செவ்வாய், 10 டிசம்பர், 2024

இசையின் நகரம் - நாஷ்வில்

டிக்கெட் புக் செய்த நாளிலிருந்து மனதில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்து கொண்டிருந்தது. Country Music எனப்படும் நாட்டுப்புற இசையின் நகரமான நாஷ்வில் செல்வதற்கான ஆயத்த இழைகள் நீண்டுக்கொண்டிருந்தன. சென்ற வருடங்களில் நண்பர் தி.கா.வுடன் நாஷ்வில் பற்றிய பேச்சுகள் அரும்பியிருந்தன. மிட்வெஸ்ட் பகுதியின் அருகாமையை கருத்தில் கொள்ளும்போது, தேங்க்ஸ் கிவிங் விடுமுறை வாரத்திற்கு ஏற்ற ஊர் என்று பேசியிருந்தோம். சரி இவ்வருடம் செல்வோம் என திடீர் முடிவு. டிக்கட் புக் செய்தது அங்கு காணவிருந்த நேரடி நாட்டுப்புற இசை நிகழ்வு, Country music Hall of Fame மியூசியம் நுழைவு சீட்டுகள் மற்றும் தங்கும் விடுதி. காரில் செல்ல தீர்மானித்திருந்தோம். 6:30 மணி நேர பயணம். காலை வீட்டிலேயே உணவு உண்டுவிட்டு, பழங்கள், பழச்சாறு மற்றும் தீனிகளுடன் வண்டி கட்டியாகிவிட்டது. காண்டீபம் - தேரோட்டி பகுதியில் என் வாசிப்பு இருந்த சமயம் அது.அன்றைய பயணத்தின் முதற்பகுதி தேரோட்டி நான். 

வானம் ஒளி கொண்டிருந்தது. வார்ஸாவில் குளிர் கூடிக்கொண்டிருந்த நாட்கள் எனினும், வெளியே காண்பவர் யாரும் நம்பாத வண்ணம், கதிர் வெளிச்சம், கோடை காலத்தை ஒத்ததாய், கண் கூச செய்தது.வழி நெடுக இண்டியானாவின் பெரும்பான்மை மரங்களான டூலிப் பாப்லர் மரங்களும், ஓக் மரங்களும் அழகான சிவப்பும், இளஞ்சிவப்பும், மஞ்சளும் என தங்கள் இலை நிறங்களில் ஆர்ப்பரித்து கொண்டிருக்க, நடுநடுவே அதே வகை மரங்கள் தங்கள் இலைகளை முற்றுதிர்த்து புத்தனை போல் காட்சியளித்தன. 

மேலும் பைன் மரங்கள் இலைகள் உதிராது, நிறங்கள் மாறாது அணிவகுத்து கூடவே வந்து கொண்டிருந்தன. ஜெ-யின், ‘கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்’ என்னும் காணொளியினை கேட்டவாறே சென்று கொண்டிருந்தோம். பயணத்தை அது மேலும் இனிமையுடையதாய் ஆக்கிவிட்டிருந்தது. 

இண்டியானாபோலீஸ் நெருங்குகையில் மதிய உணவிற்காய் பஞ்சாபி தாபாவில் நிறுத்தினோம். அங்கு டைனிங் இல்லை, டேக் அவே மட்டும்தான் என்று போன பின்புதான் தெரிந்தது. எல்லாம் சுட சுட தயாரித்து கொடுத்ததாலும், காரில் வைத்தே சாப்பிட்டதாலும், முழுவதுமாய் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டது அவ்விடைவேளை. ஆனால் இதுவரை அப்படியொரு பராத்தாவையோ அல்லது மலாய் கோஃப்தாவையோ நான் இந்தியாவிலும் கூட சாப்பிட்டதில்லை. சுட சுட, வெண்ணெய் மின்ன, முழுநிலவின் அளவிலான மிருதுவான பராத்தா, பேப்பர் பிளேட் போட்டு மூடியிருந்ததை திறந்ததும், அந்த மணத்திலேயே மனமும், உடலும் புத்துணர்வு கொள்ள ஆரம்பித்துவிட்டன. பின்பு அந்த கோஃப்தா-அதை ஸ்பூனில் வெட்டும்போது, அம்மா செய்யும் குளோப் ஜாமூனை வெட்டும் மிருது கிடைத்தது. பிரேம் ஆனந்த் பரமானந்தம் அடைந்துவிட்டான். பொதுவாகவே அவனுக்கு வட இந்திய உணவில் ஈடுபாடு அதிகம். மூணு நாளைக்கு மேல், சோறும், தோசையும் தேடும் நாக்கு எனக்கு.

சாப்பிட்டு முடித்தும் வழக்கத்திற்கு மாறாக நானே வண்டியை ஓட்டினேன். ஒரு மணி நேர இடைவேளையில் கைம்மாற்றிக் கொண்டோம். இரண்டு மணி நேரம் சாப்பாட்டில் போய்விட்டதே என்று அங்கலாயித்த மனதிற்கு, நாஷ்வில் சென்று அடையும் போது ஒரு மணி நேரம் லாபம் என்ற செய்தி சற்று ஆறுதலாய் இருந்தது. 

ஆர்ப்பாட்டமில்லாத தேங்க்ஸ் கிவிங் மாலை நேரம். பெரியளவில் போக்குவரத்து நெருக்கடி ஏதுமின்றி, இன்னும் சொல்லபோனால் காலியான ஊருக்குள் செல்வது போல இருந்தது. வலதுப்பக்கம் அழகான வளைவுடன் கொரியன் வெட்டீரன்ஸ் பாலம் ஒளிர்ந்துக்கொண்டிருந்தது. மெளனமான அத்தருணத்தில், பியானோவில் வந்தமர்ந்த புறாவை போல லேசான சந்தம், தூரத்தில் ஒலிக்க கேட்டது. வண்டி பிராட்வே நெருங்கியது. சந்தம் சத்தமானது. சத்தத்தில் சத்திருந்தது. அதனால் அது இசையாய் தெரிந்தது. மனதில் வேகம் கூடியது. இரவு முழுவதும் நடந்து தீர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டது. குறைந்தது 10 பார்கள் ஏறியிறங்கு, அங்கு இசைக்கப்படும் நேரடி இசையை கேளு என்று தி.கா சொல்லியிருந்தார்.


இரவு மணி ஏழு ஆகியிருந்தது. நாங்கள், ஹோட்டல் சென்று புத்துணர்வு கொண்டு, டவுன்டவுனை காலில் அளப்பதற்கு தயாராகிவிட்டோம்.பத்து நிமிட நடையில் மீண்டும் பிராட்வே தெருவிற்குள் நுழைந்தோம். காரில் கடந்து செல்லும்போது பார்த்திருந்ததைவிட கூட்டம் பெருகியிருந்தது. குளிருங்கூட. கையுறைகளை பெட்டியில் வைத்து, மீண்டும் எடுத்து வெளியில் வைத்துவிட்டு வந்த என்னை நொந்து கொண்டேன். 

அந்த ஒரு தெரு. நீ கொண்டாடி தீர்ப்பதற்கு கரம் விரித்து உன்னை உள்ளிழுத்துக் கொள்வதாய் விழித்திருந்தது. எங்கு பெயர் பலகையை பார்க்கையிலும் கிட்டார்கள் மின்னிக்கொண்டிருந்தன. இருபுறங்களிலும் பார்கள் உயிர்ப்புடன். தெறிக்கும் இசையொலிகள் தெருவில் ஒன்றையொன்று மல்லுக்கட்டிக்கொண்டிருந்தன. 

ஒரு பெண், தனது நாயினை, குழந்தையைப்போல் தோளில் போட்டுக்கொண்டு, வருடிக்கொண்டே வேகமாக என்னை கடந்தாள். நாங்கள் வந்த தெருவின் எதிரேயிருந்த Robert’s Western World பாருக்குள் நுழைய சென்றோம்.நியூயார்க்கில் முதன்முறையாக திவி, புவியுடன் இரவு பார் சென்றபோது அடையாள அட்டை கேட்ட ஞாபகத்தில், எல்லாம் இருக்கிறதா என்று, எண்ணத்தில் ஒருமுறை ஓடவிட்டுக்கொண்டேன். வாயிலில் ஒரு பெண்மணி வணக்கம் சொல்லி, கையை நீட்டச் சொன்னாள். கட்டை விரல் பின்புறத்தில் ரப்பர் ஸ்டேம்ப் ஸீலில் ‘R’ என்று அச்சிட்டு, இருவரையும் உள்ளே அனுமதித்தாள். குறுகிய பாதை பாரின் முற்பகுதியாய், அதுவே கூட்டத்திற்கு ஆட்டத்தரையாகவும். இடதுப்புறம் மூன்று கலைஞர்கள். கிட்டார், டிரம்ஸ் மற்றும் டபுள் பேஸ் வாசித்து, கூட்டத்தை குதூகலிக்க வைத்துக்கொண்டிருந்தனர். குறுகிய அப்பாதை, மத்தியில் சற்று விரிந்து, இடதுப்புறம் சில டேபிள்களும், வலதுப்புறம் பார் செட்டப்பும், மேலே பால்கனிக்கு செல்லும் மாடிப்படிகளுமாய் வளர்ந்தன. இன்னும், அந்த பார் நீண்டுக்கொண்டு சென்றது. ஆனால் நாங்கள், ஏதுவாய் ஓரிடம் பார்த்து படியருகில் நின்றுக்கொண்டோம். இருவரும் லெமனேட் வாங்கிக்கொண்டு,இசையை கவனிக்கலானோம். எனக்கு தொடக்கத்தில் இசையோடு, அதை ரசிக்கும் இவ்வூர் மக்களை அவதானிப்பதில் ஆர்வம் சென்றது. 

இசை -ஒரு மனிதனை முக்காலத்திற்கும் முன்னும்பின்னுமாய் ஏற்றியிறக்கும் ஊஞ்சல். ஆண், பெண் ஒவ்வொருவரின் இதழும், அங்கு பாடப்பட்ட பாடல்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன. மனதில் இசைஞானியும், MSV-யும், எனது அப்பாவும் வந்து வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

சில நண்பர்கள் கூட்டம். பல ஜோடிகள்-இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது என எல்லா வயது வரம்பிலும். அதில் ஒரு ஜோடி - அந்த பெண் தன் பெற்றோருடனும், பாய் பிரண்டுடனும் வந்திருந்தாள். பெற்றோர் பார் சேரில் அமர்ந்து நால்வருக்குமான டிரிங்க்ஸ் ஆர்டர் செய்ய, அப்பெண் அவள் ஆண்மகனிடம், இசைக்கேற்ப மென்னசைவோடு, களிப்புற தொடங்கியிருந்தாள்.

பயணத்திற்கு முன்பு, நாட்டிசையின் வரலாறு மற்றும் முக்கிய கலைஞர்களை பற்றிய சிறிய அறிமுகம் செய்து கொண்டிருந்தோம். பெரும் மந்தநிலையின்போது (Great Depression) இந்த இசையானது மிகவும் பிரபலமாகியது. பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்ட அமெரிக்க மக்களால் இந்த இசை பரவலாக வரவேற்கப்பட்டது. Ken Burns-ன் Country Music என்னும் ஆவணப்படத்தில் சில பகுதிகள் பார்த்திருந்தோம்.Jimmy Rogers-யும், Carter குடும்பத்தையும், அவர்கள் ஆரம்பித்த, ஆக்கிரமித்த நாட்டிசையையும், ஜீன் ஆட்ரி பற்றியும் மற்றும் Johnny Cash-ன் பாடல்கள் சிலவும் கேட்டிருந்தோம். குறிப்பாக ‘யோடலிங்’ பாடல்முறையை ரசித்திருந்தோம். 

அந்த யோடலிங் இங்கு காதில் விழ, இப்போது கிட்டாரையும், டபுள் பேஸையும் தனித்தனியாய் பிரித்துணரவும், பின்பு அதை சேர்த்து அனுபவிக்கவும், அந்த டபுள் பேஸ் வாசித்த கலைஞர் பாடுவதும் ஒருவாறு பிடிபட தொடங்கியிருந்தன. அவர் பாட்டுக்கு, எசப்பாட்டாய் அந்த கிட்டாரும், அதற்கு பதிலாய் இவர் டபுள் பேஸும் போட்டிப்போட்டு கொண்டிருந்தன. மனதில், விஸ்வநாதன் வேலை வேண்டும், ரம்பம்பம், போட்டு வைத்த காதல் திட்டம்-இன்டர்லூட் என பாடல்கள் மீண்டும் மீண்டும் அலைமோதிக்கொண்டிருந்தன.

நாங்கள் இருந்த இடத்திலிருந்து, சற்று முன்னகர்ந்து, மத்தியில் நின்றுக்கொண்டோம். புதிதாய் உள்ளே வருபவர்கள், அங்கு ஆடிக்கொண்டிருந்தவர்களுடன், சேர்ந்து அழகாய் ஆடிக்கொண்டே உள்ளே வருவதும், கண்கள் சந்தித்தபோது சினேகமாய் சிரித்துக்கொண்டே கடந்ததும் அழகாயிருந்தது. அங்கு இரு பெண்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். பிரேமிடம் சென்று ஆடு என்றேன். என் ஆட்டம் உனக்கு தெரியாதா என்று கண்களை சுழற்றி, உதட்டை கீழிழுத்து பாவனை செய்ய, நான் புன்னகைத்துவிட்டு மேடையை நோக்கினேன். 

முப்பது வயதிருக்கும் அந்த டபுள் பேஸ் கலைஞர் ஒரு பாடலை தொடங்கியிருந்தார். அந்த பாடல் வரிகளை, அவர் பாடிய விரைவினை இப்போது மனம் ஒப்பிட்டு பார்க்க முயற்சிக்கிறது. தொடர்ந்து இடிக்கும் இடியில்கூட, சற்று டெம்போ குறைவாகத்தான் இருக்கும். தொடர்ந்து சில கணங்கள் மின்னும் மின்னலுக்கு டப்பிங் கொடுத்தால், அந்த செய்கையை மொழியில் பெயர்த்தால் என்ன விரைவை எட்டமுடியுமோ, அதனோடு ஒரு பத்து மடங்கு கூட்டிக்கொண்டால், ஒருவேளை நான் கேட்ட விரைவை, அந்த டெம்போவை, யூகிக்க முடியும் என்று சொல்லலாம்.

அம்மாதிரியான ஒரு தீவிரத்திறன் கொண்டு பாடும் நபரை நான் அப்போதுதான் பார்த்தேன். அது என்ன பாடல் என்று நினைவில்லை. அக்கலைஞர் பாடி, கடைசியில் அதன் உச்சத்தில் அந்த ஆறடி டபுள் பேஸ் மேலேயே ஏறி நின்றுவிட்டார். மிக ரசித்தோம். பின்பு, அந்த கிட்டார் கலைஞர் ஒரு பாடல் பாட, பின்பு இருவரும் சேர்ந்தொரு பாடலோடு முடித்துக்கொண்டனர். முடிந்ததும், அந்த டபுள் பேஸ் கலைஞர், நம்மூர் பால் கேன் போன்ற ஒன்றோடு ஒவ்வொருவரின் அருகிலும் வர, அதில் அவர்கள் காசு போட்டனர். அவர் எந்தவொரு சங்கடமும் உள்ளதாய் காட்டிக்கொள்ளவில்லை. என்னருகில் வரும்போது, நான் உரக்க உணர்ச்சி பொங்க கூறிய வாழ்த்தொலியில், முன்னாள் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தாள். பின்பு நாங்கள் அங்கிருந்து கிளம்பி வாசல் வருகையில், வலதுப்புறம் திரும்பி, அந்த கிட்டார் பையனிடம் வாழ்த்து சொல்லிவிட்டு வெளியேறினேன். அவர்களுக்காய், மனம் ஒரு கணம் நின்று எண்ணியது - நல்ல கலை எங்கிருந்தாலும் வாழும். கலைஞர்களும் வாழட்டும் என.

நாஷ்வில்லில், முதல் காலை. Country music Hall of Fame மியூசியம்தான் நாளின் முதல் பாதிக்கான திட்டம். பிரம்மாண்டமான இசை வரலாற்று தொகுப்பு. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு ஆரம்ப காலத்திலிருந்து தற்போதைய இசை வரையிலான, வருட வாரியான காட்சிப்படுத்தல். அமெரிக்காவில் எந்த ஒரு கலைக்கூடத்தையும் முதல் பயணத்தில் முழுவதுமாய் கண்டுவிட முடியாது. சூதர்களை கொண்டு ராஜ்ஜியத்தை வளர்த்தெடுத்த ராஜாக்களை போல, வரலாற்றை தக்கவாறு ஆவணப்படுத்துவதன் மூலம், தன்னை வளர்த்தெடுக்கும் நாடு. எங்களுக்கு ஒரு தளம் முடிக்கவே மூன்றரை மணி நேரம் ஆகிவிட்டது.அதுவே விரைவுதான். ஏனென்றால் அவ்வளவுதான் எங்களை தயார் செய்து கொண்டு சென்றிருந்தோம். Dolly Parton-ம், எல்விஸ் பிரஸ்லியும் தெரிந்திருந்தாலும் அவர்கள் பாடல்கள் கேட்டிருக்கவில்லை. எல்விஸ் பிரஸ்லியின் காடிலாக் கார் அங்கு வைக்கப்பட்டிருந்தது. தங்க கைப்பிடிகள் கொண்ட, வைரத்தில் இழைத்து பிரத்யேகமாய் தயார் செய்த வாகனம், அவர் பயன்படுத்தியது. 


முதன்முதலாக ஸ்டீல் கிட்டாரை நேரில் கண்டேன்.கிட்டார், மேண்டலின் மற்றும் பேஞ்சோவின் நரம்புகள் எல்லாம் சேர்ந்து ஒரே கருவியாய் பயன்படுத்தப்பட்டதும் அங்கு இடம்பெற்றிருந்தது. மேலும், கலைஞர்கள், நிகழ்ச்சியின்போது உடுத்திய உடைகள், நூற்றாண்டுகளில் எவ்வாறு மாறி வந்திருக்கிறது எனவும் அறிய முடிந்தது. 

Hall of fame அறைக்குள் நுழைந்தோம். அந்த அறை முழுதும் இடம்பெற்றிருந்தது கலைஞர்களின் உலோக முகங்கள். அவர்களை பற்றிய குறிப்புகள். அவ்வறையில் ஒரு சிறிய நீர் வீழ்ச்சி, அதில் ஏராளமான காசுகள் போடப்பட்டிருந்தன, நம் ஊர் கோவில் குளத்தில் இருப்பதுபோல். எங்கள் கண்கள் தேடியது Jimmy Rodgers-ஐ தான். அவரின் Sleep Baby Sleep பாடலுடன், காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே பாடலை ஏனோ மனம் எண்ணியது. 

அன்று மதியம், உலகின் நீண்ட நடைப்பாலங்களுள் ஒன்றான, ஜான் சிகென்தாலர் நடை மேம்பாலம் சென்றிருந்தோம். அழகான கட்டுமானத்திற்கான சிறப்பு பெயர் பெற்றிருக்கும் பாலமும் கூட. அன்று எங்களுக்கு கிடைத்திருந்த சிறிய வெப்ப வானிலையில், அதில் நடப்பதற்கு இதமாய் இருந்தது. பாலத்தின் மையத்திலிருந்து, சுற்றி எழுந்து நிற்கும் நகரின் கட்டடங்களை பார்த்து முடிக்கையில், கம்பர்லேண்ட் ஆற்றங்கரையோரம் இருந்த இரு குடிசைகளையும் கண்டேன்.  எதிரே, காரில் கடக்கையில் கண்ட, கொரியன் வெட்டீரன்ஸ் பாலம். 

மறுநாள் காலை, நாஷ்வில் பொது நூலகத்தில் ஆரம்பம். அழகான, விரிவான நூலகம். முழுக்க வீடற்றவர்களால் நிரம்பியிருந்தது. எல்லா இருக்கைகளிலும் அவர்களே அமர்ந்திருந்தனர். பெரும்பாலும் சாப்பிட்டுக்கொண்டும்,ஏதும் குடித்துக்கொண்டும் மற்றவர்களுடன் கிசுகிசுத்துக்கொண்டும் இருந்தனர். இதற்குமுன் இவ்வாறு சிகாகோ நூலகத்தில் பார்த்திருக்கிறேன். பகல் முழுவதும் நூலகம், அவர்களையும் அரவணைத்துக் கொள்கிறது.

அங்கு ஒவ்வொரு தளமாய் பார்த்து சென்றபின், Cartier in India புத்தகத்தை எடுத்து, அமர வழியில்லாமல் இருவரும் நின்றுக்கொண்டே, பார்த்து, வாசித்து முடித்தோம்.

ஒரு நாயை தூக்கிக்கொண்டு ஒரு பெண்ணும், ஆணுமென இருவர் வந்து, நூலக உதவியாளரிடம் ஏதோ கேட்க, அதை அவர் மென்மையாக நிராகரித்தார். எங்களுக்கு எதிரே ஒரு திருநம்பி அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, பேப்பரை குப்பையில் போட்டுவிட்டு திரும்புகையில் இன்னொரு நபர் அந்த இடத்தில் பையை வைத்ததும், இவர் கோவமாய் அவ்விடம் விட்டு அகன்றார். அவர் தெரியாமல் வைத்துவிட்டேன் என்று கேட்ட மன்னிப்பு நிராகரிக்கப்பட்டது. 



பின்னர், அங்கு பிரபலமான ஒருகடையின் மில்க் ஷேக்குடன், டவுன்டவுனை விட்டு வெளியேறிவிட்டோம். அடுத்த இடம் பார்தெனான். இப்பயணத்தில் இசையைத் தாண்டி, நான் எதிர்நோக்கியிருந்த இடமிது. 


கி.மு.447-ல் ஏதன்ஸில் கட்டப்பட்டது. இன்று அங்கு அது, அதன் தொன்மையான மகத்துவத்தையும்,காலத்தின் பாதிப்புகளையும் பிரதிபலிக்கிறது. பழமையான கட்டுமானம், போர்கள், இயற்கை அனர்த்தங்கள், மற்றும் வரலாற்றின் தவறான பயன்பாட்டால் பெரிதும் சேதமடைந்துள்ளது. 

நாஷ்வில்லின் பார்தெனான் 1897-ஆம் ஆண்டில் நடந்த ஒரு கண்காட்சிக்காக கட்டப்பட்டது. இது கிரேக்கத்தில் கட்டப்பட்டதன் முழுமையான பிரதி. அத்தேனின் பார்தெனான் போலவே, கலைச்சிறப்புகளை கொண்ட 42 அடி உயர அத்தினா சிலையுடன் இப்போது ஒரு அருங்காட்சியகமாக உள்ளது. அதன் குறிப்புகளை வாசிக்க வாசிக்க, எவ்வாறு உலக வரலாறுகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கின்றன என்று தோன்றியது. அது இன்னும் நெருக்கமாய் உணர வைத்தது. கிளம்புவதற்கு முதற்நாள், தற்செயலாய் டிராய் படம் பார்த்திருந்தேன். அது, அங்கு நான் கண்ட கிரேக்க சிலைகள் ஒவ்வொன்றுடனும் ஒரு உரையாடலை தொடர வைத்திருந்தது. 


அமெரிக்க ஓவிய கலைஞர்களின் ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொன்றும் பல கதைகளையும், பண்பாட்டினையும் தாங்கி நின்றுக்கொண்டிருந்தது. வின்ஸ்லோ ஹோமரின் ஓவியம் ஒன்று. (Rab and the girls) இரு பெண்கள் மலைகளின் பின்புலத்தில், புல் தரையில், நாயுடன் நின்றிருக்கும் அந்த ஓவியத்தில், நான்கு இலை கிளோவர் இலையை ஒருவர் கொடுக்க இன்னொருவர் பெற்று கொள்ளும் ஒரு காட்சி. அயர்லாந்து மக்கள் பண்பாட்டில், இதை பெற்று கொள்ளும் பெண், அதை உண்டாலோ அல்லது தன் காலணியில் வைத்து கொண்டாலோ, அதன்பின் அவள் சந்திக்கும் முதல் ஆண், அவளது வருங்கால துணையாவான் என்றவொரு நம்பிக்கை நிலவியுள்ளது. 

Sanford Robinson Gifford வரைந்த ,’Autumn in the Catskills’ மற்றும் Frederick Judd Waugh-ன் ‘Widening Sea’ ஆகிய இரு ஓவியங்களும் என்னை கவர்ந்தன. மோனேயின் Cliff மற்றும் Sunrise ஓவியங்கள் என் நினைவில் எழுந்தன. மேலும், அவர் ஒளிகளை, ஓவியத்தில் கையாளும் விதங்களை, இவ்விரு ஓவியங்களில் காண முடிந்தது.Widening Sea ஓவியம்,  Gustave Le Gray-ன், ‘An effect of the Sun- Normandy’ ஓவியத்தை நினைவுப்படுத்தியது. இவர் மோனேவுக்கு முன்னோடி. 

அன்று இரவு, ‘Grand Ole Opry’-யில் இசை நிகழ்வு. நேரடி இசை நிகழ்வு அன்று நேரலையும் கூட. ஒவ்வொரு சனியன்றும், அவர்களின் பண்பலையில் நேரலை செய்யும் வழக்கம். 99 வருடங்களாக அது நிகழ்ந்து கொண்டு வருகிறது. அடுத்த வருடம் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யவிருக்கிறார்கள். அந்த அரங்கு பல பேர்களின் கனவு, லட்சியமாய் இன்றும் நிற்கிறது. அந்த மேடையின் மைய வட்டத்தில் ஒரு கால் வைத்து பார்ப்பதற்கு சிலிர்த்து சிலாகித்து போகிறார்கள் கலைஞர்கள்.





நிகழ்வில், கிட்டார்களின் ஆதிக்கம் ஏகமாய் இருந்தது. பிரேம் ஒரு தீவிர கிட்டார் ரசிகன். அதுவும் பேஸ் கிட்டார் என்றால் அவன் மகிழ்ச்சி அலாதிதான். ஒரு பாடலில், என் காதில், முதலில் விழுவது அப்பாடலின் வரி. அவனுக்கு இன்ஸ்ட்ருமென்டேஷன் எனப்படும் கருவியாக்கம். அன்று உண்மையிலேயே கிட்டாரில் பின்னிவிட்டார்கள். அதை என்னால் ரசிக்க முடிந்தது. எனக்கு பாஞ்சோவின் இசை இன்னும் கூடுதலாய் பிடித்திருந்தது. Hall of fame-ல் ஒருவராக இடம்பெற்றிருக்கும் Don Schlitz தன் இசையில், அழகான கதை சொல்லி சிரிக்க வைத்தார். Steve Earle, நாங்கள் கேட்டு சென்றிருந்த 'Copperhead Road' பாடலை பாடினார். 

அன்றைய நிகழ்வில், Collin Stough என்ற இருபது வயது கலைஞர். அவர் அன்று அந்த மேடைக்கு புதிது. மிசிசிப்பி - காட்மென் பகுதியை சேர்ந்தவர். அப்பகுதியின் மொத்த மக்கள் தொகை எழுபது. அதில் அவர் நிகழ்ச்சியை காண இருபது பேர்கள் வந்துவிட்டார்கள். அவர் பாடி முடித்து, தன் ஊரை பற்றிச் சொல்லி, மேடை விட்டு திரும்புகையில் கூடுதலான கைத்தட்டல் பெருகியது. உலகம் முழுதும் மனிதன்,அடி ஆழத்தில் , ஒரே சரடாய் நீள்ந்திருக்கிறான்!

வியாழன், 31 அக்டோபர், 2024

ஆயிரம் கரங்கள் நீட்டி..

பின்னிரவில் தூங்கி இருந்தாலும் காலை 6 மணிக்கு முழிப்பு வந்துவிட்டது. பனிக்காலத்தை நெருங்கி கொண்டிருக்கும் ஊரானது சற்று கம்பளியை மேலிழுத்து கதகதப்பாய் உறங்கிக் கொண்டிருந்தது.

இரண்டு மூன்று முறை புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. பிரேம் எழுந்துவிட்டான். நான் ஐ பேடில் எதையோ தேடிக் கொண்டிருந்தேன். புத்துணர்வு கொண்டு வந்து, நான் ஓடி விட்டு வருகிறேன், வெளியில் 18 பாகை செல்சியஸ் என்றான் . நான் தூக்கம் களைந்திருப்பதை பார்த்து, டேபிள் லேம்ப் போட்டவனை, கையசைத்து நிறுத்த சொல்லிவிட்டு, கதவை மூடிவிட்டு போ என்று ஐ பேடில் மூழ்கினேன். சிறிது நேரத்தில் நன்றாக முழிப்பு வந்து, எழுந்து புத்துணர்வு கொண்டு, படுக்கையை சரி செய்து, அறையின் திரை விலக்கியபோது, மனதில் சிறு துள்ளல். செம்மையும், இளஞ்சிவப்புமான மார்னிங் ஹீயுஸ் கொடுத்த பரவசம் அது. 

வானிலை செயலி எடுத்து சூரியோதயம் எப்போது என்று பார்த்த போது, 8:18 என்றிருந்தது. மணி அப்போது 8:06. உடனே உடை மாற்றிக் கொண்டு, தலையை கட்டி, காலுறை எடுத்துக் கொண்டு, ஹாலுக்கு வந்து, புதிதாக வாங்கியிருந்த ஷூவை பழக்க வேண்டும் என்ற எண்ணமும், புது ஷூ போட்டு நடைக்கு செல்லும் உற்சாகமும் சேர, கதவை பூட்டிவிட்டு வெளியே வந்தேன். 

ஏறத்தாழ ஆறு மாதம் கழித்து, இந்த காலை நடை இங்கு வார்ஸாவில். இறங்கி நடந்த என் கால்களுக்கு தானாக விரைவு கூட, கிழக்கை நோக்கிக்கொண்டே நடக்கலானேன். ஓட்டம் முடித்து வழியில் பிரேம் வர, என்னுடன் சூரியோதயம் பார்க்க இணைவான் என்று நினைத்தேன். ‘9 மணிக்கு மீட்டிங் ஸ்டார்ட் ஆகுது டா, நான் குளிச்சு, ஜாயின் பண்ண சரியா இருக்கும்’ என்றான். சரிடா பாரு என்று சற்றும் தாமதிக்காமல், என்னை தன்பால் நோக்கி இழுத்துக் கொண்டிருந்த இயற்கையின் மாயக்கரங்களை  பற்றலானேன். 

ரவுண்ட் அபவுட் என்று கூறக்கூடிய நாற்சந்திப்பின் மேடை பகுதியில் சென்று நின்றவாறே அந்த மாயாஜாலத்தை பருகலானேன். கீழ் வானத்தில் இருந்து மெல்ல மெல்ல அவன் எழுகிறான். தினமும் அது நடக்கிறது. ஒவ்வொரு முறை காண கூடும் போதும், ‘என்ன ஒரு பெருங்கருணை! என்ன ஒரு பெருங்கணம்! இனி இதனை வாழ்நாளில் தவறவிடக்கூடாது’ என்று தோன்றும். இன்று எனது அப்பாவையும், தம்பியையும் நினைத்துக் கொண்டேன். கதிரவன் முழுதாய் மேலெழுந்து வந்து நின்றதும், நான் நடையை தொடரலானேன்.

எனக்கு பிடித்த ஒரு நடைபாதை. போய்வர இரண்டு மைல்கள் தூரம் கொண்ட ஒரு கச்சிதமான பாதை என்று சொல்லலாம், ஊரை போலவே. நாற்சந்திப்பின் வலதுபுறம், அதாவது மேற்கை நோக்கி திரும்பினால், மெயின் ரோட்டின், இடது புறமாய் நீண்டு செல்லும் அப்பாதை. பைக்கிங் (நம்மூர் சைக்கிள்) பாதையும் அதுதான். 

ஏற்றம் இறக்கம் கொண்டு இருக்கும் அப்பாதை ஓ(ட்)டுபவர்களுக்கும், நடப்பவர்களுக்கும், தாங்கள் ஏதோ பெரிய பயிற்சி செய்துவிட்ட பாவனையை அளிக்க வல்லது. ஆறு மாதங்களுக்கு முன்புதான் நடைபாதையை புதுப்பிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இன்று பாதை புதிதாக கருப்பு கம்பளம் விரித்திருந்தது. 

விடியும் காலை கொடுத்த எழுச்சியா, அல்லது, ஆள்மனப்புழுக்கத்தின் அயர்ச்சியில் இருந்து விடுபட துடிக்கும் முயற்சியா என்று தெரியவில்லை, நடந்த என் கால்கள் மெல்லமாக ஓட்டம் பிடித்தன. அவ்வப்போது நடக்கும் போது ஓடவும் செய்வதுண்டு. ஆனால் இன்று இருந்த அந்த சிறிய தூர ஓட்டம் வேறு. அது முன்பு போன்றது இல்லை என்பது மட்டும் உறுதி. அந்த நிமிடம் ஜெ (எனது ஆசான் திரு.ஜெயமோகன்) அவர்களை நினைத்துக் கொண்டேன். நினைத்து கொண்டேன் என்று சொல்வதைவிட அவராய் நடந்தேன். அவரது சுறுசுறுப்பும், சிரித்த முகமும் நினைவில் வந்தன. சிறிது தூரத்தில் நின்று, திரும்பி கதிரவனை நோக்கினேன். திரும்பி மீண்டும் என் திசையில் நடந்தேன். யாருமற்ற நடைபாதை. இலையுதிர் கால சருகுகள் வழியில் நிறைந்திருக்க, என் தூரத்தை காணாது, காலடியை மட்டுமே கருத்தில் கொண்டு நடக்கலானேன். டிப்பிகன்னோ ஆறு இருபுறமும் ஓட, நடுவில் அமைந்த சிறு பாலத்தை கடக்கையில் சற்று தூரத்தில் ஒரு பெண் வருவதை கண்டேன்.

சிறு பதற்றம் உள்ளுக்குள். ஒரு வேளை நமக்கு தெரிந்தவரா? நமக்கு யார் இங்கு தெரிந்தவர், உமேஷ், நிதர்ஷினியை தவிர. நிதர்ஷினி இன்னும் சற்று உயரம். மேலும் இந்த காலை வேளையில் சித்தாந்தை பள்ளிக்கு கிளப்பி கொண்டிருப்பார். நடைக்கு எங்கே வரப்போகிறார், அவராக இருக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, அப்பெண்மணி என்னை நெருங்க, இருவரும் ஒருவருக்கொருவர் காலை வணக்கம்  சொல்லி கடந்தோம். அவருக்கு கொடுத்த மென்னகையின் ஒளித் துகள்கள் என் இதழோரம் ஒட்டியிருப்பதை உணர்ந்தேன். 

மேடேறி நடக்கலானேன். இடதுபுற பெரிய கட்டிடத்தின் நீள் கண்ணாடியில் என் உடல் எடையை கண்ணளவு எடுப்பது என் வழக்கம். மூன்று நீள் கண்ணாடிகளை கடக்கும்போதும் அதை செய்து கொண்டே, வலது புறம் அமைதியாய் அமர்ந்திருந்த மேடிசன் எலிமெண்டரி பள்ளி வளாகத்தை கண்டேன். அதன் பார்க்கிங்கில் சில கார்கள் நின்றன. நான் முதன் முதலில் கார் எடுத்து ஓட்ட, இல்லையில்லை முதன்முதலில் பார்க்கிங் செய்ய கற்றுக் கொண்ட இடம். தினமும் ஒரு மணி நேரம் முழுவதும் வெறும் பார்க்கிங் மட்டுமே செய்த நாட்கள் உண்டு. எனது வாகன பயிற்சியாளர் திரு. பிரேம் அவர்கள் பயிற்சியின் ஆரம்ப நாட்களில் வெறும் பார்க்கிங் மட்டுமே செய்ய கற்றுக் கொடுத்தார். அந்த வகையில் இந்த பள்ளி என் மனதிற்கு நெருக்கம். எதிர்புறம் பள்ளி இருக்க, அதோடு என் நடைபாதை எல்லை முடியும். ஆனால், அதன்பின் மீண்டும் ஒரு நாற்புற சாலை சந்திப்பு தாண்டி, பாதை சென்று கொண்டுதான் இருக்கும். 

நான் திரும்பி இப்போது கிழக்கு நோக்கி, வந்த வழியில் நடக்கலானேன். கதிரவன் இந்த பதினெட்டு நிமிடங்களில் ஓரளவு உயரத்திற்கு வந்துவிட்டான். என் கண்களில் என் தந்தையின் சிரித்த முகம். நடந்து வந்து கொண்டிருக்கையில், இடதுப்புறம் இன்னும் பனிக்காற்றின் கைகள் தீண்டப்படாத, கதிரவனின் கண்ணொளியில் மங்கிடாத , செவ்விலை மரங்களும், மஞ்சள் நிற மரங்களும், மோனேயின் ஓவியம் போல நிலைத்திருக்க, நெஞ்சம் சில நொடிகள் அதில் நிலைத்திருந்தது. 

அவ்வழியில் சில சமயங்களில் நானும் பிரேமும் எதிரெதிரே சந்தித்து கொள்வதுண்டு. அவன் ஓட்டத்தின் வழிதடத்தில், என் நடையின் பாதை சந்தித்து கொள்ளும் தருணங்கள். அவ்வாறு சந்திக்கும் ஒரு சில வேளைகளில் தூரத்திலிருந்து, நான் அவனை நோக்கி, 90களில் வெளிவந்த கேட்புரீஸ் விளம்பரத்தில் வரும் பெண், மைதானத்தில் இறங்கி ஆடுவது போல் சேட்டை செய்வதும், இருவரும் 80களின் பாரதிராஜா பட கதாநாயகி, நாயகர் போல் ஸ்லோ மோஷனில் ஓடி வருவது போன்ற பாவனை செய்து சிரிப்பதும் மனதில் மலர்ந்தன.

ஒரு முறை நான் அந்த மரங்களின் எதிரே நடக்கையில், என் இடது கை விரல்களை, விரல் நுனிகள் பின்னிருந்து வந்து தொட்டு கோர்த்தன‌. நான் யார் என்று சிலிர்த்து திரும்புகையில், பிரேம் புன்னகைத்து உடன் நடந்த அந்த நினைவலையில் நெஞ்சம் நனைந்தது.

பின்பு என் வழியில் ரில்கேயும், முராகமியும், பஷீரும், நாமக்கல் கவிஞரும், கல்கியும், அருணா அக்காவும், (அருண்மொழி நங்கை), பெருமாள் முருகனும் அலைமோதுகிறார்கள். அவ்வழித் தடத்தில் இப்படைப்பாளிகளின் புத்தகங்களை கேட்டவாறு நடந்த அனுபவங்கள் சேர்ந்து வந்து, தோள் தொட்டன.

ரில்கேயுடன் பாரீஸில் அமர்ந்து, கடிதங்களுக்கு அவர் பதில்களை கேட்டதும்,   முராகமியுடன் நியூயார்க்கில் நான் ஓடியதும், நாமக்கல்லாரால், எம்.ஜி.ஆருடன் மலைகளை தாண்டியதும், கல்கியின் பூங்குளம் கிராமத்தில் வாழ்ந்ததும், அருணா அக்காவின் பால்ய நாட்களை அருகிருந்து பார்த்ததும், குமரேசன், சரோஜாவை பார்த்திட வேண்டுமே என்று நான் பதற்றப்பட்டதும், மஜீதும் சுகறாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கும் அவ்விரவில், விவஸ்தை இல்லாமல் நான் அவர்களுடன் இருந்ததும் ஒரு சேர அணிவகுக்க,மென்னகையுடன் நான் நடக்கலானேன். சூரிய கிரணங்கள் என் மீது விழ, நான் மீண்டுமொரு மேடேறினேன். 

ரவுண்டு அபவுட்டின் எதிர்புறம் கடக்கையில், புல்வெளி, உதிர்ந்த செவ்விலைகளால் மலர்ந்திருந்தது கண்ணில் பட்டது. என் தலைக்கு மேல், அழகான ஓசையுடன், அணிவகுத்து, கனடியன் நாரைகளும், ஃபின்சுகளும் (குருவியினம்) கிழக்கு நோக்கி பற‌ந்தன. எனது இடது பக்கம் புதிதாக நம்மூர் பன்னீர் ரோஸ்கள் மலர்ந்திருந்தன.என் வீடு, கை விரித்து என்னை வரவேற்றது.


*

வியாழன், 10 அக்டோபர், 2024

என் வினையை கண்டேனே!

சில்க் போர்டு பாலத்திற்கு முன் 2:15 மணிக்கு திருச்சிக்கு பஸ். மதிய வேளையாய் இருந்தும் ஸ்லீப்பர் பஸ் தான் புக் பண்ணியிருந்தேன். மாமானார் என்னை ஏற்றிவிட வந்திருந்தார். கையில் வைத்திருந்த கட்டை பையை எவ்வளவு கேட்டும் கொடுக்கவில்லை. பெங்களூர் என்றாலும் வெயில் வெளுத்து வாங்கி கொண்டிருந்தது. அங்கு இருந்த பஸ் நிறுத்தத்தில் ஐந்து நிமிடங்கள் நின்றிருந்திருப்போம். எனக்கான பஸ் வந்துவிட்டது. ‘வா மா பஸ்

வந்திருச்சு’ என்று சொல்லிக்கொண்டே, எனக்காக காத்திருக்கவில்லை, சிறு பையனை போல் சுறுசுறுப்பாய் முன்னே சென்று கை போடுகிறார். அந்த நடையில் அவர் குணம் தெரிந்தது. ‘மாமா பாத்து, பஸ் நிக்கும்’ என்றேன். அவர் கேட்கவில்லை, அவருக்கு கேட்கவில்லை. அருகே சென்று பையை வாங்கிக்கொண்டு, தேங்க்ஸ் மாமா, உடம்ப பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு, பஸ்ஸில் ஏறி என் இருக்கைக்கு சென்றேன். செருப்பு காலோடு பஸ் இருக்கையில் கால் வைக்க ஒப்பவில்லை. செருப்பை கழற்றிவிட்டு காலை மேலே வைக்கலாம் என்றால், டிரைவர் ஆக்ஸிலேட்டரை அழுத்தினால், செருப்பு அடியில் எந்த கிடுக்கில் மாட்டிக் கொள்ளும் என்று தெரியாது. கை எட்டாத தொலைவிற்கு சென்று சிக்கிக்கொண்டால், அதை எடுப்பதற்கு தொழுவது போல் பிரயத்தனப்படவேண்டும். இவையெல்லாம் அரை வினாடியில் மனதில் விரிந்திட, செருப்பை கழற்றாமல் ஒருவாறு வளைந்து அமர்ந்துக்கொண்டு, திரையை விலக்கி கண்ணாடி வழியில் கையாட்டினேன். மாமா கண்ணாடி அருகில் வந்து நின்று தலையாட்டினார், புன்னகைத்தார். இரண்டு நிமிடங்களில் பஸ் புறப்பட்டுவிட்டது.  

பேக்பேக்கை இருக்கையின் இடதுப்பற கால் பகுதியில் வைத்துவிட்டு, கட்டை பையை என் இருக்கையின் இடதுப்புற நடுப்பகுதியில் சரி செய்து வைத்துக்கொண்டேன்.


அடுத்து என் பாதுகையை பாதுகாக்கும் திட்டம். குனிந்து அடியில் பார்த்தேன். ஏற்கனவே நான் அடியில்தான் இருந்தேன். லோயர் பர்த் வேண்டும் என்று ஒரு நாள் தள்ளி பதிவு செய்திருந்தேன். இது லோயர் இல்லை.லேயர் என்று சொல்லலாம். என் படுக்கையை உரித்துவிட்டு பார்த்தால் பஸ் சக்கரம் தெரியும் என்று நினைக்கிறேன்.  இதுவும் ஒரு மாதிரி நல்லாதான் இருந்தது. ஜப்பானியர்களின் பண்பாட்டில் மெத்தையை கீழே போட்டு தூங்கும் வழக்கம்போல். நானும் என் வீட்டில் அப்படித்தான் தூங்குவேன். சில சமயங்களில் ஒருகளித்து படுத்து வலது கையை தரையில் வைத்து கொள்வேன். அதில் ஒரு சொகுசும் இருக்கு, நிலத்தை ஸ்பரிசிக்கும் நிம்மதியும் இருக்கு.


பாதுகைக்கு பாதகம் இல்லை. கீழே இரண்டு பகுதிகளாய் பிரிந்திருந்தது. ஒன்றின் நீளமும், அகலமும் அதிகம். அதில் செருப்பு மாட்டினால் நான் நிச்சயமாய் தொழுகைதான் நடத்த வேண்டும். இன்னொரு பகுதி செருப்பு வைப்பதற்காகவே என்று, சிறியதாய், சற்று இறக்கத்தில், நீளம், அகலம் கம்மியாக இருந்தது. எழ முடியாமல் பஸ் ஓட்டத்தில் ஆடி எழுந்து அதில் கழற்றி வைத்தேன். ஏற்கனவே வெளியில் கழற்றி போட்டுவிட்டு எனக்கு எதிர் இருக்கையில் படுத்திருந்த பெண்மணி, என்னை பார்த்து, செருப்பை எடுத்து அவருக்கு உண்டான அந்த பகுதியில் வைத்துவிட்டு என்னை பார்த்தும் பார்க்காதது போல் படுத்துக் கொண்டார். 


இருக்கையின் திரையை இழுத்து வெல்குரோவை ஒட்டிவிட்டு, தலையணையை நிமிர்த்தி வைத்துக்கொண்டு, ராணி தோரணையாய் கால் நீட்டி சாய்ந்து நீள்மூச்செடுத்தேன். 


மனதில் ஒரு அவசரம், அதை நினைக்கையில் பரவசம். கிளம்பும்போது, என் ஓப்பிடியார், மாமனாரிடம் சொல்லி, என் பயணத்திற்கு Dairy Milk Silk சாக்லெட்டை வாங்கி வரச் செய்திருந்தார். பயணத்தில் எனக்கு அதை சுவைக்கப் பிடிக்கும். பசியாறவும் நான் தேர்ந்தெடுப்பது அது. அது என் கைப்பையில் இருக்கு என்று நினைக்கும்போதே பரவசம் தான். அதன் ஆடை முழுவதுமாய் களையப்படாமல், முதலிரவில் தன்னை முழுதளிக்க இருக்கும் பெண்மையை, தயங்கி,நெருங்கி, பாங்காய் வெளிக்கொணரும் ஆண்மையாய் என் கைகள் மாறும். என்ன ஒரு தேவையற்ற கற்பனை. சாக்லெட் சாப்பிடும் சபலத்தை சற்று தள்ளிப்போட்டேன். பஸ் தன் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. 


நான் இந்த முறை கையில் புத்தகங்கள் எதுவும் எடுத்து வரவில்லை. கிண்டிலில் வாசித்து கொள்ளலாம். மேலும் 3 மாத காலமாக பாடல்களே கேட்காமல் இருந்த காரணத்தினால் பயணத்தில் பாடல்கள் கேட்கலாம். இல்லை எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்க வேண்டும் என்றெல்லாமான எண்ணங்களோடுதான் இரண்டு நாள் பயணமாக வந்திருந்தேன். 

அமைதியாய் அந்த வெயிலில், அகன்ற கண்ணாடி சன்னல் வழியில் கடைகளையும், மனிதர்களையும், மரங்களையும், சின்ன சின்ன குன்றுகளையும் பார்த்துக்கொண்டே சென்று கொண்டிருந்தேன். மதிய வெயில் பொதுவாய் என் மனதில் ஒரு வெறுமையை பரப்பும். மக்கள் நடமாட்டம் மங்கியிருக்கும் அந்த இரண்டு மூன்று மணி நேர இடைவெளியில், நிலம் வெறித்திருப்பதாய் தோன்றும். மேலும், மூடியிருக்கும் சன்னல் வழியே பார்க்கும்போது, எட்ட இருக்கும் நிலப்பரப்பும், நான் அங்கு நடந்து கொண்டிருப்பது போலவும் மனதில் காட்சி விரியும். அது தனிமையின் உணர்வையும், ஏகாந்தத்தையும் ஒரு சேர தருவதாய் தோன்றும்.  அந்த உணர்வின் சிறகில் நகர்ந்துக்கொண்டேயிருந்தேன்.


லேசாக பசிக்க ஆரம்பித்தது. சாக்லெட்டை பிரித்து சுவைத்துக் கொண்டே பாடல்கள் கேட்கலானேன். எனக்கு என்றுமே அது ஒரு சுகானுபவம். சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தேன். பயணத்தின் போது தண்ணீர் பொதுவாக கம்மியாக குடிக்கும் வழக்கம். இந்தியாவில், பொது கழிப்பிடங்கள் இன்னும் பெரிதாக இல்லை. இருந்தாலும் அது பயன்படுத்தும் அளவுக்கு பராமரிக்கப்படுவதில்லை.மேலும், பஸ் பயணத்தில் அவன் ஒரு ஹோட்டலில் ஹால்ட் போடுவான். அந்த இடத்தின் முகப்பை பார்த்தாலே நமக்கு போகத் தோன்றாது. இருந்தாலும் பின்னால் தொல்லை கொடுக்கும் பல் வலியை நினைத்து, கொஞ்சம் தண்ணீர் குடித்து, பல்லில் ஒட்டியிருக்கும் சாக்லெட்டை சுத்தம் செய்தேன். 


ஐ போனில் முழு மின்தேக்கம் வைத்திருந்தாலும், பயணம் முழுதும் அதை வைத்துக்கொள்ள வேண்டி, இணையத்தை இணைக்காமல்,  போனிலிருந்த சில பாடல்களை முதலில் கேட்போம் என்று, 

‘நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பார்த்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல’ என்ற பாடலை கேட்கலானேன். மனம் ‘ஏந்திழையில்’ லயித்தது. என்ன அருமையான சொல்லாடல்! வாலியை நினைத்தேன். பின் அந்த வார்த்தை வேறு எந்த பாடல்களில் வருமென்று யோசிக்கலானேன். ஏதோ ஒரு பழைய பாடலில் அவ்வார்த்தையை கேட்ட ஞாபகம்.சட்டென நினைவுக்கு வரவில்லை. சங்க இலக்கியத்தில் எங்கு வருகிறது என்று தேடி பார்த்ததில்,  புறநானூற்று பாடலில் (பாடல் 66) 


“ஏந்திழை வில்லொடு

இருஞ்சரு நாணுடை

கொடிய செருத்தவொடு"

என்று வருகிறது. 


இதை பிசிராந்தையர் பாடியுள்ளார். இப்பாடல் கொடியரசர் நன்னன் மீது பாடப்பட்ட இகைப் பாடலாகும். 


இது எப்படி இந்த இடத்தில் பொருத்தமாகும்? பாடலில் கதாநாயகன், தன் நாயகிக்காய் காத்திருக்கிறானே என்று மேலும் தேடியதில்,அழகிய ஆபரணங்களை அணிந்த பெண் என்றும் பொருள் கொள்ளப்படுவதாய் ராமன் என்பவர் தன் வலைப்பூவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் அதற்கு நாலாயிர திவ்யபிரபந்தத்திலிருந்து அச்சொல் பயன்பாட்டை மேற்கோள் காட்டி, அதனை நாடோடி தென்றல் படத்தில் இசைஞானி தன் பாடலான ‘மணியே மணிக்குயிலே’ பாடலில் பொருத்தமாய் பயன்படுத்தியிருந்ததை சுட்டிக்காட்டியிருந்தார். (http://loginramanan.blogspot.com/2016/07/blog-post.html?m=1)


சில்வர் டப்பாவி்ல், தேவி (என் ஓப்பிடியார்) தோல் நீக்கி, கருக்காமலிருக்க மேலே லேசாக உப்பு தூவி, வெட்டி வைத்திருந்த ஆப்பிள் துண்டுகளை கொரித்தவாறே , அதை வாசித்து மூடிவிட்டு அப்படியே வானத்தை பார்த்துக்கொண்டே மனதில் எங்கோ அலைந்திருந்தேன். நேரம் கடந்தது.


அந்தி வானம். இரவு இன்னும் தன்னை விரித்துக்கொள்ளவில்லை. என்றாலும் அழகான பிறை நிலவு தெரிய ஆரம்பித்திருந்தது. அதனருகில் சிறு துண்டு மேகம். அந்த மேகத்தின் நுனி பிசிறுகளின் தொடுகை அந்த பிறை மேல். மனதில் ஒருவித ஆசுவாசம், ஒரு கிளர்ச்சி, சிறு புன்னகை, பெருங்கர்வம் என்று உணர்வுகளின் அலைக்கழிப்பில் தள்ளாடியபடி நகர்ந்திருக்க, பஸ் இடைவேளைக்காய் மேலூரில் நிறுத்தப்பட்டது. 


இறங்க வேண்டுமா என்று உடம்புடன் ஒரு சிறு உரையாடல் நிகழ்த்தி, வயிறு மிக லேசாக முட்ட ஆரம்பித்திருந்த போதிலும், இன்னும் 3 மணி நேரம் தான் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லி அதன் வாயடைத்துவிட்டிருந்தேன். பஸ் மீண்டும் கிளம்பியது. 


இருட்ட தொடங்கியிருந்தது. வண்டி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

முழுமையறிவு யூ டியூப் சேனலில், ‘நாத்திகத்திற்கு தத்துவம் உண்டா? என்ற தலைப்பில் (https://youtu.be/G30OGroEBOI?si=uerbnGwldzRsZ_g_) ஜெ-யின் உரை கேட்கலானேன். முடியும்வரை முழு கவனம் அதிலிருந்தது. முடிந்தபின்தான் உடலின் மீது கவனம் திரும்பியது. என் உடல் லேசாக அசெளகரியம் அடைய தொடங்கியிருந்தது. இடைவேளை நிறுத்தம் கடந்து அரை மணி நேரம் ஆகியிருக்கும். என் அடி வயிறு நிரம்பிக் கொண்டிருந்தது. சரி அதில் கவனம் கொள்ள வேண்டாம். கொஞ்சம் மனதை திசை திருப்புவோம் என்று மீண்டும் வானத்தை பார்க்கிறேன். இம்முறை எந்த அழகும், உணர்வுகளும் தோன்றவில்லை. எனக்குத் தேவையெல்லாம் சீக்கிரம் மணி ஒன்பது ஆகவேண்டும். அப்போதுதான் பஸ் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வந்து சேரும். ஆகையால் அது மட்டுமே புத்தியில் ஓடிக்கொண்டிருந்தது. மணி பார்த்தேன். இரவு 7:15 ஆகியிருந்தது. குளிர தொடங்கியிருந்தது. தலைக்கு மேல் இருந்த Knob-ஐ சுற்றி, ஏ.சி யை நிறுத்திவிட்டேன்.


மனதில் அரை மணி நேர முன்பான கடந்த காலத்திற்கு சென்று, இடைவேளையில் நின்றிருந்த பஸ் விட்டு இறங்கி, சிறுநீர் கழித்துவிட்டு வந்து அமர்ந்துக்கொண்டேன். ஆஹா, எவ்வளவு நிம்மதியாய் இருந்திருக்கும் செய்யாமல் விட்டுட்டோமே என்று பொருமினேன். பொறுமையிழக்க தொடங்கியது. இருந்தாலும் கர்வத்தோடு, நம்மால் மூன்று மணி நேரம் தாங்கிவிட முடியும் என்று அமர்ந்திருந்ததற்கு இந்த பதற்றம் தேவைதான். அனுபவி என்று புத்தி கோபத்தை கக்கி கொண்டிருந்தது. 


மனம் எழுந்து , இல்லாமையின் பாதையில், உடலை செலுத்தி, பஸ்ஸின் பின்பக்கம் கழிவறையை நோக்கி செல்கிறது. அங்கு கழித்துவிட்டு வந்து அமர்ந்து ஆசுவாசமாகிறது. 


வண்டி பைபாஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தது. இரு பக்கமும் கடைகளும் இல்லை, காடுகளும் இல்லை. கால் மடக்கி குதிகாலை அண்ட கொடுத்து ஒருவாறு ஆசுவாசம் கொள்ள தவிக்கிறேன்.


வேர்க்க ஆரம்பித்தது. ஏசியை போட்டேன். சரிந்து படுத்து கொள்வோம்.  மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது.  இன்னும் ஒரு மணி நேரம்தான் என்று முயற்சி செய்தேன். முடியவில்லை. மீண்டும் அதே நிலையில் அமர்ந்துக்கொண்டேன். சரி இப்ப என்ன பெட்ரோல் பங்கில் பஸ்ஸை நிறுத்த சொல்வோம். இல்ல வேணாம், மற்றவருக்கும் இதனால் வீடு செல்வது தாமதமாகுமே. நம்மள மாரி அர கிறுக்கு, அந்த நிறுத்தத்துலயும் போகாம, வயிறு முட்டி அவதிப்பட்டா? பட்டா உனக்கென்ன? ஓ உடம்ப மதிக்க துப்பு இல்ல, அடுத்தவனுக்கு கரிசனம். ஆ, இதோ ஒன்று வரும் போலையே. லைட் எரியுதே Indian Oil போர்டில். எழுந்து போக குதிகாலை கீழை வைக்கிறேன். வயிறு அவ்வளவு கனமாய். எழுந்து நிற்கவே பயமாக இருந்தது, முடியவில்லை. அடி வயிறு வலிக்க ஆரம்பித்துவிட்டது. சரி அடுத்ததில் நிறுத்த சொல்வோம். வண்டி சட்டென்று சாலையின் மத்தியில் ஓரங்கட்டப்பட்டது. கடை ஏதும் இருக்கோ? நமக்கு முன்னாடி யாரோ கேட்டு நிறுத்திட்டாங்க போலயே என்று சற்று ஆனந்தம். திரை விலக்கி பார்த்தேன். கட தண்ணீ ஏதுமில்லை. அந்த இருட்டு சாலையில், வண்டியில் இருந்த இன்னொரு டிரைவர் இறங்கினார்.அந்த வெட்டவெளியில் சிறுநீர் கழிக்கலானார். திரையை மூடிக்கொண்டேன். பத்து நிமிட இடைவெளியி்ல் மீண்டும் வண்டி நின்றது. திரை விலக்கி பார்த்தால், அதே டிரைவர் இறங்கி மீண்டும் கழித்தார்.


இப்போது சற்று பரவாயில்லை போலிருந்தது. 

அடுத்த பங்க் வரவேயில்லை. மணி 8:20. சரி இன்னும் நாற்பது நிமிடங்களில் திருச்சி சென்று விடுவோம் என்று தேற்றிக்கொண்டேன்.


வண்டி குளித்தலையை நெருங்கி கொண்டிருந்தது. இப்ப என்ன, அப்படி முட்டி கழித்துவிட்டாலும் பாதகமில்லை. இது என்ன எனக்கு மட்டும்தான் இந்த உபாதையா என்ன? உலகில் யாருக்கும் நிகழ்ந்திருக்காதா என்ன? 


வண்டியின் ஆட்டத்தில் என் பேக் பேகின் 

வலது ஓரத்தில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் ஆடுகிறது. ஆப்பிள் தின்று முடித்து, செருகியிருந்த காலி டப்பாவை கண்கள் தொட்டு திரும்புகின்றன. 


இவ்வளவு யோசிக்கிற உனக்கு, கேட்டு வண்டியை நிறுத்த என்ன பயம்? பயமா? அவமானமா? 

எனக்கென்ன பயம்? இதிலென்ன அவமானம்? நிறுத்தாவிட்டால்தான் அவமானம். இல்லையில்லை அசூயை, மற்றவருக்கு.


எழுந்து டிரைவர் அருகில் சென்றேன். ‘அண்ணா பாத்ரூம் போகணும். கொஞ்சம் நிறுத்துங்க ணா’.

இங்க ஏதும் இடம் வந்தா நிறுத்துறேன்.


சரி என்று வந்து எனது படுக்கையில் அமர்ந்துக்கொண்டேன். ஒரு இரண்டு நிமிட இடைவெளியில்,  ஒரு ஆள் அரவமற்ற சாலையில், வண்டி இடதுப்புறமாக திரும்புகிறது. பெட்டவாய்த்தலை பை பாஸ் ரோடாக இருக்கக்கூடும். அந்த இருட்டில் ரோடு தெரிவதே பெருசு. கொஞ்சம் கடந்ததும் சாலை நான்கு புறமும் விரிகிறது. 


நாற்சந்திப்பின் இடதுப்புறம் பஸ் மெதுவாக சென்று ஓரங்கட்டப்பட்டது. அது எனக்காகதான் என்று புரிந்து, முட்டும் வலியுடன் எழுந்து, கதவருகில் சென்றேன். டிரைவர் வலதுப்புறம் கைக்காட்டி, அந்த சந்துக்குள்ள போ மா என்றார். நான் அவர் காட்டிய திசையை பார்த்தேன்.

அந்த நாற்சந்திப்பில், சாலையின் எதிர்புறம் அந்த பெரிய டீ கடை. ஒரு வேளை கடைக்குள்தான் கை காட்டுகிறாரோ என்று நினைத்து இறங்கலானேன். படிக்கட்டில் கிளீனர் நின்றுக்கொண்டு, பஸ் நின்ற சாலையின் இடதுப்புறம் கை காட்டினான். 


அங்க எங்க?

அப்படியே ஓபன் ல தான் மேடம். 

சொன்ன அவன் கண்களில் ஒரு கர்வம் மின்னி மறைந்தது. என் கண்களில் திமிரு திமிரியது.

மேலும், அவன் சொன்ன திசையில் இரண்டு லோடு லாரிகள் ஓரங்கட்டப்பட்டிருந்தன.

ஆனால், மனதளவில் அங்கு நெருங்கி, பேண்ட் கழற்றி எனது பிட்டம் தெரிய கழித்துவிட்டேன்.


டிரைவர் இருக்கை விட்டு இறங்கி எனது பக்கம் வந்து,வா மா என்று கூப்பிட்டு கொண்டே டீ கடை நோக்கி சென்றார்.

அவர் காண்பித்த அந்த சந்தின் வாசப்படியில் ஒரு வெள்ளை நாய் படுத்திருந்தது.


அண்ணா ஓபன் ல இருக்கானா, இருட்டா இருக்கே, நாய் வேற இருக்கே..

அதுலாம் ஒன்னுமில்லமா வா..

இருங்க நான் கடைக்குள்ள இருக்கான்னு கேக்குறேன்னா.. என்று சொல்லிக் கொண்டே முன்னால் சென்றேன்.


டீ மாஸ்டர் முதற்கொண்டு, கடையில் இருந்த அனைவரும் என்னை திரும்பி பார்த்தனர்.

அண்ணா பாத்ரூம் இருக்கா?

இந்த பாருமா சைடுல என்று மாஸ்டர் கை காட்டினார்.

லைட் இல்லையா ணா?

இல்லமா. அதுலாம் பயமில்ல வாங்க..

அவர் என் முகத்தை கூட பார்க்கவில்லை. பார்த்திருந்தாலும் என் கண்கள்தான் தெரிந்திருக்கும். மாஸ்க் போட்டிருந்தேன், கழிப்பிடம் செல்கிறோமே என்று.

நாய் வேற இருக்கேண்ணா.உள்ள இருந்துச்சுன்னா?

அதுலாம் ஒன்னுமில்லமா என்று சொல்லி கொண்டு நடக்கையிலேயே அந்த நாய் எழுந்து விலகி போனது.

அவர் கதவை திறந்து வைத்து, கை காண்பிக்க, சற்று தயக்கத்துடனும், பிறகு தைரியத்துடனும், பேண்ட பாக்கெட்டிலிருந்து எனது போனை எடுத்து, லைட்டை போட்டுக்கொண்டே மெதுவாக திறந்திருந்த கழிவறைக்குள் சென்றேன். கதவுக்கு தாழில்லை.உள்ளே நாய், பூனை, பூச்சி என்று எதுவுமில்லை. மாறாக கழிவறை சுத்தமாகவும், வாடையின்றியும், நிரம்பிய தண்ணீருடனும், நல்ல பிளாஸ்டிக் மக்குடனும் இருந்தது எனக்கு பேரமைதியை தந்தது. 


அப்போது என் உள்ளம் அறிந்திருந்தேன். அந்த சூழ்நிலையிலும் மனதுக்குள் ஏதோ அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றின் இருத்தல், இல்லாமை என்றதன் முதுகின் பின்னால் ஒளிந்திருந்தது தெரிந்தது. 

அடி வயிறு லேசாக சில நிமிடங்களானது. வெளியில் வந்து பார்த்தால், கடையின் வெளிச்சத்தில், எதி்ர்புறம் நிற்கும் பஸ்ஸில், டிரைவர் அதற்குள் உள்ளே ஏறி அமர்ந்துவிட்டார்.

எனக்கு, இப்போது கடையினுள் சென்று அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாய் ஏதேனும் வாங்க வேண்டும். ஆனால், கடை சற்று பெரிது. கொஞ்சம் உள்ளே நடந்து செல்லவேண்டும். டிரைவர் என்ன இவ்வளவு நேரம் என்ற தோரணையில் கடு கடுவென பார்த்துக் கொண்டிருப்பதாய் தோன்றியது. வேறு வழியின்றி என் கால்கள் பஸ் நோக்கி நடந்தது. 


என் முதுகிற்கு பின்னால் இரண்டு கண்கள் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறது. பழுப்பு நிற முண்டா பனியன் போட்டிருந்த, மெலிந்த தேகம். தாடி வளர்ந்திருந்த, நரை முடிகள் கூடிய, களைந்த தலையும், ஒட்டிய கன்னங்களும், நீண்ட முகமும் கொண்ட நடுத்தர வயது அண்ணனாகிய அந்த டீ மாஸ்டரின் முகம்.  நான் திரும்பி அவரை நோக்கி கையாட்டினேன்.அவரும் பதிலுக்கு கையாட்டினார். நடந்து வந்து பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.


*

புதன், 31 ஜூலை, 2024

மூன்றாம் பிறை - மம்முட்டி, கே.வி.ஷைலஜா

தன் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை வாஞ்சையோடு நினைவு கூர்ந்திருக்கும் விதம், மலைமீது நடக்குபோது சினேகத்தோடு ஸ்பரிசிக்கும் மழைத்துளிகளை ஒத்தது.

சிறிய எளிய புத்தகம். நல்ல மொழிப்பெயர்ப்புடனும் ஒருசில எழுத்துப்பிழைகளுடனும் காணப்படுகிறது. 20 தலைப்புகளில் அளித்திருக்கும் அனுபவமும், தகவல்களும் நன்றாக இருந்தன. அவரின் முதல் ரசிகனை நினைவுக்கூர்ந்த விதமாக இருக்கட்டும், நள்ளிரவில் அவர் உதவி செய்து சம்பாதித்த பணமாக இருக்கட்டும், நண்பனை சந்திக்கும் இடமாக இருக்கட்டும், அனைத்துமே திரைக்கதை காட்சிகள் போல அல்லது Slow motion-ல் காட்டப்படும் Montage சாங் போலவும் கண்ணில் உலவுகின்றன.


அவர் மதத்தில் கூறியிருக்கும் ரமலான் பண்டிகை ஒட்டிய நாட்களில் கொண்டாடப்படும் விழாவும் என் மதத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவும் ஒத்துப்போவது ஆச்சரியமாயிருந்தது. உடனே  மனதில் தோன்றியது ஆசிரியர் ஜெ கூறும் வரி - ‘ஆச்சர்யம் என்பது அறியாமையின் ஒரு வெளிப்பாடு’.அதை ஒட்டிய தகவல்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. 

பறவை பார்த்தல்

அவள் நடுத்தர வயதை நெருங்குபவள்

தினமும் மாடியில் நடை மேற்கொள்கிறாள்

கம்பி கதவை திறந்து மொட்டை மாடி வரும்போது

தனது வலப்பக்கம் சூரியனை கண்டு கை அசைக்கிறாள்;

பின்பு அந்த மொட்டை மாடி நடுவில் உள்ள

வீட்டு விமானத்தை பிரகாரத்தில் சுற்றி சுற்றி வருகிறாள்;

சூரிய வெளிச்சம் கூசினாலும் ஆகாயத்தை

ரசிப்பதை அவள் நிறுத்துவதில்லை;

அந்த சமயத்தில் வானில் விமானம் பார்த்தால்

கருநீல முகத்தில் நிலாவின் சாயல்;

உற்சாகத்தில் உடனடியாய் உயர்த்தியும், 

பின் இழுத்தும், 

அக்கம் பக்கம் சுற்றி பார்த்து மீண்டும் உயர்த்தியும் கை அசைக்கிறாள் 

அது செல்லும் திசை நோக்கி;

பின்பு வானில் நீள அகலத்தில் காற்றில் கோடு கிழித்து, 

தனக்குள்ளே திசையை உறுதிப்படுத்திக் கொள்கிறாள்; 

கீழே குனிந்து உள்ளூற உவகை கொள்கிறாள்;


ஆடி காற்று அவள் உவகைக்கு இதமாய் 

தென்னையின் மூச்சினை அவள் மேல் இறக்குகிறது;


அச்சமயம் அவள் தென்னைகளையும், அதனொன்றில் இருக்கும் என்னையும் பார்ப்பதுண்டு;


நான் பார்ப்பது அவளுக்கு தெரியாது..

அவள் என்னை பார்த்து கொண்டே இருப்பாள்

நான் யார் என்று தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியாது..


அவள் திரும்புகையில் நான் மெளனமாய் அவள் பார்க்குமாறு பறந்து எதிர்திசைக்கு செல்வேன்.