புதன், 1 ஜனவரி, 2025

மீன்வானம்பாடி

எவருக்கும் உரிய ஆசைதான் என்று தோன்றும். சிறு வயதில் அண்ணாந்து பார்த்த, விமானத்தில் பறக்க வேண்டும் என்பது. அதில் பறந்த பின்பும் கூட, வளர்ந்த பின்பும் கூட, அடங்காது வளரும் சிறு வயது தாகம், அதை அண்ணாந்து பார்த்து மகிழ்வது. இப்போதும் கார் ஓட்டி கொண்டு செல்லும்போது கூட குனிந்து பார்ப்பதுண்டு. அதுவும், விமான நிலையத்தின் அருகில் பயணிக்கும் போது இன்னும் நெருக்கமாய் பார்க்க கிடைத்திடும். அதன் தரையிறங்கும் அழகும், வான் ஏறும் மிடுக்கும் அதில் இருப்பதை காட்டிலும், அதன் இருப்பை காண்பதே அழகு என்று தோன்றும். இம்மாதிரி எனக்கு மலை ஏறும்போதும் தோன்றியிருக்கிறது. மாமலைகளும் கூட, அதில் பயணம் செய்யும்போது, அதன் பிரம்மாண்டம் சற்று மட்டுபட்டு, தட்டுப்படும் பாதையிலேயே கவனம் செல்லும். மாபெரும் மலையின் கர்ப்பத்தில் இருக்கிறாய் என்ற பிரக்ஞை வந்து மோதும் போது, ஒரு புன்னகையும், ஒரு செயலுமாக அது கடந்து கொண்டிருக்கும். தள்ளி நின்று பார்க்கையில் அதன் பிரம்மாண்டம் மீண்டும் வந்து மனதில் அப்பிக் கொள்ளும். கூடவே அதில் நான் நடந்திருக்கிறேன் என்ற உண்மையும் பிரம்மாண்டமாய் உருவெடுக்கும். பிரம்மமும் அப்படித்தானோ என்று தோன்றியதுண்டு.


என் முதல் விமான பயணம் எனது 30 வயதில். இந்தியாவில், சென்னையிலிருந்து பூனே சென்ற பயணம். திவியுடன் (திவ்யா என்பதன் சுருக்கம்) சென்றிருந்தேன். விமானம் வானேறும்போது, அவள் என் பயத்தை கண்டு, தற்செயல் போல், கரம் பற்றிக் கொண்ட சூடு என் உள்ளங்கையில் இப்போது எழுகிறது. அந்த உயரத்திலிருந்து, மெரினா கடற்கரையை பார்த்தது, எனக்கு நான் கொடுத்து கொண்ட சிறந்த பரிசு என்று தோன்றும். அவள், என்னை அடுத்த இரு வருடங்களிலேயே இன்னும் உயர பறந்து, அகன்ற நிலப்பரப்பை காண தள்ளினாள். அமெரிக்க பயணம், அவளின் வற்புறுத்தலாலேயே நடந்தது. முதல்முறை தனியாய், முப்பத்தைந்தாயிரம் அடி உயரத்தில், புள்ளியில் புள்ளியாய், ஆகாயத்தில் நிச்சலனமாய். 


இருளும் மாலை, விடியப் போகும் இரவு, விடிந்து முதிர்ந்த பகல் என்று காலநிலை முன்னும் பின்னுமாய் நாட்டியம் ஆடியது. என் வீட்டில் ஓயாமல் கேட்கும் ஒரு பழமொழியுண்டு. ‘இந்த நொடி போய்ட்டா அவ்வளவுதான், திரும்ப கிடைக்காது. காலம் பொன் போன்றது’ என்பது அது. ஆனால், அந்த விமான பயணத்தில் எனக்குத் தோன்றியது, காலத்தில் நான் பின்னோக்கி போகிறேன் என்று. வாழ்ந்த நொடிகளில், மீண்டும் வாழ்கிறேன் என்று. மினுங்கும் ஆகாயத்தில், காலம் பொன் தான். அதை நேரில் காண்கிறேன் என்று. 


எனக்கு மேலே நட்சத்திரங்கள் சிதறித்தொங்கின.எனக்கு கீழே மேகங்கள் பஞ்சு மூட்டைகளாய், மிட்டாய்களாய், ஊர்வலமாக வந்து கொண்டிருந்தன. அந்த மேக நிலத்தில், ஒரு இரவின் முழுநிலவில், வாழைத்தோட்டத்தில், குலைகள் தள்ளியிருப்பதாகவும், சற்று தள்ளி தென்னைகள் ஓங்கியிருப்பதாகவும், ஒரு உழவன் கலப்பையை தூக்கி செல்வதாகவும் காட்சிகள் விரிந்தன. வாழை வரிசையிடுக்கில், தன் ஒளிந்திருக்கும் தம்பியைத் தேடி அந்த சிறுமி கண்ணாமூச்சி ஆட கண்டேன். அவர்களை நோக்கி கலப்பை ஏந்திய அந்த 

தகப்பனின் பார்வை.


சற்று தூரம் கடந்ததும், ஒரு மேகம், எனக்கு மேலே, ஒரு கோட்டை வாயிலின் வளைவாய் வளைந்திருந்தது. அதில் பிரமித்து உள் நுழைகையில், சூரிய கிரணங்கள் அந்தி சாயும் செந்தூரத்தில், வானை சிவக்க வைத்து கொண்டிருந்தன. இன்னும் சற்று தள்ளி, மேகங்கள் மாமலைகளாய் தொலைவில் வீற்றிருக்க, அதை தாண்டி தொடுவானம் நீள்ந்திருந்தது. சுற்றிலும் மேகமலைகள் அரண்களாய், அதற்கு நடுவில், பிரம்மாண்ட மேக ஆறு, சிறு அலைகள் தழும்ப, நிரம்பி ஓடுக்கொண்டிருந்தது. என் சித்தம், தரையிறங்கி, மேக படுகையில் கால் நடந்து அதன் அலைகளை தொட்டு சிலிர்த்தது. தூரத்தில் அருவியாய் எழுந்திருந்த மேக கங்கையில் குளித்து, குதூகலித்து, குளிர்ந்து இருக்கைக்கு மீண்டது. 


அவ்வுயரத்திலிருந்து பார்க்கையில் சில நேரம், கடல் நிலமாகவும், நிலம் கடலெனவும் மனம் குழம்பியிருக்கிறது. பாலைநில மணற்பரப்புகளின் வெம்மையை உள்ளிருந்தவாறே உணர்ந்திருக்கிறேன். பாலையை பார்த்தால், தவறாமல் என் சிந்தையில் வந்து ஒட்டிக்கொள்வான் குட்டி இளவரசன். அதை நினைக்கையிலேயே மனம் இனித்து விடுகிறது. இரவு நேரத்தில் நகரத்தின் மேல் பறக்கையில், நான்கு வழி சாலைகளில், வரிசையில் நகரும் வாகனங்கள், பட்டுத்துணியில், வெள்ளை கற்களும், மஞ்சள் கற்களும், சிகப்பு கற்களும் பதித்து தைத்த அங்கியோரம் (Blouse Border) போன்று காட்சியளித்தன. ஒரு வழிச்சாலையில் மெதுமெதுவாய் வால் பிடித்தவாறு ஊரும் வாகனங்கள், ஒரு நீண்ட கம்பளி பூச்சியாய் தென்பட்டன.


விமானம், நிலையத்தில் நிற்பதை காண்கையில், அதன் வாய் மீனினை ஞாபகப்படுத்தும். மீனிற்கு, இறக்கை கொடுத்து, வானுக்கு ஏத்திவிட்டதை போல் தோன்றும். (இதை எழுதும்போது, மதன் கார்க்கியின் ஒரு பாடல்வரி நினைவிற்கு வருகிறது- “மீன தூக்கி ரெக்க வரஞ்ச..வானம் மேல வீசி எறிஞ்ச..பறக்க பழக்குறீயே” ). முதன்முறை விமானத்தின் இறக்கையை அருகில் பார்த்தபோது, ‘என்ன இது, உடஞ்ச மாதிரி லூசா எடுத்துட்டு இருக்கே’ என்று எனக்குள் சற்று பதற்றம் கொண்டேன். ஆனால், பறக்கும்போது, மேகங்களையும், ஆகாயத்தையும் பார்க்கும் மகிழ்வுக்கு நிகரானது, அந்த இறக்கை காற்றின் விசையை கிழித்து அடக்கி முன்னகர்வதை காண்பது. 


விமானத்தில் இருக்கும்போது, என் விமானம் மட்டுமே ஆகாயத்தில் இருப்பதாய் எண்ணம். இப்போதும் கூட அப்படித்தான். அந்த மாயையில் இருக்கும்போது எதார்த்தமாய் ஒரு விமானம் என் எதிரில் கடந்து போகும். அதை உணரும்போதுதான், நாம் பறக்கும் அந்த வெளியில், அதே நேரத்தில் எத்தனை ஆயிரம் விமானங்கள் பறந்து கொண்டிருக்கிறது என்ற பிரக்ஞை எட்டும். எட்டியதும், நான் கண்ட பட்டு சரிகை போல், வான் வெளி சாலையில் மின்மினிகளாய் தொடரும் விமானங்களை, எனக்கு பல அடுக்குகள் மேலேயிருந்து காணும் என் சந்ததியினரை, ஜன்னல் வழியே கண்டுக்கொண்டிருப்பேன்.


ஜன்னலை சொன்னதும், விமானத்தின் அழகு சன்னலில் மனம் நிலைக்கிறது. அதற்கு திருஷ்டி வைத்தாற்போல் என்ன ஒரு பொட்டு அல்லது அது ஓட்டையா என்று மனதில் எண்ணம். அது ஏதும் ஆணியா? அல்லது ஸூக்ரூவா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். பின் அதைப்பற்றி படித்தபோதுதான், மூன்றடுக்கு கண்ணாடிகளால் செய்யப்பட்டது விமான ஜன்னல்கள் என்பதும், அந்த துவாரம், உள்-வெளி காற்றழுத்தத்தை சமன் செய்வதற்காக என்பதும் தெரிய வந்தது.


இந்த முதல் நீண்ட தனி பயணம், அடுத்த வருடமே என் மேலாளரை, என்னை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்க வைத்தது. என் அப்பாவிற்கு ஒரு நம்பிக்கையை அளித்தது. மகள் தனியாய் எங்கு வேணாலும் சென்று இருந்து கொள்வாள் என்று. வீட்டிற்கு சொல்லாமல்தான் முதல் அமெரிக்க பயணத்தை ஒருங்கு செய்தேன். டிக்கட் ரத்து செய்ய முடியாது, பணம் திரும்பி கிடைக்காது என்று சொல்லித்தான், அவர்கள் மனதை தயார் செய்தேன். என்னை பயணம் அனுப்பி வைக்க யாரும் வரவில்லை. அது குறையென்றும் தோன்றவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.