செவ்வாய், 25 மார்ச், 2025

ஒத்திசைவு

வெட்டப்பட்ட மரம்

சரிந்திருந்தது;

சரீரத்தை விட்டு

உயிர் விலகியிருந்தது!

அதன் நீண்ட 

உடல் மீது அமர்ந்து

தன் தாயின் அருகில்

கையலைந்து சிரித்தது

அந்த குழந்தை;

அருகில் ஒரு துளிர்

அதனிதழில் ஒரு துளி!

வெள்ளி, 21 மார்ச், 2025

கோதுமை மணி - மலர்விழி மணியம்

முட்டத்து மக்களும், கடற்கரையும், ஒவ்வொரு கதாப்பாத்திரமும், காற்றில் அடித்து கிளம்பிய மணற்துகள்களும், வழிந்து கொட்டிய தண்ணீர் துளிகளும், அறுத்து எரிந்து மண்ணில் விழுந்த தங்க சங்கிலியின் பொத்தென்ற ஒலியும், இவையனைத்தையும் விட, ஒவ்வொரு கணமும் அவளுள் அதிர்ந்து உருக்குலையும் உசுரும், அது தரும் விம்மலும், கதை முழுக்க என்னுள் இருந்தன. 

எஸ்தர் தன் அப்பாவை அனைத்து அழும்போதே காரணம் புரிந்து, அந்த விம்மல் என்னுள் பற்றிக்கொண்டது. 


லூர்தம்மாளின் உள் நின்று உடற்றும்  பிணியின் காரணம் புரிந்த அவள் மருமகள், (அவள் மருமகளே. இன்று கூட அவர்கள் இருவருமாய் சேர்ந்து மீன் குழம்பும், அவியலும் செய்து கொண்டிருக்கிறார்கள்)அந்த பிணியை பிடுங்கி எறிந்ததும், உச்சத்தில் அவள் கூறும் அந்த வார்த்தை - அவள் பிணி நீங்கியதை என்னுள் உணர்த்தியது. 


கதையில் நான் அடைந்த உச்சங்கள் எத்தனை எத்தனை!

“அவன் கொடுத்த முத்தங்களை தேகம் முழுதும் தேடிய அவளை நான் அணைத்தபோது”

“குடிச்சு குடிச்சு ரெண்டு கிட்டினிய கொன்னா. இனி உனக்குத் தர எனக்கக் கிட்னிதாம்ப்லே உண்டு.” (இதில் தெரிந்து விடுகிறது, லூர்தம்மாளின் எதார்த்தமும், அவள் பிணி வேறு என்றும்)

“ஜெனிஃபரைக் கண்டவுடன் தாமஸ் ஓடி வந்து அணைத்துக் கொண்டு, கூறியபோது”


சீமோன் உண்மையிலேயே சீமான் தான். அவனின் அந்த உச்ச காட்சி என் கண்திரையிலிருந்து அகலவில்லை.

ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும், ஒரு shot-க்கான நேரமேயாயினும், நுணுக்கமாய், அணுக்கமாய் என்னுள் மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறார்கள். 


முட்டத்து பசங்களும், ஊர்மக்களும், கடற்கரையும், வீற்றிருக்கும் மணற்பரப்பும், ஜெனிபரும், லூர்தம்மாளும், ஊர் பசியாற்றும் அவளின் மீன் குழம்பு வாசமாய், இனி என்றென்றும் என்னுளிருந்து எழுந்து வருவார்கள்.


மிக கச்சிதமான, ஆழத்தை தொடக்கூடிய ஓர் படைப்பு.

வியாழன், 20 மார்ச், 2025

மேலைத் தத்துவ வகுப்பு - அனுபவக் கடிதம்

அஜிதன் நிகழ்த்திய மேலைத் தத்துவ வகுப்பில் பங்குப்பெற்றதன் அனுபவ பகிர்தல், எனது ஆசிரியரின், முழுமையறிவு தளத்தில் கீழே:  

 https://unifiedwisdom.guru/201285

புதன், 19 மார்ச், 2025

தொடர்ச்சி


ஆற்று பாலத்தில் நின்றுகொண்டு

ஓடும் நீரில் அப்பாயிக்கு 

பொறி கலவை வீசினேன்;

அவன் அந்த கருப்பு வாகனத்தில்

என்னை பின்தொடர்ந்தான்..

நான் ஓட ஓட என்னை நெருங்கினான்

அவன் நெருங்க நெருங்க 

என்னை அடையா வண்ணம் 

நான் எட்டிச் சென்றேன்..

ஓரிடத்தில் நின்றுவிட்டேன்..

என் எதிரே மக்கள் திரள்; 

என் அருகே ஒரு பேருந்து; 

திரும்பி நின்றேன், என் எதிரே அவன்..

பத்தடி தூரம் இருவருக்கமிடையில்;

அவன் கண்களால் என்னை காண இயலவில்லை;

கத்தி அரற்றுகிறான், நான் அவனை நோக்குகிறேன்;

பேருந்து கிளம்ப ஆயத்தமாயிருந்தது! 

செவ்வாய், 18 மார்ச், 2025

தனிமையின் பெருங்கூட்டம்


மலைகளை போல் தனிமையானது உலகில் எதுவும் இல்லை என்று ஜெ கூறுவதுண்டு. அது உண்மைதான் என்று அந்த காட்சியின் உணர்வுகளை மீட்டெடுக்கையில் தோன்றியிருக்கிறது.என் தனிமையில் அங்கு சென்று நிற்கையில், ஒரு சமயம் அது என்னை அரவணைத்து கொள்கிறதாய் உணர்கிறேன். ஒரு சமயம் அதன்மேல் கை போட்டுக்கொண்டு படுத்திருப்பதாய் எண்ணிக்கொள்வேன். ஒரு சமயம் அப்போதுதான் என் தனிமையின் கீறல்களை உணர்வேன். முட்டிக் கொல்லும் அழுகையை முழுங்கிய தருணங்களும் உண்டு. விடுதலையாய் வழிய விட்ட தருணங்களும் உண்டு.


தொன்மையான மலையின் மீது எழுப்பப்பட்ட கோட்டையே எனது நகரம் என்றாலும், அதனை பார்க்கையில், மலை என்பதன் பிரம்மாண்டம் என்னை தீண்டியிருக்கவில்லை. இன்றும், நகரத்தின் நடுவில் அழகாய் வீற்றிருக்கும் ஓர் அங்கமாய் மட்டுமே அதனுடனான என் உணர்விருக்கிறது.


முதன்முதலில் என் வாழ்வில் நான் மலைகள் என்று பார்த்து பிரமித்தது எங்கு என்று எண்ணிப்பார்க்கிறேன். சிறு வயதில் என் தந்தை ஊரான துறையூருக்கு செல்லும் வழியில் உள்ளது நான் கண்ட முதல் மலைகள். மலைகள் அல்ல குன்றுகள். அந்த வயதில் அவை எனக்கு மலைகள். பேருந்தில் செல்லும் வழியில் இருக்கும் மலைகளில், சில இடங்களில் வெள்ளை சுண்ணாம்பில் பிரம்மாண்டமாய் சிலுவை எழும்பி காட்சியளிக்கும். சில இடங்களில் கல்லூரியின் பெயர் மற்றும் படிக்கும் ஆண்டு என சேர்த்து ‘ஜெயராம் காலேஜ் III year B.E’ என்பது போல் குறிப்புகள் கண்ட நினைவுண்டு. நம்ம ஊருக்குள்ளேயே மலைகள் உள்ளதா என்ற ஆச்சரியம் அப்போது. பச்சை மலைத்தொடர் அடியில் உள்ள ஊர்,துறையூர். திருச்சியிலிருந்து 47 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் அவ்வூரிலே பச்சை மலைத்தொடரின் அங்கமான பெருமாள் மலை உண்டு. மலை மேல் வண்டியில் சென்றபோது அடைந்த பரவசத்தையும், அந்த சிறுமியின் முகத்தையும் இப்போது நினைவு கூர்கிறேன். பின்பு, வின்ச்சில் பழனி. அடிக்கடி சென்றதுண்டு. குதூகலமும், குறுகுறுப்பும் நிறைந்த அனுபவங்களாய் எஞ்சியிருக்கின்றன.


முதன்முதலில் தொடர் மலைகளை நான் கண்ட நாள் ஜூன் 8, 1998.மேட்டடர் வண்டியில் அம்மா, அப்பா, பெரியப்பாக்கள், மாமாக்கள், பெரியப்பா மகள்கள் என கூட்டமாய் நாங்கள் சென்ற ஒரு திருமண நிச்சயதார்த்தம். கோயம்புத்தூர் வழியாய் பாலக்காடு சென்றோம். அப்போது தூரமாய் அமைதியாய் நின்றுகொண்டு என்னை பார்த்து கொண்டிருந்தன மலைகள். பனி மூட்டங்கள் வளர்ந்தும், களைந்தும் அலைந்து கொண்டிருந்தன. கையில் சித்தப்பாவின் யாஷிகா கேமராவில் முதன்முதலாய் படங்கள் எடுத்து கொண்டிருந்தேன். என் பெரியப்பா மகள் கேட்டபோது கொடுக்காது, என் கையை இழுத்து கொண்டதை நினைக்கையில் இப்போது வலிக்கிறது. அவள் அந்த ஏக்கத்தை மறந்து ‘அதோ அதை எடு’ என்று உற்சாகமாய் மலையை சுட்டிக்காட்டியது தீயாய் சுடுகிறது. இக்கணம் அவளிடம், நான் அந்த கேமராவையும், ஜன்னல் சீட்டையும் விட்டுத் தருகிறேன். 


அடுத்த பயணம் தொட்டபேட்டா. மலை உச்சியில் அப்பா, அம்மா, மாமா, தம்பியுடன் நின்றதும், என் அப்பா அங்கிருந்து அவர் அம்மாவிற்கு போன் செய்து தன் இன்பத்தை பகிர்ந்து கொண்ட காட்சியும் மாறாமல் என்னுள் நிலைத்திருக்கிறது.


2010-ல், புவியின் குடும்பத்தோடு வேங்கட மலை(திருப்பதி) பயணம். ஏழுமலைகளுள் ஒன்றான அம்மலை பயணமும், அனுபவமும் முற்றிலும் எனக்கு புதிது. என் குடும்பத்தை விட்டு தனியாக வேறொரு குடும்பத்தோடு நான் செய்த முதற்பயணம். அந்த பயணம் எனக்கு மகிழ்வான பயணமே என்றாலும் கூட, ஏதோ ஒரு நொடியில் என் குடும்பத்தை அவர்கள் முகத்தில் தேடியதன் தீற்றல் என் கண்ணில் தென்படுகிறது. என் குடும்பத்தில் கலகலப்பாய் ஆடிப்பாடி குதூகலிக்கும் வாய்ப்பு கிடையாது. அப்பா கண்டிப்பானவர். பழைய பாடல்களின் அறிமுகமும்,ரசனையும் அவரிடமிருந்தே வந்தன என்றாலும், பாடல்களின் உணர்வுகளை வெளிக்கொட்டி குதூகலிக்கும் இடமாய் என் குடும்பம் இருக்கவில்லை. அவ்விடத்தை நிரப்பிய பெருமை அவளுக்கும், அவள் குடும்பத்திற்குமே. அவள் பெரியம்மா பசங்களோடும், உடன்பிறந்தவர்களோடும் நான் என்னையும் இணைத்து கொண்டு மகிழ்ந்திருந்த தருணங்கள். முதன்முதலில் இசைஞானியின் ‘ஏகாந்த வேளை..இன்பத்தின் வாசல்’ பாடல் கேட்ட பயணமது. திரும்பி வரும் வழியில், தொடர் (ஏழு) மலைகளை பார்த்தபோது, அரங்கநாதர் சயனம் கொண்டிருப்பதாய் தோன்றியது. 


அதை விஞ்சும் ஓர் அழகு ஒரு நாள் இரவு அந்த அழகிய முழுநிலவொளியில். எப்போதையும் விட, அந்த வானில் அன்று நிலாப்பொலிவு, பொலிவென்பதை கடந்து வழிந்து கொண்டிருக்க கண்டேன். நான் அருகில் அமர்ந்திருக்க, பிரேம் அக்கருக்கிருட்டில் எங்களுக்கு இரவு உணவிற்காக வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறான். என்னிடம் எதுவோ சொல்லிக்கொண்டே வருகிறான், நான் ‘ம்ம்’ கொட்டி கொண்டே, நிலவை வெறித்து வந்து கொண்டிருக்கிறேன்.  

அதீத ஒளியின் பிரவாகம் என் பார்வையின் தொடு வளைவை தாண்டியிருந்தபோதும், உடல் வளைத்து, குனிந்து நிமிர்ந்து அதனை நோக்கி கொண்டிருந்தேன். மனம் கிளர்ச்சியுற்றிருந்தது. ஒரு இடத்தை கடக்கும்போது, என் கண்கள் இமைக்கவில்லை. ஆம் உண்மையிலும் இமைக்கவில்லை. 


சந்திரனின் வரம்பு மீறிய பொலிவின் ரகசியம், புலப்பட ஆரம்பித்தது. அரனின் ஒளி ஒழுகலில், அவளை கண்டேன்.அவன் விரகத்தில், அவள் முலைகள் எழுந்தமைய, தன் இடக்கையை தலை மேல் அமர்த்தி, இடக்காலை மட்டும் சற்று ஊனி,சற்றே ஒருக்களித்து, பனிவுடல் திறந்திருக்க, கொதித்திருக்கிறாள் அந்த மலைமகள்.ஆனந்த களியாட்டத்தின் தொடக்கப்புள்ளி. புடவியின் பெருவிளையாட்டு. தீரா பெருங்கனவு. காணுந்தோறும் பெருகி வழியும் கனவு. ஆடுந்தோறும் முடிவில்லா விளையாட்டு. அண்டத்தின் பெருங்கருணை, அதனை நான் காண பெற்றது என்று பிறகு சொற்வடிவம் கொடுத்து கொண்டேன். 


ரெயினியர் மலைக்கு சியாட்டலில் இருந்து காரில் சென்றிருந்தோம். அரை மணி நேர பயணத்திலேயே, மலைகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. ஒரு புறம் காஸ்கேட் பனிமலைத்தொடர்கள், மறுபுறம் ஒற்றை பனிமலையான ரெயினியர் மலை, அழகான ஓவியம்போல். தொலைவில் இருபுறமும் கிளர்ச்சியூட்டக்கூடிய பனிமலைகளின் அணிவகுப்பு, அருகில் வாஷிங்டன் ஏரியின் ஒளிப்பரப்பு, அன்னையின் கர்ப்பத்திலிருந்து வெளியேறும் மகவுகளாய், நாங்கள் இருவரும் மிதவை பாலத்தில். 


பெட்ரமாக்ஸ் விளக்கின் மேன்டிலாய் தெரிந்த அந்த ஓவியம், அருகே செல்ல செல்ல, விரிந்தெழுந்து நிமிர்ந்த ஒற்றை பிரம்மாண்டம். அதன் நீள அகலத்தில் ஓடியோடி பார்த்தும் அது தீரவில்லை. மகவுகளாய் அன்னையின் இடுப்பை, சுற்றி சுற்றி தீராத வேட்கையுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரம், பசித்தது. அப்போதுதான் அந்த ஆனந்த களியாட்டின் விருந்து.


அடுத்த நாள் காலை அன்னையின் மேலேறி உலவினோம். ஒருவாறான உச்சியில் நின்று சுற்றிலும் பார்க்கையில் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை பனிமலைகள் மட்டுமே. கோமல் கண்ட கைலாயம் போல். அப்போது மனதில் ஒரு அமைதி, ஒரு விடுதலை.


அங்கேயே சரிந்து உட்கார்ந்து சுற்றிலும் பார்த்துக்கொண்டேயிருந்தேன். இப்போதும் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். காண காண என் கண்முன் தீராது வளர்ந்து வருவது. அப்படியே படுத்துக்கொண்டேன். உள்ளே ஓராயிரம் வருடங்களின் அனல் தகித்து கொண்டிருந்த போதிலும், எனக்கு அவள் குளிர்ந்திருந்தாள். இருந்தாலும் அவள் தகிப்பை நான் உணராமல் இல்லை. அதை உணர்ந்த தருணம் என்னுள் ஒரு விதிர்ப்பு எடுத்தது.  


அடுத்த நாள் மாலை, ஒலிம்பிக் தேசிய பூங்கா. அங்கு சென்று சேரும்போதே நேரமாகிவிட்டது. மேலும், பனி புயல் இருக்கப்போவதாக கூறி, நாங்கள் செல்ல வேண்டியிருந்த மலை வழியை அடைக்கப்போவதாய் கூறினார்கள், பார்வையாளர்கள் நிலையத்தில் (Visitor Centre). முக்கால் மணி நேரமிருந்தது என்று நினைக்கிறேன். பிரேம் , “வா போகலாம், போய் பார்ப்போம்” என்றான். எனக்கும் அது எப்படித்தான் இருக்கும், போய்தான் பார்ப்போமே என்ற குறுகுறுப்பு. அழகான, குறுகலான வளைவுகள் கொண்ட மலை பாதை. வளைவுகள் மிகவும் ஆழமாக, அபாயகரமாக, அதுவும் இருவழி சாலைகளாய் மட்டுமே இருந்தது. ஒரு புறம் சிறிது தள்ளி வண்டியை ஒடித்தாலும், மலையின் கீழே இன்னோர் உலகத்துக்குள் சென்றடைவது உறுதி. அதுவே மறு புறம் திரும்பி வருகையில், மலை பாறைகள் உருண்டு வழியில் விழக்கூடிய அளவிற்கு பலத்த காற்று. ஒருவாறு அந்த காற்றில் நீந்தி கார் பார்கிங் சென்று வண்டியை நிறுத்தினான். வண்டியில் இருந்து முதல் காலடி வைத்த கணம் ஆசிர்வதிக்கப்பட்டதாய், அன்றைய பனி பொழிவு. கீழே பள்ளத்தாக்கு முழுதும் பனியால் நிரப்பப்பட்டதாய் இருந்தது. நன்கு குளிருங்கூட. 


சற்று நேரத்தில், காவலர் வந்து அனைவரையும் மலை இறங்க சொல்லிவிட்டார். திரும்பு வழியில் நான் சிறிது தூரம் வண்டியை ஓட்டிக்கொண்டு, பிரேமை அந்த தருணத்தை அனுபவிக்க செய்தேன். மீண்டும் ஒரு இடத்தில் பார்கிங் செய்து, சற்று நேரம் நின்றோம். ஹரிக்கேன் மலை தொடர்கள் அவை. மிக பிரம்மாண்டமான முடிவுகளற்ற மலைகள். எண்ண எண்ண எண்ணிக்கை தவறிக்கொண்டே இருந்தவை. ஒரு கட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு எண்ணுவதை கைவிட்டேன்.


திரும்பும்போது எதிர்காற்றில், பனி துளிகள் சிறு சிறு மேகத் துண்டுகளாய், என்னை சூழ்ந்த இன்பமாய், என்னிடம் நோக்கி வந்தன. என்னை அடையாது கண்ணாடியில் பட்டு தெறித்து வழிந்தன. அதன் வெளியின் மறுபுறம் நான் நின்று அதை ஸ்பரிசித்தேன். உடைந்த சில துளிகள், மேல்நோக்கி நகர்ந்தன. நானும் நகர்ந்தேன்.

புதன், 12 மார்ச், 2025

அகமும் புறமும் - கமலதேவி

குறுந்தொகை என் வீட்டு நூலகத்தில் நெடுநாளாய் இருக்கிறது. என்னிடம் ஒரு பழக்கம், எதை எடுத்தாலும் அதை வரிசைப்படி வாசிக்க வேண்டும், ஒன்றையும் விடாமல் வாசிக்க வேண்டும் என்று எண்ணியே பெரும்பாலும் அதை எடுக்காமல் இருந்து விடுவேன். சிறுகதைகளிலும் இதே கோளாறுதான் எனக்கு. கமலா அக்காவின் இந்த நூல், என் பழக்கத்தை மாற்றிக்கொண்டு இதில் வரும் குறுந்தொகை உட்பட மற்ற தொகை நூல்களில் இருந்து அவர் தேர்ந்தெடுத்து தந்த சங்கப் பாடல்களை நான் தெரிந்து கொள்ள வாய்ப்பாய் அமைந்தது. 

நாங்கள் இருவரும் சந்தித்தபோது, கமலா அக்கா “நாம சந்திக்கணுன்றது நம்ம அப்பாக்கள் ஓட விருப்பம் போல பா” , என்றார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனை உளப்பூர்வமாய் உணர்ந்தேன், இப்புத்தகம் வாசித்தப்போது. 


கண்டி கதிர்காமத்து… என்ற பத்தியிலே அப்படியே என் அப்பாவின் குரல்தான் கேட்டது. பின்பு மகள் அப்பாவிடம் கொண்டுள்ள நெருக்கமாகட்டும், அப்பா, மகளை கூப்பிடும் வழக்கம் ஆகட்டும், இப்படி வழிநெடுக, அவர்-அவர் ஐயாவின் அருகிலேயே நான் என் அப்பாவின் கைப்பிடித்து நடந்து சென்றேன். 


அகமும் புறமுமாய் செங்காந்தள் மலரை உவமையாக்கியது பேரழகு.


என்னை பாதித்த ஒரு முக்கியமான வரி, ‘தந்தைக்குப்பின் யாரிடமும் நமக்கு பிடித்த தின்பண்டங்கள் கேட்பதில்லை’ என்பது. அது நூற்றுக்குநூறு உண்மையே. அந்த வரியில் நெஞ்சடைத்து நின்றேன்.இது போல் பல இடங்களில், தன் அகத்தை எழுத்து மூலம் புறவயமாக்கி, வாசகர் அகத்தின் அகமாய் அதை மாற்றுகிறார். அந்த வகையில் இந்நூல் முக்கியமான நூல். 


என்னை மேலும் இந்நூலுடன் நெருக்கமாக்கியது, அவர் தாய் வழி தாத்தனும், என் தந்தை வழி தாத்தனும் பிழைக்க சென்ற கண்டியோ, அவர் தன் தோழியின் காதலை கண்டு கொண்ட என் ஊரோ, இன்றும் அறிவு கொடை நல்கும் வெங்கட்ராமன் டாக்டரை நானும் அறிந்திருந்ததோ, எனக்கு இன்று நினைத்தாலும், உலகிலேயே நான் சந்தோசமாய் இருந்த இடமான சித்திரைப்பட்டியை அவர் வரியில் கண்டதோ என்று யோசித்து பார்க்கிறேன். நான் உணர்வது இந்த படைப்பில் உள்ள உண்மை தன்மை.  அவர் விரித்து வைத்த காட்சிகள். அவையே என்னை நெருக்கமாக்கின. ஒவ்வொருவருடனும் நான் அருகிருந்தேன். மேலும், நிவேதாவை நான் நேரில் பார்த்து பேசியிருப்பதால், அவரின் முக பாவனைகளும், குரலும் துல்லியமாய் விரிந்தன. 


தன் பாட்டியுடன் வயகாட்டில் அவர் கதை கேட்டது போலவே, சித்திரப்பட்டியில் என் அப்பாயியுடன் கயிற்று கட்டிலில் படுத்துக்

கொண்டு, நிலவை கண்டு, நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு அவரது சிலோன் வாழ்க்கையை கேட்டிருக்கிறேன்.


ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு உயிரை அடையாளமாக்கியதும், ஒவ்வொரு வார்த்தைக்கும் அதற்கான உணர்வின் உருவத்தை அப்படியே படம் பிடித்து காட்டியதும் அபாரம். தாபதம் என்று உச்சரிக்கும்போது நான் எவ்வாறு உணர்ந்தேன் என்று அவர் எழுதியிருக்கிறார்.


ரங்கநாயகியை தேடி, நாரயணசாமி ஶ்ரீரங்கம் தானே வந்து சேர வேண்டும் என்று சொல்லத் தோன்றியது. மேலும், அல்லி அரிசி சோறு கொடுத்ததும், எருக்க மாலை போட்டு கிடத்தியதும், மடலேறுதலையும் வாசிக்கையில் உள்ளே சிறு அதிர்வுகள். 


இதில் எனக்கு மனதிற்கு நெருக்கமான இன்னொரு விஷயம், நான் அண்மையில் எழுதிய வெண்பாவில் கையாண்ட ஒரு சித்திரம், ஒரு சங்க பாடலில் கண்டதுதான். எம் மூதாதையரின் சிந்தனை தொடர்ச்சியே நான்.

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

மரபிலக்கிய வகுப்பு (ஜனவரி 17,18,19) - அனுபவ வெண்பாக்கள்

எனது ஆசிரியரின் ‘முழுமையறிவு’ தளத்தில், கீழ்க்கண்ட எனது வெண்பாக்கள் வெளிவந்தன:


இணைப்பு :  https://unifiedwisdom.guru/200905



விரிமலைகள் வாயில்முன் மாமகளி தழ்நகைக்க

நேர்விழி வானர் குலம்வழி - நிற்க

வளையெறும்பர் சீரமைத்து மண்மகளை சூழ

நித்யவன தாள்பணிந் தேன்


நெய்குருவி செம்பருந்தோ டுச்சேதி சேர்த்திட

சேய்பருந்தோ விண்மீன்கள் கைக்கோர்த்து - ஆய்ந்திட

வெள்ளி முளைவில்கூ தல்உரைக் கம்மண்

மரபுழ வன்எழுந் தார்


பாரதித்தொ டங்கி இருதா சனுடனல்கி

பாரதத் தில்லுருகி கம்பர்முன் - நற்றணுகி

அவ்வை கவியுடன் மென்னடை வந்துவந்து

காலனையே பந்தடித் தோம்


காளமேகத் திற்மிதந்து ரெட்டையரு டன்னகைத்து

பிள்ளைத் தமிழோடசைந்து காற்சிலம்பாழ்- நல்மணியாம்

மேகலையை கோர்த்தெடுத்து  நட்குறள றிந்தோம்

இயலிசைக்க டல்நனைந் தோம்


நறுக்கலையின் கொம்பனாய்அ டுக்களையின் வீரனாய்

நற்சுவையாறில் ஆவலாய் ஆரணியக் காவலாய்

எம்பசிநீக் கும்மிருவர் பல்சுவைக்கோ அங்கொருவர்

அந்தியூர் தந்த மணி


முப்பதெட்டு நாழிகைகள் ளாய்பாகாய் தாய்தமிழ்

அப்பாயு னைத்தொட்டு நின்முன்னே ஒப்படைத்து

சுட்டிடர்க ளைத்து உணர்வுகளால் கட்டுண்டு

கட்டவிழ் காற்றாயா னேன்