புதன், 6 மார்ச், 2024

சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்


பிரபுவும், கங்காவும் பெரும்பாலும் என் எண்ணங்களில் இப்போதும் அலைந்துக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன். காரில் நான் பயணம் செல்லும்போதோ, சென்னை LIC கட்டிடத்து சன்னல் வழியில், காட்சிகளை மனதில் விரித்துக்கொள்ளும்போதோ, இரவு நேரத்து மழையின்போதோ அது நிகழும்.

நேற்று, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை கண்டேன். படம் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே நாவல் கண்களில் விரிய, மனதில் சில‌ எண்ணங்களும், பிம்பங்களும், கேள்விகளும் அலைமோதிக்கொண்டிருந்தன. அவற்றை தொகுத்துக்கொள்ள‌ வேண்டும் என்று தோன்றியது.

அக்னி பிரவேசம் கதையின் முடிவே ஒரு சிறந்த சிந்தனை. அதுவும் அச்சிந்தனையை கங்காவின் தாய் வழியில் அவர் சொன்ன விதம் இன்னும் என்னை வியக்க வைத்த ஒன்றாய் நினைத்ததுண்டு.

இப்போது நினைத்து பார்த்தால், அவள் தாய் அதை பெருஞ்சிந்தனையாய் நினைத்து சொன்னதுபோல் தோன்றவில்லை.

அம்மா தன் சொந்தப்பந்தங்கள் மத்தியில், 'என்ன பையன் நல்ல படிக்கிறானா? என்ன பொண்ணுக்கு நல்ல வரன்கள் வருதா?' போன்ற கேள்விகளுக்கு எல்லாம், என்ன நடைமுறை உண்மையோ அதை சொல்லாமல், கற்பனாசக்தியின் ஊதலில் சுடர்விடும் கங்குகளில், வடை சுடும் வண்ணம் பதில் சொல்வதை போல்தான், கங்காவின் தாய் சொன்னதும் இருந்திருக்குமோ என்ற எண்ணம் வருகிறது. தன் சுற்றுப்புறத்திற்கு பயந்து அல்லது தன் மகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அந்த தண்ணீரை ஊற்றி, அனற்கங்குகளை அணைத்தாளோ?.

கங்காவின் தாய், ஒரு வேளை அதை சொல்லாமல், உண்மையை சொல்லியிருந்தால் கங்கா எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டிருப்பாள் என்பதுதான் நாவலாய் விரிந்திருக்கிறது.

என்னை பொறுத்தவரை இதை சொல்வதற்குத்தான் பெருந்தைரியம் வேண்டும். அந்த புள்ளியில்தான், வாழ்க்கையை அணுகும் விதத்தில் தன் நிலைப்பாடை, மாறுபாடை சில மனிதர்களை கொண்டு சில நேரங்களை உறைய வைத்திருக்கிறார், JK.

சொல்லப்போனால், பொதுவாய், பெரும்பான்மையினர் சிந்தனையுடன் இருக்கும் தாயாகவே தன் தாய் இருக்க வேண்டும் என்று கங்கா எதிர்ப்பார்த்திருக்கிறாள்.

கங்கா, அந்த நிர்வாண இரவில், நொடிப்பொழுதின் ஆளுமையில், பெண்மையை உணர்ந்ததால், கற்பின் வழி அதை இழந்ததாய் அரற்றுகிறாள். தனக்கான ஆண்முன், தன்னை முழுதளித்த ஒரு பெண்ணாய், உடலாய், உணர்வாய், அவ்வுண்மை நிகழும் ஒரு உலகிலிருந்து இறங்கி, அவள் வாழும் நிகழ் உலகிற்கு வரும்போதுதான், சுற்றமும், உலகமும், வகுத்திருக்கும் ஓர் உண்மைக்கு (அல்லது சமூக விழுமியங்களுக்கு) அஞ்சி நடுங்குகிறாள்.

அந்த நடுக்கம் தொடர்கிறது. அவள் அண்ணன் வீட்டை விட்டு துர‌த்தும்போது நிர்கதியாய் நின்ற நடுக்கம், தன் தாய்மாமன் வந்து அரவணைத்து சென்ற போதும், பின் ஒவ்வொரு முறை அரவணைத்த போதும் எழுந்த நடுக்கம் என‌.

ஆனால், இங்கு ஒரு தெளிவடைகிறாள் கங்கா. தன் சூழ்நிலைக்கருதி, தனக்கு வரும் இக்கட்டுகளை கையாளும் முறையினை பிடித்துக் கொள்கிறாள். சபலமுற்ற மாமாவின் உதவியால், அவர் சபலத்திற்கு பலியாகாமல், சாமர்த்தியமாக பட்டதாரியாகி பதவியில் அமர்ந்துவிடுகிறாள்.

இவள் சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அவரும், அவர் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்ட‌ இவளும் - சில நேரங்களில் சில மனிதர்கள்.

தன் மனைவியிடம் கிடைக்காத ஒரு அனுசரணை, அடிப்படை கவனம், கண்முன் தெரியாமல் கடந்து வந்த ஒருத்தியிடம் கிடைக்கப் பெற்றதும், அந்த உறவின் முறையோ, பெயரோ, ஆயுளோ கவனத்தில் இல்லாமல், அக்கணத்தில் மட்டுமே வாழும் பிரபுவும், தன்னை இழக்கச் செய்த‌ ஒருவன் எந்நிலையில் இருந்தாலும், அவன் தான் MY MAN என்று சொல்லி, நிறமற்ற தன் வாழ்வை மட்டுமே கருத்தில் கொண்டு, நிகழ் கணத்தில் வசந்தத்தை காண தவிக்கும் கங்காவும் - சில நேரங்களில் சில மனிதர்கள்.

மகளின் வாழ்க்கையை நல்லமுறையில் அமைத்துவிட நினைக்கும் தாயும், தன் மனத்தேவையை அறிந்திடாத தாயை தாய் என்றே அழைக்கமறந்த கங்காவும் - சில நேரங்களில் சில மனிதர்கள்.

கங்காவின் நிலைமை பொருட்டு ஆதங்கப்படத் தோன்றவில்லை. பரிதாபம்தான் மேலெழுகிறது. 'அவளுக்கு சாமர்த்தியம் இருந்தால், கெடுத்தவனையே தேடி கண்டுபிடித்து ஊர் சுற்ற வேண்டியதுதானே' என்ற வெங்கு மாமாவின் வயிற்றெரிச்சல் வார்த்தையின் அடிப்படையில், தன் வாழ்க்கையின் தேடலை (?) தொடங்குகிறாள். அவனையே கண்டும்பிடித்து விடுகிறாள்.

சூழ்நிலையின் பலவீனத்தை பயன்படுத்தி பலன் தேடிக்கொண்ட ஒருவனை தேடி போவது, 'கட்டினவன் எப்படியிருந்தாலும், பொறுத்து போகத்தான் வேண்டும்' என்ற நம் சமூகத்தின் முந்தையதலைமுறை சிலரின் சிந்தனையை ஒத்ததாய் பார்க்க வைத்தது. சிலஇன்றையினரும் கூடஅதற்கு விதிவிலக்கல்ல‌.

'You can only be a concubine, நீ ஒருத்தனுக்கு வைப்பாட்டியாய் தான் இருக்கமுடியுமே தவிர, பெண்டாட்டி ஆகமுடியாது’ என்று தன்னை முறையின்றி அடைய துடிக்கும் ஒருவனின் பிதற்றலை நம்பி, தான் அப்படித்தான் இருக்க முடியும் என்று நம்பும் கங்காவிடம், அவளின் பலவீனத்தையே காணமுடிகிறது.

'என் மகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடுமோ உனக்கு செய்த பாவத்தால்' என்று பதறும் ஒரு தந்தையாய், விலகியிருந்து, கங்காவை அவள் வாழ்க்கை பற்றிய முடிவெடுக்க வற்புறுத்தும் பிரபுவிடம் மன்றாடும் கட்டம் - அவளின் உச்சக்கட்ட பலவீன பிரஸ்தாபம்.

கடைசியில் அவள் தேடிக்கொள்ளும் வாழ்க்கையானது, அதுவரை வரையறையிலும், வாழ்வுமுறையிலும் கட்டுண்டுது அவிழப்பட்டு விடுதலை அடைந்த‌ மனதின் நிலையா? அல்லது மனசிக்கலின் உச்சக்கட்டமா?

ஒவ்வொரு கட்டத்திலும் கங்காவின் குற்ற உணர்வும், அதனோடு கூடிய மன சிக்கலும் அதை ஒவ்வொரு கட்டத்திலும் அவள் உடைத்தெறிய முற்படுவதும் எனக்கு இக்கேள்விகளையே தருகின்றன‌.

ஒரு குழந்தை , தன் பெற்றோரிடம் பெறும் தண்டனையிலேயே, குற்ற உணர்வுக்கு முதன்முதலில் ஆளாவதாய் டாக்டர் சிக்மண்ட் பிராயிட் கூறுகிறார்.

ஒருவன், தன் சமூக வரையறைக்குட்பட்ட, நீதி, கோட்பாடு அல்லது விழுமியங்களை தாண்டி சென்றிருக்கும்போது, முதன்முதலில் குற்றவுணர்விற்கு ஆளாவதாய் டாக்டர் ஹேரோல்ட் ஹாங் குறிப்பிடுகிறார்.

கங்காவிடம் பெங்களூர் வரன் பற்றி பேச வரும் சர்மாவை, தன் தாய், தமையனை பார்க்கச் செய்கிறாள். அதை பார்த்து முடிக்க அவள் குடும்பத்தார் நினைக்கும்போது, அவள் அதற்கு தயாராக இல்லை. தனக்கு இது நடக்க நினைக்க மாட்டார்கள் என்று தீர்மானமாய் எண்ணித்தான் அவர்களிடம் பேசும்படி சர்மாவை அனுப்பி வைக்கிறாள். இதில் பரிதாபம் என்னவென்றால், அவளை சுற்றி அனைவரும் அவளுக்கு ஒரு எதிர்காலத்தை பார்க்கிறார்கள், அவளை தவிர.

கடந்த கால அனுபவங்களின் முடிச்சிலிருந்து விடுவித்துக் கொள்ள அஞ்சி, அம்முடிச்சுகளை இன்னும் இறுக்கி கொள்ளவே கங்கா விரும்புகிறாள்.

அந்த வரன் அமைந்து பின்னாளில் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது தனி கேள்வி. ஆனால், குறைந்தபட்சமாய் அந்த சிந்தனையை கருதும் மனம் கூட கங்காவிடம் இல்லை. இதற்கு அவளை முழுவதுமாய் பழி சொல்லிட முடியுமா?

இன்று நடைமுறை வாழ்வில் எத்தனை கங்காவை பாரர்க்கிறோம். என் கண் முன்னே என் தோழி ஒருத்தி இருக்கிறாள், தன்னை அழித்துக்கொள்ளும் முயற்சியில், செயல்முறையில் இருக்கிறாள். தான் தேர்ந்தெடுத்த ஒருவன் தனக்கு செய்த துரோகத்தின் தீயில் சிக்குண்டு மனதளவில் சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறாள். அவனை விட்டு சட்டபூர்வமாக விலகி வந்துவிட்ட போதிலும், 'நீ விரும்பி தேடிக்கொண்டதுதானே என்று தாய், ஒவ்வொரு முறை (யுத்தியாய்) சொல்லும்போதும், குற்றவுணர்விற்கு ஆளாகி கூனி குறுகி போகிறாள். அவளை எப்படி இதிலிருந்து மீள செய்வது என்றறியாமல் வருந்துகிறேன்.

கங்காவின் தாய் கையாண்ட‌ முறையும், என் தோழியின் தாய் கையாளும் முறையும் ஒன்றே - ‍கையாலாகாத‌ தருணத்தில், கையாளும் வியூகம், தங்களின் ஒத்த‌ குறிக்கோளினை நோக்கி.

இதற்கு அடுத்த பாகமாய் 'கங்கா எங்கே போகிறாள்'. அதை நான் வாசித்ததில்லை. கங்காவை, வாழ்க்கை எந்த கோடி வரை இட்டுச்சென்று அலைக்கழிக்க இருக்கிறது என்று என் மனதில் ஒரு ஓட்டத்தை நிகழ்த்த நினைத்தே, புத்தகத்தை வாசிக்காமல் இருக்கிறேன். பார்ப்போம், என் கங்கா எங்கே போக இருக்கிறாள் என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.