Dec 21, 2023
இவரின் அறிமுகம் எனக்கு திரு. உலகநாயகன் கமல்ஹாசன் மூலம். முதன் முதலில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராய் வந்தபோது, ஒரு சில வாரங்களுக்கு பின் என்று நினைக்கிறேன், புத்தக பரிந்துரைகளை ஆரம்பித்திருந்தார். அதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டேன். 4 பருவங்கள் வரை அந்நிகழ்ச்சியை பார்த்தேன். அதன்பின் தொடரவல்லை. இப்போதும் அவர் பரிந்துரைகள் செய்கிறார் என்று என் வட்டாரம் செய்தியை மட்டும் பரிமாறியதே தவிர, என்ன புத்தகங்கள் என்ற செய்திகள் எட்டவில்லை.
அவமானம் - அந்த பரிந்துரை பட்டியலில் முதலில் இடம்பெற்ற நூல். தலைப்பும், எழுத்தாளரின் பெயரை, அவர் உச்சரித்து பரிந்துரை செய்த விதமுமே, இதனை, அன்று முதல் படிக்க வேண்டும் என்று தூண்டிக்கொண்டிருந்த விடயங்கள்.
வாசிப்பை பழக்கமாக்கி கொண்ட பின்பு, மாதத்திற்கு ஒரு முறையாவது, இப்புத்தகம் நினைவில் எழாமல் இருந்ததில்லை. ஆனால், அதனை வாசிக்கும் நேரம் இம்மாதம்தான் வாய்த்திருந்திருக்கிறது.
இந்நூல் அவரின் முக்கிய சிறுகதைகளாய் கருதப்பெற்ற சில, தொகுக்கப்பெற்று, அவரின் நூற்றாண்டிற்கு 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம்பெற்ற கதைகளை வாசிக்கும்போது, என் உணர்வில் எழுந்தவைகளை, நினைவிலிருந்து மீட்டி, இங்கே நீட்டுகிறேன் :
காலித்- சில சமயங்களில். நமக்கு நெருக்கமானவர்களுக்கு நேரவிருக்கும் துன்பம் நமக்கு முன்கூட்டியே தெரியப்பெற்று, அதனாலேயே மனம் அலைக்கழிக்கப்படுவதாய் உணர்ந்திருப்போம், உணருவோம். அது சில சமயங்களில் நடந்துவிடவும் கூடும். அப்படி நடந்திட கூடாது என்று நம்மால் முடிந்தவரை நாம் நம்பும் ஒரு சக்தியிடம் முறையிடுவோம். சில சமயங்களில் அது நடப்பதற்கான சாத்திய கூறுகளினூடே பயணிக்கும் தூரத்தின் பாரம் தாங்காமல், நடந்துதான் ஆகவேண்டும் என்றால் சீக்கிரம் நடத்திவிடு என்று முறையீட்டையே மாற்றிவிடுவோம்.
அது அவ்வுணர்வுகண்ணியை துண்டித்து விட எண்ணுவதாலேயா? அது எப்படியும் நடக்கப்போகிறது என்ற எண்ணம் வலுப்பெறுவதாலேயா? நம் விடுதலைக்காகவா? அடுத்தவரின் விடுதலைக்காகவா? சொல்லத் தெரியவில்லை. இக்கதையும் அது போலத்தான்.
ஒரு கட்டம் வரை அடுத்தவர் நலனுக்காய் (இரத்த உறவே இருந்தாலும் கூட) எண்ணும் ஆன்மா, இறுதியில் தன்னலனில் நிலைத்துவிடுவது இயற்கையா? அல்லது, ஊழின் கருவியா?
அவமானம் - இந்த தொகுப்பின் தலைப்பாய் அமையப்பெற்றது. சுகந்தியின் வாழ்க்கையையும், அவளை சுற்றியுள்ள மனிதர்களையும், நாக்கில் தேன் தடவும் அம்மனிதர்களின் சில பேச்சுகளையும், கனவுகளாய் விரியும் காதல்களையும், காதலர்களையும், கணவர்களையும், அவளை அனுதினமும் அவமானப்படுத்தும் இரவுகளையும் உள்ளடக்கிய கதை.
சமூகத்தால் தினமும் இழைக்கப்படும் கொடுமைக்கூட அவளுக்கு கொடுமையாகவோ, அவமானமாகவோ அவளுக்கு தோன்றாது. அவள் எது ‘தான்’ என்று நம்பிக்கை வைத்திருந்தாளோ, அதில் கல்லெறிந்து போகும்போதுதான், மனம் கொதித்து எழுகிறாள்.
அந்த கலக்கத்தில்தான் தெளிவும் அடைகிறாள்.
ஒரு விதத்தில், காலித் கதையில் வரும் மும்தாஜிற்கும், சுகந்திக்கும் ஒற்றுமையிருக்குமோ என்று தோன்றிற்று.
திற - மண்ட்டோ 50களில் வாழந்தவர். பெரும்பாலும் இத்தொகுப்பில், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை போது நடந்த கலவரங்களும், அதில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் காட்டுவதாயிருக்கிறது. இக்கதையில் நடப்பது, இன்றளவும் அரங்கேறுகிறது என்று நினைக்கையில், அருவருப்பாக, அவமானமாக இருக்கிறது. இதை கருவாக வைத்து 90களில் ஒரு தமிழ்படமும் மற்றும் இக்கதையின் உச்சத்தில் விரியும் அக்காட்சி அப்படியே தமிழ் சினிமாவின், பிரம்மாண்டத்திற்கு பேர் போன இயக்குநரின் படத்தில் உண்டு. அக்காட்சி, கண்டிப்பாக திரைக்கதை எழுதிய பிரபலமான எழுத்தாளர் மற்றும் கலைஞானியின் கலந்துரையாடலில் தோன்றியிருக்கக்கூடும்.
இக்கதை, மொத்த தொகுப்பினில் என்னை பாதித்த ஒன்று என்றே சொல்லவேண்டும். இதில் இன்னும் ஓர் இழையை உரித்தெடுத்தோமானால், தந்தையின் (சிராஜூதின்) கதாப்பாத்திரத்தில் எழுத்தாளர் மாபெரும் ஒரு சிந்தனையை விட்டு சென்றிருக்கிறார்.
தந்தை கூறும் கடைசி வரி - மேலோட்டமாய் யோசித்தால், அவருக்கும்,சுகந்திக்கும், மும்தாஜிற்கும் ஒற்றுமையிருக்குமோ என்று தோன்றும்.
ஆனால், அவருக்கு, இவ்வுலக வாழ்வில் எது முக்கியமாகப்பட்டதோ அதை சுற்றியே அவர் யோசனையும், அதற்கு பாதிப்பில்லை என்ற தெரிந்ததும், அந்த உற்சாகத்தின் வெளிப்பாடாகவும் தான் அவ்வரிகள் என்று எனக்கு தோன்றியது. அபாரமான கதை.
சஹாய்- இதனை வாசிக்க தொடர்ந்தபோதும் ஒரு தமிழ்படம் நினைவில் எழுந்தது. அதுவும் கலைஞானியே. இந்தியின் King Khan, உடன் சேர்ந்து நடித்திருந்தார். மதவெறி சண்டைகளை முன்னிறுத்தி நகரந்த கதை களம். அந்த களத்தில் பல கதைகள் தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது என்றாலும், கலைஞானியின் அப்படமும், அதில் உள்ள திருப்பமுனை காட்சியும், இக்கதையில் ஒரு வரியை படித்தபோது, அப்படியே ஒத்துபோனது.
என்னை கவர்ந்த வரிகள் :
துப்பாக்கிகளால் மதத்தை ஒழித்து விடலாம் என்று நினைப்பவர்கள. முட்டாள்கள். மஸாப், தீன், இமான்,தர்மா, நம்பிக்கை - இவையெல்லாம் மனித உடலில் இல்லை. ஆன்மாவில் இருக்கிறது.
சில்லிட்டுப் போன சதைப் பிண்டம்- குல்வந்த் கெளர் - மனிதனின் தன்னலத்தை வெளிப்படுத்தும், இன்னும் சொல்லப்போனால், தன்னலத்தின் உச்சத்தில் மனதிரிபடையும் ஒரு நிலையையும், எதிராளியின் நிலையைப்பற்றி கருத்தில் கொள்ளாது, கழுத்தில் கூர் வைப்பது போலான செயல்களில் ஈடுபடும் மனிதனின் நிலையைப்பற்றியும் குறிப்பிடுவதாய் அமைத்த கதாப்பாத்திரம்.
அதற்கு அவர் கருவாய் எடுத்துக்கொண்ட விடயம், திற கதையின் பின்புலமே.
இப்போது சிந்தித்துப் பார்த்தால், நான் முன்பு சொன்னதுபோல இன்னும் ஓர் இழையை உரித்தோமென்றால், குல்வந்த் கெளர் கதாப்பாத்திரத்தின் மூலம், அநீதி இழைக்கப்பட்ட ஓர் ஆன்மாவிற்காக இவள் மூலம் பதில் கொடுத்ததாயும் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
இன்னுமோர் இழையின் அடியில், அவர் சொல்ல வருவது எல்லாமே ‘சில்லிட்டு போகும் சதை பிண்டமே!’
அறியாமையின் பயன்கள்- இதில் மனிதனின் குரூரத்தை வெறும் ஒரு பக்கத்தில் விவரிக்கிறார். வெட்கித் தலை கவிழ்தேன்.
அதிசய மனிதன் - அதிசயத்தின் வாயில் திறக்க, வாய் பிளந்து தினந்தோறும் வாழ்வில் காத்திருக்கும் அதிசய மனிதர்களை பற்றியது. இதுவும் ஒரு பக்க கதை.
மிருகத்தனம் - இது நான் மிகவும் ரசித்த ஒரு பக்க கதை. மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்ற ஜி.நாகராஜன் கூற்றுக்கு ஏற்ற கதை. மிருகத்தனம் என்பதை விட மிருகக்குணம் என்பது இன்னும் பொருந்தும் என்று தோன்றுகிறது. மிருகங்களிடையே, குறிப்பாக தாய் மிருகங்களிடம் உள்ள குணம்.
மனிதன் தன்னை காப்பாற்றிக் கொள்ள பொய் சொல்வான்னு தெரிஞ்சுக்கிட்டேன் என்ற சுஜாதாவின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது. (எந்திரன் - சிட்டி சனாவிடம் கூறுவது). இக்கட்டான சூழ்நிலையில், மனிதன் தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை, இங்குள்ள ஒவ்வொரு கதையிலும் சொல்லிக்கொண்டே வருகிறார். அம்மாதிரியான சூழ்நிலையிலும், தன்னை நம்பியவருக்காக துடிப்பதே இங்கு மிருகத்தனம் (என் கூற்றில் மிருகக்குணம்).
ஜவ்வுமிட்டாய் - மிட்டாய் தலைப்பிலும் மிரட்சியை காட்டும் 12 வரிகள். அவ்வளவே. அதில் மொத்த காட்சிகளையும் விரித்தெடுக்க செய்துவிட்டார். இக்கதையின் ஒரு குறிப்பு, 10 வருட நண்பர் கண்ட நிலைமையை நினைத்துப் பார்க்க வைத்துவிட்டது. அவருக்கு இதில் தேவைப்பட்ட உப பொருள் கூட தேவைப்படவில்லை.
அக்குழந்தை கடைசியில் சொன்ன வரிகள் இவரின் கடைசிக்கு பொருத்தம். கடந்த 30 நிமிடங்களாய், அவர் பெண்ணிற்கு ஏனோ குறுஞ்செய்தி செய்ய சொல்லி மனசு சொல்வதையும் மீறி, இங்கு எழுதிக்கொண்டிருக்கிறேன், சட்டென்று அவர் வந்து இங்கு என் எழுத்தில் விழுந்துவிட்டார்.
விட்டுக்கொடுத்தல் - 4 வரிகள் கதை ,பெற்றவரின் கதறலுக்கு கணிந்து, அவர் மகளை கொலை செய்யாமல் விட்டுக்கொடுத்த விதம் அ***ம்.
மோசமான வியாபாரம் - வீணான ரோசம்
முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்- சம்பவங்களினூடே அலைக்கழிக்கப்படும் ஒரு போலீஸின் நியாயமான கோரிக்கை.
மண்ட்டோ, எதிர்வினைகள்- பதில்கள், அங்கிள் சாம்-ற்கு - தன்னை பற்றி வரும் கேள்விகளுக்கும், முரண்பாடுகளுக்கும் பகடியாய் பதில் சொல்லியிருப்பது தெரிகிறது, முதல் 2 கதைகளில். மூன்றாம் கதையில், வல்லரசு நாடுகளின் ஆதிக்கம் குறித்தும், மற்றும் அக்கால அரசியலின் அடிப்படையிலும் பகடியாய் ஒரு கடிதம். இது முழுதாய் புரிந்துக் கொள்ள அக்கால அரசியல் நிலவரம், உலகளாவில் ஒரு மேலோட்டமாய் தெரிந்திருந்தால் நலம். எனக்குத் தெரியவில்லை, ஆகையால் புரியவில்லை.