சனி, 3 மே, 2025

பறவையின் வானம்

சில பாடல்கள், சட்டென்று பரவசத்தை பரப்பிவிடுகிறது மனதில். ஓராயிரம் முறை கேட்டிருந்தாலும், ஒவ்வொரு தடவையும் நீர் பரப்பில், இலாவகமாய் இறங்கி, கிறங்கடிக்கும் பறவையை போல. ஆளில்லா வானத்தை ஸீவகரித்து உல்லாச பயணங்கொள்ளும் பருந்தை போல. அது, தன் சிறகை கீழ் அழுத்தி கொடுக்கும் ஒரு விசையில், ஒரு பாடல் தூரமே பயணிக்கும். ஆனால் மேலுயர்ந்தும், சரிந்தும் அது போகும் தூரமானது, நான் அப்பாடல் தரும் கற்பனையிலும், நினைவுகளிலும் போவது போன்றது. ஆகாய கங்கையில் ஒரு ஆனந்த நீச்சல் அது.


அப்படி ஒரு உணர்வினை என்றும், எக்கணத்திலும் எனக்குள் ஏற்படுத்தும் பாடல்களுள் முதன்மையானது “சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதற்கு…”என்னும் பாடல் “உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் இருந்து. (பஞ்சாபி நாட்டுப்புற பாடலான “Laung Gawacha” பாடலின் அதே மெட்டில் அமைந்த பாடல்தான் என்றாலும், முகப்பிசை, இடையிசை நம்மூர்க்கேற்றவாறு மாற்றியமைக்கப்பட்டிருக்கும். )


“சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதற்கு

அது தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானமிருக்கு..”









எழுத தொடங்கியபோது, இப்பாடலின் வரிகள் என் நினைவில் இருந்தத்தாய் தடங்கள் இல்லை. பாடல்கள் பற்றி எழுத நினைத்ததும் இயல்பாய் வந்தமைந்த படிமம், பறவை. அதை கொண்டு தொடங்கி வரிகளை எழுதி வந்தபோது, இரண்டும் இசைவு கொண்டதிலும் பரவசம் நுரைத்து பரவுகிறது நெஞ்சில்.


"உள்ளத்தை அள்ளித்தா" படத்தை நினைத்தாலே இனிமையான நாட்களின் தித்திப்பு மனதில். எனது பள்ளி விடுமுறை நாட்கள் முழுவதும் சித்திரைப்பட்டியில் தான் (துறையூரில் உள்ள ஒரு கிராமம்). அப்போதெல்லாம் படங்கள், பாடல்களில்தான் முழு பித்து. சிறு வயதில் ஊரில் மட்டுமே பெரும்பாலும் குடும்பத்துடன் படங்களுக்கு சென்றிருக்கிறேன். துறையூரில் மூன்று தியேட்டர்கள் அப்போது. பிரசன்னா, பாரதி மற்றும் அஜந்தா தியேட்டர்கள். அதில் பிரசன்னா தியேட்டர் சற்று பெரிதானது. தியேட்டர்களில், Box டிக்கெட்கள் வாங்கி மாடியில் உட்கார்ந்து பார்க்கும் கர்வம் மிகுந்த நாட்கள் அவை.








ஊரில் இருக்கும் நாட்களில், பொதுவாய் காலையில் 8:30 மணிப்போல், வீட்டுத் திண்ணையில் ஒரு சிறு மாநாடு நிகழும். குடும்பத்து ஆளுங்க தான். வேறு என்ன, வந்த கதை, போன கதை என்று அரைத்த மாவை அரைக்க ஆரம்பிப்பார்கள். அப்போது என் மிலிட்டரி மைண்ட் தீவிரமாக வேலை செய்ய அரம்பிக்கும். இன்று என்ன செய்யலாம். எங்கு போகலாம். புதுசா என்ன படம் வந்திருக்கு? இப்படியான யோசனைகளும், அதை தொடர்ந்து திட்டங்களும். அன்றைய திட்டம் படம் பார்க்க போவது. பொதுவாக, அப்பாவின் நாடி அறிந்து, நேரம் பார்த்துக் கேட்பேன். ரஜினி படமென்றால் எந்த முயற்சியும் தேவையில்லை, வேலை அது பாட்டுக்கு நடந்து, எல்லோரும் பயபக்தியாய் கிளம்பிவிடுவார்கள். (இச்சமயத்தில், ரஜினியிடம் இவர்களுக்கு இருந்த பக்தியில், தமிழில் கோலோச்சிய ஒரு சென்சிபிளான நடிகனை, கண்ணில் காட்டாது, எங்கள் வீட்டில், என் வயசு பிள்ளைகளை வளர்த்தெடுத்தார்கள் என்பதை சொல்லியாக வேண்டும். அதில் மிக முக்கிய பங்கு என் சித்திக்கே. பின்னாளில் நானே ஒரு படத்தில், ஒரு காட்சியை கண்டு தெரிந்து கொண்டேன், என் குடும்பம் கலைக்கு எதிராய் எவ்வளவு பெரிய சதி செய்திருக்கிறது என்று. அந்த படத்தின் பெயர் ‘தெனாலி’, அந்த நடிகன், பெயர் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?)


கார்த்திக்- அம்மாவிற்கும், சித்திக்கும் பிடித்தமானவர். ஆகையால் நான் இப்படத்திற்கு பெரிதாய் மெனக்கெட வேண்டியிருக்கவில்லை. ஆனால் எனக்கு இன்னொரு பிளான் இருந்தது. ‘பூவே உனக்காக’ படமும் ஊரில் ஓடுகிறது. அதையும் பார்த்துவிட வேண்டும் என்று. சித்தியை விட்டு, என் அப்பாவிடம் கேட்க வைத்தேன். எங்க அப்பா, “ஒரே நாளே பாக்கணுமா, ஒரு படம் போயிட்டு வாங்க” என்று குரல் எடுக்க, நான் சித்தியின் அப்பாவிடம் சிபாரிசுக்கு சென்றேன். வீட்டிற்கு பெரியவர். “விடுய்யா போயிட்டு வரட்டும். ஆட்டோ செலவு ஒன்னா போயிடும்ல” என்று சொன்னார். அதற்கு எல்லாம் மசியுற ஆள் என் அப்பா இல்லை என்றாலும், தனது மாமன் பேச்சுக்கு மறுபேச்சு இல்லாமல் சரி என்று சொல்லிவிட்டார். நமக்கு அவ்வளவுதான் வேணும். காலை காட்சி 10:30க்கு பிரசன்னாவில் ‘பூவே உனக்காக’. மதியம் 2 மணி காட்சி அஜந்தாவில் ‘உள்ளத்தை அள்ளித்தா’. நடுவில் சாப்பாடு பற்றியெல்லாம் யாருக்கும் எண்ணமே இல்லை. சில பல கோதுமை இனிப்புகளும், பஜ்ஜிகளும், கோன் ஐஸ்களுமே வயிற்றுக்குத் துணை. வழித்துணைக்கு என் இரு மாமன்களில் யாரும் ஒருவர் எப்போதும் வருவார்கள். அந்த தடவை ஆனந்த் மாமா. அவர் வந்தால் பலகாரங்களுக்கு பங்கமில்லை. வாங்கி அடுக்கிவிடுவார்.(இன்று வரை அப்படித்தான்). 


எனக்கு இன்னும் தெளிவாய் நினைவிருக்கிறது. இரண்டு படத்தில் எதை முதலில் பார்ப்பது என்று ஒரு குழப்பம். என் அம்மா, சித்தியிடம் கேட்டால், “உன் இஷ்டம் பாப்பா” என்றார்கள். என் தம்பி சிறு பிள்ளை. நான் தான் முடிவெடுக்க வேண்டும். அதுவே ஒரு கிளர்ச்சிதான். எனக்கு மிக பிடித்த ஒன்றை சீண்டாமல், தீண்டாமல் இறுதி வரை வைத்து ரசிக்கும் பழக்கமுண்டு. இன்று வரையிலும் அப்படித்தான். Dairy milk-ம், Lacto king -ம் கையில் இருந்தால், எனக்கு சுமாராக பிடிக்கும் லாக்டோ கிங் தான் முதலில் தேர்ந்தெடுக்கப்படும். “Saving the best for the last” என்பது போல், மிக பிடித்ததை கடைசியாய் சுவைக்க வைத்திருப்பேன். அப்படித்தான் உள்ளத்தை அள்ளித்தா. 


‘பூவே உனக்காக’- விஜய், என்னுடைய craze. போய் பாக்கணும் அவ்வளவுதான். மற்றபடி படம் பற்றியெல்லாம் தெரியாது. உள்ளத்தை அள்ளித்தா - கவுண்டமணி, செந்தில் இருக்கிறார்கள். ஜாலியாக இருக்கும் என்ற எண்ணம். அந்த வயதில் காமெடிதான் பிரதானமாய் தெரிந்தது.ஆகையால் பிடித்ததற்கு முன்னுரிமை கொடுத்து பின்னுக்கு தள்ளிவிட்டிருந்தேன்.


முதல் படம் கொடுத்த ஒரு இனம் புரியாத வலியை, இந்த படம் ஆற்றிக் கொண்டிருந்தது. தொடர்ந்து வயிறு குலுங்க தியேட்டரே சிரிப்பில் மூழ்கியிருந்தது. இடைவேளை முடிந்து வரும் பாடல் இது. படத்தின் கடைசி பாடலும் கூட. முன்னரே பாடல்களை ரேடியோவிலும், திருச்சி சங்கம் ஹோட்டலில், ஜமீலா அக்காவின் திருமண வரவேற்பு நிகழ்விலும் கேட்டிருந்தேன். “ஐ லவ் யூ லவ் யூ” பாடல்தான் எனக்கு பிடித்திருந்தது. இந்த பாடல் இருப்பதே தெரியாது.  எனக்கொரு இனிய அதிர்ச்சியாய்தான் இந்த பாடல் படத்தில் இருந்தது. 


பாடல் ஆரம்பிக்கும் விதமே ஒரு கொண்டாட்டத்திற்கான முகாந்திரமாய் தோன்றும். குளிரோங்கிய காலை பொழுதில், ஓட முடியாமல் பாதியில் கவுண்டமணி அண்ணன் நின்று விட, எல்லோரும் அங்கே ஆஜராக, செந்தில் அண்ணன் சைக்கிளில் வந்து அங்கே பிரேக் போட்டு வசனம் பேச, அவர் சைக்கிளை உதைத்து விடுவார் கவுண்டமணி அண்ணன். அந்த சறுக்கலில் அவர் சரிந்து செல்ல, பாடலின் கொண்டாட்டம் துவங்கும்.


ராஜாவிற்கும் (கார்த்திக்), இந்துவிற்கும் (ரம்பா) இடையே காதல் மலர்ந்திருக்கும் நேரம். 


தேநீர் கோப்பைகளை எடுத்து கொண்டு, விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு இந்து வரும்போது, ஒரு close shot ராஜாவிற்கு. பந்தை ஒரு ஷாட் அடித்துவிட்டு அவர் இந்துவை பார்ப்பதுபோல. அதை கட் செய்ததும், தனது மாராப்பை சரி செய்வது போல், சுடிதார் ஷாலை சரிசெய்து கொண்டே, புது மலர் விரியும் வெட்கத்துடன் ஒரு பார்வை வீசுவாள் இந்து. இப்போது கண்ணில் அக்காட்சியை நிறுத்தி பார்த்தால், கார்த்திக்கின் கவனம் டீ கோப்பையில் மட்டுமே இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 


இந்துவின் அப்பார்வை, காதல் தரும் பரவசத்தில் மூழ்க தொடங்கியிருப்பவளாய் தோன்றும். தனக்கான ஒருவனை கண்டடைந்ததும் பெண்கள் போகும் அந்த கற்பனையின் தொலைவிற்கு ஒரு ஆணால் ஈடு கொடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அதுவும் அந்த பெண் கவிதைகளிலும், காவியங்களிலும் திளைப்பவளாய் இருந்தால், இன்பம் அலாதி.


இருவரில், காதலுக்காக முயன்றவன் ஆணாய் இருந்தாலும், காதல் வந்ததும், அதை அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்லும் தைரியம் அவளுக்கே இருக்கிறது. அவள் கேட்கிறாள், 


தொட்டவுடன் சிணுங்கிடும் 

செடி ஒன்னு இருக்கு

தொட்டவுடன் மொட்டுவிடும் 

கொடி என்ன சொல்லவா 

கொடி என்ன சொல்லவா?


அதை கேட்டதும், அவன் அறிந்து கொள்கிறான், தன் கரம் பிடித்து, அவள் அழைக்கும் பயணத்தை. அதற்கு அவன் பதில் சொல்கிறான், 


மின்னலுக்கு வெட்கம் வர 

மண்ணில் வந்து நடக்கும்

கன்னிமகள் சின்ன இடை 

கொடி என்று சொல்லவா 

கொடி என்று சொல்லவா..


சொன்னதும் அவள், அவன் தன் எண்ணத்தை தொட்டுவிட்டதில் சிலிர்த்து விடுகிறாள். தன்னையே தொட்டுவிட்டதாய் துடித்து உவக்கிறாள். அடுத்த சூசக கட்டளையிடுகிறாள், அவனுக்கு.


சிக்கி முக்கி கல்லப்போல 

பத்திகிச்சு நெருப்பு 

நெஞ்சுக்குள்ள 

ரெண்டு பங்கு துடிப்பு

நான் பச்சை வாழையா 

முத்தம் சிந்தி என்னை அணைக்கும் 

நீ சாரல் மழையா..


அந்த ஆணின் கைகளும் கவிதையில் நனைந்திருந்தால், அங்கு மலரும் மலர்களின் வாசமே மூர்ச்சை தரும். அதில் ஒரு நிம்மதி பிறக்கும்.


வண்ணமதி வட்டமதி 

வானத்திலே இருக்கும் 

பூமி எல்லாம் தேடும் மதி 

என்னவென்று சொல்லவா 

என்னவென்று சொல்லவா


நீ எனக்கு தந்த மதி 

உன் மடியில் கிடைக்கும் 

‘நிம்மதி’ தான் என்று உந்தன் 

காதில் வந்து சொல்லவா 

காதில் வந்து சொல்லவா…


காதலில் ஆழும் மனதானது, தன் இணையின் உருவத்தை, உணர்வை, பெயரை சொல்லி சொல்லி உவகை கொள்ளும், அதில் உள்ளம் தாங்காமல் நோவும் கொள்ளும். அது தரும் தகிப்பு எப்படி இருக்கும் என்று சொல்லும் அந்த சொல்லாட்சி, சொல்லும் தருணமெல்லாம், என்னுள் உவகை எழும். அந்த தகிப்பை தணிக்க அவள் மழையாகும் அழகு, பாடலின் அழகான முத்தாய்ப்பு.


உள்ளமெங்கும் உன் பெயரைச் 

சொல்லி சொல்லி துடிக்கும் 

உள்ளுக்குள்ளே 

‘ஊமை வெயில்’ அடிக்கும்

பனி சிந்தும் பூவனம் 

போர்வை போலென்னை மூடும் 

ஒரு சேலை மேகம்


மணிவண்ணன்-கவுண்டமணி அவர்களின் உரையாடல் சந்தத்தோடு, இப்பாடலின் இடையிசையாய் (Interlude) அமைந்திருக்கும். ரம்பாவின் ஆடை வடிவமைப்பு ரசிக்கதக்கதாய் இருக்கும். ரம்பா இயல்பிலேயே நல்ல நடனம் ஆடக்கூடியவர். அவர் பாட்டுக்கு ஆடும்போது, கார்த்திக் அவர்பாட்டுக்கு ஆடுவார். அதில் ஒரு இயல்பும், அவர் உள்ளூர ரசிக்கும் உணர்வும் அழகாய் வெளிப்படும்.


படம் வந்து ஐந்து வருடங்கள் கழித்து, அதே குரூப்பாக நாங்கள் ஊட்டி சென்றிருந்தபோது, படமாக்கப்பட்ட அந்த பங்களா, பாடல் எடுக்கப்பட்ட பைகாரா அருவி பகுதிகள், படத்தில் முக்கியமாக இருந்த அந்த அலமாரி என்று கண்டு களித்தோம். முப்பது வருடம் நெருங்கியும், இன்னும் அந்த நினைவுகள், அழகான ஊட்டி காலநிலையில், எங்கோ தன் பார்வையை செலுத்தி, இளைப்பாறிக் கொண்டிருக்கும், அந்த குதிரையின் கண்களில் நிலைத்திருக்கின்றன.


*




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.