“Kindle scribe - is just a digital notebook with a stylus in addition to being an eReader” - குழுவில் வந்திருந்த குறுஞ்செய்தியை பிரேம் படித்துக் காட்டினான். நான் என் ஹீரோ பேனாவிற்கு மையூற்றிக் கொண்டிருந்தேன்.
ஹீரோ பேனாவின் டேங்கை முழுவதுமாய் நிரப்புவுது என்பது ஒரு கலை. எல்லோராலும், எல்லாத் தருணத்திலிலும் ஜெயித்திட முடியாது. பேனாவின் ஃபில்லர் டீயுபை லேசாகப் பிடித்து அதற்கு மூச்சு முட்டாத வண்ணம் மெல்ல மெல்ல இன்ஹேல், மற்றும் எக்ஸ்ஹேல் செய்ய வைக்க வேண்டும். இரண்டு வழியிலும் காற்று பரிமாற்றம் ஆவது போல், பாட்டில் மையும், பேனாவிற்குள்ளே போகவும் செய்யும், மீண்டும் பாட்டிலிற்குள்ளேயே போகவும் செய்யும். எந்த டெக்னிக்கை பயன்படுத்த வேண்டும் என்ற பொதுவான வழிமுறையோ, தர்க்கமோ இருந்ததில்லை. (ஜெ சொல்வது போல்) அது ஒரு ஆதி தரிசனம் போல. ஒரு மனத்திறப்பின் கணத்தில் அடையப்பெற்ற அகப்பார்வை வழி நீ அடையப்பெறுவது அது.
இம்முறை பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இன்ஹேல், எக்ஸ்ஹேல் டெக்னிக்கை பயன்படுத்தினேன். பள்ளிப் பருவத்தில், பல்லை கடித்துக்கொண்டு ஒரேடியாக பேனாவின் குரல்வளையை நெறுக்கிய கொலைக்காரிதான் நான். இம்முறை என்னவோ அதை கொஞ்சி தங்கமே..செல்லமே மெல்ல மெல்ல உறுஞ்சிக்கோ என்று அதனுடன் பேசுமளவிற்கு கனிந்திருக்கிறேன் என்று என் அம்மா கேட்டால் சந்தோஷப்படுவாள், சந்தேகமும்படுவாள் என் ‘நிலையை’ யோசித்து.
அது என்னவோ, விவரம் தெரிந்த நாள் முதல், பேனா, பென்சில், புது நோட்டு புத்தகம் என்றால் உற்சாக பிரவாகம்தான். இன்றுவரை அது தீரவில்லை. தத்துவ வகுப்பிற்கான ஆயத்தம். கூடவே பிரேமிடம், “நான் நாளை சென்று A4 size-ல், நோட்டு புத்தகம் வாங்கப் போகிறேன் ; உனக்கு வேண்டுமா?” என்றேன். அவன் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு, “ இங்க ஒருத்திக்கு சன்னதம் வந்துருச்சு; நான் போய் படுக்கிறேன்” என்று ஜகா வாங்கினவனை, அலேக்காக காலரை பற்றி பின்னிழுத்து, பேனாவிற்கு மை நிரப்பு என்று சொல்லி, நான் அடிஷ்ணல் பேனாக்களை ஆயத்தம் செய்து கொண்டிருந்தேன். அவன் இன்னும் கனியவில்லை. கிட்டத்தட்ட ஒரு கொலைக்காரனாக உருவெடுக்கப் போனவனை மீட்டு ரட்சித்தேன். கேட்டதற்கு, “நான் ஹீரோ பேனாலாம் யூஸ் பண்ணினது இல்லப்பா, அஞ்சு ரூவா பேனா தான்” என்று சொன்னவனுக்காக மனம் இறங்கி வருவதற்குள், “அதுல எழுதியே First rank தானே” என்று கூடுதல் வசனம் பேசியதால், ஒரு முறைப்பை மட்டும் கொடுத்துவிட்டு, என் ஹீரோவை பற்றி காத்துவிட்டேன். சின்ன பையன், போகட்டும் என்று விட்டுவிட்டேன். இதோ இந்நேரம் அவன் “இந்திரலோகத்தில் ப.பிரேம் ஆனந்த்” என்று பரமானந்தமாய் வலம் வந்து கொண்டிருப்பான்.
இங்க் பேனா - என் புனித சிலுவை மேல்நிலைப்பள்ளியில், இங்க் பேனாவில் தான் எழுத வேண்டும். அந்த கட்டாயத்தின் பேரில் ஆரம்பித்த பந்தம். இருந்தும், ஆயிரங்காலத்து பயிர் போல இன்னும் மனதில் கூடியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்ததும் ஹீரோ கிடைத்துவிடவில்லை. முதலில் கேம்லின் இங்க் பேனாக்கள். ஶ்ரீரங்கம் லக்ஷ்மி பேப்பர் மார்ட்டில், சுமதி டிரேடர்ஸில், அறவான் மளிகை கடையில், திருச்சி எம்.ப.எம்மில், ஸோஃபிஸ் கார்னரில் என்று அவற்றின் பிறப்பிடங்கள் பல. அனைத்திற்கும் நானே புகலிடம். கேம்லின் பேனாக்கள் பலவிதங்கள். அதிலும், பேனாவின் இடைப்பகுதியில் கண்ணாடி வேலைப்பாடுடன் இருப்பது ஒரு தனிக் கவர்ச்சி. எவ்வளவு மை இருக்கு என்று தெரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும். மார்க்கெட்டில் பிற வகை பிராண்ட் பேனாக்களும் உண்டு. சில பேனாக்கள், இடை முதல் அடி வரை முழுவதும் கண்ணாடியால் இருக்கப்பெற்றிருக்கும். அதனை நீல மை நிரம்ப பார்ப்பதே ஒரு தனிக் கிளர்ச்சி. புது பெண்ணின் கால்களில் தெரியும் பச்சை நரம்பை சற்றும் சிந்தித்திடாத வேளையில் பார்த்திட நேரிடும் மாப்பிள்ளையின் வயிற்றுக்குள் மின்னிடும் கிளர்ச்சி. அது எனக்கு மிகவும் பிடித்த வகை. அப்படி ஒரு பேனாவை, ஏழாம் வகுப்பில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பிரதீபா வைத்திருந்தாள். அந்த பேனா மீது எனக்கு எப்போதும் ஒரு கண். பேனா உள்ளேயும், வெளியேயும் வளமையுடனே இருக்கும். தினசரி, அவளிடம் பேனா மாற்றிக் கொள்வேன். அதுவும், அந்த பேனா நிப்பு, மாவு போல எழுதும். பல நாட்கள் அவள் அந்த பேனாவை வைத்திருந்தாள். சில சமயம், பேனா நிப்பை திருப்பி பிடித்தவாறு எழுதுவாள். அப்போதும் அது மாவு போல் எழுதும். என் கேம்லின் பேனா எப்போதும் பேப்பரை கிழிப்பதுபோலவே இருக்கும். “அண்ணா இது கிழிக்கிற மாறி இருக்கு, வேற காட்டுங்க, வேற காட்டுங்க என்று கடையை அலசி எடுத்துவிடுவேன். அது எழுத எழுத சரியா வந்துரும் பாப்பா, இத எடுத்துக்கோ” என்பார். நானும் அதன் ஏஸ்தட்டிக் ஆஸ்பெக்டில் சமாதானம் ஆகி வாங்கி வந்துவிடுவேன். இரண்டு வாரத்தில், “அப்பா வேற பேனா வேணும்” என்பேன். உடனே அப்பா, மாமா கையில் பணத்தை கொடுத்து, “பிள்ளைய கூட்டிப் போயிட்டு பிடிச்சத வாங்கிக் கொடுடா” என்பார். மாமாவும் நானும் ஶ்ரீரங்கத்தையே ஒரு வலம் வருவோம். இப்போது யோசித்து பார்க்கையில் புரிகிறது, ஒரு பேனாவிற்கே நான் அந்த சுற்று சுற்றியிருக்கிறேன். அந்த பழக்கம்தான் வளர்ந்த பிறகும், கல்யாண புடவைக்கு பன்னிரண்டு கடைகள், மூன்று மாவட்டங்கள் சுற்ற வைத்திருக்கிறது. இருக்கட்டும் இருக்கட்டும், ஏஸ்தட்டிக் ஆஸ்பெக்ட்ன்னு ஒன்னு இருக்குல்ல?!
இருபது வருடம் கழித்து பிரதீபாவிடம் பேசியபோது நான் கேட்ட முதல் வார்த்தை “ ஏ அந்த பேனாவ வச்சிருக்கியா” என்று. அவள் ஆச்சரியத்துடன் அதற்கு, “ ஹே நீ இன்னும் அத ஞாபகம் வச்சிருக்கியா” என்றாள்.
என் தம்பியும், நானும் கல்லூரி நாட்களில், பள்ளி நாட்களில் பயன்படுத்திய பேனாக்கள், நடராஜ் ஜாமிட்ரி பாக்ஸில் இருப்பதை கண்டு, பத்திரமாக மெமரி பேக்கில் போட்டு வைத்து இன்டக்ஸ் குறிப்பெடுத்து வந்தேன், சென்றமுறை ஊருக்கு சென்று வந்தபோது. எனது பஞ்சுமிட்டாய் கலர் பார்க்கர் பேனாவும் அதில் அடக்கம் . அதை கண்டதும், வாங்கின அன்று மனம் வெம்பியது போலவே அன்றும் வெம்பியது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக்கு நான் பார்க்கர் பேனா கேட்டேன். அதற்கு குடும்பமாக செல்லா ஸ்டோர் திருச்சிக்கு , அரையாண்டு பரீட்சைக்கு முன்னதாக சென்றிருந்தோம். பேனாவை பழக்க வேண்டுமே, ஆதலால் அரையாண்டு பரீட்சையே அதில் எழுதுவதாய் பிளான். போனால், கடைக்கார கடங்காரன், “ரெண்டு கலர் தான் சார். பிளாக் ஒன்னு, இந்த பிங்க் ஒன்னு” என்று குண்டைத் தூக்கி போட, அன்றைய தேதியில் அங்கு மட்டும்தான் பார்க்கர் கிடைப்பதாய், பன்னாட்டு செய்தி எனக்கு எட்டியிருக்க, நான் கரணம் அடிக்காத குறையாய், என் அப்பாவிடம் கருப்பு வாங்கித்தர கேட்கிறேன். மனுசன் முடியவே முடியாது என்றுவிட்டார். வேறு வழியின்றி அந்த பஞ்சுமிட்டாய் கலரை வாங்கி வந்து, கிளாஸ் சிரிப்பாச் சிரிச்சதெல்லாம் தனிக் கதை. ரஞ்சனா அழகாய் கருப்பில் வாங்கியிருந்தாள். ஹீரோ பேனாவிலும் அதே கதைதான். பிளாக் வாங்க விடமாட்டார். அப்போது நான்கு நிறங்களில் வந்தன. பச்சை, பிரவுன், கருப்பு மற்றும் மெரூன். இரண்டு வருடம் முன்பு அதே லக்ஷ்மி மார்ட் சென்று அதே அண்ணனிடம், ஹீரோ பேனா நான் கேட்க, அவர் இப்போதெல்லாம் அவ்வளவாக வரதில்லைம்மா, ஒன்னு இருக்கு என்று எடுத்துத் தந்தார். பச்சை நிறம். அதே போல் துண்டு பேப்பரில் இங்க் தொட்டு எழுதிப்பார்த்தேன். “இங்கதான் ணா பேனா வாங்குவேன்” என்றேன். “முக ஜாடை தெரிதும்மா” என்று புன்னகைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.