத்திலே மங்கி, மக்கி, மறைந்துவிடுகிறது. வாழ்க்கையிலே துயரை அதிகமாக அனுபவித்தவர்களின் மனம் கனிந்து இருப்பதற்கு இதுதான் காரணமோ? சுயநலம் காரணமாகவே அவர்கள் பிறர் துயரில் பங்கெடுத்துக்கொள்ள நேர்ந்ததோ?’

‘துயரங்களை ஒன்றன்பின் ஒன்றாக, நேருக்கு நேர் சந்தித்துப் பார்த்துவிட்டவர்களுக்குத் தானாகவே ஒரு தத்துவ விசாரவேகம் அமைந்துவிடுகிறது’.

‘இன்றும் சரி, நேற்றும் சரி, இனி வரப்போகிற நாட்களிலும் சரி, அனுபவத் துயரம்தான் கலாசாலைப் பேராசிரியர்களைவிடப் பெரிய தத்துவ ஆசிரியன் என்பதில் சந்தேகமில்லை’.

‘எதுவும் பிரமாதமான சிந்தனையல்ல. சிந்தனையற்றிருப்பதே ஓரளவுக்கு பிரமாதமான விஷயமாக இருந்தது இந்த நாட்களில்’.

‘ஒவ்வொரு மனிதனும் வாழுகிற ஒவ்வொரு நாளுமே அவனவனுக்கு, அவனவன் அளவில், ஒவ்வொரு விதத்தில் முக்கியமான நாட்கள்தான். இந்த உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுதான் மனிதன் ஒவ்வொரு நாளுமே வெற்றிகர மான வாழ்க்கை நடத்த முடிகிறது - எவ்வளவு வெற்றிகரமாக அந்த நாளின், அந்த நாழிகையின், அந்த விநாடியின் செயலிலே ஈடுபடுகிறான் என்பதைப் பொறுத்துதான் வாழ்க்கையில் வெற்றி’.

‘உலகத்தில் மனிதன் தோன்றிய நாள் முதலாக இதுதான் மனிதனுடைய லட்சியம். குடும்பத்தை லட்சியமாகக்கொண்ட இடத்தில்தான் மனித குலத்தின் உயர்ந்த கிளைகள் தோன்றியிருக்கின்றன. அந்தக் கிளைகளில்தான் மகோன்னதமான தனி மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள்’.

‘கடவுளின் ஆட்சி என்கிற ஆதரவு மனிதனுக்கு இருக்கிற வரையில் உலகில் ஏழைகள் என்கிற ஜாதியினர் என்றும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். ஏழைப் பங்காளன் என்கிற பெயர் கடவுளுக்கு நிலைக்க வேண்டுமே, அதற்காக வேரும்…’

“உலகில் எங்கேயும் மிருகங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. சாவு என்கிற கோரத் தாண்டவத்தின் மத்தியிலே, தென் பிரான்சு தேசத்தில், எங்களுக்கெதிர்ப்பட்ட ஒரு பசுங்கன்று எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. பசு மனிதனுக்கு இரையாகிவிட்டது. கன்று மட்டும் எப்பொழுதும்போல, மனிதன் மனிதனுக்கு இழைக்க முயன்றுகொண்டிருந்த தீமையை உணராமல், துள்ளி விளையாடிக்கொண்டிருந்தது. 

“அந்த மாதிரி ஒரு விநாடியை ஓர் ஆயுள் முழுவதும் நீட்டிக்க முடியாமல் இருப்பதுதான் மனிதன் சோக வாழ்வுக்கே சிகரமாக அமைகிறது”

“கடவுள் மனிதனைப் படைத்தான் என்று வைத்துக்-கொள்வோம் - மனித சுபாவத்தையும் படைத்தான் - மனிதனுக்கு ஒரே கண்ணையும் அக்கண்ணுக்கு ஒரே நோக்கையும் படைக்காததுதான் கடவுளின் பிசகு.”

“நிழலைப் பின்பற்றிப் பின்பற்றி மனிதன் நடந்து பழகிக்கொண்டிருக்கிறான். நிழல் விழுகிற பக்கத்துக்கு எதிர்ப்பக்கம் திரும்பி நடந்தால், தன் நிழல் தன்னைத் தொடரும் என்று மனிதனுக்குத் தெரிவதில்லை. நிழலைத் தொடர்ந்துகொண்டே காலத்தைக் கடத்தி வருகிறான். எதிர்ப்பக்கம் திரும்பினால் வெளிச்சம் கண்ணில் பட்டுவிடும் - ஆனால், எப்படியோ மனிதன் திரும்பாமலே காலம் தள்ளிவிடுகிறான்”

“முன்னேயும் பின்னேயும் பார்த்துக்கொண்டு, குறுகிய அளவிலேதான் என்றாலும், முன்னேறுபவன்தான் மனிதன்.”

“என் வாழ்வில் நான் கண்டவரையில், ஆசைப்படாதவனே அதிர்ஷ்டசாலி என்று சொல்ல எனக்குத் தோன்றுகிறது”

“அப்படியும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லையே!“

ஆசைப்படுகிறவன் ஏமாறுகிறான் என்கிற அர்த்தத்தில் சொன்னேன் நான்” 

அது சரி, ஆனால் ஆசையற்றவன் மனிதனே அல்ல”

வாழ்க்கையின் அடிப்படையான ஆதாரமான எந்த விஷ யத்தையும் பற்றி எவ்வளவு பேர் எத்தனை நாள் தான் எவ்வளவோ அறிவோடு விவாதம் நடத்தினாலும் தீர்மானமான முடிவு கண்டுவிட முடியாது என்பதுதான் அந்த நிச்சயம். ஆகவே, கூடியவரையில் நான் யாருடனும் எவ்வித விவாதமும் நடத்துவது கிடையாது.

எமர்ஸன் இதையே சொன்னான்: ‘நீ எங்கே சென்றாலும் உன்னையேதான் அழைத்துப் போகிறாய்’

உன் நோக்கின் மேன்மையைப் பொறுத்தது, உன் லட்சியத்தின் திடத்தைப் பொறுத்தது, இவ்வுலகின் எந்த இடத்திலிருந்தும் உனக்குக் கிடைக்கிற லாபம்” என்றார் சிவராமையர்.

வேறு காரியம் இல்லாததனால்தான் போலும் அவனுக்குச் சதா பேச்சு தேவையாகவேதான் இருந்தது. வாய்விட்டுப் பேச யாரும் அகப்படாவிட்டால் தனக்குத் தானே, ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கிற இரண்டாவது மனிதனுடன், பேசிக்கொள்ளத் தொடங்கிவிடுவான்.

“ஏதோ கதைகள் சொல்கிறார்களே தவிர, இந்தக் காவேரி நதியின் கரைகளை மனிதன் கட்டியதில்லை-இந்தக் கரைகளுக்குள் ஓடு என்று யாரும் காவேரி நதிக்கு ஆணையிட்டுக் கட்டுப்படுத்தவில்லை. இந்தக் கரைகளைத் தன் தேவைகளை உத்தேசித்து, தன்போக்கை அறிந்து, தன் லட்சியத்தை மனசில் ஏற்றுக்கொண்டு காவேரி நதி இந்த இரண்டு கரைகளையும் ஏற்படுத்திக்கொண்டது. வெள்ளம் வருவதுண்டு சில சமயம்; கரை உடைவதுண்டு; உடைந்துவிட்ட கரையைச் செப்பனிட மனிதன் மண்ணும் கூலியும் உதவுவதுண்டு. ஆனால், இந்தக் கரைகளைக் காவேரியாறு தானாகச் சிருஷ்டித்துக் கொண்டதுதான். கரைகளை மீறக்கூடாது என்கிற சிந்தனை தூய்மையானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.