சனி, 3 மே, 2025

பறவையின் வானம்

சில பாடல்கள், சட்டென்று பரவசத்தை பரப்பிவிடுகிறது மனதில். ஓராயிரம் முறை கேட்டிருந்தாலும், ஒவ்வொரு தடவையும் நீர் பரப்பில், இலாவகமாய் இறங்கி, கிறங்கடிக்கும் பறவையை போல. ஆளில்லா வானத்தை ஸீவகரித்து உல்லாச பயணங்கொள்ளும் பருந்தை போல. அது, தன் சிறகை கீழ் அழுத்தி கொடுக்கும் ஒரு விசையில், ஒரு பாடல் தூரமே பயணிக்கும். ஆனால் மேலுயர்ந்தும், சரிந்தும் அது போகும் தூரமானது, நான் அப்பாடல் தரும் கற்பனையிலும், நினைவுகளிலும் போவது போன்றது. ஆகாய கங்கையில் ஒரு ஆனந்த நீச்சல் அது.


அப்படி ஒரு உணர்வினை என்றும், எக்கணத்திலும் எனக்குள் ஏற்படுத்தும் பாடல்களுள் முதன்மையானது “சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதற்கு…”என்னும் பாடல் “உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் இருந்து. (பஞ்சாபி நாட்டுப்புற பாடலான “Laung Gawacha” பாடலின் அதே மெட்டில் அமைந்த பாடல்தான் என்றாலும், முகப்பிசை, இடையிசை நம்மூர்க்கேற்றவாறு மாற்றியமைக்கப்பட்டிருக்கும். )


“சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதற்கு

அது தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானமிருக்கு..”









எழுத தொடங்கியபோது, இப்பாடலின் வரிகள் என் நினைவில் இருந்தத்தாய் தடங்கள் இல்லை. பாடல்கள் பற்றி எழுத நினைத்ததும் இயல்பாய் வந்தமைந்த படிமம், பறவை. அதை கொண்டு தொடங்கி வரிகளை எழுதி வந்தபோது, இரண்டும் இசைவு கொண்டதிலும் பரவசம் நுரைத்து பரவுகிறது நெஞ்சில்.


"உள்ளத்தை அள்ளித்தா" படத்தை நினைத்தாலே இனிமையான நாட்களின் தித்திப்பு மனதில். எனது பள்ளி விடுமுறை நாட்கள் முழுவதும் சித்திரைப்பட்டியில் தான் (துறையூரில் உள்ள ஒரு கிராமம்). அப்போதெல்லாம் படங்கள், பாடல்களில்தான் முழு பித்து. சிறு வயதில் ஊரில் மட்டுமே பெரும்பாலும் குடும்பத்துடன் படங்களுக்கு சென்றிருக்கிறேன். துறையூரில் மூன்று தியேட்டர்கள் அப்போது. பிரசன்னா, பாரதி மற்றும் அஜந்தா தியேட்டர்கள். அதில் பிரசன்னா தியேட்டர் சற்று பெரிதானது. தியேட்டர்களில், Box டிக்கெட்கள் வாங்கி மாடியில் உட்கார்ந்து பார்க்கும் கர்வம் மிகுந்த நாட்கள் அவை.








ஊரில் இருக்கும் நாட்களில், பொதுவாய் காலையில் 8:30 மணிப்போல், வீட்டுத் திண்ணையில் ஒரு சிறு மாநாடு நிகழும். குடும்பத்து ஆளுங்க தான். வேறு என்ன, வந்த கதை, போன கதை என்று அரைத்த மாவை அரைக்க ஆரம்பிப்பார்கள். அப்போது என் மிலிட்டரி மைண்ட் தீவிரமாக வேலை செய்ய அரம்பிக்கும். இன்று என்ன செய்யலாம். எங்கு போகலாம். புதுசா என்ன படம் வந்திருக்கு? இப்படியான யோசனைகளும், அதை தொடர்ந்து திட்டங்களும். அன்றைய திட்டம் படம் பார்க்க போவது. பொதுவாக, அப்பாவின் நாடி அறிந்து, நேரம் பார்த்துக் கேட்பேன். ரஜினி படமென்றால் எந்த முயற்சியும் தேவையில்லை, வேலை அது பாட்டுக்கு நடந்து, எல்லோரும் பயபக்தியாய் கிளம்பிவிடுவார்கள். (இச்சமயத்தில், ரஜினியிடம் இவர்களுக்கு இருந்த பக்தியில், தமிழில் கோலோச்சிய ஒரு சென்சிபிளான நடிகனை, கண்ணில் காட்டாது, எங்கள் வீட்டில், என் வயசு பிள்ளைகளை வளர்த்தெடுத்தார்கள் என்பதை சொல்லியாக வேண்டும். அதில் மிக முக்கிய பங்கு என் சித்திக்கே. பின்னாளில் நானே ஒரு படத்தில், ஒரு காட்சியை கண்டு தெரிந்து கொண்டேன், என் குடும்பம் கலைக்கு எதிராய் எவ்வளவு பெரிய சதி செய்திருக்கிறது என்று. அந்த படத்தின் பெயர் ‘தெனாலி’, அந்த நடிகன், பெயர் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?)


கார்த்திக்- அம்மாவிற்கும், சித்திக்கும் பிடித்தமானவர். ஆகையால் நான் இப்படத்திற்கு பெரிதாய் மெனக்கெட வேண்டியிருக்கவில்லை. ஆனால் எனக்கு இன்னொரு பிளான் இருந்தது. ‘பூவே உனக்காக’ படமும் ஊரில் ஓடுகிறது. அதையும் பார்த்துவிட வேண்டும் என்று. சித்தியை விட்டு, என் அப்பாவிடம் கேட்க வைத்தேன். எங்க அப்பா, “ஒரே நாளே பாக்கணுமா, ஒரு படம் போயிட்டு வாங்க” என்று குரல் எடுக்க, நான் சித்தியின் அப்பாவிடம் சிபாரிசுக்கு சென்றேன். வீட்டிற்கு பெரியவர். “விடுய்யா போயிட்டு வரட்டும். ஆட்டோ செலவு ஒன்னா போயிடும்ல” என்று சொன்னார். அதற்கு எல்லாம் மசியுற ஆள் என் அப்பா இல்லை என்றாலும், தனது மாமன் பேச்சுக்கு மறுபேச்சு இல்லாமல் சரி என்று சொல்லிவிட்டார். நமக்கு அவ்வளவுதான் வேணும். காலை காட்சி 10:30க்கு பிரசன்னாவில் ‘பூவே உனக்காக’. மதியம் 2 மணி காட்சி அஜந்தாவில் ‘உள்ளத்தை அள்ளித்தா’. நடுவில் சாப்பாடு பற்றியெல்லாம் யாருக்கும் எண்ணமே இல்லை. சில பல கோதுமை இனிப்புகளும், பஜ்ஜிகளும், கோன் ஐஸ்களுமே வயிற்றுக்குத் துணை. வழித்துணைக்கு என் இரு மாமன்களில் யாரும் ஒருவர் எப்போதும் வருவார்கள். அந்த தடவை ஆனந்த் மாமா. அவர் வந்தால் பலகாரங்களுக்கு பங்கமில்லை. வாங்கி அடுக்கிவிடுவார்.(இன்று வரை அப்படித்தான்). 


எனக்கு இன்னும் தெளிவாய் நினைவிருக்கிறது. இரண்டு படத்தில் எதை முதலில் பார்ப்பது என்று ஒரு குழப்பம். என் அம்மா, சித்தியிடம் கேட்டால், “உன் இஷ்டம் பாப்பா” என்றார்கள். என் தம்பி சிறு பிள்ளை. நான் தான் முடிவெடுக்க வேண்டும். அதுவே ஒரு கிளர்ச்சிதான். எனக்கு மிக பிடித்த ஒன்றை சீண்டாமல், தீண்டாமல் இறுதி வரை வைத்து ரசிக்கும் பழக்கமுண்டு. இன்று வரையிலும் அப்படித்தான். Dairy milk-ம், Lacto king -ம் கையில் இருந்தால், எனக்கு சுமாராக பிடிக்கும் லாக்டோ கிங் தான் முதலில் தேர்ந்தெடுக்கப்படும். “Saving the best for the last” என்பது போல், மிக பிடித்ததை கடைசியாய் சுவைக்க வைத்திருப்பேன். அப்படித்தான் உள்ளத்தை அள்ளித்தா. 


‘பூவே உனக்காக’- விஜய், என்னுடைய craze. போய் பாக்கணும் அவ்வளவுதான். மற்றபடி படம் பற்றியெல்லாம் தெரியாது. உள்ளத்தை அள்ளித்தா - கவுண்டமணி, செந்தில் இருக்கிறார்கள். ஜாலியாக இருக்கும் என்ற எண்ணம். அந்த வயதில் காமெடிதான் பிரதானமாய் தெரிந்தது.ஆகையால் பிடித்ததற்கு முன்னுரிமை கொடுத்து பின்னுக்கு தள்ளிவிட்டிருந்தேன்.


முதல் படம் கொடுத்த ஒரு இனம் புரியாத வலியை, இந்த படம் ஆற்றிக் கொண்டிருந்தது. தொடர்ந்து வயிறு குலுங்க தியேட்டரே சிரிப்பில் மூழ்கியிருந்தது. இடைவேளை முடிந்து வரும் பாடல் இது. படத்தின் கடைசி பாடலும் கூட. முன்னரே பாடல்களை ரேடியோவிலும், திருச்சி சங்கம் ஹோட்டலில், ஜமீலா அக்காவின் திருமண வரவேற்பு நிகழ்விலும் கேட்டிருந்தேன். “ஐ லவ் யூ லவ் யூ” பாடல்தான் எனக்கு பிடித்திருந்தது. இந்த பாடல் இருப்பதே தெரியாது.  எனக்கொரு இனிய அதிர்ச்சியாய்தான் இந்த பாடல் படத்தில் இருந்தது. 


பாடல் ஆரம்பிக்கும் விதமே ஒரு கொண்டாட்டத்திற்கான முகாந்திரமாய் தோன்றும். குளிரோங்கிய காலை பொழுதில், ஓட முடியாமல் பாதியில் கவுண்டமணி அண்ணன் நின்று விட, எல்லோரும் அங்கே ஆஜராக, செந்தில் அண்ணன் சைக்கிளில் வந்து அங்கே பிரேக் போட்டு வசனம் பேச, அவர் சைக்கிளை உதைத்து விடுவார் கவுண்டமணி அண்ணன். அந்த சறுக்கலில் அவர் சரிந்து செல்ல, பாடலின் கொண்டாட்டம் துவங்கும்.


ராஜாவிற்கும் (கார்த்திக்), இந்துவிற்கும் (ரம்பா) இடையே காதல் மலர்ந்திருக்கும் நேரம். 


தேநீர் கோப்பைகளை எடுத்து கொண்டு, விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு இந்து வரும்போது, ஒரு close shot ராஜாவிற்கு. பந்தை ஒரு ஷாட் அடித்துவிட்டு அவர் இந்துவை பார்ப்பதுபோல. அதை கட் செய்ததும், தனது மாராப்பை சரி செய்வது போல், சுடிதார் ஷாலை சரிசெய்து கொண்டே, புது மலர் விரியும் வெட்கத்துடன் ஒரு பார்வை வீசுவாள் இந்து. இப்போது கண்ணில் அக்காட்சியை நிறுத்தி பார்த்தால், கார்த்திக்கின் கவனம் டீ கோப்பையில் மட்டுமே இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 


இந்துவின் அப்பார்வை, காதல் தரும் பரவசத்தில் மூழ்க தொடங்கியிருப்பவளாய் தோன்றும். தனக்கான ஒருவனை கண்டடைந்ததும் பெண்கள் போகும் அந்த கற்பனையின் தொலைவிற்கு ஒரு ஆணால் ஈடு கொடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அதுவும் அந்த பெண் கவிதைகளிலும், காவியங்களிலும் திளைப்பவளாய் இருந்தால், இன்பம் அலாதி.


இருவரில், காதலுக்காக முயன்றவன் ஆணாய் இருந்தாலும், காதல் வந்ததும், அதை அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்லும் தைரியம் அவளுக்கே இருக்கிறது. அவள் கேட்கிறாள், 


தொட்டவுடன் சிணுங்கிடும் 

செடி ஒன்னு இருக்கு

தொட்டவுடன் மொட்டுவிடும் 

கொடி என்ன சொல்லவா 

கொடி என்ன சொல்லவா?


அதை கேட்டதும், அவன் அறிந்து கொள்கிறான், தன் கரம் பிடித்து, அவள் அழைக்கும் பயணத்தை. அதற்கு அவன் பதில் சொல்கிறான், 


மின்னலுக்கு வெட்கம் வர 

மண்ணில் வந்து நடக்கும்

கன்னிமகள் சின்ன இடை 

கொடி என்று சொல்லவா 

கொடி என்று சொல்லவா..


சொன்னதும் அவள், அவன் தன் எண்ணத்தை தொட்டுவிட்டதில் சிலிர்த்து விடுகிறாள். தன்னையே தொட்டுவிட்டதாய் துடித்து உவக்கிறாள். அடுத்த சூசக கட்டளையிடுகிறாள், அவனுக்கு.


சிக்கி முக்கி கல்லப்போல 

பத்திகிச்சு நெருப்பு 

நெஞ்சுக்குள்ள 

ரெண்டு பங்கு துடிப்பு

நான் பச்சை வாழையா 

முத்தம் சிந்தி என்னை அணைக்கும் 

நீ சாரல் மழையா..


அந்த ஆணின் கைகளும் கவிதையில் நனைந்திருந்தால், அங்கு மலரும் மலர்களின் வாசமே மூர்ச்சை தரும். அதில் ஒரு நிம்மதி பிறக்கும்.


வண்ணமதி வட்டமதி 

வானத்திலே இருக்கும் 

பூமி எல்லாம் தேடும் மதி 

என்னவென்று சொல்லவா 

என்னவென்று சொல்லவா


நீ எனக்கு தந்த மதி 

உன் மடியில் கிடைக்கும் 

‘நிம்மதி’ தான் என்று உந்தன் 

காதில் வந்து சொல்லவா 

காதில் வந்து சொல்லவா…


காதலில் ஆழும் மனதானது, தன் இணையின் உருவத்தை, உணர்வை, பெயரை சொல்லி சொல்லி உவகை கொள்ளும், அதில் உள்ளம் தாங்காமல் நோவும் கொள்ளும். அது தரும் தகிப்பு எப்படி இருக்கும் என்று சொல்லும் அந்த சொல்லாட்சி, சொல்லும் தருணமெல்லாம், என்னுள் உவகை எழும். அந்த தகிப்பை தணிக்க அவள் மழையாகும் அழகு, பாடலின் அழகான முத்தாய்ப்பு.


உள்ளமெங்கும் உன் பெயரைச் 

சொல்லி சொல்லி துடிக்கும் 

உள்ளுக்குள்ளே 

‘ஊமை வெயில்’ அடிக்கும்

பனி சிந்தும் பூவனம் 

போர்வை போலென்னை மூடும் 

ஒரு சேலை மேகம்


மணிவண்ணன்-கவுண்டமணி அவர்களின் உரையாடல் சந்தத்தோடு, இப்பாடலின் இடையிசையாய் (Interlude) அமைந்திருக்கும். ரம்பாவின் ஆடை வடிவமைப்பு ரசிக்கதக்கதாய் இருக்கும். ரம்பா இயல்பிலேயே நல்ல நடனம் ஆடக்கூடியவர். அவர் பாட்டுக்கு ஆடும்போது, கார்த்திக் அவர்பாட்டுக்கு ஆடுவார். அதில் ஒரு இயல்பும், அவர் உள்ளூர ரசிக்கும் உணர்வும் அழகாய் வெளிப்படும்.


படம் வந்து ஐந்து வருடங்கள் கழித்து, அதே குரூப்பாக நாங்கள் ஊட்டி சென்றிருந்தபோது, படமாக்கப்பட்ட அந்த பங்களா, பாடல் எடுக்கப்பட்ட பைகாரா அருவி பகுதிகள், படத்தில் முக்கியமாக இருந்த அந்த அலமாரி என்று கண்டு களித்தோம். முப்பது வருடம் நெருங்கியும், இன்னும் அந்த நினைவுகள், அழகான ஊட்டி காலநிலையில், எங்கோ தன் பார்வையை செலுத்தி, இளைப்பாறிக் கொண்டிருக்கும், அந்த குதிரையின் கண்களில் நிலைத்திருக்கின்றன.


*




வியாழன், 17 ஏப்ரல், 2025

நீலஜாடி (The Blue Jar - Isak Dinesen) - மொழிப்பெயர்ப்பு, அருண்மொழி நங்கை

நினைக்கவே இனிமையாகத் தான் இருக்கிறதல்லவாநாம் சற்று பொறுமையாக இருந்தால் போதும்நம்மிடமிருந்ததெல்லாம் நிச்சயமாகத் திரும்பி வந்து சேர்ந்துவிடும்”.

இவ்வரியை வாசித்து முடிக்கையில் மனதில் ஒரு சிறு அதிர்வுடன் கூடிய நிறைவுஎன்னை விட்டு பிரிந்த உறவுகள் என் தோள் தொட்டு கூறிய ஆறுதல்அடுத்த சிலநிமிடங்கள் நான் அந்த நிறைவுடன் சுழன்று கொண்டிருந்தேன்.

அந்த ஒன்பது நாட்கள் நீலம் சூழ அவள் வாழ்ந்திருந்த கணங்கள்அந்த நீலத்தை மீண்டும் மீண்டும் உள்ளத்தில் மீட்டியபடி இருக்கிறாள்தன் வாழ்நாள் முழுவதுமாய்இறுதியில் அந்த நீலம் மட்டுமே போதுமானதாய் இருந்திருக்கிறதுகதையை வாசித்து முடிக்கையில்எனக்கும் Titanic படக்காட்சிதான் நினைவில் தட்டியது.

தனக்கு நெருங்கிய உறவில் இருந்தவர் என்றாலும்தனது தந்தையே ஆயினும்அந்த தருணத்தில் தன்னைத் தனியே விட்டுச்சென்றுவிட்டதை நினைத்து அவள் திகைத்திருக்கக்கூடும்அந்த சந்தர்ப்பத்தில் மனம் அவரை விட்டு அந்நியப்பட்டிருக்கும்அப்போது அவள் அண்டத்தையே தனது சொந்தமாக்கி கொள்கிறாள்அந்த மாலுமியை கூட அவள் அவ்வண்டத்தின் ஓர் அங்கமாய் மட்டுமே பார்த்திருக்கலாம்அவளது தேடல் மனித இருப்பை தாண்டிய ஒன்றாக இருந்திருக்கலாம்இருப்பு (Being) என்பது மட்டுமாக இருந்திருக்கலாம்

அவளுக்கு காலம் என்பது ஒட்டாத நேர்கோடுகள் அல்லநூலின் ஒரு நுனியை கொண்டு மறு நுனியுடன் வளைத்து இணைக்கிறாள்ஒரு நுனி அவள் வாழ்ந்த காலம்(Past), மறு நுனி அவள் எதிர்நோக்கும் காலம்(Future), இணைப்பு – அவள் அதை நோக்கி குவித்த செயல்பாடு (Present). ஆகையால்தான்அவளால் எளிதாய் காணமுடிகிறதுபூமி கோளின் மறுபுறம் அவளுக்கான பயணத்தை

சில நாட்களுக்கு முன்புஎன் நண்பருடன் உரையாடலில் இருந்தபோதுஎன் தந்தையின் இழப்பு பற்றிய பேச்சு வருகையில் நான் அவரிடம், “ சில நேரங்கள் எனக்குத் தோன்றும்பூமி கோளின் இந்த பக்கம் நானிருக்கிறேன்சற்று சுத்திச் சென்று மறுபக்கம் பார்த்தால் அவர் இருப்பார்ஆகையால்ஆசுவாசமாய் இருக்கிறேன் “ என்றேன்.  அப்போது எனக்கு ஐசக் டெனிசனையும் தெரியாதுஹடெக்கரின் தத்துவமும் தெரியாது.

அங்கே பூமிக் கோளத்தின் மறுபுறம் ஒரு கப்பல் பயணம் செய்கிறதுஅதனுடன் நான்இணைக்கப்பட்டிருக்கிறேன்”.

மூழ்குதல் என்பதே உங்களின் வார்த்தைநான் உறுதியாகக் கூறுவேன்கடலில் கீழ்மேல் என்று எதுவும்கிடையாதுஅந்த மையத்தில் நாங்கள் சந்தித்துக் கொள்வோம்”.

சைதன்யாவின் கட்டுரைகள் வழிஅதற்கான ஜெ-யின் எதிர்வினை பதிவை வந்தடைந்து அதிலிருந்து அருணா அக்காவின் (நீல ஜாடிமொழிப்பெயர்ப்பில்ஐசக் டெனிசனை கண்டுக்கொண்டேன்ஒருவகையில்இவரும் எனது பிரதிபலிப்பேஇப்போது யோசிக்கையில்இச்சிந்தனையும் கச்சிதமாய் பொருந்துவதை உணருகிறேன்.

ஆழ்கடலில் பரஸ்பர பிரதிபலிப்பு போலத்தான் நாங்கள்.

அவளது தேடல் அவளை வந்தடைந்ததும்அவள் நிறைவுறுகிறாள்நம்மை அந்த நீலமாய் தொடர விரும்புகிறாள்இக்கட்டுரையை முடித்து கொள்ள எத்தனிக்கும்போதுமீண்டும் அவ்வரி என்னுள் எழுகிறதுமேலும் என்னை ஒரு அகவிரிவுக்கு இட்டுச்செல்கிறது.

நம்மிடமிருந்ததெல்லாம்” நிச்சயமாகத் திரும்பி வந்து சேர்ந்துவிடும்என்கிறார். ‘நமக்குள்ளவை’ என்று எதிர்காலத்தை சொல்லவில்லைநம்மிடம் இருந்தவை என்று நிகழ்ந்த காலத்தை சொல்கிறார்

நித்திய மறுவாழ்வை (Eternal recurrence) நோக்கும் தைரியமும்,நம்பிக்கையும் அவள் வார்த்தையில் உள்ளதுவாழ்வதற்கான பெரு விழைவும்வீரியமும் கூடிய வார்த்தை

இக்கட்டுரை ஜெ-யின் தளத்தில் : https://www.jeyamohan.in/214344/

வெள்ளி, 21 மார்ச், 2025

கோதுமை மணி - மலர்விழி மணியம்

முட்டத்து மக்களும், கடற்கரையும், ஒவ்வொரு கதாப்பாத்திரமும், காற்றில் அடித்து கிளம்பிய மணற்துகள்களும், வழிந்து கொட்டிய தண்ணீர் துளிகளும், அறுத்து எரிந்து மண்ணில் விழுந்த தங்க சங்கிலியின் பொத்தென்ற ஒலியும், இவையனைத்தையும் விட, ஒவ்வொரு கணமும் அவளுள் அதிர்ந்து உருக்குலையும் உசுரும், அது தரும் விம்மலும், கதை முழுக்க என்னுள் இருந்தன. 

எஸ்தர் தன் அப்பாவை அனைத்து அழும்போதே காரணம் புரிந்து, அந்த விம்மல் என்னுள் பற்றிக்கொண்டது. 


லூர்தம்மாளின் உள் நின்று உடற்றும்  பிணியின் காரணம் புரிந்த அவள் மருமகள், (அவள் மருமகளே. இன்று கூட அவர்கள் இருவருமாய் சேர்ந்து மீன் குழம்பும், அவியலும் செய்து கொண்டிருக்கிறார்கள்)அந்த பிணியை பிடுங்கி எறிந்ததும், உச்சத்தில் அவள் கூறும் அந்த வார்த்தை - அவள் பிணி நீங்கியதை என்னுள் உணர்த்தியது. 


கதையில் நான் அடைந்த உச்சங்கள் எத்தனை எத்தனை!

“அவன் கொடுத்த முத்தங்களை தேகம் முழுதும் தேடிய அவளை நான் அணைத்தபோது”

“குடிச்சு குடிச்சு ரெண்டு கிட்டினிய கொன்னா. இனி உனக்குத் தர எனக்கக் கிட்னிதாம்ப்லே உண்டு.” (இதில் தெரிந்து விடுகிறது, லூர்தம்மாளின் எதார்த்தமும், அவள் பிணி வேறு என்றும்)

“ஜெனிஃபரைக் கண்டவுடன் தாமஸ் ஓடி வந்து அணைத்துக் கொண்டு, கூறியபோது”


சீமோன் உண்மையிலேயே சீமான் தான். அவனின் அந்த உச்ச காட்சி என் கண்திரையிலிருந்து அகலவில்லை.

ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும், ஒரு shot-க்கான நேரமேயாயினும், நுணுக்கமாய், அணுக்கமாய் என்னுள் மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறார்கள். 


முட்டத்து பசங்களும், ஊர்மக்களும், கடற்கரையும், வீற்றிருக்கும் மணற்பரப்பும், ஜெனிபரும், லூர்தம்மாளும், ஊர் பசியாற்றும் அவளின் மீன் குழம்பு வாசமாய், இனி என்றென்றும் என்னுளிருந்து எழுந்து வருவார்கள்.


மிக கச்சிதமான, ஆழத்தை தொடக்கூடிய ஓர் படைப்பு.

வியாழன், 20 மார்ச், 2025

மேலைத் தத்துவ வகுப்பு - அனுபவக் கடிதம்

அஜிதன் நிகழ்த்திய மேலைத் தத்துவ வகுப்பில் பங்குப்பெற்றதன் அனுபவ பகிர்தல், எனது ஆசிரியரின், முழுமையறிவு தளத்தில் கீழே:  

 https://unifiedwisdom.guru/201285

செவ்வாய், 18 மார்ச், 2025

தனிமையின் பெருங்கூட்டம்


மலைகளை போல் தனிமையானது உலகில் எதுவும் இல்லை என்று ஜெ கூறுவதுண்டு. அது உண்மைதான் என்று அந்த காட்சியின் உணர்வுகளை மீட்டெடுக்கையில் தோன்றியிருக்கிறது.என் தனிமையில் அங்கு சென்று நிற்கையில், ஒரு சமயம் அது என்னை அரவணைத்து கொள்கிறதாய் உணர்கிறேன். ஒரு சமயம் அதன்மேல் கை போட்டுக்கொண்டு படுத்திருப்பதாய் எண்ணிக்கொள்வேன். ஒரு சமயம் அப்போதுதான் என் தனிமையின் கீறல்களை உணர்வேன். முட்டிக் கொல்லும் அழுகையை முழுங்கிய தருணங்களும் உண்டு. விடுதலையாய் வழிய விட்ட தருணங்களும் உண்டு.


தொன்மையான மலையின் மீது எழுப்பப்பட்ட கோட்டையே எனது நகரம் என்றாலும், அதனை பார்க்கையில், மலை என்பதன் பிரம்மாண்டம் என்னை தீண்டியிருக்கவில்லை. இன்றும், நகரத்தின் நடுவில் அழகாய் வீற்றிருக்கும் ஓர் அங்கமாய் மட்டுமே அதனுடனான என் உணர்விருக்கிறது.


முதன்முதலில் என் வாழ்வில் நான் மலைகள் என்று பார்த்து பிரமித்தது எங்கு என்று எண்ணிப்பார்க்கிறேன். சிறு வயதில் என் தந்தை ஊரான துறையூருக்கு செல்லும் வழியில் உள்ளது நான் கண்ட முதல் மலைகள். மலைகள் அல்ல குன்றுகள். அந்த வயதில் அவை எனக்கு மலைகள். பேருந்தில் செல்லும் வழியில் இருக்கும் மலைகளில், சில இடங்களில் வெள்ளை சுண்ணாம்பில் பிரம்மாண்டமாய் சிலுவை எழும்பி காட்சியளிக்கும். சில இடங்களில் கல்லூரியின் பெயர் மற்றும் படிக்கும் ஆண்டு என சேர்த்து ‘ஜெயராம் காலேஜ் III year B.E’ என்பது போல் குறிப்புகள் கண்ட நினைவுண்டு. நம்ம ஊருக்குள்ளேயே மலைகள் உள்ளதா என்ற ஆச்சரியம் அப்போது. பச்சை மலைத்தொடர் அடியில் உள்ள ஊர்,துறையூர். திருச்சியிலிருந்து 47 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் அவ்வூரிலே பச்சை மலைத்தொடரின் அங்கமான பெருமாள் மலை உண்டு. மலை மேல் வண்டியில் சென்றபோது அடைந்த பரவசத்தையும், அந்த சிறுமியின் முகத்தையும் இப்போது நினைவு கூர்கிறேன். பின்பு, வின்ச்சில் பழனி. அடிக்கடி சென்றதுண்டு. குதூகலமும், குறுகுறுப்பும் நிறைந்த அனுபவங்களாய் எஞ்சியிருக்கின்றன.


முதன்முதலில் தொடர் மலைகளை நான் கண்ட நாள் ஜூன் 8, 1998.மேட்டடர் வண்டியில் அம்மா, அப்பா, பெரியப்பாக்கள், மாமாக்கள், பெரியப்பா மகள்கள் என கூட்டமாய் நாங்கள் சென்ற ஒரு திருமண நிச்சயதார்த்தம். கோயம்புத்தூர் வழியாய் பாலக்காடு சென்றோம். அப்போது தூரமாய் அமைதியாய் நின்றுகொண்டு என்னை பார்த்து கொண்டிருந்தன மலைகள். பனி மூட்டங்கள் வளர்ந்தும், களைந்தும் அலைந்து கொண்டிருந்தன. கையில் சித்தப்பாவின் யாஷிகா கேமராவில் முதன்முதலாய் படங்கள் எடுத்து கொண்டிருந்தேன். என் பெரியப்பா மகள் கேட்டபோது கொடுக்காது, என் கையை இழுத்து கொண்டதை நினைக்கையில் இப்போது வலிக்கிறது. அவள் அந்த ஏக்கத்தை மறந்து ‘அதோ அதை எடு’ என்று உற்சாகமாய் மலையை சுட்டிக்காட்டியது தீயாய் சுடுகிறது. இக்கணம் அவளிடம், நான் அந்த கேமராவையும், ஜன்னல் சீட்டையும் விட்டுத் தருகிறேன். 


அடுத்த பயணம் தொட்டபேட்டா. மலை உச்சியில் அப்பா, அம்மா, மாமா, தம்பியுடன் நின்றதும், என் அப்பா அங்கிருந்து அவர் அம்மாவிற்கு போன் செய்து தன் இன்பத்தை பகிர்ந்து கொண்ட காட்சியும் மாறாமல் என்னுள் நிலைத்திருக்கிறது.


2010-ல், புவியின் குடும்பத்தோடு வேங்கட மலை(திருப்பதி) பயணம். ஏழுமலைகளுள் ஒன்றான அம்மலை பயணமும், அனுபவமும் முற்றிலும் எனக்கு புதிது. என் குடும்பத்தை விட்டு தனியாக வேறொரு குடும்பத்தோடு நான் செய்த முதற்பயணம். அந்த பயணம் எனக்கு மகிழ்வான பயணமே என்றாலும் கூட, ஏதோ ஒரு நொடியில் என் குடும்பத்தை அவர்கள் முகத்தில் தேடியதன் தீற்றல் என் கண்ணில் தென்படுகிறது. என் குடும்பத்தில் கலகலப்பாய் ஆடிப்பாடி குதூகலிக்கும் வாய்ப்பு கிடையாது. அப்பா கண்டிப்பானவர். பழைய பாடல்களின் அறிமுகமும்,ரசனையும் அவரிடமிருந்தே வந்தன என்றாலும், பாடல்களின் உணர்வுகளை வெளிக்கொட்டி குதூகலிக்கும் இடமாய் என் குடும்பம் இருக்கவில்லை. அவ்விடத்தை நிரப்பிய பெருமை அவளுக்கும், அவள் குடும்பத்திற்குமே. அவள் பெரியம்மா பசங்களோடும், உடன்பிறந்தவர்களோடும் நான் என்னையும் இணைத்து கொண்டு மகிழ்ந்திருந்த தருணங்கள். முதன்முதலில் இசைஞானியின் ‘ஏகாந்த வேளை..இன்பத்தின் வாசல்’ பாடல் கேட்ட பயணமது. திரும்பி வரும் வழியில், தொடர் (ஏழு) மலைகளை பார்த்தபோது, அரங்கநாதர் சயனம் கொண்டிருப்பதாய் தோன்றியது. 


அதை விஞ்சும் ஓர் அழகு ஒரு நாள் இரவு அந்த அழகிய முழுநிலவொளியில். எப்போதையும் விட, அந்த வானில் அன்று நிலாப்பொலிவு, பொலிவென்பதை கடந்து வழிந்து கொண்டிருக்க கண்டேன். நான் அருகில் அமர்ந்திருக்க, பிரேம் அக்கருக்கிருட்டில் எங்களுக்கு இரவு உணவிற்காக வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறான். என்னிடம் எதுவோ சொல்லிக்கொண்டே வருகிறான், நான் ‘ம்ம்’ கொட்டி கொண்டே, நிலவை வெறித்து வந்து கொண்டிருக்கிறேன்.  

அதீத ஒளியின் பிரவாகம் என் பார்வையின் தொடு வளைவை தாண்டியிருந்தபோதும், உடல் வளைத்து, குனிந்து நிமிர்ந்து அதனை நோக்கி கொண்டிருந்தேன். மனம் கிளர்ச்சியுற்றிருந்தது. ஒரு இடத்தை கடக்கும்போது, என் கண்கள் இமைக்கவில்லை. ஆம் உண்மையிலும் இமைக்கவில்லை. 


சந்திரனின் வரம்பு மீறிய பொலிவின் ரகசியம், புலப்பட ஆரம்பித்தது. அரனின் ஒளி ஒழுகலில், அவளை கண்டேன்.அவன் விரகத்தில், அவள் முலைகள் எழுந்தமைய, தன் இடக்கையை தலை மேல் அமர்த்தி, இடக்காலை மட்டும் சற்று ஊனி,சற்றே ஒருக்களித்து, பனிவுடல் திறந்திருக்க, கொதித்திருக்கிறாள் அந்த மலைமகள்.ஆனந்த களியாட்டத்தின் தொடக்கப்புள்ளி. புடவியின் பெருவிளையாட்டு. தீரா பெருங்கனவு. காணுந்தோறும் பெருகி வழியும் கனவு. ஆடுந்தோறும் முடிவில்லா விளையாட்டு. அண்டத்தின் பெருங்கருணை, அதனை நான் காண பெற்றது என்று பிறகு சொற்வடிவம் கொடுத்து கொண்டேன். 


ரெயினியர் மலைக்கு சியாட்டலில் இருந்து காரில் சென்றிருந்தோம். அரை மணி நேர பயணத்திலேயே, மலைகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. ஒரு புறம் காஸ்கேட் பனிமலைத்தொடர்கள், மறுபுறம் ஒற்றை பனிமலையான ரெயினியர் மலை, அழகான ஓவியம்போல். தொலைவில் இருபுறமும் கிளர்ச்சியூட்டக்கூடிய பனிமலைகளின் அணிவகுப்பு, அருகில் வாஷிங்டன் ஏரியின் ஒளிப்பரப்பு, அன்னையின் கர்ப்பத்திலிருந்து வெளியேறும் மகவுகளாய், நாங்கள் இருவரும் மிதவை பாலத்தில். 


பெட்ரமாக்ஸ் விளக்கின் மேன்டிலாய் தெரிந்த அந்த ஓவியம், அருகே செல்ல செல்ல, விரிந்தெழுந்து நிமிர்ந்த ஒற்றை பிரம்மாண்டம். அதன் நீள அகலத்தில் ஓடியோடி பார்த்தும் அது தீரவில்லை. மகவுகளாய் அன்னையின் இடுப்பை, சுற்றி சுற்றி தீராத வேட்கையுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரம், பசித்தது. அப்போதுதான் அந்த ஆனந்த களியாட்டின் விருந்து.


அடுத்த நாள் காலை அன்னையின் மேலேறி உலவினோம். ஒருவாறான உச்சியில் நின்று சுற்றிலும் பார்க்கையில் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை பனிமலைகள் மட்டுமே. கோமல் கண்ட கைலாயம் போல். அப்போது மனதில் ஒரு அமைதி, ஒரு விடுதலை.


அங்கேயே சரிந்து உட்கார்ந்து சுற்றிலும் பார்த்துக்கொண்டேயிருந்தேன். இப்போதும் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். காண காண என் கண்முன் தீராது வளர்ந்து வருவது. அப்படியே படுத்துக்கொண்டேன். உள்ளே ஓராயிரம் வருடங்களின் அனல் தகித்து கொண்டிருந்த போதிலும், எனக்கு அவள் குளிர்ந்திருந்தாள். இருந்தாலும் அவள் தகிப்பை நான் உணராமல் இல்லை. அதை உணர்ந்த தருணம் என்னுள் ஒரு விதிர்ப்பு எடுத்தது.  


அடுத்த நாள் மாலை, ஒலிம்பிக் தேசிய பூங்கா. அங்கு சென்று சேரும்போதே நேரமாகிவிட்டது. மேலும், பனி புயல் இருக்கப்போவதாக கூறி, நாங்கள் செல்ல வேண்டியிருந்த மலை வழியை அடைக்கப்போவதாய் கூறினார்கள், பார்வையாளர்கள் நிலையத்தில் (Visitor Centre). முக்கால் மணி நேரமிருந்தது என்று நினைக்கிறேன். பிரேம் , “வா போகலாம், போய் பார்ப்போம்” என்றான். எனக்கும் அது எப்படித்தான் இருக்கும், போய்தான் பார்ப்போமே என்ற குறுகுறுப்பு. அழகான, குறுகலான வளைவுகள் கொண்ட மலை பாதை. வளைவுகள் மிகவும் ஆழமாக, அபாயகரமாக, அதுவும் இருவழி சாலைகளாய் மட்டுமே இருந்தது. ஒரு புறம் சிறிது தள்ளி வண்டியை ஒடித்தாலும், மலையின் கீழே இன்னோர் உலகத்துக்குள் சென்றடைவது உறுதி. அதுவே மறு புறம் திரும்பி வருகையில், மலை பாறைகள் உருண்டு வழியில் விழக்கூடிய அளவிற்கு பலத்த காற்று. ஒருவாறு அந்த காற்றில் நீந்தி கார் பார்கிங் சென்று வண்டியை நிறுத்தினான். வண்டியில் இருந்து முதல் காலடி வைத்த கணம் ஆசிர்வதிக்கப்பட்டதாய், அன்றைய பனி பொழிவு. கீழே பள்ளத்தாக்கு முழுதும் பனியால் நிரப்பப்பட்டதாய் இருந்தது. நன்கு குளிருங்கூட. 


சற்று நேரத்தில், காவலர் வந்து அனைவரையும் மலை இறங்க சொல்லிவிட்டார். திரும்பு வழியில் நான் சிறிது தூரம் வண்டியை ஓட்டிக்கொண்டு, பிரேமை அந்த தருணத்தை அனுபவிக்க செய்தேன். மீண்டும் ஒரு இடத்தில் பார்கிங் செய்து, சற்று நேரம் நின்றோம். ஹரிக்கேன் மலை தொடர்கள் அவை. மிக பிரம்மாண்டமான முடிவுகளற்ற மலைகள். எண்ண எண்ண எண்ணிக்கை தவறிக்கொண்டே இருந்தவை. ஒரு கட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு எண்ணுவதை கைவிட்டேன்.


திரும்பும்போது எதிர்காற்றில், பனி துளிகள் சிறு சிறு மேகத் துண்டுகளாய், என்னை சூழ்ந்த இன்பமாய், என்னிடம் நோக்கி வந்தன. என்னை அடையாது கண்ணாடியில் பட்டு தெறித்து வழிந்தன. அதன் வெளியின் மறுபுறம் நான் நின்று அதை ஸ்பரிசித்தேன். உடைந்த சில துளிகள், மேல்நோக்கி நகர்ந்தன. நானும் நகர்ந்தேன்.

புதன், 12 மார்ச், 2025

அகமும் புறமும் - கமலதேவி

குறுந்தொகை என் வீட்டு நூலகத்தில் நெடுநாளாய் இருக்கிறது. என்னிடம் ஒரு பழக்கம், எதை எடுத்தாலும் அதை வரிசைப்படி வாசிக்க வேண்டும், ஒன்றையும் விடாமல் வாசிக்க வேண்டும் என்று எண்ணியே பெரும்பாலும் அதை எடுக்காமல் இருந்து விடுவேன். சிறுகதைகளிலும் இதே கோளாறுதான் எனக்கு. கமலா அக்காவின் இந்த நூல், என் பழக்கத்தை மாற்றிக்கொண்டு இதில் வரும் குறுந்தொகை உட்பட மற்ற தொகை நூல்களில் இருந்து அவர் தேர்ந்தெடுத்து தந்த சங்கப் பாடல்களை நான் தெரிந்து கொள்ள வாய்ப்பாய் அமைந்தது. 

நாங்கள் இருவரும் சந்தித்தபோது, கமலா அக்கா “நாம சந்திக்கணுன்றது நம்ம அப்பாக்கள் ஓட விருப்பம் போல பா” , என்றார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனை உளப்பூர்வமாய் உணர்ந்தேன், இப்புத்தகம் வாசித்தப்போது. 


கண்டி கதிர்காமத்து… என்ற பத்தியிலே அப்படியே என் அப்பாவின் குரல்தான் கேட்டது. பின்பு மகள் அப்பாவிடம் கொண்டுள்ள நெருக்கமாகட்டும், அப்பா, மகளை கூப்பிடும் வழக்கம் ஆகட்டும், இப்படி வழிநெடுக, அவர்-அவர் ஐயாவின் அருகிலேயே நான் என் அப்பாவின் கைப்பிடித்து நடந்து சென்றேன். 


அகமும் புறமுமாய் செங்காந்தள் மலரை உவமையாக்கியது பேரழகு.


என்னை பாதித்த ஒரு முக்கியமான வரி, ‘தந்தைக்குப்பின் யாரிடமும் நமக்கு பிடித்த தின்பண்டங்கள் கேட்பதில்லை’ என்பது. அது நூற்றுக்குநூறு உண்மையே. அந்த வரியில் நெஞ்சடைத்து நின்றேன்.இது போல் பல இடங்களில், தன் அகத்தை எழுத்து மூலம் புறவயமாக்கி, வாசகர் அகத்தின் அகமாய் அதை மாற்றுகிறார். அந்த வகையில் இந்நூல் முக்கியமான நூல். 


என்னை மேலும் இந்நூலுடன் நெருக்கமாக்கியது, அவர் தாய் வழி தாத்தனும், என் தந்தை வழி தாத்தனும் பிழைக்க சென்ற கண்டியோ, அவர் தன் தோழியின் காதலை கண்டு கொண்ட என் ஊரோ, இன்றும் அறிவு கொடை நல்கும் வெங்கட்ராமன் டாக்டரை நானும் அறிந்திருந்ததோ, எனக்கு இன்று நினைத்தாலும், உலகிலேயே நான் சந்தோசமாய் இருந்த இடமான சித்திரைப்பட்டியை அவர் வரியில் கண்டதோ என்று யோசித்து பார்க்கிறேன். நான் உணர்வது இந்த படைப்பில் உள்ள உண்மை தன்மை.  அவர் விரித்து வைத்த காட்சிகள். அவையே என்னை நெருக்கமாக்கின. ஒவ்வொருவருடனும் நான் அருகிருந்தேன். மேலும், நிவேதாவை நான் நேரில் பார்த்து பேசியிருப்பதால், அவரின் முக பாவனைகளும், குரலும் துல்லியமாய் விரிந்தன. 


தன் பாட்டியுடன் வயகாட்டில் அவர் கதை கேட்டது போலவே, சித்திரப்பட்டியில் என் அப்பாயியுடன் கயிற்று கட்டிலில் படுத்துக்

கொண்டு, நிலவை கண்டு, நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு அவரது சிலோன் வாழ்க்கையை கேட்டிருக்கிறேன்.


ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு உயிரை அடையாளமாக்கியதும், ஒவ்வொரு வார்த்தைக்கும் அதற்கான உணர்வின் உருவத்தை அப்படியே படம் பிடித்து காட்டியதும் அபாரம். தாபதம் என்று உச்சரிக்கும்போது நான் எவ்வாறு உணர்ந்தேன் என்று அவர் எழுதியிருக்கிறார்.


ரங்கநாயகியை தேடி, நாரயணசாமி ஶ்ரீரங்கம் தானே வந்து சேர வேண்டும் என்று சொல்லத் தோன்றியது. மேலும், அல்லி அரிசி சோறு கொடுத்ததும், எருக்க மாலை போட்டு கிடத்தியதும், மடலேறுதலையும் வாசிக்கையில் உள்ளே சிறு அதிர்வுகள். 


இதில் எனக்கு மனதிற்கு நெருக்கமான இன்னொரு விஷயம், நான் அண்மையில் எழுதிய வெண்பாவில் கையாண்ட ஒரு சித்திரம், ஒரு சங்க பாடலில் கண்டதுதான். எம் மூதாதையரின் சிந்தனை தொடர்ச்சியே நான்.