புதன், 12 மார்ச், 2025

அகமும் புறமும் - கமலதேவி

குறுந்தொகை என் வீட்டு நூலகத்தில் நெடுநாளாய் இருக்கிறது. என்னிடம் ஒரு பழக்கம், எதை எடுத்தாலும் அதை வரிசைப்படி வாசிக்க வேண்டும், ஒன்றையும் விடாமல் வாசிக்க வேண்டும் என்று எண்ணியே பெரும்பாலும் அதை எடுக்காமல் இருந்து விடுவேன். சிறுகதைகளிலும் இதே கோளாறுதான் எனக்கு. கமலா அக்காவின் இந்த நூல், என் பழக்கத்தை மாற்றிக்கொண்டு இதில் வரும் குறுந்தொகை உட்பட மற்ற தொகை நூல்களில் இருந்து அவர் தேர்ந்தெடுத்து தந்த சங்கப் பாடல்களை நான் தெரிந்து கொள்ள வாய்ப்பாய் அமைந்தது. 

நாங்கள் இருவரும் சந்தித்தபோது, கமலா அக்கா “நாம சந்திக்கணுன்றது நம்ம அப்பாக்கள் ஓட விருப்பம் போல பா” , என்றார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனை உளப்பூர்வமாய் உணர்ந்தேன், இப்புத்தகம் வாசித்தப்போது. 


கண்டி கதிர்காமத்து… என்ற பத்தியிலே அப்படியே என் அப்பாவின் குரல்தான் கேட்டது. பின்பு மகள் அப்பாவிடம் கொண்டுள்ள நெருக்கமாகட்டும், அப்பா, மகளை கூப்பிடும் வழக்கம் ஆகட்டும், இப்படி வழிநெடுக, அவர்-அவர் ஐயாவின் அருகிலேயே நான் என் அப்பாவின் கைப்பிடித்து நடந்து சென்றேன். 


அகமும் புறமுமாய் செங்காந்தள் மலரை உவமையாக்கியது பேரழகு.


என்னை பாதித்த ஒரு முக்கியமான வரி, ‘தந்தைக்குப்பின் யாரிடமும் நமக்கு பிடித்த தின்பண்டங்கள் கேட்பதில்லை’ என்பது. அது நூற்றுக்குநூறு உண்மையே. அந்த வரியில் நெஞ்சடைத்து நின்றேன்.இது போல் பல இடங்களில், தன் அகத்தை எழுத்து மூலம் புறவயமாக்கி, வாசகர் அகத்தின் அகமாய் அதை மாற்றுகிறார். அந்த வகையில் இந்நூல் முக்கியமான நூல். 


என்னை மேலும் இந்நூலுடன் நெருக்கமாக்கியது, அவர் தாய் வழி தாத்தனும், என் தந்தை வழி தாத்தனும் பிழைக்க சென்ற கண்டியோ, அவர் தன் தோழியின் காதலை கண்டு கொண்ட என் ஊரோ, இன்றும் அறிவு கொடை நல்கும் வெங்கட்ராமன் டாக்டரை நானும் அறிந்திருந்ததோ, எனக்கு இன்று நினைத்தாலும், உலகிலேயே நான் சந்தோசமாய் இருந்த இடமான சித்திரைப்பட்டியை அவர் வரியில் கண்டதோ என்று யோசித்து பார்க்கிறேன். நான் உணர்வது இந்த படைப்பில் உள்ள உண்மை தன்மை.  அவர் விரித்து வைத்த காட்சிகள். அவையே என்னை நெருக்கமாக்கின. ஒவ்வொருவருடனும் நான் அருகிருந்தேன். மேலும், நிவேதாவை நான் நேரில் பார்த்து பேசியிருப்பதால், அவரின் முக பாவனைகளும், குரலும் துல்லியமாய் விரிந்தன. 


தன் பாட்டியுடன் வயகாட்டில் அவர் கதை கேட்டது போலவே, சித்திரப்பட்டியில் என் அப்பாயியுடன் கயிற்று கட்டிலில் படுத்துக்

கொண்டு, நிலவை கண்டு, நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு அவரது சிலோன் வாழ்க்கையை கேட்டிருக்கிறேன்.


ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு உயிரை அடையாளமாக்கியதும், ஒவ்வொரு வார்த்தைக்கும் அதற்கான உணர்வின் உருவத்தை அப்படியே படம் பிடித்து காட்டியதும் அபாரம். தாபதம் என்று உச்சரிக்கும்போது நான் எவ்வாறு உணர்ந்தேன் என்று அவர் எழுதியிருக்கிறார்.


ரங்கநாயகியை தேடி, நாரயணசாமி ஶ்ரீரங்கம் தானே வந்து சேர வேண்டும் என்று சொல்லத் தோன்றியது. மேலும், அல்லி அரிசி சோறு கொடுத்ததும், எருக்க மாலை போட்டு கிடத்தியதும், மடலேறுதலையும் வாசிக்கையில் உள்ளே சிறு அதிர்வுகள். 


இதில் எனக்கு மனதிற்கு நெருக்கமான இன்னொரு விஷயம், நான் அண்மையில் எழுதிய வெண்பாவில் கையாண்ட ஒரு சித்திரம், ஒரு சங்க பாடலில் கண்டதுதான். எம் மூதாதையரின் சிந்தனை தொடர்ச்சியே நான்.