வியாழன், 29 பிப்ரவரி, 2024

எண்ணங்கள் - M S உதயமூர்த்தி

மனிதனின் உயர்வுக்கும், தாழ்வுக்கும், ஏன் நோயிற்கும், வாழ்விற்கும் கூட, அவன் எண்ணும் எண்ணங்கள் எவ்வாறு அடிகோல்கிறது என்பதை, ஆராய்ச்சிபூர்வமாகவும், மனோ தத்துவச் சான்றுகளுடனும் அழகாய் படைத்திருக்கிறார். இது வாசித்து கடந்து செல்லக்கூடிய பட்டியலில் சாராமல், அடிக்கடி எடுத்து நாம் வாசித்து, நம்மை தட்டிக்கொடுத்துக் கொள்ள வேண்டிய புத்தகம்.

எண்ணங்களின் மூலம், மூளையை ஆட்படுத்தி, நோய்களை குணப்படித்திய சான்றுகளையெல்லாம் கண்டு பிரமித்தேன். இது எல்லா நேரங்களிலும், எல்லாருக்கும் உதவினால், இழப்புகளே இல்லாமல் ஆகி விடுமே. ஆனால் அதுதான் சாத்தியமா?

சுண்டு விரலின் நுனி, ஒரு பாறையின் மேல் ஒட்டிக்கொண்டு தொங்குவது போல், வாழ்வின் கடைசி தருணத்தில், விளிம்பில் ஒருவன் துடிக்கையில், அவ்வாறான எண்ணம் எல்லோருக்கும் சாத்தியமா? அவனை சுற்றியிருக்கும் அவன் சொந்தமில்லாத மனிதர்களுக்கோ அல்லது சொந்தமே ஆயினும், நோய் தந்த சோர்வால் தளர்ந்த அவன் சொந்தங்களுக்கோ அது சாத்தியமா?

ஒரு வேளை அந்த சாத்தியப்படாத வேளையில் தோன்றும் எண்ணத்தால்தான் மனிதன் தோற்கடிக்கப்பட்டு, நோய்கள் வெல்கின்றனவா? 

புதன், 28 பிப்ரவரி, 2024

பால்யகால சகி - வைக்கம் முகமது பஷீர்

 Feb 23, 2024


இலக்கிய கூட்டத்துள், தீவிர இலக்கிய உரையாடலுக்குள் கண்டிப்பாக கூறப்படும் பெயர் - வைக்கம் முகமது பஷீர் என்று தோன்றும்.

நிறைய இலக்கியவாதிகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உற்சாகமும் மேலோங்கியே வருகிற நிலையில், சமீபத்தில் அதிகமாக என்னை சுற்றி வந்தவர் இவர் என்றதால், இந்த முதல் அனுபவம். 

இவர் எழுத்துக்கள் சுகானுபவம். 

சொல்லப்பட்ட கதை வாழ்க்கை அனுபவம் - சுகத்தை ‘மட்டும்’ எதிர்ப்பார்த்தலாகாது. ‘சுகத்தை’ மட்டும் எதிர்ப்பார்த்தலாகாது.

மிக எளிய நடை. எளிய சொற்றொடர்கள். ஆனால் வாழ்க்கையின் எதார்த்தம் ஆழம். பாதிப்பும் ஆழம். 

சுகறா-மஜீது இனி என்றென்றுமாய் நான் காணும் மாமரத்தின் அடியிலும், செம்பருத்தி பூவிலும், 1+1 எண்ணை எண்ணிக்கொண்டாலும், ராஜகுமாரியை வார்த்தையால் கடந்தாலும்.

இதற்கு முன் ரில்கேயின் ‘Letters to young Poet’ புத்தகத்தில் ஒரு வரி சொல்லியிருப்பார். எனக்கு புரிந்த வரையில் இதுதான் :

‘எதிர்காலம் என்பது ஓரிடத்தில் நிலையாயிருப்பது. நாம்தான் நிகழ்காலத்தில், அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்று.’

இதை படித்தபோதும் அது தோன்றியது. வாழ்க்கை என்ன கொடுத்தாலும், அதை சுமந்து கொண்டோ, உதறி விட்டோ, நகர்ந்துக் கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது. 

குறைந்தபட்சம் 4 மணி நேர இடைவெளியில் எரியும் அக்னி குண்டத்தை அவிப்பதற்காயினும்.


அவமானம் - சதத் ஹசன் மண்ட்டோ

Dec 21, 2023

இவரின் அறிமுகம் எனக்கு திரு. உலகநாயகன் கமல்ஹாசன் மூலம். முதன் முதலில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராய் வந்தபோது, ஒரு சில வாரங்களுக்கு பின் என்று நினைக்கிறேன், புத்தக பரிந்துரைகளை ஆரம்பித்திருந்தார். அதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டேன். 4 பருவங்கள் வரை அந்நிகழ்ச்சியை பார்த்தேன். அதன்பின் தொடரவல்லை. இப்போதும் அவர் பரிந்துரைகள் செய்கிறார் என்று என் வட்டாரம் செய்தியை மட்டும் பரிமாறியதே தவிர, என்ன புத்தகங்கள் என்ற செய்திகள் எட்டவில்லை.

அவமானம் - அந்த பரிந்துரை பட்டியலில் முதலில் இடம்பெற்ற நூல். தலைப்பும், எழுத்தாளரின் பெயரை, அவர் உச்சரித்து பரிந்துரை செய்த விதமுமே, இதனை, அன்று முதல் படிக்க வேண்டும் என்று தூண்டிக்கொண்டிருந்த விடயங்கள்.

வாசிப்பை பழக்கமாக்கி கொண்ட பின்பு, மாதத்திற்கு ஒரு முறையாவது, இப்புத்தகம் நினைவில் எழாமல் இருந்ததில்லை. ஆனால், அதனை வாசிக்கும் நேரம் இம்மாதம்தான் வாய்த்திருந்திருக்கிறது.

இந்நூல் அவரின் முக்கிய சிறுகதைகளாய் கருதப்பெற்ற சில, தொகுக்கப்பெற்று, அவரின் நூற்றாண்டிற்கு 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் இடம்பெற்ற கதைகளை வாசிக்கும்போது, என் உணர்வில் எழுந்தவைகளை, நினைவிலிருந்து மீட்டி, இங்கே நீட்டுகிறேன் : 

காலித்- சில சமயங்களில். நமக்கு நெருக்கமானவர்களுக்கு நேரவிருக்கும் துன்பம் நமக்கு முன்கூட்டியே தெரியப்பெற்று, அதனாலேயே மனம் அலைக்கழிக்கப்படுவதாய் உணர்ந்திருப்போம், உணருவோம். அது சில சமயங்களில் நடந்துவிடவும் கூடும். அப்படி நடந்திட கூடாது என்று நம்மால் முடிந்தவரை நாம் நம்பும் ஒரு சக்தியிடம் முறையிடுவோம். சில சமயங்களில் அது நடப்பதற்கான சாத்திய கூறுகளினூடே  பயணிக்கும் தூரத்தின் பாரம் தாங்காமல், நடந்துதான் ஆகவேண்டும் என்றால் சீக்கிரம் நடத்திவிடு என்று முறையீட்டையே மாற்றிவிடுவோம்.

அது அவ்வுணர்வுகண்ணியை துண்டித்து விட எண்ணுவதாலேயா? அது எப்படியும் நடக்கப்போகிறது என்ற எண்ணம் வலுப்பெறுவதாலேயா? நம் விடுதலைக்காகவா? அடுத்தவரின் விடுதலைக்காகவா? சொல்லத் தெரியவில்லை. இக்கதையும் அது போலத்தான்.

ஒரு கட்டம் வரை அடுத்தவர் நலனுக்காய் (இரத்த உறவே இருந்தாலும் கூட) எண்ணும் ஆன்மா, இறுதியில் தன்னலனில் நிலைத்துவிடுவது இயற்கையா? அல்லது, ஊழின் கருவியா? 


அவமானம் - இந்த தொகுப்பின் தலைப்பாய் அமையப்பெற்றது. சுகந்தியின் வாழ்க்கையையும், அவளை சுற்றியுள்ள மனிதர்களையும், நாக்கில் தேன் தடவும் அம்மனிதர்களின் சில பேச்சுகளையும், கனவுகளாய் விரியும் காதல்களையும், காதலர்களையும், கணவர்களையும், அவளை அனுதினமும் அவமானப்படுத்தும் இரவுகளையும் உள்ளடக்கிய கதை.

சமூகத்தால் தினமும் இழைக்கப்படும் கொடுமைக்கூட அவளுக்கு கொடுமையாகவோ, அவமானமாகவோ அவளுக்கு தோன்றாது. அவள் எது ‘தான்’ என்று நம்பிக்கை வைத்திருந்தாளோ, அதில் கல்லெறிந்து போகும்போதுதான், மனம் கொதித்து எழுகிறாள்.

அந்த கலக்கத்தில்தான் தெளிவும் அடைகிறாள்.

ஒரு விதத்தில், காலித் கதையில் வரும் மும்தாஜிற்கும், சுகந்திக்கும் ஒற்றுமையிருக்குமோ என்று தோன்றிற்று.


திற - மண்ட்டோ 50களில் வாழந்தவர். பெரும்பாலும் இத்தொகுப்பில், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை போது நடந்த கலவரங்களும், அதில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் காட்டுவதாயிருக்கிறது. இக்கதையில் நடப்பது, இன்றளவும் அரங்கேறுகிறது என்று நினைக்கையில், அருவருப்பாக, அவமானமாக இருக்கிறது. இதை கருவாக வைத்து 90களில் ஒரு தமிழ்படமும் மற்றும் இக்கதையின் உச்சத்தில் விரியும் அக்காட்சி அப்படியே தமிழ் சினிமாவின், பிரம்மாண்டத்திற்கு பேர் போன இயக்குநரின் படத்தில் உண்டு. அக்காட்சி, கண்டிப்பாக திரைக்கதை எழுதிய பிரபலமான எழுத்தாளர் மற்றும் கலைஞானியின் கலந்துரையாடலில் தோன்றியிருக்கக்கூடும். 

இக்கதை, மொத்த தொகுப்பினில் என்னை பாதித்த ஒன்று என்றே சொல்லவேண்டும். இதில் இன்னும் ஓர் இழையை உரித்தெடுத்தோமானால், தந்தையின் (சிராஜூதின்) கதாப்பாத்திரத்தில் எழுத்தாளர் மாபெரும் ஒரு சிந்தனையை விட்டு சென்றிருக்கிறார். 

தந்தை கூறும் கடைசி வரி - மேலோட்டமாய் யோசித்தால், அவருக்கும்,சுகந்திக்கும், மும்தாஜிற்கும் ஒற்றுமையிருக்குமோ என்று தோன்றும். 

ஆனால், அவருக்கு, இவ்வுலக வாழ்வில் எது முக்கியமாகப்பட்டதோ அதை சுற்றியே அவர் யோசனையும், அதற்கு பாதிப்பில்லை என்ற தெரிந்ததும், அந்த உற்சாகத்தின் வெளிப்பாடாகவும் தான் அவ்வரிகள் என்று எனக்கு தோன்றியது. அபாரமான கதை.


சஹாய்- இதனை வாசிக்க தொடர்ந்தபோதும் ஒரு தமிழ்படம் நினைவில் எழுந்தது. அதுவும் கலைஞானியே. இந்தியின் King Khan, உடன் சேர்ந்து நடித்திருந்தார். மதவெறி சண்டைகளை முன்னிறுத்தி நகரந்த கதை களம்.  அந்த களத்தில் பல கதைகள் தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது என்றாலும், கலைஞானியின் அப்படமும், அதில் உள்ள திருப்பமுனை காட்சியும், இக்கதையில் ஒரு வரியை படித்தபோது, அப்படியே ஒத்துபோனது.

என்னை கவர்ந்த வரிகள் :

துப்பாக்கிகளால் மதத்தை ஒழித்து விடலாம் என்று நினைப்பவர்கள. முட்டாள்கள். மஸாப், தீன், இமான்,தர்மா, நம்பிக்கை - இவையெல்லாம் மனித உடலில் இல்லை. ஆன்மாவில் இருக்கிறது.


சில்லிட்டுப் போன சதைப் பிண்டம்- குல்வந்த் கெளர் - மனிதனின் தன்னலத்தை வெளிப்படுத்தும், இன்னும் சொல்லப்போனால், தன்னலத்தின் உச்சத்தில் மனதிரிபடையும் ஒரு நிலையையும், எதிராளியின் நிலையைப்பற்றி கருத்தில் கொள்ளாது, கழுத்தில் கூர் வைப்பது போலான செயல்களில் ஈடுபடும் மனிதனின் நிலையைப்பற்றியும் குறிப்பிடுவதாய் அமைத்த கதாப்பாத்திரம். 

அதற்கு அவர் கருவாய் எடுத்துக்கொண்ட விடயம், திற கதையின் பின்புலமே. 

இப்போது சிந்தித்துப் பார்த்தால், நான் முன்பு சொன்னதுபோல இன்னும் ஓர் இழையை உரித்தோமென்றால், குல்வந்த் கெளர் கதாப்பாத்திரத்தின் மூலம், அநீதி இழைக்கப்பட்ட ஓர் ஆன்மாவிற்காக இவள் மூலம் பதில் கொடுத்ததாயும் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

இன்னுமோர் இழையின் அடியில், அவர் சொல்ல வருவது எல்லாமே ‘சில்லிட்டு போகும் சதை பிண்டமே!’


அறியாமையின் பயன்கள்- இதில் மனிதனின் குரூரத்தை வெறும் ஒரு பக்கத்தில் விவரிக்கிறார். வெட்கித் தலை கவிழ்தேன்.


அதிசய மனிதன் -  அதிசயத்தின் வாயில் திறக்க, வாய் பிளந்து தினந்தோறும் வாழ்வில் காத்திருக்கும் அதிசய மனிதர்களை பற்றியது. இதுவும் ஒரு பக்க கதை.


மிருகத்தனம் - இது நான் மிகவும் ரசித்த ஒரு பக்க கதை. மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்ற ஜி.நாகராஜன் கூற்றுக்கு ஏற்ற கதை. மிருகத்தனம் என்பதை விட மிருகக்குணம் என்பது இன்னும் பொருந்தும் என்று தோன்றுகிறது. மிருகங்களிடையே, குறிப்பாக தாய் மிருகங்களிடம் உள்ள குணம்.  

மனிதன் தன்னை காப்பாற்றிக் கொள்ள பொய் சொல்வான்னு தெரிஞ்சுக்கிட்டேன் என்ற சுஜாதாவின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது. (எந்திரன் - சிட்டி சனாவிடம் கூறுவது). இக்கட்டான சூழ்நிலையில், மனிதன் தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை, இங்குள்ள ஒவ்வொரு கதையிலும் சொல்லிக்கொண்டே வருகிறார். அம்மாதிரியான சூழ்நிலையிலும், தன்னை நம்பியவருக்காக துடிப்பதே இங்கு மிருகத்தனம் (என் கூற்றில் மிருகக்குணம்).


ஜவ்வுமிட்டாய் - மிட்டாய் தலைப்பிலும் மிரட்சியை காட்டும் 12 வரிகள். அவ்வளவே. அதில் மொத்த காட்சிகளையும் விரித்தெடுக்க செய்துவிட்டார். இக்கதையின் ஒரு குறிப்பு, 10 வருட நண்பர் கண்ட நிலைமையை நினைத்துப் பார்க்க வைத்துவிட்டது. அவருக்கு இதில் தேவைப்பட்ட உப பொருள் கூட தேவைப்படவில்லை. 

அக்குழந்தை கடைசியில் சொன்ன வரிகள் இவரின் கடைசிக்கு பொருத்தம். கடந்த 30 நிமிடங்களாய், அவர் பெண்ணிற்கு ஏனோ குறுஞ்செய்தி செய்ய சொல்லி மனசு சொல்வதையும் மீறி, இங்கு எழுதிக்கொண்டிருக்கிறேன், சட்டென்று அவர் வந்து இங்கு என் எழுத்தில் விழுந்துவிட்டார்.


விட்டுக்கொடுத்தல் - 4 வரிகள் கதை ,பெற்றவரின் கதறலுக்கு கணிந்து, அவர் மகளை கொலை செய்யாமல் விட்டுக்கொடுத்த விதம் அ***ம்.


மோசமான வியாபாரம் - வீணான ரோசம்


முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்- சம்பவங்களினூடே அலைக்கழிக்கப்படும் ஒரு போலீஸின் நியாயமான கோரிக்கை.


மண்ட்டோ, எதிர்வினைகள்- பதில்கள், அங்கிள் சாம்-ற்கு - தன்னை பற்றி வரும் கேள்விகளுக்கும், முரண்பாடுகளுக்கும் பகடியாய் பதில் சொல்லியிருப்பது தெரிகிறது, முதல் 2 கதைகளில். மூன்றாம் கதையில், வல்லரசு நாடுகளின் ஆதிக்கம் குறித்தும், மற்றும் அக்கால அரசியலின் அடிப்படையிலும் பகடியாய் ஒரு கடிதம். இது முழுதாய் புரிந்துக் கொள்ள அக்கால அரசியல் நிலவரம், உலகளாவில் ஒரு மேலோட்டமாய் தெரிந்திருந்தால் நலம். எனக்குத் தெரியவில்லை, ஆகையால் புரியவில்லை.  


பனி உருகுவதில்லை - அருண்மொழி நங்கை

 Oct 4, 2023

ஒரு நவம்பர் மாதம், இரவு உணவுக்கு நானும், பிரேமும் உட்காருகையில், பிரேம் என்னிடம், ' நானும், என் வாசக நண்பர்கள் இருவரும் வெண்முரசு தொடங்கலாம் என்றிருக்கிறோம்' என்றார். நானும் உங்களுடன் சேர்ந்துக் கொள்கிறேன் என்றேன். நல்லது, அப்போ நாம் இதிலிருந்து தொடங்குவோம் என்று,  டிவியை சொடுக்க, 'வெண்முரசு_ ஓர் நுழைவு வாயில் - இவரை நான் தெரிந்துக்கொள்ளும்  நுழைவு வாயிலாய் அமைந்தது.

துறு துறு கண்கள் காற்றோடு கைக்கோர்க்க, வானில் யாரோ இவருக்கு பதாகை ஏந்தி காண்பிப்பது போல , மேலே பார்த்து - தன் மூளை மேகத்திலிருந்து, செய்திகளை சொரிந்த‌ வண்ணமாய். வண்ணமாய் பெருகி வர, வரவரவென்றானது தட்டில் காத்திருந்த இட்லி.

முதல் காணொளியிலேயே, இவரின் அபார ஆற்றலுக்கும், அலுப்பற்ற பேச்சிற்கும், அகன்ற‌ இலக்கிய அறிவுக்கும், ஆழமான வாசிப்பு அனுபவத்திற்கும், ஆர்ப்பாட்டம் அல்லாத முன்னிருத்தலுக்கும், ஆர்ப்பரித்த கண்களுக்கும் ரசிகையாகிப் போனேன்.

அதில் ஒரு தருணத்தில், ஜெ.மோவின் (அவர் ஜெயன் என்று அழைப்பதே, அழகுதான்) எழுத்துக்களை சிலாகித்து, தன்னையறியாமல் தன் விழிகள் சிறு குளமாகையில், தானும் சிறு குழந்தையானதை அவர் கவனித்தாரா என்றறியேன், ஆனால் நான் உணர்ந்தேன். அந்த இடத்தில், நான் கைத்தட்டி கண் கலங்கினேன்.

ஒரு மனுசனுக்கு இத விட வேற என்னங்க வேணும்? தன் மொழியில் செழுமை, அதனை கண்டறியும் கொடுப்பினை,  உடன் கைக்கோர்த்து பன்மடங்காக்கும் ஒரு வாழ்க்கை துணை - எண்ணுவதே கவிதாய்  இனிக்கிறது எனக்கு. அப்படி ஒரு வாழ்க்கை ஜெ.மோவிற்கு.

இவ்வாறு, வெண்முரசின் நுழைவிற்கு எங்கள் கைப்பிடித்து வரவேற்க, இவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அதன்பின் நாங்கள் இருவரும் வெண்முரசு வாசிக்க தொடங்கினோம், மூழ்கினோம், மீண்டோம், மூழ்கினோம் என வாழ்க்கை போய் கொண்டிருக்க, நான் அந்த வருடம் இந்தியாவிற்கு சென்றிருந்தேன். அப்போது, ஒரு முறை, பிரேம் பேசுகையில், நம்ம அருண்மொழி நங்கை இருக்காங்கள, அவங்க புத்தகம் 'பனி உருகுவதில்லை' வெளியாகியிருக்குது, என்றார். நான் அப்படியா, சரி என்று கடந்து சென்றுவிட்டேன். பின், ஊர் திரும்புகையில், அந்த புத்தக்கத்தை வாங்கி வந்து கொடுத்தேன்.

அந்த சமயத்தில்தான், ஒலிப்புத்தகம் கேட்கும் பழக்கம் புதிதாய் ஏற்பட்டிருந்தது. பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பு, ஒரு முறை கேட்டுவிட வேண்டும் என்று, ஆரம்பித்திருந்த தருணமது. தீபிகா அருணின், கதை ஓசை ‍YouTube தளத்தில், பனி உருகுவதில்லை புத்தகத்தின் ஒலி வடிவம் கண்ட எனக்குள், ஆர்வம் துளிர்த்தது.

ஒரு காலை நேரம், சிறு உடற்பயிற்சிக்கான வேளையில், முதலில் கேட்க‌ ஆரம்பித்தேன். ஆரம்பத்திலேயே ஒரு நெருக்கம். காரணம், அதற்கு முந்தைய நாள்தான் நான் என் சிறுவயது நினைவுக்கட்டுரை ஒன்றை தற்செயலாய் எழுத‌ ஆரம்பித்திருந்தேன். ஆவலாய் முதல் நாள், முதல் கட்டுரை கேட்டு முடித்தாயிற்று.

 

அடுத்த நாள், அந்த வேளைக்காய் காத்திருந்தேன். நாட்கள் செல்ல, செல்ல, அருணா அக்காவின் கைப்பிடித்துக்கொண்டு அவர் வாழ்கிற உலகிற்குள் நானும் சென்றுவிட்டேன். இன்னும் அந்த குரல் என்னுள் ஒலிக்கிறது. தீபிகா அவர்கள் அத்துனை அழகாய் அந்த சிறு வயது அருணா அக்காவை ஒலிக்கச் செய்தார். அன்று முதல், இந்த நங்கை என் தமக்கையானார். அவ்வாறு நான் உணர இன்னும் சில காரணங்களும் உள்ளன.

இவர் வாழ்வில் இருக்கிற பலர், அதே பெயர்களில் என் வாழ்விலும் உண்டு. எங்கள் இருவரையும் வளர்த்தது விஜயா அத்தையே. மனோகரன் இவருக்கு ஆசிரியர் என்றால், எனக்கு அப்பா. இவர் தம்பி இவரை சிறுவயதில் சுற்றி வருவது போலவே, என் தம்பியும். ஜோதி இவருக்கு டீச்சர். ஜோதி அக்கா என்று எங்கள் கிராமத்தில் ஒருவர், அவரும் டீச்சர். ஜெயா அக்காவின் அதே வாழ்க்கை, என் வாழ்வில், நான் கண்ட ஜெயா அத்தைக்கும்.

என் அம்மாவும், தன் அண்ணன்கள், தம்பி, தங்கை ஆகியோரின் திருமணங்களை நடத்திய பிறகே தன் 'மன'வாளனை கைப்பிடித்தார். என் அத்தை, காலை கறந்த பாலில் சர்க்கரை தூக்கலாய் போட்டு ஹார்லிக்ஸ் கலந்து எடுத்துவந்து, என்னை கைப்பிடித்து இழுத்து உட்கார வைத்து புகட்டுவார். பாதி தூக்க கலக்கத்திலும், மனம் பூரிக்க ஊத்த வாயுடனே அதை ஓரிரு மடக்கில் சர்ர்ர்ர்ர் என்று இழுத்துவிட்டு மறுபடி சாய்ந்து விடுவேன்.

அசோகா எனக்கும் மிக பிடித்த ஸ்வீட். நானும் ஒரு பாட்டு பைத்தியம். ஆரம்பிக்கும் தாள கட்டிலேயே, குதி போட்டு பாடலை கண்டுபிடித்துவிடுவேன். அந்த பித்துதான் பல தருணங்களில் என்னை தெளிய வைப்பது. சமீபத்தில் கூட Tamil Music quiz ஒன்றில் பங்கேற்றேன். என் சந்தோஷ  நாட்களை புரட்டிய குதூகலம் இருந்தது. என் தம்பியும் Farex Baby தான். தம்பியில்லாமல் வீடே நல்லாயில்லை என்று ஒரு சமயம் நினைத்திருப்பார். 'ஆமா அக்கா' என்று அவர் கையிறுக்கிக் கொள்ள மனம் ஏங்கியது.

இப்படியான ஆச்சர்யத்திற்கும், உணர்விற்கும் இடையில், உயர்த்திய புருவங்களுடன், ரசித்ததில், முதலில் நினைவுக்கு வருவது, இவரின் வாசனை தொடர்பான நினைவுகள். புத்தகத்தில் இரு இடங்களில், அதன் அடிப்படையில் தன் நினைவுளை மீட்டெடுத்து இருப்பார். ஒன்று ஐயர் வீட்டில், அவர் அனுபவித்த டிக்காஷன் மணத்திலிருந்து, துளசியின் மணம் வரை. இன்னொன்று, அவர் பாட்டி வீட்டை பற்றி குறிப்பிடுகையில், வரிசையாக மணங்களை அடுக்கியிருப்பார். கறந்த பாலின் மணத்திலிருந்து, கரி துண்டுகளின் மணம் வரை. சட்டென்று நினைவுக்கு வருவது, 'வைக்கோலின் மணம்'. என் நாசியை நிறைத்தது, அதன் மணம்.

Marcel Proust எழுதிய Swann's way என்ற புத்தகத்தில், 'கேக் துண்டை டீயில் நனைத்து சாப்பிடுவது, எனது சிறு வயது சந்தோஷ நினைவுகளை தூண்டுவதாய் குறிப்பிட்டிருந்ததை படித்து, ஆராய்ச்சியாளர்கள் அறிவியல் பூர்வமாய் அறிய முற்பட்டார்களாம். இதனை Proust effect என்று சொல்கிறார்கள்.

மணத்திற்கு அடுத்தது, எனக்கு பிடித்தது குணம். இதில் வரும் உறவுகள் ஒவ்வொன்றிலும் பல‌ குணங்கள் ஒளிர்கின்றன‌. அதை அழகாய் நினைவு அடுக்குகளிலிருந்து நியாயமாய் தொட்டு எடுத்திருக்கிறார். உதாரணம் : அப்பன் என்றாலும் தப்பு தப்புதான் என்ற இடம் - 'நுரை'யாய் போன உறவினால் மனம் நொந்து.

 

அப்பாவை இப்போது தொட்டு விட்டதால், என் நினைவலையில் சிறு துகள்கள் - பெரும்பாலான அம்மா பொண்ணுகளிடம் இருக்கும் என்று நினைக்கிறேன், அப்பாவை பற்றி எதேனும் புறம் பேசி வம்பிழுப்பது. என் வீட்டில் அம்மாவிடம், அப்பாவைப் பற்றிய என் குமுறல்கள் , அவர் வீட்டில் இல்லாத பல சமயங்களில் வெளிவரும். வசீகரா பாடலை பார்க்க விடவில்லை, வாலி படத்தை பார்க்க விடவில்லை என்று. என் அம்மா அதற்கு மிக எளிதாய் ஒரு பதில் வைத்திருப்பார். 'போ பாப்பா, போய் படி, அது என்ன கண்ணோட வருதா?'

கண்ணோடுதான் வருகிறது, அத்தையை பெண் பார்க்க வந்திருந்தபோது, 'சம்சாரம் அது மின்சாரம்' அம்மையப்பரோடு போட்டி போட்டுக்கொண்டு, குட்டி அருணா அக்கா கேசரி சாப்பிட்டதும், சிவாஜி, சுஜாதா கழுத்தில் வாசம் பிடித்தபோது, கழுத்து வலியில் சிணுங்கிய அருணாவின் உருவில் 'தாவணி கனவுகள்' தங்கைகளின் உருவங்களும், தன் அத்தைக்கு பொருத்தமா என்று உயரம் பார்க்கையில் 'ஆண் பாவம்' சீதாவும் - கண்ணோடுதான் வருகிறார்கள்.

பாதுஷாவில் இருந்து அக்கா தான்சேனுக்கு சென்றால், நான் தான்சேனிலிருந்து.

"ராகங்களால் தீபங்களை ஏற்றிவைத்தான் தான்சேன்

ராகங்களால் மேகங்களை நான் நிறுத்திவைப்பேன் என்பேன்" ‍ என்று கமலுடன் ஆட சென்றுவிட்டேன்.

ஆடித் திரும்புகையில் தோன்றியது, (கேட்டபோது தோன்றியதுபோல்) புத்தகத்தை வாசிப்பது என்று - அந்த அனுபவத்தை மீட்டெடுக்க, தலைப்பிற்கு நியாயம் செய்ய. எழுதுவதை மூடி வைத்துவிட்டு, பழையப்படி சைக்கிளில் இருந்து ஸ்டைலாய் இறங்கி வந்த கதாநாயகியிடம் என்னை ஒப்புக்கொடுத்துவிட்டேன். அடுத்த இரண்டு நாட்களில் புத்தகத்தை முழுவதுமாய் படித்து முடித்தேன். நான் இதுவரை எந்த புத்தகத்தையும் மறுபடி புரட்டியதில்லை. லா.சா.ராவின் 'அபிதா' வாசித்தபோது, இன்னும் சில வருடங்களில் மீண்டும் வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அபிதாவை, அருண்மொழியே வென்றார் - தன் ஆளுமையினாலும், நகைச்சுவையினாலும், ரகளைகளினாலும், ரசனைகளினாலும்.

காபியை ரசித்துக்குடிக்கும் சூழல், நான் ஏழாம் வகுப்பில், சாயுங்காலம் ஸ்கூலிலிருந்து வாங்கி வரும் 5 ரூபாய் சோன் பப்டியை ஞாபகமூட்டியது. அதனை விற்கும் அக்காவை சுற்றி ஈயாய் பிள்ளைகள் மொய்க்க, அவர் எவரையும் ஏறெடுத்து பார்க்கமாட்டார். அவரை பார்க்கையில் எனக்கு என் ராணி அத்தை (அம்மாவின் அண்ணி) ஞாபகம் வரும். வெள்ளையாய், எனக்கு பிடித்ததுபோல ஏலக்காய் சேர்க்காமல், சதுரங்க வடிவில் தேங்காய் பர்பி சைஸிற்கே இருக்கும் சோன் பப்டி, அழகான வளுவளுப்பான வெள்ளை பேப்பரில் சுற்றப்பட்டிருக்கும். அந்த பேக்கிங்கே அழகாயிருக்கும். மேல்புறம் சமமாகவும், பின்புறம் மடித்து மீதமிருக்கும் கொசுருகளை ஸ்டார் வடிவிலும் மடித்து இருப்பார்கள். அதனை பிரித்தாலே காற்றில் பறந்து செல்லக்கூடிய கனத்தில்தான் இருக்கும். தற்போது பெரிய கடைகளில் கிடைக்கும் கெட்டியானது அல்லாமல், இப்போதும் மலைக்கோட்டை வாசலில், தி. நகர் கடைத்தெருவில் கிடைக்கும் உதிரியான சோன் பப்டியை, மிதமாக சதுர வடிவில் ப்ரஸ் செய்து வைத்தார்போல். என் அப்பாயி அதனை மசுரு முட்டாய் என்று சொல்வார்.

அதை சாப்பிட, காவேரி பாலம் வரை காத்திருந்து, ஆட்டோ அண்ணாசிலையிலிருந்து காவேரி பாலம் ஏறுகையில் இடதுப்புற காவேரியை பார்த்துக்கொண்டே அந்த‌ சோன் பப்டியை பிரித்து, அந்த சர்க்கரையில் கரைவதும், கரையை கடப்பதுமாய் கடந்த காலங்களில் உழன்றேன்.

"அம்மாவின் முகம் பதைக்கிறது. அவள் நேரவிருக்கும் ரகளையை உணர்ந்துவிட்டாள்" என்ற வரிகளில் நான் சிரித்து பார்த்தது, 'அந்துமல்லி துந்துமல்லியாய்' அட்டை பின்புறத்திலிருந்து நோக்கும் அருணா குட்டியைதான். முதற்நாள் பள்ளியின் அதே ரகளை நானும் செய்தேன். வகுப்பில் விட்டுவிட்டு அம்மா திரும்பிச் செல்ல தலையாட்டுகையில், எனக்கு பெரும் தீங்கு இழைக்கப்பட்டதுபோல் தேம்பி, கை நீட்டி, அம்மாவை நோக்கி ஓட எழுந்தது, மங்கலாய் காட்சியானது. ஓட்டப்பந்தயத்தில் PT மாஸ்டர்  இவருக்கு அநீதி இழைத்தாரென்றால், எனக்கு என் கூடப் படித்த பத்மா. என்னை கையால் தள்ளிவிட்டு முந்திச் சென்றாள். பந்தயம் முடிந்ததும் என்னிடம் செம்மத்தியாக‌ வாங்கினாள்.

"அவளோடு சேர்த்து அவங்க உம்மாவையும் கும்ம வேண்டும் போல் இருந்தது" - நான் சிரித்த மற்றுமொரு இடம்.

நான் குபீரென்று சிரித்ததும், எப்போது நினைத்துக்கொண்டாலும் சிரிப்பதும், -‍ "உங்கள் வீட்டில் Mysore Sandal தானே? எங்க வீட்டுல எங்கப்பா Lifebuoy-அ மாத்தமாட்டார்". இதோ இப்போது எழுதும்போதும் சிரித்துக்கொண்டுதான் எழுதுகிறேன். அந்த குரல் இன்னும் ஒலிக்கிறது என் காதுகளில். அதற்கு நான் வேற ஏற்ற இறக்கம் கொடுத்து பிரேமிடம் சொல்லி காட்டுவேன். அவன் புன்னகைத்து முடிந்தபிறகும் ஒளி எஞ்சும், டெய்சி பெரியம்மாவை போல்.

தன் அத்தையின் திருமண தருணங்களில் அவர் கேட்டு ரசித்த பாடலான 'வசந்தத்தில் ஓர் நாள்', 2021‍ ல் என் திருமண விழாவிலும் நான் விரும்பி கேட்டுக்கொண்டது. 'வைதேகி காத்திருந்தாளோ'என்ற வரியில் ஏதோ ஒர் ஈர்ப்பு, ஓர் செருக்கு. வைதேகி என்ற பெயரினாலலோ என்னவோ. நாம் பெரும்பாலும் சரித்திரத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறோம் என்று நான் நினைப்பதுண்டு.

நான் ரசித்த வரிகளும், உவமைகளும் :

"இலக்கியவாதிகள் கருணையற்றவர்கள். மாற்றவியலா விதியின் கரங்களால், மனிதர்கள் பகடைகளாய் உருட்டப்படும்போது, இவர்கள் மௌன சாட்சிகளாய் உடன் நிற்கிறார்கள்".

விறகு வகைகளின் பட்டியலும், பயன்களும்.

அங்கு மனமுருகி வேண்டினேன். சங்கீதத்திற்கு காது திறக்கவேண்டும் என்றுதான் – ஜெயனின் காது

ஆற்றூர் அந்தப் பந்தலில் "தண்ணீரில் மீனாக" எனக்கு தோன்றினார்

சட்டென்று நம்மைக் கவர்ந்து உள்ளிழுத்து விடுவார். "கோவிலின் முதல் தோரண வாயில்போல".

சீட்டில் உட்கார்ந்தவுடன் நம்மை அப்படியே "உள்ளே வாங்கிக் கொண்டது"

ஆசை ஒன்று "மனதில் முகிழ்த்து அடங்கியது".

விரிந்து பரந்து "ஒரு குடும்பத்தின் தவிர்க்க இயலாத ஒரு முதியவர் போல்" அம்மரம் அங்கு நிற்கும்.

ஒரு பரிதவிப்புடன் தடியை டொக், டொக் என்று தட்டியபடி இருப்பாள். கையில் இருக்கும் தடி, "அவள் பதறிய மனம்" என்று தோன்றும்.

திரும்பும்போது நினைவுகளால் மனம் "பாரமாக",  "மெதுவாக" நடந்து வந்து...

"அது உழைத்துக் களைத்த மூதாட்டிபோல் இருந்தது".

மைசூர் கேள்விப்பட்டிருக்கியா?”- ”ம்ம் ஹைதர் அலி, திப்பு சுல்தான்,மெர்க்காரா, காவேரி…”

"இளமையில் சில சந்தர்ப்பங்களை நம் மனம் என்றும் அழியா புகைப்படங்களாக்கி நம்மில் சேமிக்கிறது. பாடல் அச்சந்தர்ப்பத்தை அழியாச் சட்டகமாக்குகிறது".

"நாணிக் கோணுவது நம் இயல்பிலேயே கிடையாது என்பதால், துணிந்து அடிப்பேன்"

"அப்போது அந்தக் கண்களில் வந்து சென்ற நம்பிக்கையின் சிறு ஒளி. என் கண்கள் இருண்டன".

"அணையின் அடிப்புறம் தேக்கி வைத்த தண்ணீரின் அழுத்தத்தை உணரும் சிறு மதகு போல அதன் உடல் துடிப்பதை நான் உணர்ந்தேன்".

“அக்கணம் அவள் பூமியின் எந்த மாசுவாலும் தீண்டப்படாத உயரத்தில் நிற்கிறாள். அதற்கு சாட்சி என் அப்போதைய கண்களும் இருப்பும் மட்டுமேஅக்கணத்தை என் எழுத்தால் கூட என்னால் பற்ற இயலவில்லை. சொல்ல சொல்ல  நழுவுகிறது அக்கணம்”.

 

இவரின் ஆளுமையைப்பற்றி சொல்வதற்கு முன்னால், மூலத்தை தொட வேண்டும் என்று விரும்புகிறேன் ‍ ராஜம்மாள் பாட்டி - பெயரிலேயே அவர் அரசி தான். என் அப்பாயியை நினைவில் நிறுத்தினார். "வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்" - என் அப்பாயிக்குமே பொருந்தும். பொறந்த இடத்திலும் சரி, புகுந்த இடத்திலும் சரி , செல்வம் கொழிக்கச் செல்வாக்காய் வாழ்ந்தவர். "100 பவுன் போட்டு சரசு நடந்து வந்தா சப நெறஞ்சுருக்கும்" என்று என் ஒன்று விட்ட பாட்டிகள், ஊருக்காரர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். என் தாத்தா மறைவுக்குப் பின்னர், என் அப்பாயி உடஞ்சு போயிட்டாங்க. அதன் பிறகு வெள்ளை ரவிக்கைதான், முன் பித்தான் வைத்து, நுணியை இழுத்து முடித்துக்கொள்வது. இரண்டு பாட்டிகளுக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம்.

ஈகையிலும் என் அப்பாயி, ராஜம்மாள் பாட்டியை போன்றுதான். அந்த குணம் அப்படியே என் அப்பாவிற்கும். என் அப்பாயியுடன் இம்மாதிரியான நெருக்கமான உறவு ஆரம்பத்தில் இல்லாவிடினும், கடைசி காலத்தில் அப்பாயிக்கு என் குணம் தெரிந்திருந்தது.

இதில் அழகாய் ஒரு இடத்தில் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார்,

"வயதானவர்களின் மனம் கொந்தளிப்பான சூழலில் எல்லா கன‌த்தையும் எளிதில் உதிர்த்துவிடவே விரும்பும் போலும்"

எவ்வளவு உண்மை இது என்று தோன்றியது. என் அப்பா அவங்க உடன்பிறந்தவர்களோடு ஏதும் கடுப்பில் இருக்கும்போது, என் அப்பாயிடம் பாய்வார். என் அப்பாயி பாரம் தாங்காமல் தலைக்கவிழ்ந்து அவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்ல முனைவார். ஆனாலும் என் அப்பா விடாது தொடர்வார். நான் விவரம் தெரிந்து, வேலைக்கு சென்றிருந்தத் தருணங்களில், இம்மாதிரியான சூழல்கள் என் கண்முன்னே பெரும்பாலும் ஏற்பட விட்டதில்லை. பதிலுக்கு நான் பேசிவிடுவேன். என் அப்பா அமைதியாய் போய்விடுவார். என் அப்பாயி, 'விடு ஆயா, அப்பா சொல்லிட்டுப் போகுது போ, கோவத்துல கத்தும், ஆனா எல்லாருக்கும் செய்யும்' என்பார். அது உண்மைதான். என் அப்பாயியின் தைரியம், அதிகாரம் எல்லாம் தாத்தாவுடனே போயிடுச்சோனு தோணும்.

ஆனால், இங்கே அரசி, கெத்தாய் 'சற்குணம், இந்திரா கல்யாணத்துக்கு நல்லா செய்வான். இப்ப தேவையில்லாமல் பேசாதே' என்றதாகட்டும், திருமண வாழ்வு கசந்த தருவாயில், மீண்டும் (என் ஊருமான) திருச்சியில் தன் பொறந்த வீட்டுக்கு வந்ததாய் இருக்கட்டும், ஆட்டு மந்தை போல் அவன் சொல்கிற நேரத்தில் என்னால் போக முடியாது என்று தனியாய் பஸ் பிடித்து பயணம் செய்வதாகட்டும், ஒத்து வரலை என்றால் ஒத்து வரலை என்று முதியோர் இல்லத்தில் இருந்ததாகட்டும், அவரின் தனித்து செயல்படும் ஆற்றலாகட்டும், சுயசிந்தனையோடு வாழ்ந்ததாகட்டும் - அத்தனையும் சாட்சிகள்,‍ அவர் முடி சூடா அரசியே என்பதற்கு.

ராஜம்மாள் பாட்டியின் புகைப்படத்தை பார்த்ததுமே தெரிந்துவிட்டது, அவரின் தேர்ந்த ரசனைகளும், நேர்த்திகளும். மேலும், இவர் முகம் யாரையோ ஞாபகப்படுத்துதே என்று யோசனை செய்து ஒரு வழியாய் கண்டுப்பிடித்தேன். மரபிசை கலைஞர்களான ரஞ்சனி‍_காயத்ரி சகோதரிகளில், ரஞ்சனி, ராஜம்மாள் பாட்டியின் சாயல் என்று எனக்கு தோன்றுகிறது.

"வேங்கை போல வாழ்வதும் பறவைபோல மறைவதும்தான் வாழ்க்கை என்று எனக்கு இன்று தோன்றுகிறது நான் பாட்டியிடம் பால் குடித்ததில்லை, ஆனால் அவருடன்தான் எனக்கு பால்தொடர்பு இருக்கிறது" ‍ இதனை படித்துமுடித்த பிறகு, ஒரு விம்மலோடு புத்தகத்தை சற்று மூடி வைத்து அமர்ந்திருந்தேன்- இதை விட ஒரு பெரும் நிறைவு உங்கள் பாட்டிக்கு கிடைத்திருக்க முடியாது. அதனை கொடுத்த திருப்தி உங்களுடன் “என்றென்றுமாய் வருவதாக!” என்று மானசீகமாய் வாழ்த்தினேன்.

அருணாவின் ஆளுமைகளுக்கு முதற்ப்புள்ளியாய் இவர் பாட்டியின் ரத்தமாக இருக்க வாய்ப்பிருந்தாலும், தந்தை இவருக்கு காட்டிய, இவரும் விரும்பி தேடி சேகரித்த உலகறிவே என்பது மறுப்பதற்கில்லை. அதுதான், அறிமுகத்திலேயே அனைவரின் மனங்கவரும் 'ராணி' ஆக, விசிறிகள் சாமரமாக, ஆடல் கலைகளுடன் பால்ய நாட்கள் களைக்கட்டியிருக்கு.

அந்த அறிவு கொடுத்த தைரியம்தான், புதிதாய் ஊருக்கு வந்த இறங்கிய‌ ஆசிரியரிடம் பயப்படாமல் பேசவும், அவருக்கு மட்டுமல்லாமல் பல பேருக்கு வழிகாட்டியாகவும், வடிகாலாகவும் இருந்திருக்கிறது.

“அவங்க வீட்டுல போய் என்ன பேச்சு வேண்டிக்கெடக்கு என்று அம்மா கேட்கும்போது, பசங்க வீட்டில் இல்லை என்று நான் விளக்கமாட்டேன். "அது என் தோல்வியை நானே ஒப்புக் கொள்வதுபோல் தோன்றும்"‍ என்று எனக்கு சவுக்கடி கொடுத்தார்.

கல்லூரி நாட்களில், தோழி வீட்டுக்கு போவதற்கு பர்மிஷன் கேட்கும்போது, "அப்பா அவ வீட்டுல அவங்க அண்ணன் இல்லப்பா, நான் போயிட்டு சீக்கிரம் வந்துடறேன்" என்று கேட்ட என் நாக்கை நானே அருவாமனையில் வெட்டி வீசியிருக்கக்கூடாதா என்று தோன்றியது. என்ன ஒரு தெளிவு. அந்த இடத்திலேயே என்னில் மிகப்பெரிய ஆளுமையாய் வடிவெடுத்துவிட்டார்.

அப்பாவிடம் விறகு விரைவாய் தீருவதற்கு, நிதானமாய் விளக்குவதாய் இருக்கட்டும், ஜோதி டீச்சரின் அந்த தோல்வி நிலையை புரிந்துக்கொண்டு ஆறுதலாய் மாறுவதாய் இருக்கட்டும், அந்த பாடலுக்கு அந்த சூழலை இலகுவாக்க, தன்னை இன்னும் சிறு பிள்ளையாய் காட்டிக்கொள்வதாக இருக்கட்டும், பட்டாணியின் மனைவிக்காக மூர்த்தி அண்ணாவிடம் தன் கருத்துகளை சொல்வதாய் இருக்கட்டும், மணிகண்டன் வழிமறித்து ஊரை விட்டு போவது பற்றி கேட்கும்போது அந்த நிலைமையை கையாளுவதாய் இருக்கட்டும் - அனைத்திலுமே ஒரு மன முதிர்வு தென்படும்.

 

குறிப்பாக மணிகண்டனிடம் 'அர்ஜென்டா போகணும்' என்று சொல்லி விலகும்போது, 'இனி புள்ளய சிரிப்பு படத்துக்கு மட்டுமே கூட்டி போவணும், தேரு பாத்த சந்தோசமே போச்சு புள்ளைக்கு' என்று பாட்டி கூறிய உணர்ச்சிகரமிக்க அருணா அல்ல, தர்க்க ரீதியாய் நிலைமையை அணுகக்கூடிய அருணாவாய் கல்லூரிக்கு முன்னரே மாறிவிட்டதாய்தான் தோன்றியது.

மேலும் என்னடா அந்த பையன் இவ்ளோ பீல் பண்ணி சொல்லுறான், இந்த புள்ளைக்கு அவ்ளோ இல்லையே, ப்ராக்டிகலான கேரக்டர் என்று நினைத்திருந்தேன்.  புத்தகத்தில் பின்வரும் கட்டுரையில், தன் அப்பா தன்னிடம் கேட்கும் கேள்விக்கு கொடுப்பதாய், என் போன்ற முந்திரி கொட்டைக்கு, அழகாய் பதிலும் கொடுத்திருப்பார்,

"கஷ்டமாத்தான் இருக்குது. ஆனால் அதை விட முக்கியம் நாம் தலை நிமிர்ந்து வாழ்வது" என்று. அப்போதும் நான் அவரோடு கைக்கோர்த்தேன்.

"போன ஜென்மத்து பாவத்த என்ன இந்த ஜென்மத்துல தீர்க்குறது? அப்பப்ப கணக்க தீர்க்க தெரியாதா, நீங்கள் சொல்கிற கடவுளுக்கு? நம்ம என்ன பண்ணோம்னே தெரியாம, இந்த ஜென்மத்துல அதுக்கு அனுபவிக்கனும்னு சொல்றதுலாம் அநியாயம் என்பேன் என் அப்பாவிடம், இவரைப்போலவே - அதுதான் முதன்முதலில் கைக்கோர்த்த இடம்

பின்பு, இவர் குழந்தையை குளிப்பாட்டுவதை ரசிக்கும்போது கைக்கோர்த்தேன். எனக்கும் அது பிடிக்கும். மேலும் என் அம்மா தென்னங்கீற்றிலிருந்து துடைப்பம் சீவுவதும் பார்க்கப் பிடிக்கும். என் அம்மாவிடம், சிறு வயதில் கேட்ட கேள்வி ஞாபமிருக்கு.

டாக்டரா இருந்துட்டு இதுலாம் எப்படி மா கத்துக்கிட்ட?

சின்ன வயசுல எங்கம்மா எல்லா வேலையும் செய்வாங்க. அது பாத்துதான். கண்ணு பாத்தா கை செய்யணும்னு சொல்வாங்க.

என்னால முடியாதுப்பா “ - என்று ஓடிவிடுவேன்.

வீட்டில் ஒழுங்கு ஒருவரால் வருவதல்ல. எழுதிய கைக்கு மோதிரம்தான் போடணும்.

ஒருமுறை தீபாவளி பலகாரங்களை எடுத்துக்கொண்டு என் பிரண்ட் வீட்டிற்கு சென்றேன். அவளின் அண்ணன்,

என்னது?

முறுக்கு, மிக்சர், 7 கப்

மிக்சர் வீட்டில செஞ்சீங்களா?

ஆமா

எப்படி? எல்லா தனித்தனியா செஞ்சு கலந்துட்டிங்களா? ஹா ஹா..

ஆமா. அதனாலதான் அது மிக்சர்.

‍இதே சம்பாஷணையை நான் புத்தகத்தில் பார்த்தபோதும், கிட்டி புல் விளையாடுவது பிடிக்கும் என்றபோதும் கைக்கோர்த்தேன். சொல்ல போனால், பாதி தூரத்திற்கு கைக்கோர்த்திருக்கிறேன் என்றுதான் தோன்றுகிறது. இனி மீதி தூரத்திற்கு துணையாய், இவர் சென்ற பாதையில் என் இலக்கிய வாசிப்பை தீவிரமாக்க இருக்கிறேன்.

“ஒருவரிடம் பேசுபோது area of interest தெரிஞ்சு பேசணும். அவங்களா கேட்காமல் நம்மை பற்றி சொல்லக்கூடாது” ‍ நான் ரசித்த, பின்பற்ற நினைக்கிற போதனைகள்.

வடிவேல் மாமாவை பற்றி பேசாமல் முடிப்பது முழுமை பெறாது என்றுதான் தோன்றுகிறது. வெளியிலிருந்து வந்து, தன் அத்தையை கட்டியதால் இவருக்கு உறவானவர், அவரை போலவே, பாசம் வைத்து பார்த்துக்கொண்டது எல்லாருக்கும் அமையாது. அத்தையின் பிரிவால் வெசனமேறி கிடக்கையில், சுழற்சி முறையில் இரு வீட்டாரும் வந்துபோனது எல்லாமே கொடுப்பினைதான். தன் அம்மா புரிந்துக்கொள்ளவில்லை என்றபோது, இளம் அருணா, அத்தை‍‍_மாமாவிடமே முறையிட்டதும், மாமா அதை சிரத்தை எடுத்து தீர்த்து வைத்ததும், இவர்கள் உறவின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. ஆசிரியர் அக்கட்டுரையின் தலைப்பையும் அழகாய் கொடுத்திருப்பார் – “நிலை”

“நிலை- வீட்டின் நிலை, அருணாவின் நிலை, வடிவேல் மாமாவின் இயல்பின் நிலை, அவரின் அந்திம நிலைஎன்று புரிந்துக்கொண்டேன்.

அவரை பற்றி இக்கட்டுரையின் முன்பாதியில் கூறுகையிலேயே, "யார் குறைகளையும் பெரிது படுத்த மாட்டார். அதற்கு காரணம் அவர் உயரம்தான் என்று நினைக்கிறேன்" என்ற வரியிலேயே அவர் குணத்தின் உயரத்தை குறிப்பிட்டிருப்பார். அதற்கு முத்தாய்ப்பாய் இறுதியில்,

"மாமாவின் தலையை விட நான்குவிரற்கடை உயரமானது நிலை. நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே மாமா நின்றால் தலை தட்டும் என்றுதான் தோன்றியது"

என்றிருப்பார். அழகாய் இருந்தது.

 

கிட்டதட்ட உங்கள் 20 வருஷ வாழ்க்கையை அருகிருந்து பார்த்ததுபோல் ஓர் உணர்வு. கேட்டு, வாசித்து, எழுதி என மும்முறை அவ்வுணர்வுக்கு ஆளாகினேன். இது எனக்கு முதற் அனுபவம். கொடுத்தமைக்கு நன்றியுடனும், என் வாழ்க்கை பக்கங்கள் சிலவற்றை திருப்பிப் பார்த்த மகிழ்வுடனும்,

- ரம்யா மனோகரன்

மழைப்பாடல்

2023‍-ல், வெண்முரசு‍ - மழைப்பாடல் புத்தகத்தை வாசித்துவிட்டு, ஆசிரியர் ஜெ அவர்களுக்கு, ஒரு கட்டுரை எழுதினேன். அந்த கட்டுரை Feb 7, 2023 அன்று, அவரது வளைத்தளத்தில், அவரின் தலைப்போடு பிரசுரிக்கப்பட்டது. அந்த சம்பவம் எனக்கு ஒரு புது ஊக்கத்தை தந்தது. அதன் இணைப்பு கீழே :

மழை பாடாலாகும்போது : https://www.jeyamohan.in/179647/