செவ்வாய், 18 மார்ச், 2025

தனிமையின் பெருங்கூட்டம்


மலைகளை போல் தனிமையானது உலகில் எதுவும் இல்லை என்று ஜெ கூறுவதுண்டு. அது உண்மைதான் என்று அந்த காட்சியின் உணர்வுகளை மீட்டெடுக்கையில் தோன்றியிருக்கிறது.என் தனிமையில் அங்கு சென்று நிற்கையில், ஒரு சமயம் அது என்னை அரவணைத்து கொள்கிறதாய் உணர்கிறேன். ஒரு சமயம் அதன்மேல் கை போட்டுக்கொண்டு படுத்திருப்பதாய் எண்ணிக்கொள்வேன். ஒரு சமயம் அப்போதுதான் என் தனிமையின் கீறல்களை உணர்வேன். முட்டிக் கொல்லும் அழுகையை முழுங்கிய தருணங்களும் உண்டு. விடுதலையாய் வழிய விட்ட தருணங்களும் உண்டு.


தொன்மையான மலையின் மீது எழுப்பப்பட்ட கோட்டையே எனது நகரம் என்றாலும், அதனை பார்க்கையில், மலை என்பதன் பிரம்மாண்டம் என்னை தீண்டியிருக்கவில்லை. இன்றும், நகரத்தின் நடுவில் அழகாய் வீற்றிருக்கும் ஓர் அங்கமாய் மட்டுமே அதனுடனான என் உணர்விருக்கிறது.


முதன்முதலில் என் வாழ்வில் நான் மலைகள் என்று பார்த்து பிரமித்தது எங்கு என்று எண்ணிப்பார்க்கிறேன். சிறு வயதில் என் தந்தை ஊரான துறையூருக்கு செல்லும் வழியில் உள்ளது நான் கண்ட முதல் மலைகள். மலைகள் அல்ல குன்றுகள். அந்த வயதில் அவை எனக்கு மலைகள். பேருந்தில் செல்லும் வழியில் இருக்கும் மலைகளில், சில இடங்களில் வெள்ளை சுண்ணாம்பில் பிரம்மாண்டமாய் சிலுவை எழும்பி காட்சியளிக்கும். சில இடங்களில் கல்லூரியின் பெயர் மற்றும் படிக்கும் ஆண்டு என சேர்த்து ‘ஜெயராம் காலேஜ் III year B.E’ என்பது போல் குறிப்புகள் கண்ட நினைவுண்டு. நம்ம ஊருக்குள்ளேயே மலைகள் உள்ளதா என்ற ஆச்சரியம் அப்போது. பச்சை மலைத்தொடர் அடியில் உள்ள ஊர்,துறையூர். திருச்சியிலிருந்து 47 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் அவ்வூரிலே பச்சை மலைத்தொடரின் அங்கமான பெருமாள் மலை உண்டு. மலை மேல் வண்டியில் சென்றபோது அடைந்த பரவசத்தையும், அந்த சிறுமியின் முகத்தையும் இப்போது நினைவு கூர்கிறேன். பின்பு, வின்ச்சில் பழனி. அடிக்கடி சென்றதுண்டு. குதூகலமும், குறுகுறுப்பும் நிறைந்த அனுபவங்களாய் எஞ்சியிருக்கின்றன.


முதன்முதலில் தொடர் மலைகளை நான் கண்ட நாள் ஜூன் 8, 1998.மேட்டடர் வண்டியில் அம்மா, அப்பா, பெரியப்பாக்கள், மாமாக்கள், பெரியப்பா மகள்கள் என கூட்டமாய் நாங்கள் சென்ற ஒரு திருமண நிச்சயதார்த்தம். கோயம்புத்தூர் வழியாய் பாலக்காடு சென்றோம். அப்போது தூரமாய் அமைதியாய் நின்றுகொண்டு என்னை பார்த்து கொண்டிருந்தன மலைகள். பனி மூட்டங்கள் வளர்ந்தும், களைந்தும் அலைந்து கொண்டிருந்தன. கையில் சித்தப்பாவின் யாஷிகா கேமராவில் முதன்முதலாய் படங்கள் எடுத்து கொண்டிருந்தேன். என் பெரியப்பா மகள் கேட்டபோது கொடுக்காது, என் கையை இழுத்து கொண்டதை நினைக்கையில் இப்போது வலிக்கிறது. அவள் அந்த ஏக்கத்தை மறந்து ‘அதோ அதை எடு’ என்று உற்சாகமாய் மலையை சுட்டிக்காட்டியது தீயாய் சுடுகிறது. இக்கணம் அவளிடம், நான் அந்த கேமராவையும், ஜன்னல் சீட்டையும் விட்டுத் தருகிறேன். 


அடுத்த பயணம் தொட்டபேட்டா. மலை உச்சியில் அப்பா, அம்மா, மாமா, தம்பியுடன் நின்றதும், என் அப்பா அங்கிருந்து அவர் அம்மாவிற்கு போன் செய்து தன் இன்பத்தை பகிர்ந்து கொண்ட காட்சியும் மாறாமல் என்னுள் நிலைத்திருக்கிறது.


2010-ல், புவியின் குடும்பத்தோடு வேங்கட மலை(திருப்பதி) பயணம். ஏழுமலைகளுள் ஒன்றான அம்மலை பயணமும், அனுபவமும் முற்றிலும் எனக்கு புதிது. என் குடும்பத்தை விட்டு தனியாக வேறொரு குடும்பத்தோடு நான் செய்த முதற்பயணம். அந்த பயணம் எனக்கு மகிழ்வான பயணமே என்றாலும் கூட, ஏதோ ஒரு நொடியில் என் குடும்பத்தை அவர்கள் முகத்தில் தேடியதன் தீற்றல் என் கண்ணில் தென்படுகிறது. என் குடும்பத்தில் கலகலப்பாய் ஆடிப்பாடி குதூகலிக்கும் வாய்ப்பு கிடையாது. அப்பா கண்டிப்பானவர். பழைய பாடல்களின் அறிமுகமும்,ரசனையும் அவரிடமிருந்தே வந்தன என்றாலும், பாடல்களின் உணர்வுகளை வெளிக்கொட்டி குதூகலிக்கும் இடமாய் என் குடும்பம் இருக்கவில்லை. அவ்விடத்தை நிரப்பிய பெருமை அவளுக்கும், அவள் குடும்பத்திற்குமே. அவள் பெரியம்மா பசங்களோடும், உடன்பிறந்தவர்களோடும் நான் என்னையும் இணைத்து கொண்டு மகிழ்ந்திருந்த தருணங்கள். முதன்முதலில் இசைஞானியின் ‘ஏகாந்த வேளை..இன்பத்தின் வாசல்’ பாடல் கேட்ட பயணமது. திரும்பி வரும் வழியில், தொடர் (ஏழு) மலைகளை பார்த்தபோது, அரங்கநாதர் சயனம் கொண்டிருப்பதாய் தோன்றியது. 


அதை விஞ்சும் ஓர் அழகு ஒரு நாள் இரவு அந்த அழகிய முழுநிலவொளியில். எப்போதையும் விட, அந்த வானில் அன்று நிலாப்பொலிவு, பொலிவென்பதை கடந்து வழிந்து கொண்டிருக்க கண்டேன். நான் அருகில் அமர்ந்திருக்க, பிரேம் அக்கருக்கிருட்டில் எங்களுக்கு இரவு உணவிற்காக வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறான். என்னிடம் எதுவோ சொல்லிக்கொண்டே வருகிறான், நான் ‘ம்ம்’ கொட்டி கொண்டே, நிலவை வெறித்து வந்து கொண்டிருக்கிறேன்.  

அதீத ஒளியின் பிரவாகம் என் பார்வையின் தொடு வளைவை தாண்டியிருந்தபோதும், உடல் வளைத்து, குனிந்து நிமிர்ந்து அதனை நோக்கி கொண்டிருந்தேன். மனம் கிளர்ச்சியுற்றிருந்தது. ஒரு இடத்தை கடக்கும்போது, என் கண்கள் இமைக்கவில்லை. ஆம் உண்மையிலும் இமைக்கவில்லை. 


சந்திரனின் வரம்பு மீறிய பொலிவின் ரகசியம், புலப்பட ஆரம்பித்தது. அரனின் ஒளி ஒழுகலில், அவளை கண்டேன்.அவன் விரகத்தில், அவள் முலைகள் எழுந்தமைய, தன் இடக்கையை தலை மேல் அமர்த்தி, இடக்காலை மட்டும் சற்று ஊனி,சற்றே ஒருக்களித்து, பனிவுடல் திறந்திருக்க, கொதித்திருக்கிறாள் அந்த மலைமகள்.ஆனந்த களியாட்டத்தின் தொடக்கப்புள்ளி. புடவியின் பெருவிளையாட்டு. தீரா பெருங்கனவு. காணுந்தோறும் பெருகி வழியும் கனவு. ஆடுந்தோறும் முடிவில்லா விளையாட்டு. அண்டத்தின் பெருங்கருணை, அதனை நான் காண பெற்றது என்று பிறகு சொற்வடிவம் கொடுத்து கொண்டேன். 


ரெயினியர் மலைக்கு சியாட்டலில் இருந்து காரில் சென்றிருந்தோம். அரை மணி நேர பயணத்திலேயே, மலைகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. ஒரு புறம் காஸ்கேட் பனிமலைத்தொடர்கள், மறுபுறம் ஒற்றை பனிமலையான ரெயினியர் மலை, அழகான ஓவியம்போல். தொலைவில் இருபுறமும் கிளர்ச்சியூட்டக்கூடிய பனிமலைகளின் அணிவகுப்பு, அருகில் வாஷிங்டன் ஏரியின் ஒளிப்பரப்பு, அன்னையின் கர்ப்பத்திலிருந்து வெளியேறும் மகவுகளாய், நாங்கள் இருவரும் மிதவை பாலத்தில். 


பெட்ரமாக்ஸ் விளக்கின் மேன்டிலாய் தெரிந்த அந்த ஓவியம், அருகே செல்ல செல்ல, விரிந்தெழுந்து நிமிர்ந்த ஒற்றை பிரம்மாண்டம். அதன் நீள அகலத்தில் ஓடியோடி பார்த்தும் அது தீரவில்லை. மகவுகளாய் அன்னையின் இடுப்பை, சுற்றி சுற்றி தீராத வேட்கையுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரம், பசித்தது. அப்போதுதான் அந்த ஆனந்த களியாட்டின் விருந்து.


அடுத்த நாள் காலை அன்னையின் மேலேறி உலவினோம். ஒருவாறான உச்சியில் நின்று சுற்றிலும் பார்க்கையில் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை பனிமலைகள் மட்டுமே. கோமல் கண்ட கைலாயம் போல். அப்போது மனதில் ஒரு அமைதி, ஒரு விடுதலை.


அங்கேயே சரிந்து உட்கார்ந்து சுற்றிலும் பார்த்துக்கொண்டேயிருந்தேன். இப்போதும் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். காண காண என் கண்முன் தீராது வளர்ந்து வருவது. அப்படியே படுத்துக்கொண்டேன். உள்ளே ஓராயிரம் வருடங்களின் அனல் தகித்து கொண்டிருந்த போதிலும், எனக்கு அவள் குளிர்ந்திருந்தாள். இருந்தாலும் அவள் தகிப்பை நான் உணராமல் இல்லை. அதை உணர்ந்த தருணம் என்னுள் ஒரு விதிர்ப்பு எடுத்தது.  


அடுத்த நாள் மாலை, ஒலிம்பிக் தேசிய பூங்கா. அங்கு சென்று சேரும்போதே நேரமாகிவிட்டது. மேலும், பனி புயல் இருக்கப்போவதாக கூறி, நாங்கள் செல்ல வேண்டியிருந்த மலை வழியை அடைக்கப்போவதாய் கூறினார்கள், பார்வையாளர்கள் நிலையத்தில் (Visitor Centre). முக்கால் மணி நேரமிருந்தது என்று நினைக்கிறேன். பிரேம் , “வா போகலாம், போய் பார்ப்போம்” என்றான். எனக்கும் அது எப்படித்தான் இருக்கும், போய்தான் பார்ப்போமே என்ற குறுகுறுப்பு. அழகான, குறுகலான வளைவுகள் கொண்ட மலை பாதை. வளைவுகள் மிகவும் ஆழமாக, அபாயகரமாக, அதுவும் இருவழி சாலைகளாய் மட்டுமே இருந்தது. ஒரு புறம் சிறிது தள்ளி வண்டியை ஒடித்தாலும், மலையின் கீழே இன்னோர் உலகத்துக்குள் சென்றடைவது உறுதி. அதுவே மறு புறம் திரும்பி வருகையில், மலை பாறைகள் உருண்டு வழியில் விழக்கூடிய அளவிற்கு பலத்த காற்று. ஒருவாறு அந்த காற்றில் நீந்தி கார் பார்கிங் சென்று வண்டியை நிறுத்தினான். வண்டியில் இருந்து முதல் காலடி வைத்த கணம் ஆசிர்வதிக்கப்பட்டதாய், அன்றைய பனி பொழிவு. கீழே பள்ளத்தாக்கு முழுதும் பனியால் நிரப்பப்பட்டதாய் இருந்தது. நன்கு குளிருங்கூட. 


சற்று நேரத்தில், காவலர் வந்து அனைவரையும் மலை இறங்க சொல்லிவிட்டார். திரும்பு வழியில் நான் சிறிது தூரம் வண்டியை ஓட்டிக்கொண்டு, பிரேமை அந்த தருணத்தை அனுபவிக்க செய்தேன். மீண்டும் ஒரு இடத்தில் பார்கிங் செய்து, சற்று நேரம் நின்றோம். ஹரிக்கேன் மலை தொடர்கள் அவை. மிக பிரம்மாண்டமான முடிவுகளற்ற மலைகள். எண்ண எண்ண எண்ணிக்கை தவறிக்கொண்டே இருந்தவை. ஒரு கட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு எண்ணுவதை கைவிட்டேன்.


திரும்பும்போது எதிர்காற்றில், பனி துளிகள் சிறு சிறு மேகத் துண்டுகளாய், என்னை சூழ்ந்த இன்பமாய், என்னிடம் நோக்கி வந்தன. என்னை அடையாது கண்ணாடியில் பட்டு தெறித்து வழிந்தன. அதன் வெளியின் மறுபுறம் நான் நின்று அதை ஸ்பரிசித்தேன். உடைந்த சில துளிகள், மேல்நோக்கி நகர்ந்தன. நானும் நகர்ந்தேன்.

புதன், 12 மார்ச், 2025

அகமும் புறமும் - கமலதேவி

குறுந்தொகை என் வீட்டு நூலகத்தில் நெடுநாளாய் இருக்கிறது. என்னிடம் ஒரு பழக்கம், எதை எடுத்தாலும் அதை வரிசைப்படி வாசிக்க வேண்டும், ஒன்றையும் விடாமல் வாசிக்க வேண்டும் என்று எண்ணியே பெரும்பாலும் அதை எடுக்காமல் இருந்து விடுவேன். சிறுகதைகளிலும் இதே கோளாறுதான் எனக்கு. கமலா அக்காவின் இந்த நூல், என் பழக்கத்தை மாற்றிக்கொண்டு இதில் வரும் குறுந்தொகை உட்பட மற்ற தொகை நூல்களில் இருந்து அவர் தேர்ந்தெடுத்து தந்த சங்கப் பாடல்களை நான் தெரிந்து கொள்ள வாய்ப்பாய் அமைந்தது. 

நாங்கள் இருவரும் சந்தித்தபோது, கமலா அக்கா “நாம சந்திக்கணுன்றது நம்ம அப்பாக்கள் ஓட விருப்பம் போல பா” , என்றார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனை உளப்பூர்வமாய் உணர்ந்தேன், இப்புத்தகம் வாசித்தப்போது. 


கண்டி கதிர்காமத்து… என்ற பத்தியிலே அப்படியே என் அப்பாவின் குரல்தான் கேட்டது. பின்பு மகள் அப்பாவிடம் கொண்டுள்ள நெருக்கமாகட்டும், அப்பா, மகளை கூப்பிடும் வழக்கம் ஆகட்டும், இப்படி வழிநெடுக, அவர்-அவர் ஐயாவின் அருகிலேயே நான் என் அப்பாவின் கைப்பிடித்து நடந்து சென்றேன். 


அகமும் புறமுமாய் செங்காந்தள் மலரை உவமையாக்கியது பேரழகு.


என்னை பாதித்த ஒரு முக்கியமான வரி, ‘தந்தைக்குப்பின் யாரிடமும் நமக்கு பிடித்த தின்பண்டங்கள் கேட்பதில்லை’ என்பது. அது நூற்றுக்குநூறு உண்மையே. அந்த வரியில் நெஞ்சடைத்து நின்றேன்.இது போல் பல இடங்களில், தன் அகத்தை எழுத்து மூலம் புறவயமாக்கி, வாசகர் அகத்தின் அகமாய் அதை மாற்றுகிறார். அந்த வகையில் இந்நூல் முக்கியமான நூல். 


என்னை மேலும் இந்நூலுடன் நெருக்கமாக்கியது, அவர் தாய் வழி தாத்தனும், என் தந்தை வழி தாத்தனும் பிழைக்க சென்ற கண்டியோ, அவர் தன் தோழியின் காதலை கண்டு கொண்ட என் ஊரோ, இன்றும் அறிவு கொடை நல்கும் வெங்கட்ராமன் டாக்டரை நானும் அறிந்திருந்ததோ, எனக்கு இன்று நினைத்தாலும், உலகிலேயே நான் சந்தோசமாய் இருந்த இடமான சித்திரைப்பட்டியை அவர் வரியில் கண்டதோ என்று யோசித்து பார்க்கிறேன். நான் உணர்வது இந்த படைப்பில் உள்ள உண்மை தன்மை.  அவர் விரித்து வைத்த காட்சிகள். அவையே என்னை நெருக்கமாக்கின. ஒவ்வொருவருடனும் நான் அருகிருந்தேன். மேலும், நிவேதாவை நான் நேரில் பார்த்து பேசியிருப்பதால், அவரின் முக பாவனைகளும், குரலும் துல்லியமாய் விரிந்தன. 


தன் பாட்டியுடன் வயகாட்டில் அவர் கதை கேட்டது போலவே, சித்திரப்பட்டியில் என் அப்பாயியுடன் கயிற்று கட்டிலில் படுத்துக்

கொண்டு, நிலவை கண்டு, நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு அவரது சிலோன் வாழ்க்கையை கேட்டிருக்கிறேன்.


ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு உயிரை அடையாளமாக்கியதும், ஒவ்வொரு வார்த்தைக்கும் அதற்கான உணர்வின் உருவத்தை அப்படியே படம் பிடித்து காட்டியதும் அபாரம். தாபதம் என்று உச்சரிக்கும்போது நான் எவ்வாறு உணர்ந்தேன் என்று அவர் எழுதியிருக்கிறார்.


ரங்கநாயகியை தேடி, நாரயணசாமி ஶ்ரீரங்கம் தானே வந்து சேர வேண்டும் என்று சொல்லத் தோன்றியது. மேலும், அல்லி அரிசி சோறு கொடுத்ததும், எருக்க மாலை போட்டு கிடத்தியதும், மடலேறுதலையும் வாசிக்கையில் உள்ளே சிறு அதிர்வுகள். 


இதில் எனக்கு மனதிற்கு நெருக்கமான இன்னொரு விஷயம், நான் அண்மையில் எழுதிய வெண்பாவில் கையாண்ட ஒரு சித்திரம், ஒரு சங்க பாடலில் கண்டதுதான். எம் மூதாதையரின் சிந்தனை தொடர்ச்சியே நான்.

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

மரபிலக்கிய வகுப்பு (ஜனவரி 17,18,19) - அனுபவ வெண்பாக்கள்

எனது ஆசிரியரின் ‘முழுமையறிவு’ தளத்தில், கீழ்க்கண்ட எனது வெண்பாக்கள் வெளிவந்தன:


இணைப்பு :  https://unifiedwisdom.guru/200905



விரிமலைகள் வாயில்முன் மாமகளி தழ்நகைக்க

நேர்விழி வானர் குலம்வழி - நிற்க

வளையெறும்பர் சீரமைத்து மண்மகளை சூழ

நித்யவன தாள்பணிந் தேன்


நெய்குருவி செம்பருந்தோ டுச்சேதி சேர்த்திட

சேய்பருந்தோ விண்மீன்கள் கைக்கோர்த்து - ஆய்ந்திட

வெள்ளி முளைவில்கூ தல்உரைக் கம்மண்

மரபுழ வன்எழுந் தார்


பாரதித்தொ டங்கி இருதா சனுடனல்கி

பாரதத் தில்லுருகி கம்பர்முன் - நற்றணுகி

அவ்வை கவியுடன் மென்னடை வந்துவந்து

காலனையே பந்தடித் தோம்


காளமேகத் திற்மிதந்து ரெட்டையரு டன்னகைத்து

பிள்ளைத் தமிழோடசைந்து காற்சிலம்பாழ்- நல்மணியாம்

மேகலையை கோர்த்தெடுத்து  நட்குறள றிந்தோம்

இயலிசைக்க டல்நனைந் தோம்


நறுக்கலையின் கொம்பனாய்அ டுக்களையின் வீரனாய்

நற்சுவையாறில் ஆவலாய் ஆரணியக் காவலாய்

எம்பசிநீக் கும்மிருவர் பல்சுவைக்கோ அங்கொருவர்

அந்தியூர் தந்த மணி


முப்பதெட்டு நாழிகைகள் ளாய்பாகாய் தாய்தமிழ்

அப்பாயு னைத்தொட்டு நின்முன்னே ஒப்படைத்து

சுட்டிடர்க ளைத்து உணர்வுகளால் கட்டுண்டு

கட்டவிழ் காற்றாயா னேன்



வெள்ளி, 10 ஜனவரி, 2025

தூவானம் [ ஆசிர்வாதம் ஸ்டூடியோஸ் சிறுகதை - அஜிதன் ]


ஆசிர்வாதம் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரையும், படங்களையும் கண்டவுடனே யாரைப்பற்றி என்ற எண்ணம் உருவாகிவிட்டது. அவரை பற்றிதான் கதை. அதை எவ்வாறு சொல்லியிருக்கிறார் என்ற உற்சாகத்தில்தான் வாசிப்பை ஆரம்பித்தேன்.

அந்த சிறுவனின் வாழ்க்கையை கரிசல் மண்ணில் விரித்தெடுத்ததும், அவன் பின்னே சென்று கொண்டிருந்தேன். அவன்தானோ ‘அவர்’ என்ற எண்ணம் முதலில். பின் அவரை பற்றியே இல்லையோ என்றும், இல்லையில்லை அவர்தான் என்றும் மனதில் சடுகுடு விளையாட்டு. முதல் பாகத்தை முடிக்கும்போது ‘நான் அவர் குரலை கேட்டேன்’ என்றதும், மனதில் ஊர்ஜிதமாகி ஒரு சபாஷ் போட்டேன். என்ன அழகான கோணத்தில் ஒரு கதை!


என்னைச் சுற்றி எல்லா திசைகளும் ஒரேபோல அந்நியமாகத் தெரிந்தன. எப்போதும் திறந்து கிடக்கும் பாதை என்பது அது ஒன்றுதான். உடல் பற்றி எரிபவன் ஒரு சிறு துளி நீரை தேடி அலைவதைப்போல நான் திரிந்தேன். அப்படி ஒரு நாளில், கரிசல் மண் உருகி தகிக்கும் கோடை மதியத்தில், நான் அவர் குரலை கேட்டேன்”.


“அவர் வருகை ஓர் அலை போல தமிழ்நாட்டில் நிகழ்ந்தது”- இக்கதை என்னுள் அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏன் இது நெருக்கமாய் தோன்றுகிறது? கதையின் பின்னல். கதை சொல்லியின் பின்னணியும், சூழலும், அவனின் உளவியலும் அந்த பின்னலின் வலுவான கண்ணிகள்.


“முகம் தெரியாத இருளில் அவன் குரல் தீமையின் அடியாழங்களுக்குள் சென்று வருவதைத்திகைப்புடனும் குறுகுறுப்புடனும் கேட்டிருக்கிறேன்பகலில்கூட அவன் கண்களை நான் அதிக நேரம்பார்க்க துணியவில்லை”.


“…….எங்காவது தொலைவாக ஓடிச்செல்வதை பற்றிச் சிந்திக்க துவங்கினேன்எங்குச் செல்வதுஎன்று எனக்கு எந்த வழியும் தெரியவில்லை


எல்லாவற்றையும் மனிதனிடமிருந்து பறித்தாலும், ஒரு விஷயத்தை மட்டும் பறிக்க முடியாது—எந்த சூழலிலும் தனது மனப்போக்கைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை.” என்கிறார் விக்டர் பிராங்கில். (From Man’s Search for meaning - Viktor Frankl).


இந்த கதை சொல்லியின் எண்ணவோட்டம் விக்டரின் கூற்றை ஒத்திருப்பதாய் தோன்றியது. எழுத்தாளர், வாசகர்முன் இரு வேறு மனப்போக்கு உடையவர்களை அருகருகே நிறுத்தி காட்டியதும், அங்கிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து தன் பாய்ச்சலை நிகழ்த்தியதும் அபாரம். அந்த தேர்வும் முக்கியமானதாகிறது.


(கதை சொல்லி) அவனே அறிந்திராத அவன் மனதின் ரசனை அல்லது அந்நேரத்தின் தேவை, உளவியல் ரீதியில் அவனை பாதித்ததுமாகவும், மீட்டெடுத்ததுமாகவும் அமைத்திருப்பதே கதையின் வலுவாய் நான் பார்க்கிறேன். 


அந்த கதை சொல்லி, தன் ஊர் அருகே சேர்ந்த ஒருவரை, சிறுவயதில் தன் பாட்டனுடன் சென்று பார்த்து, கேட்டு மனதில் பதிந்து போன அந்த பிம்பத்தை, பின்னாளில் தன் மீட்பராய் கருதுகிறான். இனி எதற்காக அவன் வாழ்க்கை என்பதில் ஒரு இலக்கு கொள்கிறான். 


என் வாழ்நாளில் முதல் முதலாக மகிழ்ச்சி என்ற ஒன்றை நான் அன்று உணர்ந்தேன்அதன் சாயலை.

அது என் மகிழ்ச்சி அல்லஅது ஒரு பொருட்டே அல்லஅந்த குரலின் மகிழ்ச்சி அதுஅதற்காகவேநான் உயிரோடிருக்க வேண்டும்அதன் இன்பத்தைக் காணஅதன் எல்லா நிறைவையும் காணஇந்தபிரபஞ்சமே எனக்கு மீண்டும் கிடைத்தது போலிருந்ததுஅன்று நான் அதை உணர்ந்தேன்தனக்காகமட்டும் வாழும் எந்த வாழ்க்கையும் காலடி மண்ணுக்குள் செரித்து அடங்கிவிடும்”


ஆடிமாதச் சாரல், கதை சொல்லியின் ஊர் நுழையும் விதத்தை சொல்லியிருக்கும் அந்த ஒரு பத்தியே, ஒரு சோறு பதம். அவன் கேட்ட குரலினை அச்சாரலோடு ஒப்பிட்டது, அழகான முதல்நிலை வெளிப்பாடு.


‘தம்தன தம்தன’ பாடல் உருவான தருணத்தில், இசைஞானி தன் நண்பர்கள் வட்டத்தில் உரையாடி கொண்டதாய் ஒரு பேச்சு அடிக்கடி உலாவும் எங்கள் நண்பர் வட்டத்தில்.


பாடல்கள், அவர் மனதில் உருவாகி வரும். அந்த அருவத்தின் பிரம்மாண்டம், வரிகள் கொடுத்தபின் சற்று குறையும், அதற்கு குரல் கொடுத்தபின் மேலும் குறையும், அது முழுவடிவம் எடுத்து வெளிவந்த பின், தன் மனதில் இருந்து எங்கோ நெடுந்தூரத்தில் நிற்கும் என்பாராம். அருவம் உருவம் பெற்றபின் எவ்வாறு உருக்குலைகிறது என்று அவர் கூறுவது, பிரம்மத்திற்கும் பிறப்பிற்குமான இடைவெளியை காட்டுவதோ என்று தோன்றும்.


இசைஞானியின் தாக்கமின்றி அனேகமாக மக்கள் இருப்பது அரிது. அந்த தாக்கத்தை மொழிப்பெயர்க்கவியலாத தளத்திலேயே இன்றும் பெரும்பாலானோர் இருப்பார்கள். பல பேர்களை வலைத்தளங்களில் கண்டிருப்போம். பெரும்பாலும் தலையை ‘இல்லை’ என்ற பொருளில் ஆட்டி, அவர்கள் உள்ளே கசிந்து கொண்டிருக்கும் உயிரின் வலியை விவரிக்க முற்படுவார்கள். நாங்கள் எங்கள் நண்பர் வட்டத்தில் பேசுகையிலும், ‘இந்த மனுசன வச்சுகிட்டு என்னத்த பண்ண போ’ என்றளவில்தான் எங்களின் வெளிப்பாட்டு இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறோம். நான் பல நேரங்களில் என் கண்ணீர் வழியே மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறேன். இருந்து வருகிறேன். பல பாடல்களை கேட்பதையே தவிர்த்து வருகிறேன். அதன் கனத்தில் என் உள்ளத்தை தாங்கி பிடிக்க இயலாததே காரணம். ஜெ-யின் தீவர வாசகர் ஒருவர், அவருக்காய் சங்கருத்து கொள்வேன் என்று தன் தீவிரத்தை வெளிப்படுத்தியிருப்பார். இவ்வாறு பலவிதமான வெளிப்பாடுகள், தங்களை பாதித்த ஒருவரை நோக்கி. ஆனால் அவ்வாறு சொல்லி முடித்தும் தூவானமாய் நெஞ்சில் மிஞ்சி கிடக்கும், எடுத்து கோர்க்கவியலாத சொற்களாய் உணர்வுகள்.


அஜிதன் (மனதில் அஜி என்றே வாஞ்சையோடு சொல்லிக் கொள்கிறேன்) அந்த முதல்நிலை வெளிப்பாட்டிற்கு பின் அப்படி உணர்ந்திருப்பாரா? முழுதும் எழுதி முடித்தும் அப்படி உணர்ந்திருப்பாரா? இசைஞானியின் ரசிகராய் நான் நின்று பார்க்கையில், அப்படித்தான் உணர்ந்திருக்க முடியும் என்றே எண்ணிக் கொள்கிறேன். இன்னொன்றும் தோன்றுகிறது. இதுவரை இசைஞானியின்பால் பெருக்கெடுக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதங்களில், அஜிதனின் வெளிப்பாடு, காலங்கள் கடந்தும் நிற்கும். இன்னும் இருநூறு வருடங்கள் கழித்து வரும் ரசிகன், இலக்கிய உலகு தெரியாதிருப்பவனாய் இருந்தாலும், இசைஞானியை தெரிந்திருந்தால்,அஜிதனை அவன் தவிர்க்கவியலாது.


மருபூமி நூல் விழாவில், அஜிதன் சிறிது காலம் திரைப்படங்களில் கவனம் செலுத்த போவதென்று முடிவெடுத்திருப்பதை கூறி, அதற்கு பாவண்ணன் அவர்கள் தங்கள் கருத்தினை பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது. எனக்கு அன்று அவர் கருத்து சரி என்று தோன்றியது. 


இப்போது அதை நினைக்கையில் தோன்றுவது, ஒரு இலக்கியவாதி எங்கு, எதிலிருந்தாலும் அவன் இலக்கியவாதியே. அவனுக்குள் இருக்கும் படைப்பாளி வெவ்வேறு வடிவங்களில் உருப்பெறுகிறான் என்பதே பொருள். ஆகையால் இன்று எனக்கு, அஜிதனின் திரைமொழியை காண ஆவல் பெருகுகிறது.


இன்னும்கூட தோன்றுவது, இசைஞானியின் வாழ்க்கை திரைப்படமாய் (Biopic) உருவாகி வரும் நிலையில், அஜிதனின் பங்கு அதில் இடம்பெறுவதாயின், அது வரலாற்று பதிவு என்பதை தாண்டி, ஒரு நூற்றாண்டின் நிகழ்வாய் என்றென்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது. குறைந்தபட்சமாய் இக்கதையை வாசித்தால்கூட அந்த ரசனை தீவிரத்தின் ஒரு பொறி தீண்டப்பெற்று அப்படம் வாழ்த்தப்பெற்றதாகும். 


இக்கதையின் உச்சம் அந்த ஒரு வரி. அதுவே ஒட்டுமொத்தத்தின் தொடக்கம் எனவும் கருதுகிறேன். அவ்வரியை நான் சொல்லப்போவதில்லை. அதை சொல்லாமல் இக்கதை பற்றி பேசி முடிய போவதில்லை. அதை சொன்னாலும் முடிய போவதில்லை. 


அந்த உச்சம், எச்சமாய் தொடர்ந்து கொண்டே இருப்பது. 

அது ‘இருவருக்கும்’ இடையில் இருந்து கொண்டே இருப்பது!

எந்த இருவருக்கும் இடையிலும் இருந்து கொண்டே இருப்பது!

‘எந்த’ இருவருக்கும் ‘இடையில்’ இருந்து கொண்டே இருப்பது?

இரு உருவத்திற்கும் இடையில், அருவமாய்! 

நெடுந்தூரத்தில் அல்லாமல், மனதிற்கு நெருக்கமாய்!

புதன், 8 ஜனவரி, 2025

வருகை

மேகம் சேர்ந்த மாலை வேளை

பசிபிக் கடற்கரையில் உன் பெயர் எழுதினேன்

மேகம் நெகிழ்ந்து சூரிய கிரணங்கள்

அதன் மேல் ஒளிர்ந்தன

நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்

மழை பெய்தது!

புதன், 1 ஜனவரி, 2025

மீன்வானம்பாடி

எவருக்கும் உரிய ஆசைதான் என்று தோன்றும். சிறு வயதில் அண்ணாந்து பார்த்த, விமானத்தில் பறக்க வேண்டும் என்பது. அதில் பறந்த பின்பும் கூட, வளர்ந்த பின்பும் கூட, அடங்காது வளரும் சிறு வயது தாகம், அதை அண்ணாந்து பார்த்து மகிழ்வது. இப்போதும் கார் ஓட்டி கொண்டு செல்லும்போது கூட குனிந்து பார்ப்பதுண்டு. அதுவும், விமான நிலையத்தின் அருகில் பயணிக்கும் போது இன்னும் நெருக்கமாய் பார்க்க கிடைத்திடும். அதன் தரையிறங்கும் அழகும், வான் ஏறும் மிடுக்கும் அதில் இருப்பதை காட்டிலும், அதன் இருப்பை காண்பதே அழகு என்று தோன்றும். இம்மாதிரி எனக்கு மலை ஏறும்போதும் தோன்றியிருக்கிறது. மாமலைகளும் கூட, அதில் பயணம் செய்யும்போது, அதன் பிரம்மாண்டம் சற்று மட்டுபட்டு, தட்டுப்படும் பாதையிலேயே கவனம் செல்லும். மாபெரும் மலையின் கர்ப்பத்தில் இருக்கிறாய் என்ற பிரக்ஞை வந்து மோதும் போது, ஒரு புன்னகையும், ஒரு செயலுமாக அது கடந்து கொண்டிருக்கும். தள்ளி நின்று பார்க்கையில் அதன் பிரம்மாண்டம் மீண்டும் வந்து மனதில் அப்பிக் கொள்ளும். கூடவே அதில் நான் நடந்திருக்கிறேன் என்ற உண்மையும் பிரம்மாண்டமாய் உருவெடுக்கும். பிரம்மமும் அப்படித்தானோ என்று தோன்றியதுண்டு.


என் முதல் விமான பயணம் எனது 30 வயதில். இந்தியாவில், சென்னையிலிருந்து பூனே சென்ற பயணம். திவியுடன் (திவ்யா என்பதன் சுருக்கம்) சென்றிருந்தேன். விமானம் வானேறும்போது, அவள் என் பயத்தை கண்டு, தற்செயல் போல், கரம் பற்றிக் கொண்ட சூடு என் உள்ளங்கையில் இப்போது எழுகிறது. அந்த உயரத்திலிருந்து, மெரினா கடற்கரையை பார்த்தது, எனக்கு நான் கொடுத்து கொண்ட சிறந்த பரிசு என்று தோன்றும். அவள், என்னை அடுத்த இரு வருடங்களிலேயே இன்னும் உயர பறந்து, அகன்ற நிலப்பரப்பை காண தள்ளினாள். அமெரிக்க பயணம், அவளின் வற்புறுத்தலாலேயே நடந்தது. முதல்முறை தனியாய், முப்பத்தைந்தாயிரம் அடி உயரத்தில், புள்ளியில் புள்ளியாய், ஆகாயத்தில் நிச்சலனமாய். 


இருளும் மாலை, விடியப் போகும் இரவு, விடிந்து முதிர்ந்த பகல் என்று காலநிலை முன்னும் பின்னுமாய் நாட்டியம் ஆடியது. என் வீட்டில் ஓயாமல் கேட்கும் ஒரு பழமொழியுண்டு. ‘இந்த நொடி போய்ட்டா அவ்வளவுதான், திரும்ப கிடைக்காது. காலம் பொன் போன்றது’ என்பது அது. ஆனால், அந்த விமான பயணத்தில் எனக்குத் தோன்றியது, காலத்தில் நான் பின்னோக்கி போகிறேன் என்று. வாழ்ந்த நொடிகளில், மீண்டும் வாழ்கிறேன் என்று. மினுங்கும் ஆகாயத்தில், காலம் பொன் தான். அதை நேரில் காண்கிறேன் என்று. 


எனக்கு மேலே நட்சத்திரங்கள் சிதறித்தொங்கின.எனக்கு கீழே மேகங்கள் பஞ்சு மூட்டைகளாய், மிட்டாய்களாய், ஊர்வலமாக வந்து கொண்டிருந்தன. அந்த மேக நிலத்தில், ஒரு இரவின் முழுநிலவில், வாழைத்தோட்டத்தில், குலைகள் தள்ளியிருப்பதாகவும், சற்று தள்ளி தென்னைகள் ஓங்கியிருப்பதாகவும், ஒரு உழவன் கலப்பையை தூக்கி செல்வதாகவும் காட்சிகள் விரிந்தன. வாழை வரிசையிடுக்கில், தன் ஒளிந்திருக்கும் தம்பியைத் தேடி அந்த சிறுமி கண்ணாமூச்சி ஆட கண்டேன். அவர்களை நோக்கி கலப்பை ஏந்திய அந்த 

தகப்பனின் பார்வை.


சற்று தூரம் கடந்ததும், ஒரு மேகம், எனக்கு மேலே, ஒரு கோட்டை வாயிலின் வளைவாய் வளைந்திருந்தது. அதில் பிரமித்து உள் நுழைகையில், சூரிய கிரணங்கள் அந்தி சாயும் செந்தூரத்தில், வானை சிவக்க வைத்து கொண்டிருந்தன. இன்னும் சற்று தள்ளி, மேகங்கள் மாமலைகளாய் தொலைவில் வீற்றிருக்க, அதை தாண்டி தொடுவானம் நீள்ந்திருந்தது. சுற்றிலும் மேகமலைகள் அரண்களாய், அதற்கு நடுவில், பிரம்மாண்ட மேக ஆறு, சிறு அலைகள் தழும்ப, நிரம்பி ஓடுக்கொண்டிருந்தது. என் சித்தம், தரையிறங்கி, மேக படுகையில் கால் நடந்து அதன் அலைகளை தொட்டு சிலிர்த்தது. தூரத்தில் அருவியாய் எழுந்திருந்த மேக கங்கையில் குளித்து, குதூகலித்து, குளிர்ந்து இருக்கைக்கு மீண்டது. 


அவ்வுயரத்திலிருந்து பார்க்கையில் சில நேரம், கடல் நிலமாகவும், நிலம் கடலெனவும் மனம் குழம்பியிருக்கிறது. பாலைநில மணற்பரப்புகளின் வெம்மையை உள்ளிருந்தவாறே உணர்ந்திருக்கிறேன். பாலையை பார்த்தால், தவறாமல் என் சிந்தையில் வந்து ஒட்டிக்கொள்வான் குட்டி இளவரசன். அதை நினைக்கையிலேயே மனம் இனித்து விடுகிறது. இரவு நேரத்தில் நகரத்தின் மேல் பறக்கையில், நான்கு வழி சாலைகளில், வரிசையில் நகரும் வாகனங்கள், பட்டுத்துணியில், வெள்ளை கற்களும், மஞ்சள் கற்களும், சிகப்பு கற்களும் பதித்து தைத்த அங்கியோரம் (Blouse Border) போன்று காட்சியளித்தன. ஒரு வழிச்சாலையில் மெதுமெதுவாய் வால் பிடித்தவாறு ஊரும் வாகனங்கள், ஒரு நீண்ட கம்பளி பூச்சியாய் தென்பட்டன.


விமானம், நிலையத்தில் நிற்பதை காண்கையில், அதன் வாய் மீனினை ஞாபகப்படுத்தும். மீனிற்கு, இறக்கை கொடுத்து, வானுக்கு ஏத்திவிட்டதை போல் தோன்றும். (இதை எழுதும்போது, மதன் கார்க்கியின் ஒரு பாடல்வரி நினைவிற்கு வருகிறது- “மீன தூக்கி ரெக்க வரஞ்ச..வானம் மேல வீசி எறிஞ்ச..பறக்க பழக்குறீயே” ). முதன்முறை விமானத்தின் இறக்கையை அருகில் பார்த்தபோது, ‘என்ன இது, உடஞ்ச மாதிரி லூசா எடுத்துட்டு இருக்கே’ என்று எனக்குள் சற்று பதற்றம் கொண்டேன். ஆனால், பறக்கும்போது, மேகங்களையும், ஆகாயத்தையும் பார்க்கும் மகிழ்வுக்கு நிகரானது, அந்த இறக்கை காற்றின் விசையை கிழித்து அடக்கி முன்னகர்வதை காண்பது. 


விமானத்தில் இருக்கும்போது, என் விமானம் மட்டுமே ஆகாயத்தில் இருப்பதாய் எண்ணம். இப்போதும் கூட அப்படித்தான். அந்த மாயையில் இருக்கும்போது எதார்த்தமாய் ஒரு விமானம் என் எதிரில் கடந்து போகும். அதை உணரும்போதுதான், நாம் பறக்கும் அந்த வெளியில், அதே நேரத்தில் எத்தனை ஆயிரம் விமானங்கள் பறந்து கொண்டிருக்கிறது என்ற பிரக்ஞை எட்டும். எட்டியதும், நான் கண்ட பட்டு சரிகை போல், வான் வெளி சாலையில் மின்மினிகளாய் தொடரும் விமானங்களை, எனக்கு பல அடுக்குகள் மேலேயிருந்து காணும் என் சந்ததியினரை, ஜன்னல் வழியே கண்டுக்கொண்டிருப்பேன்.


ஜன்னலை சொன்னதும், விமானத்தின் அழகு சன்னலில் மனம் நிலைக்கிறது. அதற்கு திருஷ்டி வைத்தாற்போல் என்ன ஒரு பொட்டு அல்லது அது ஓட்டையா என்று மனதில் எண்ணம். அது ஏதும் ஆணியா? அல்லது ஸூக்ரூவா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். பின் அதைப்பற்றி படித்தபோதுதான், மூன்றடுக்கு கண்ணாடிகளால் செய்யப்பட்டது விமான ஜன்னல்கள் என்பதும், அந்த துவாரம், உள்-வெளி காற்றழுத்தத்தை சமன் செய்வதற்காக என்பதும் தெரிய வந்தது.


இந்த முதல் நீண்ட தனி பயணம், அடுத்த வருடமே என் மேலாளரை, என்னை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்க வைத்தது. என் அப்பாவிற்கு ஒரு நம்பிக்கையை அளித்தது. மகள் தனியாய் எங்கு வேணாலும் சென்று இருந்து கொள்வாள் என்று. வீட்டிற்கு சொல்லாமல்தான் முதல் அமெரிக்க பயணத்தை ஒருங்கு செய்தேன். டிக்கட் ரத்து செய்ய முடியாது, பணம் திரும்பி கிடைக்காது என்று சொல்லித்தான், அவர்கள் மனதை தயார் செய்தேன். என்னை பயணம் அனுப்பி வைக்க யாரும் வரவில்லை. அது குறையென்றும் தோன்றவில்லை.