இன்று காலை 4:55 மணி. தூக்கம் கலைந்துவிட்டது. வாசிக்கலாம் என்று எடுத்தபோது, அலைபேசியில் Journal செயலியை பார்த்தேன். அது கொடுத்த இன்றைய கேள்விகளுள் ஒன்று, பிடித்த கலை எது? ஏன்?
எழுத்து எனும் கலை. காரணம் கேட்கும்போதுதான் யோசிக்கிறேன். ஏன் எனக்கு எழுத்து பிடித்திருக்கிறது? சத்தமன்றியும் வலிமையாய் பேசமுடிவதாலா? அல்லது எனக்கு நல்லா எழுத வரும் என்று நானே நினைத்துக் கொள்வதாலா? அல்லது மொழி மீது கொண்ட பற்றினாலா? அல்லது எழுத பிடித்ததாலா? என்னவோ வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், நான் எழுதுகிறேன்.
எண்ணங்களும், படிமங்களும், கட்டற்ற வெள்ளமாய் கரை புரண்டோட, அதனை ஓர் ஒழுங்குக்கு கொண்டு வர உதவுவது எழுத்து.நூற்றாண்டு கால சிந்தனைகளை, வளர்ச்சிகளை, வாழ்க்கையினை காட்டும் ஒளியாய் நான் எழுத்தை பார்க்கிறேன். இப்போது யோசித்து பார்க்கிறேன். மனிதன் எப்போது எழுத தொடங்கியிருப்பான்? மொழியை கண்டுபிடித்ததன் பின்? முதலில் எழுத தான் தொடங்கியிருப்பானா?
மொழி வந்தபின்தான் எழுத்து சாத்தியம். மொழி வருவதற்கு முன்பே அவன் பேச தொடங்கியிருப்பானே? ஊ ஆ என்று சத்தம் கொடுத்திருக்கலாம், உடற்மொழியே ஆதி மொழியாய் இருந்திருக்கலாம். அதன்பின், சித்திரம் வரைய ஆரம்பித்திருக்கலாம். இப்போது நினைவுக்கூர்ந்தால், கல்கி நாவலில் எல்லாம் ‘சித்திரம் எழுதுகிறான்’ என்ற சொல்லாடல் இருப்பது தெரிகிறது.கண்ணுக்கு தெரிந்த மலையினை கண்டு மண்ணில் முதலில் கோடு இழுத்திருப்பானோ? அப்படியென்றால் அது ஓவியமா, கணிதமா? ஓவியம் என்னும் கணிதமா? கணிதம் என்னும் ஓவியமா?
இப்போது எழுத்தின் நிலை என்ன? இன்னும் மனிதன் எழுதுகிறானா? எழுதுகிறான் தான். எழுதுபொருள்கள் ஆயிரம். எழுதுபொருள்களும் ஆயிரம். கணிப்பொறி வழி எழுதுதல், எழுதுகோல் வழி எழுதுதல், தூரிகை எழுத்து, நாம் சொல்ல சொல்ல, கணிப்பொறியே தட்டச்சு செய்யும் எழுத்து என்று வளர்ந்துவிட்டன. இன்னும் சொல்லப்போனால், எதை வேண்டுமானாலும் இப்போது எழுத்து வடிவில் மாற்ற முடிவதை பார்க்கிறோம்.
Laura Wilson-ன் ' The Writers' புத்தகத்தில் ஒரு புகைப்படம் இருந்தது. A.S.Byatt-ன், 'Possession' என்ற புக்கர் பரிசு பெற்ற புத்தகத்தின் 25 ஆண்டு நிறைவினை கொண்டாடும் வண்ணம், chatto and windus என்ற பதிப்பு நிறுவனம், புத்தகத்தின் சிறப்பு பிரதியை பரிசாக கொடுத்திருக்கிறது. அதில் சிறப்பு என்னவென்றால், புத்தகத்தின் பக்கங்கள் 25 என்ற எண் வடிவத்தில் கிழிக்காமல் மடிக்கப்பெற்றிருந்தது.25 என்று பெரிதாக தோற்றமளிக்கும் வண்ணம், அவரது அலமாரியில் விரித்தும் வைக்கப்பட்டிருந்தது. ஒரு கணம் அதனை கண்டு வியந்தேன்.
அந்த புகைப்படத்தில், எழுத்து எனும் கலை ஓவியம் என்ற கலையை உள்ளடக்கியுள்ளதாகவே பார்க்கிறேன். அந்த கைவினை எனக்கு ஓவியமாகவே தெரிந்தது. அந்த ஓவியம் 25 என்ற எழுத்துக்குள் இருந்தது. எழுத்து நம் சிந்தனையை மட்டுமின்றி, நமக்குள் இருக்கும் அழகியல் உணர்வினையும் வெளிப்படுத்துகிறது. ஒரு அழகான வாழ்வனுபவமாய் மாற்றுகிறது.எழுத்தை கண்டுபிடித்த அந்த ஆதி மனிதன் யார்? தெரியவில்லை.
சுமர் என்பது டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளுக்கு இடையில் அமைந்துள்ள,மெசபடோமியா பகுதியில் நிறுவப்பட்ட ஒரு பண்டைய நாகரிகமாகும். கிமு 3200 இல் பண்டைய சுமேரில் முதல் அறியப்பட்ட எழுத்து வடிவம் தோன்றியது. அதன் பெயர் கியூனிஃபார்ம் (Cuneiform) கையெழுத்துப்படிவம்(Script).
கிமு 3100 இல், எகிப்தியர்கள் ஹைரோகிளிஃப் என்னும் எழுத்துமுறையை பின்பற்றினர். இது முதன்மையாக மத மற்றும் நினைவுச்சின்ன கல்வெட்டுகளுக்கு பயன்படுத்தினர்.
சீன எழுத்துக்கள் கிமு 1200 இல் தோன்றின. கிமு 1050 இல் ஃபீனீசியன் (Phoenician) எழுத்துக்கள் பெரும்பாலான நவீன எழுத்துக்களுக்கு அடித்தளம் அமைத்தன.
மெசோஅமெரிக்காவில் உள்ள மாயன் கிளிஃப்கள், இந்திய துணைக்கண்டத்தில் சிந்து எழுத்துகள் மற்றும் மத்தியதரைக் கடலில் கிரேக்க மற்றும் லத்தீன் எழுத்துக்கள் உட்பட உலகளவில் எழுதும் முறைகள் பன்முகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்-பிராமி அல்லது தமிழி என அழைக்கப்படும் தமிழ் எழுத்துகள் கிமு 3 ஆம் நூற்றாண்டில் தோன்றின, இது இன்றும் பயன்பாட்டில் உள்ள பழமையான எழுத்துகளில் ஒன்றாகும். தமிழ்நாடு, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் உள்ள பல்வேறு தொல்பொருள் தளங்களில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செழுமையான இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் எழுத்துப்படிவம் முக்கிய பங்கு வகுக்கிறது. எழுத்துகளின் பரிணாமம், மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதோடு, நாகரிகத்தின் நீடித்த மரபுக்கு சான்றாக நிற்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.