மலைகளை போல் தனிமையானது உலகில் எதுவும் இல்லை என்று ஜெ கூறுவதுண்டு. அது உண்மைதான் என்று அந்த காட்சியின் உணர்வுகளை மீட்டெடுக்கையில் தோன்றியிருக்கிறது.என் தனிமையில் அங்கு சென்று நிற்கையில், ஒரு சமயம் அது என்னை அரவணைத்து கொள்கிறதாய் உணர்கிறேன். ஒரு சமயம் அதன்மேல் கை போட்டுக்கொண்டு படுத்திருப்பதாய் எண்ணிக்கொள்வேன். ஒரு சமயம் அப்போதுதான் என் தனிமையின் கீறல்களை உணர்வேன். முட்டிக் கொல்லும் அழுகையை முழுங்கிய தருணங்களும் உண்டு. விடுதலையாய் வழிய விட்ட தருணங்களும் உண்டு.
தொன்மையான மலையின் மீது எழுப்பப்பட்ட கோட்டையே எனது நகரம் என்றாலும், அதனை பார்க்கையில், மலை என்பதன் பிரம்மாண்டம் என்னை தீண்டியிருக்கவில்லை. இன்றும், நகரத்தின் நடுவில் அழகாய் வீற்றிருக்கும் ஓர் அங்கமாய் மட்டுமே அதனுடனான என் உணர்விருக்கிறது.
முதன்முதலில் என் வாழ்வில் நான் மலைகள் என்று பார்த்து பிரமித்தது எங்கு என்று எண்ணிப்பார்க்கிறேன். சிறு வயதில் என் தந்தை ஊரான துறையூருக்கு செல்லும் வழியில் உள்ளது நான் கண்ட முதல் மலைகள். மலைகள் அல்ல குன்றுகள். அந்த வயதில் அவை எனக்கு மலைகள். பேருந்தில் செல்லும் வழியில் இருக்கும் மலைகளில், சில இடங்களில் வெள்ளை சுண்ணாம்பில் பிரம்மாண்டமாய் சிலுவை எழும்பி காட்சியளிக்கும். சில இடங்களில் கல்லூரியின் பெயர் மற்றும் படிக்கும் ஆண்டு என சேர்த்து ‘ஜெயராம் காலேஜ் III year B.E’ என்பது போல் குறிப்புகள் கண்ட நினைவுண்டு. நம்ம ஊருக்குள்ளேயே மலைகள் உள்ளதா என்ற ஆச்சரியம் அப்போது. பச்சை மலைத்தொடர் அடியில் உள்ள ஊர்,துறையூர். திருச்சியிலிருந்து 47 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் அவ்வூரிலே பச்சை மலைத்தொடரின் அங்கமான பெருமாள் மலை உண்டு. மலை மேல் வண்டியில் சென்றபோது அடைந்த பரவசத்தையும், அந்த சிறுமியின் முகத்தையும் இப்போது நினைவு கூர்கிறேன். பின்பு, வின்ச்சில் பழனி. அடிக்கடி சென்றதுண்டு. குதூகலமும், குறுகுறுப்பும் நிறைந்த அனுபவங்களாய் எஞ்சியிருக்கின்றன.
முதன்முதலில் தொடர் மலைகளை நான் கண்ட நாள் ஜூன் 8, 1998.மேட்டடர் வண்டியில் அம்மா, அப்பா, பெரியப்பாக்கள், மாமாக்கள், பெரியப்பா மகள்கள் என கூட்டமாய் நாங்கள் சென்ற ஒரு திருமண நிச்சயதார்த்தம். கோயம்புத்தூர் வழியாய் பாலக்காடு சென்றோம். அப்போது தூரமாய் அமைதியாய் நின்றுகொண்டு என்னை பார்த்து கொண்டிருந்தன மலைகள். பனி மூட்டங்கள் வளர்ந்தும், களைந்தும் அலைந்து கொண்டிருந்தன. கையில் சித்தப்பாவின் யாஷிகா கேமராவில் முதன்முதலாய் படங்கள் எடுத்து கொண்டிருந்தேன். என் பெரியப்பா மகள் கேட்டபோது கொடுக்காது, என் கையை இழுத்து கொண்டதை நினைக்கையில் இப்போது வலிக்கிறது. அவள் அந்த ஏக்கத்தை மறந்து ‘அதோ அதை எடு’ என்று உற்சாகமாய் மலையை சுட்டிக்காட்டியது தீயாய் சுடுகிறது. இக்கணம் அவளிடம், நான் அந்த கேமராவையும், ஜன்னல் சீட்டையும் விட்டுத் தருகிறேன்.
அடுத்த பயணம் தொட்டபேட்டா. மலை உச்சியில் அப்பா, அம்மா, மாமா, தம்பியுடன் நின்றதும், என் அப்பா அங்கிருந்து அவர் அம்மாவிற்கு போன் செய்து தன் இன்பத்தை பகிர்ந்து கொண்ட காட்சியும் மாறாமல் என்னுள் நிலைத்திருக்கிறது.
2010-ல், புவியின் குடும்பத்தோடு வேங்கட மலை(திருப்பதி) பயணம். ஏழுமலைகளுள் ஒன்றான அம்மலை பயணமும், அனுபவமும் முற்றிலும் எனக்கு புதிது. என் குடும்பத்தை விட்டு தனியாக வேறொரு குடும்பத்தோடு நான் செய்த முதற்பயணம். அந்த பயணம் எனக்கு மகிழ்வான பயணமே என்றாலும் கூட, ஏதோ ஒரு நொடியில் என் குடும்பத்தை அவர்கள் முகத்தில் தேடியதன் தீற்றல் என் கண்ணில் தென்படுகிறது. என் குடும்பத்தில் கலகலப்பாய் ஆடிப்பாடி குதூகலிக்கும் வாய்ப்பு கிடையாது. அப்பா கண்டிப்பானவர். பழைய பாடல்களின் அறிமுகமும்,ரசனையும் அவரிடமிருந்தே வந்தன என்றாலும், பாடல்களின் உணர்வுகளை வெளிக்கொட்டி குதூகலிக்கும் இடமாய் என் குடும்பம் இருக்கவில்லை. அவ்விடத்தை நிரப்பிய பெருமை அவளுக்கும், அவள் குடும்பத்திற்குமே. அவள் பெரியம்மா பசங்களோடும், உடன்பிறந்தவர்களோடும் நான் என்னையும் இணைத்து கொண்டு மகிழ்ந்திருந்த தருணங்கள். முதன்முதலில் இசைஞானியின் ‘ஏகாந்த வேளை..இன்பத்தின் வாசல்’ பாடல் கேட்ட பயணமது. திரும்பி வரும் வழியில், தொடர் (ஏழு) மலைகளை பார்த்தபோது, அரங்கநாதர் சயனம் கொண்டிருப்பதாய் தோன்றியது.
அதை விஞ்சும் ஓர் அழகு ஒரு நாள் இரவு அந்த அழகிய முழுநிலவொளியில். எப்போதையும் விட, அந்த வானில் அன்று நிலாப்பொலிவு, பொலிவென்பதை கடந்து வழிந்து கொண்டிருக்க கண்டேன். நான் அருகில் அமர்ந்திருக்க, பிரேம் அக்கருக்கிருட்டில் எங்களுக்கு இரவு உணவிற்காக வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறான். என்னிடம் எதுவோ சொல்லிக்கொண்டே வருகிறான், நான் ‘ம்ம்’ கொட்டி கொண்டே, நிலவை வெறித்து வந்து கொண்டிருக்கிறேன்.
அதீத ஒளியின் பிரவாகம் என் பார்வையின் தொடு வளைவை தாண்டியிருந்தபோதும், உடல் வளைத்து, குனிந்து நிமிர்ந்து அதனை நோக்கி கொண்டிருந்தேன். மனம் கிளர்ச்சியுற்றிருந்தது. ஒரு இடத்தை கடக்கும்போது, என் கண்கள் இமைக்கவில்லை. ஆம் உண்மையிலும் இமைக்கவில்லை.
சந்திரனின் வரம்பு மீறிய பொலிவின் ரகசியம், புலப்பட ஆரம்பித்தது. அரனின் ஒளி ஒழுகலில், அவளை கண்டேன்.அவன் விரகத்தில், அவள் முலைகள் எழுந்தமைய, தன் இடக்கையை தலை மேல் அமர்த்தி, இடக்காலை மட்டும் சற்று ஊனி,சற்றே ஒருக்களித்து, பனிவுடல் திறந்திருக்க, கொதித்திருக்கிறாள் அந்த மலைமகள்.ஆனந்த களியாட்டத்தின் தொடக்கப்புள்ளி. புடவியின் பெருவிளையாட்டு. தீரா பெருங்கனவு. காணுந்தோறும் பெருகி வழியும் கனவு. ஆடுந்தோறும் முடிவில்லா விளையாட்டு. அண்டத்தின் பெருங்கருணை, அதனை நான் காண பெற்றது என்று பிறகு சொற்வடிவம் கொடுத்து கொண்டேன்.
ரெயினியர் மலைக்கு சியாட்டலில் இருந்து காரில் சென்றிருந்தோம். அரை மணி நேர பயணத்திலேயே, மலைகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. ஒரு புறம் காஸ்கேட் பனிமலைத்தொடர்கள், மறுபுறம் ஒற்றை பனிமலையான ரெயினியர் மலை, அழகான ஓவியம்போல். தொலைவில் இருபுறமும் கிளர்ச்சியூட்டக்கூடிய பனிமலைகளின் அணிவகுப்பு, அருகில் வாஷிங்டன் ஏரியின் ஒளிப்பரப்பு, அன்னையின் கர்ப்பத்திலிருந்து வெளியேறும் மகவுகளாய், நாங்கள் இருவரும் மிதவை பாலத்தில்.
பெட்ரமாக்ஸ் விளக்கின் மேன்டிலாய் தெரிந்த அந்த ஓவியம், அருகே செல்ல செல்ல, விரிந்தெழுந்து நிமிர்ந்த ஒற்றை பிரம்மாண்டம். அதன் நீள அகலத்தில் ஓடியோடி பார்த்தும் அது தீரவில்லை. மகவுகளாய் அன்னையின் இடுப்பை, சுற்றி சுற்றி தீராத வேட்கையுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரம், பசித்தது. அப்போதுதான் அந்த ஆனந்த களியாட்டின் விருந்து.
அடுத்த நாள் காலை அன்னையின் மேலேறி உலவினோம். ஒருவாறான உச்சியில் நின்று சுற்றிலும் பார்க்கையில் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை பனிமலைகள் மட்டுமே. கோமல் கண்ட கைலாயம் போல். அப்போது மனதில் ஒரு அமைதி, ஒரு விடுதலை.
அங்கேயே சரிந்து உட்கார்ந்து சுற்றிலும் பார்த்துக்கொண்டேயிருந்தேன். இப்போதும் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். காண காண என் கண்முன் தீராது வளர்ந்து வருவது. அப்படியே படுத்துக்கொண்டேன். உள்ளே ஓராயிரம் வருடங்களின் அனல் தகித்து கொண்டிருந்த போதிலும், எனக்கு அவள் குளிர்ந்திருந்தாள். இருந்தாலும் அவள் தகிப்பை நான் உணராமல் இல்லை. அதை உணர்ந்த தருணம் என்னுள் ஒரு விதிர்ப்பு எடுத்தது.
அடுத்த நாள் மாலை, ஒலிம்பிக் தேசிய பூங்கா. அங்கு சென்று சேரும்போதே நேரமாகிவிட்டது. மேலும், பனி புயல் இருக்கப்போவதாக கூறி, நாங்கள் செல்ல வேண்டியிருந்த மலை வழியை அடைக்கப்போவதாய் கூறினார்கள், பார்வையாளர்கள் நிலையத்தில் (Visitor Centre). முக்கால் மணி நேரமிருந்தது என்று நினைக்கிறேன். பிரேம் , “வா போகலாம், போய் பார்ப்போம்” என்றான். எனக்கும் அது எப்படித்தான் இருக்கும், போய்தான் பார்ப்போமே என்ற குறுகுறுப்பு. அழகான, குறுகலான வளைவுகள் கொண்ட மலை பாதை. வளைவுகள் மிகவும் ஆழமாக, அபாயகரமாக, அதுவும் இருவழி சாலைகளாய் மட்டுமே இருந்தது. ஒரு புறம் சிறிது தள்ளி வண்டியை ஒடித்தாலும், மலையின் கீழே இன்னோர் உலகத்துக்குள் சென்றடைவது உறுதி. அதுவே மறு புறம் திரும்பி வருகையில், மலை பாறைகள் உருண்டு வழியில் விழக்கூடிய அளவிற்கு பலத்த காற்று. ஒருவாறு அந்த காற்றில் நீந்தி கார் பார்கிங் சென்று வண்டியை நிறுத்தினான். வண்டியில் இருந்து முதல் காலடி வைத்த கணம் ஆசிர்வதிக்கப்பட்டதாய், அன்றைய பனி பொழிவு. கீழே பள்ளத்தாக்கு முழுதும் பனியால் நிரப்பப்பட்டதாய் இருந்தது. நன்கு குளிருங்கூட.
சற்று நேரத்தில், காவலர் வந்து அனைவரையும் மலை இறங்க சொல்லிவிட்டார். திரும்பு வழியில் நான் சிறிது தூரம் வண்டியை ஓட்டிக்கொண்டு, பிரேமை அந்த தருணத்தை அனுபவிக்க செய்தேன். மீண்டும் ஒரு இடத்தில் பார்கிங் செய்து, சற்று நேரம் நின்றோம். ஹரிக்கேன் மலை தொடர்கள் அவை. மிக பிரம்மாண்டமான முடிவுகளற்ற மலைகள். எண்ண எண்ண எண்ணிக்கை தவறிக்கொண்டே இருந்தவை. ஒரு கட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு எண்ணுவதை கைவிட்டேன்.
திரும்பும்போது எதிர்காற்றில், பனி துளிகள் சிறு சிறு மேகத் துண்டுகளாய், என்னை சூழ்ந்த இன்பமாய், என்னிடம் நோக்கி வந்தன. என்னை அடையாது கண்ணாடியில் பட்டு தெறித்து வழிந்தன. அதன் வெளியின் மறுபுறம் நான் நின்று அதை ஸ்பரிசித்தேன். உடைந்த சில துளிகள், மேல்நோக்கி நகர்ந்தன. நானும் நகர்ந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.