எழுந்த நடுக்கம் இன்னும் அடங்கவில்லை. மனித அகத்தின் குரூரம் கொதித்து வழிய, இரக்கம் இருந்த இடம் காணாமல் போனது இங்கே.
அவளுக்குள் எழுந்த குரூரம், அவள் தாயை கொன்றழிக்க, அவள் ஆயிரம் முறை இறக்கிறாள். அவனுக்குள் இருந்த குரூரம் அவளை கொன்றழிக்க, அவள் நூறாயிரம் முறை இறக்கிறாள், இறக்கிறாள்,..இறக்கிறாள்.
அவள் பிறந்து, வளரும் வரை கூட அவன் விட்டு வைப்பது இல்லையே.. ஆதலால் இறக்கிறாள்..இறக்கிறாள்.
குரூரங்களின் மொத்த உருவமாய் அவன் யுகந்தோறும் நிற்கிறான். அவன் அக்குரூரங்கள் வழி சொரியும் குறுகுறுப்பின் சுழலில் சிக்கியவளாய் யுகம்யுகமாய் அவளும் தோன்றி கிடக்கிறாள். சாட்சியாகிறாள்! சாட்சி ஆகிறாளா?
உன் அத்தனை வேதனைகளையும் சுமந்து கொண்டிருந்தவள் உன்னை அழைத்தாள். உன்னைப்போல் பல பன்றிகள் குரூரத்தில் புரண்டெழுந்த அவள் மனம் உனக்காய் அன்னை என்று கனிந்திருந்தது. உன்னைப்போல் பல குரூரங்களின் நிழல்களை சுமந்து சென்றிருந்தவளின், வான் தூமை பக்கத்தை நீ காணவில்லை. அது நன்பகலில் நட்சத்திரங்களாய் மின்னின. உன் உஷ்ணத்தின் வெப்பம் அதை மறைத்துவிட்டது. உன் உஷ்ணம் தாங்க தாக்க, அது கறுத்து நிழலாக தொடங்கியது.
நட்சத்திரமாகவே அவள் நகர்ந்து சென்றிருக்கலாம். ஆனால் யுகயுகமாய் அது அப்படியில்லையே.
அன்றொரு நாள் மழைப்பொழுதில், தன்னில் நெகிழ்ந்திருந்த வேளையில், அதே பேருந்து நிறுத்தத்தில் கங்கை கலங்கம்பெற்றாள்.
பின்பு, அவளே லலிதையாக பிறப்பெடுத்தபோது, உன் அதே குரூரங்கள் ‘அரங்கேற்ற’ப்பட்டு அவள் பேதலித்தாள்.
உன் குரூரங்களை தாங்கும் அன்னையாய் அவள் பிறப்பெடுத்து கொண்டேயிருக்கிறாளே! அது அவ்வாறுதானா? அன்னைதானா? இல்லை அன்னையென்று வேடமிட்டு நிற்கும் குறுகுறுப்புகளின் நிழலுருவா?
ஆனால் என்னால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும். தன் அகம் கொந்தளிக்க பேரன்னை காத்து நிற்கிறாள். உன் ஒவ்வொரு குரூரமும் வழிந்து நுரைத்து கலந்து காணாமல் போகக்கூடிய அவளது ஆழம் அமைதியாய் குமுறி கொண்டேயிருக்கிறது. யுகம் யுகமாய் நீ கொள்ளும் கீழ்மைகளை செரித்து உன்னை தூய்மையாக்குபவள். தன்னிலை பெயராதவள்.
செல்! அவளிடம் செல்! உன் குரூரங்கள் அழியப்பெற்று அழியா வரம் பெற அவள் கருவிற்குள் செல். அங்கு தெரியும் உன் அகத்தின் அடி ஆழத்தில் அமிழ்ந்து அழிந்து கொண்டிருக்கும் உன் ஒளியின் கீற்று. அதன் நுனி பற்றி நீ எழுந்து வந்து மீண்டும் ஒரு நர்த்தனம் புரிவாயாக! இம்முறை அது உனக்கு மட்டும் என்றாகாத ஆனந்தம். அனர்த்தமில்லா ஆனந்தம்! இந்த அண்டத்திற்கான ஆனந்தம். ஆனந்த நர்த்தனம்! அவ்வாறே ஆகுக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.