Mar 31,2024
சிந்தை வாகனத்தில் ஏறி பயணிக்கும் மனம் அது போக நினைக்கும் இடத்திற்கு போக முடியாமல் சிக்கி கொண்டிருப்பதை உணர்த்தும் குறீயீடாய், ராம் - லட்சுமி காரில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு நிற்பது.
சமூகத்தில் கற்பு, கட்டுப்பாடு, திருமணம் என்ற விழுமியங்கள் தோன்றுவதற்கு காரணங்கள் என்னவாய் இருந்திருக்கும் என்று நான் யோசித்ததுண்டு. அதிலும் முக்கியமாக பெண்களுக்கு அவ்விதிகள் விதிக்கப்பட்டதற்கு காரணங்கள் என்னவாய் இருந்திருக்கும்?
ஆதிக்காலத்தில், குல அமைப்பில் மக்கள் வாழ்ந்திருந்த போது, ஒரு பெண்ணானவள் அவளுக்கு விருப்பமான ஆணுடன் உறவு கொள்வதும், ஒன்றுக்கும் மேலான ஆண்களுடன் உறவுக்கொள்வதும் வழக்கமாய் இருந்திருக்கிறது.
அப்படியான சூழ்நிலையில் பிறந்த குழந்தைகளை, பொறுப்பின்மையினாலும், பொருளாதாரமின்மையினாலும் சரிவர காத்து வளர்க்க முடியாமல் போயிருக்கலாம். இவன் எனக்கு பிறந்தவனா? நான் ஏன் இவனுக்கு சேர்த்து பொருள் ஈட்ட வேண்டும் என்ற கேள்வி வந்திருக்கலாம்.
இதற்கு எல்லாம் பதிலாகத்தான், பெண்ணிற்கு கற்பு விழுமியம் கற்பிக்கப்பட்டிருக்கும்.
இயற்கையின் படைப்பில் உடற்கூறுகளால், அவளே இன்னும் கவனமாக இருக்க வேண்டிய சூழலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாள். பரிணாம வளர்ச்சியில், கற்பு என்பது மனவொழுக்கம் சார்ந்தது, அது இருபாலருக்கும் பொருந்தும் என்று கற்பிக்கப்பட்டாலும், எந்த அளவிற்கு அது எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது என்பது கேள்விக்குறியே!
இந்த ஏற்றத்தாழ்வுகளினூடே தலைமுறை தலைமுறையாக பிறந்து, பார்த்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் பெண் சமூகம், ஒரு கட்டத்தில் இருத்தலியல் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டு, உளவியல் ரீதியில் சலிப்படைகிறார்கள் போலும். இதன் அறுநிலையாய் (Breaking Point) எதற்கெடுத்தாலும் சமநிலைக்கான போராட்ட குணம் மேலோங்கி இருக்கிறார்கள் பெண்கள்.
சில வருடங்களுக்கு முன்னால் பெண்கள், ஆண்களை போல் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதற்கான சாதனம், சந்தைக்கு வந்தபோது, அதற்கான விளம்பரமே, 'ஆணுக்கு பெண் சளைத்தவரில்லை' என்பதுதான். அந்த சாதனத்தின் பயன்பாடு உண்மையிலேயே பல பெண்களுக்கு, பல தருணங்களில் உற்றதாய் இருந்தாலும், மக்கள் மனதில் புகுத்திடும் விதம் அதுவல்ல என்று தோன்றியது.
இங்கு ராமிற்கு எதிராக, லட்சுமி எடுப்பது, அது போல ஒரு சமநிலைக்கான போராட்டமா?
"ஏலைன் கிட்ட உனக்கு ரிலேஷன் இருந்ததைச் சொல்லவேண்டியதுதானே"
அவன் ஏலைன் உடன் தொடர்ப்பு வைத்திருந்ததால், தானும் சளைத்தவள் அல்ல என்று காண்பிக்கும் பொருட்டு எடுக்க கூடியதா? அல்லது, இவன் மட்டும் இன்னும் மாப்பிள்ளை போல் சுற்றி வருகிறான், நான் மட்டும் பிள்ளைகளை பார்த்து கொள்ள வேண்டுமா என்ற சலிப்பா? அல்லது, " I don't believe in this value system. My inner peace is important " என்ற நோக்கில், "நான் அவனுடனும் இருப்பேன்" என்று கூறுகிறாளா?
இதன் மூலம் அவள் எதிலிருந்து விடுதலை அடைய நினைக்கிறாள்? பல்லாண்டு கால பண்பாட்டிலிருந்தா? அல்லது பழையதென நினைக்கும் உறவிலிருந்தா? அல்லது, பல்லாண்டு காலமாக கலாச்சாரம் என்ற பெயரில் செய்யப்பட்ட, செய்யப்படுகிற ஒடுக்குமுறைக்கு எதிராக வெடித்தெழும் விடுதலையா?
Female Genital Mutilation - எனப்படும் பெண் பிறப்புறுப்பு சிதைவு செயல்முறை. இதன்படி, இரு மடிப்புகளாக இருக்கும் பெண்ணின் கருவாய் எனக்கூறப்படும் Labia minora and Labia majora என்ற உறுப்புகளை வெட்டி எடுத்துவிடுவது.
இதன் மூலம், பெண்ணிற்கு உண்டாகும் பாலியல் இச்சையை கட்டுப்படுத்த முடியுமெனவும், அவ்வாறு செய்து கொண்ட பெண்களே, திருமண வாழ்விற்கு தகுதியானவர்கள் எனவும் பல கலாச்சாரங்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது.
எகிப்திய மம்மிகளின் சான்றுகள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு இச்செயல் நடைமுறையில் இருந்ததாகக் கூறுகிறது.
2011ம் ஆண்டு வெளிவந்த Child Abuse and Neglect (Edited by Carole Jenny) இதழின் குறிப்பின்படி, உலகில், ஜிபூட்டி, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, காம்பியா, கினியா, மாலி, சியரா லியோன், சோமாலியா மற்றும் சூடான் போன்ற நாடுகளிலும், மத்திய கிழக்கு, ஆசியா, மற்றும் லத்தீன் அமெரிக்காவிலும், இச்செயல்முறை நடைமுறையில் இருப்பதாகவும், 3 மில்லியன் பெண்கள், அவர்களில் பெரும்பாலோர் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இக்கொடுமை செயலுக்கு ஆளாகிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு கணக்குரைக்கிறது.
இவையனைத்தையும் ஒரு சரடில் கோர்த்தால், ஏன் கற்பை பற்றிய நிலைப்பாடு, மேற்கத்திய நாடுகளில் வேறொரு முனையில் இருக்கிறது என்ற ஒரு யூகம் பிறக்கிறது . சொல்லப்போனால், இன்றைய அவர்களின் நிலைப்பாடும் இந்த ஒடுக்குமுறையிலிருந்து பெற்று வந்த விடுதலையாகவே எண்ணத் தோன்றுகிறது.
இதில் இருவரும் அவ்வார்த்தையை சொல்லிவிட்டு தத்தம் இருபுறமும் இறங்க நினைப்பது நான் ரசித்த குறியீடு. அழகாய் காட்சி விரிந்தது.
பிடிக்காத உறவில் இருப்பதை காட்டிலும், பிரிந்து போவது நல்லது என்பது ஒரு வாதமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும், அந்த சுதந்திரம் இரண்டு பேராக மட்டும் இருக்கும்வரை சரி. குழந்தைகள் என்று நம்மை நம்பி ஜீவன்கள் வந்த பிறகு, அப்படி சடாரென்று முடிவெடுப்பதுதான் 'Modern Love'-ஆ?
"...பின்னாடி ரெண்டு படுத்திருக்கே… அதுகளை என்ன பண்ணப்போறே?”
"ஹாஸ்டலிலே விட்டுடலாம்”
என்று கூறும்போது நான் அண்மையில் கண்ட பல ஜோடி சோக விழிகள் என் விழியில் உலவுகின்றன. எல்லாம் பதின்ம வயது பிள்ளைகள், உலகளவில், குறிப்பாக மேலை நாடுகளை சேர்ந்தவர்கள், பெற்றோரின் அரவணைப்பின்மையால் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் நகரும் நிலைகளை பற்றி தாங்களே முன்வந்து பதிவு செய்திருக்கும் காட்சிகள். சில பேர் தங்கள் முகங்களை காட்டியும், சில பேர் அதற்கு விருப்பமில்லாமலும். Humans by Brandon Stanton என்ற புத்தகத்தில்தான் அத்தகைய பதிவுகள்.
என் உறவினரில் ஒரு பெண், எனக்கு சகோதரி முறை. அவள் லட்சுமியின் அசல் என்று கூறுவேன். ஒரு வித்தியாசம் என்னவென்றால் இவளுக்கு ஒரு ஆண் குழந்தை. அக்குழந்தை காவல் நிலையத்தில், அவள் கால் பிடித்து கெஞ்சி 'வீட்டிற்கு வந்துடுமா' என்று கதறுகிறது. அவள் அவ்விடம் விட்டு விலகி போய், பிள்ளையை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை என்று என் உறவுக்காரர் ஒருவர் என்னிடம் சொன்னபோது, அக்குழந்தைக்காக மனம் விம்மியது. அக்குழந்தை எனக்கும் மகன் முறையே.
அவனை ஏறெடுத்து பார்ப்பதற்கு இன்றும் நான் கூச்சம் கொள்கிறேன். காரணம், அச்சம்பவம் நடந்தேறிய சில நாட்களில் அவன் பெற்றவள் வழி தாத்தா வந்து கூப்பிட்டதற்கு, 'அம்மாவே போயிட்டா, நீ யாரு எனக்கு' என்று கேட்டிருக்கிறது அந்த 8 வயது பிள்ளை. அவளின் செயலானது, அந்த சிறுவனை, தன் உறவுகள் மீதிருந்த நம்பிக்கை மேல் ஒரு கல் எறிய செய்தது. அவன் எறிந்த கல்லில் விரிசலுற்ற கண்ணாடியாய் உணர்கிறேன்.
மேலும், எனக்கு சு.ரா.வின் 'அகம்' அகத்தில் தோன்றியது. இந்த லட்சுமியையும், அந்த அம்புஜத்தையும் நினைத்து பார்த்தேன். லட்சுமி ஒரு வேளை பிள்ளைகளிடம் சொல்லியிருந்தால், பிள்ளைகள் ஜானுவுடன் கைக்கோர்த்திருப்பார்களோ? அல்லது, அம்புஜம் அந்த சூழலை தன்னலத்தோடு அணுகியில்லாது, லட்சுமி சொல்வது போல் காத்து இருந்திருந்தால், ஜானு நிறை ஆயுள் வாழ்க்கை வாழ்ந்திருப்பாளோ?
"நம்ம அப்பா அம்மாக்களும் ஒண்ணும் சந்தோஷமா இல்லை. எங்கம்மா எல்லாத்தையும் சகிச்சுட்டு வாழ்ந்தது எனக்காக… அதே விதிதான் நமக்கும். ஏன்னா நாம இண்டியன்ஸ்… அமெரிக்கா வந்து காருக்குள்ளே உக்காந்துட்டா மட்டும் நாம லிபரேட் ஆயிட மாட்டோம்"
- என்று ராம் இந்திய 'பண்பாட்டு மரபு' தோலை கீறி அவள் தாய்மையை லேசாக கசிய செய்கிறானோ?
மரபுக்குள்தான் ஒருவர் வாழ வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், குறைந்தப்பட்சமாய், நம் சுயநலத்தால் முளைத்த விதை மரமாகும் வரையிலாவது மரபுக்குள் இருத்தல் அவசியம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
கூடுதல் தகவல் :
ஆசிரியர் ஜெ அவர்களின் தளத்தில், இக்கட்டுரை April 4, 2024 அன்று வெளிவந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.