வியாழன், 31 அக்டோபர், 2024

ஆயிரம் கரங்கள் நீட்டி..

பின்னிரவில் தூங்கி இருந்தாலும் காலை 6 மணிக்கு முழிப்பு வந்துவிட்டது. பனிக்காலத்தை நெருங்கி கொண்டிருக்கும் ஊரானது சற்று கம்பளியை மேலிழுத்து கதகதப்பாய் உறங்கிக் கொண்டிருந்தது.

இரண்டு மூன்று முறை புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. பிரேம் எழுந்துவிட்டான். நான் ஐ பேடில் எதையோ தேடிக் கொண்டிருந்தேன். புத்துணர்வு கொண்டு வந்து, நான் ஓடி விட்டு வருகிறேன், வெளியில் 18 பாகை செல்சியஸ் என்றான் . நான் தூக்கம் களைந்திருப்பதை பார்த்து, டேபிள் லேம்ப் போட்டவனை, கையசைத்து நிறுத்த சொல்லிவிட்டு, கதவை மூடிவிட்டு போ என்று ஐ பேடில் மூழ்கினேன். சிறிது நேரத்தில் நன்றாக முழிப்பு வந்து, எழுந்து புத்துணர்வு கொண்டு, படுக்கையை சரி செய்து, அறையின் திரை விலக்கியபோது, மனதில் சிறு துள்ளல். செம்மையும், இளஞ்சிவப்புமான மார்னிங் ஹீயுஸ் கொடுத்த பரவசம் அது. 

வானிலை செயலி எடுத்து சூரியோதயம் எப்போது என்று பார்த்த போது, 8:18 என்றிருந்தது. மணி அப்போது 8:06. உடனே உடை மாற்றிக் கொண்டு, தலையை கட்டி, காலுறை எடுத்துக் கொண்டு, ஹாலுக்கு வந்து, புதிதாக வாங்கியிருந்த ஷூவை பழக்க வேண்டும் என்ற எண்ணமும், புது ஷூ போட்டு நடைக்கு செல்லும் உற்சாகமும் சேர, கதவை பூட்டிவிட்டு வெளியே வந்தேன். 

ஏறத்தாழ ஆறு மாதம் கழித்து, இந்த காலை நடை இங்கு வார்ஸாவில். இறங்கி நடந்த என் கால்களுக்கு தானாக விரைவு கூட, கிழக்கை நோக்கிக்கொண்டே நடக்கலானேன். ஓட்டம் முடித்து வழியில் பிரேம் வர, என்னுடன் சூரியோதயம் பார்க்க இணைவான் என்று நினைத்தேன். ‘9 மணிக்கு மீட்டிங் ஸ்டார்ட் ஆகுது டா, நான் குளிச்சு, ஜாயின் பண்ண சரியா இருக்கும்’ என்றான். சரிடா பாரு என்று சற்றும் தாமதிக்காமல், என்னை தன்பால் நோக்கி இழுத்துக் கொண்டிருந்த இயற்கையின் மாயக்கரங்களை  பற்றலானேன். 

ரவுண்ட் அபவுட் என்று கூறக்கூடிய நாற்சந்திப்பின் மேடை பகுதியில் சென்று நின்றவாறே அந்த மாயாஜாலத்தை பருகலானேன். கீழ் வானத்தில் இருந்து மெல்ல மெல்ல அவன் எழுகிறான். தினமும் அது நடக்கிறது. ஒவ்வொரு முறை காண கூடும் போதும், ‘என்ன ஒரு பெருங்கருணை! என்ன ஒரு பெருங்கணம்! இனி இதனை வாழ்நாளில் தவறவிடக்கூடாது’ என்று தோன்றும். இன்று எனது அப்பாவையும், தம்பியையும் நினைத்துக் கொண்டேன். கதிரவன் முழுதாய் மேலெழுந்து வந்து நின்றதும், நான் நடையை தொடரலானேன்.

எனக்கு பிடித்த ஒரு நடைபாதை. போய்வர இரண்டு மைல்கள் தூரம் கொண்ட ஒரு கச்சிதமான பாதை என்று சொல்லலாம், ஊரை போலவே. நாற்சந்திப்பின் வலதுபுறம், அதாவது மேற்கை நோக்கி திரும்பினால், மெயின் ரோட்டின், இடது புறமாய் நீண்டு செல்லும் அப்பாதை. பைக்கிங் (நம்மூர் சைக்கிள்) பாதையும் அதுதான். 

ஏற்றம் இறக்கம் கொண்டு இருக்கும் அப்பாதை ஓ(ட்)டுபவர்களுக்கும், நடப்பவர்களுக்கும், தாங்கள் ஏதோ பெரிய பயிற்சி செய்துவிட்ட பாவனையை அளிக்க வல்லது. ஆறு மாதங்களுக்கு முன்புதான் நடைபாதையை புதுப்பிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இன்று பாதை புதிதாக கருப்பு கம்பளம் விரித்திருந்தது. 

விடியும் காலை கொடுத்த எழுச்சியா, அல்லது, ஆள்மனப்புழுக்கத்தின் அயர்ச்சியில் இருந்து விடுபட துடிக்கும் முயற்சியா என்று தெரியவில்லை, நடந்த என் கால்கள் மெல்லமாக ஓட்டம் பிடித்தன. அவ்வப்போது நடக்கும் போது ஓடவும் செய்வதுண்டு. ஆனால் இன்று இருந்த அந்த சிறிய தூர ஓட்டம் வேறு. அது முன்பு போன்றது இல்லை என்பது மட்டும் உறுதி. அந்த நிமிடம் ஜெ (எனது ஆசான் திரு.ஜெயமோகன்) அவர்களை நினைத்துக் கொண்டேன். நினைத்து கொண்டேன் என்று சொல்வதைவிட அவராய் நடந்தேன். அவரது சுறுசுறுப்பும், சிரித்த முகமும் நினைவில் வந்தன. சிறிது தூரத்தில் நின்று, திரும்பி கதிரவனை நோக்கினேன். திரும்பி மீண்டும் என் திசையில் நடந்தேன். யாருமற்ற நடைபாதை. இலையுதிர் கால சருகுகள் வழியில் நிறைந்திருக்க, என் தூரத்தை காணாது, காலடியை மட்டுமே கருத்தில் கொண்டு நடக்கலானேன். டிப்பிகன்னோ ஆறு இருபுறமும் ஓட, நடுவில் அமைந்த சிறு பாலத்தை கடக்கையில் சற்று தூரத்தில் ஒரு பெண் வருவதை கண்டேன்.

சிறு பதற்றம் உள்ளுக்குள். ஒரு வேளை நமக்கு தெரிந்தவரா? நமக்கு யார் இங்கு தெரிந்தவர், உமேஷ், நிதர்ஷினியை தவிர. நிதர்ஷினி இன்னும் சற்று உயரம். மேலும் இந்த காலை வேளையில் சித்தாந்தை பள்ளிக்கு கிளப்பி கொண்டிருப்பார். நடைக்கு எங்கே வரப்போகிறார், அவராக இருக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, அப்பெண்மணி என்னை நெருங்க, இருவரும் ஒருவருக்கொருவர் காலை வணக்கம்  சொல்லி கடந்தோம். அவருக்கு கொடுத்த மென்னகையின் ஒளித் துகள்கள் என் இதழோரம் ஒட்டியிருப்பதை உணர்ந்தேன். 

மேடேறி நடக்கலானேன். இடதுபுற பெரிய கட்டிடத்தின் நீள் கண்ணாடியில் என் உடல் எடையை கண்ணளவு எடுப்பது என் வழக்கம். மூன்று நீள் கண்ணாடிகளை கடக்கும்போதும் அதை செய்து கொண்டே, வலது புறம் அமைதியாய் அமர்ந்திருந்த மேடிசன் எலிமெண்டரி பள்ளி வளாகத்தை கண்டேன். அதன் பார்க்கிங்கில் சில கார்கள் நின்றன. நான் முதன் முதலில் கார் எடுத்து ஓட்ட, இல்லையில்லை முதன்முதலில் பார்க்கிங் செய்ய கற்றுக் கொண்ட இடம். தினமும் ஒரு மணி நேரம் முழுவதும் வெறும் பார்க்கிங் மட்டுமே செய்த நாட்கள் உண்டு. எனது வாகன பயிற்சியாளர் திரு. பிரேம் அவர்கள் பயிற்சியின் ஆரம்ப நாட்களில் வெறும் பார்க்கிங் மட்டுமே செய்ய கற்றுக் கொடுத்தார். அந்த வகையில் இந்த பள்ளி என் மனதிற்கு நெருக்கம். எதிர்புறம் பள்ளி இருக்க, அதோடு என் நடைபாதை எல்லை முடியும். ஆனால், அதன்பின் மீண்டும் ஒரு நாற்புற சாலை சந்திப்பு தாண்டி, பாதை சென்று கொண்டுதான் இருக்கும். 

நான் திரும்பி இப்போது கிழக்கு நோக்கி, வந்த வழியில் நடக்கலானேன். கதிரவன் இந்த பதினெட்டு நிமிடங்களில் ஓரளவு உயரத்திற்கு வந்துவிட்டான். என் கண்களில் என் தந்தையின் சிரித்த முகம். நடந்து வந்து கொண்டிருக்கையில், இடதுப்புறம் இன்னும் பனிக்காற்றின் கைகள் தீண்டப்படாத, கதிரவனின் கண்ணொளியில் மங்கிடாத , செவ்விலை மரங்களும், மஞ்சள் நிற மரங்களும், மோனேயின் ஓவியம் போல நிலைத்திருக்க, நெஞ்சம் சில நொடிகள் அதில் நிலைத்திருந்தது. 

அவ்வழியில் சில சமயங்களில் நானும் பிரேமும் எதிரெதிரே சந்தித்து கொள்வதுண்டு. அவன் ஓட்டத்தின் வழிதடத்தில், என் நடையின் பாதை சந்தித்து கொள்ளும் தருணங்கள். அவ்வாறு சந்திக்கும் ஒரு சில வேளைகளில் தூரத்திலிருந்து, நான் அவனை நோக்கி, 90களில் வெளிவந்த கேட்புரீஸ் விளம்பரத்தில் வரும் பெண், மைதானத்தில் இறங்கி ஆடுவது போல் சேட்டை செய்வதும், இருவரும் 80களின் பாரதிராஜா பட கதாநாயகி, நாயகர் போல் ஸ்லோ மோஷனில் ஓடி வருவது போன்ற பாவனை செய்து சிரிப்பதும் மனதில் மலர்ந்தன.

ஒரு முறை நான் அந்த மரங்களின் எதிரே நடக்கையில், என் இடது கை விரல்களை, விரல் நுனிகள் பின்னிருந்து வந்து தொட்டு கோர்த்தன‌. நான் யார் என்று சிலிர்த்து திரும்புகையில், பிரேம் புன்னகைத்து உடன் நடந்த அந்த நினைவலையில் நெஞ்சம் நனைந்தது.

பின்பு என் வழியில் ரில்கேயும், முராகமியும், பஷீரும், நாமக்கல் கவிஞரும், கல்கியும், அருணா அக்காவும், (அருண்மொழி நங்கை), பெருமாள் முருகனும் அலைமோதுகிறார்கள். அவ்வழித் தடத்தில் இப்படைப்பாளிகளின் புத்தகங்களை கேட்டவாறு நடந்த அனுபவங்கள் சேர்ந்து வந்து, தோள் தொட்டன.

ரில்கேயுடன் பாரீஸில் அமர்ந்து, கடிதங்களுக்கு அவர் பதில்களை கேட்டதும்,   முராகமியுடன் நியூயார்க்கில் நான் ஓடியதும், நாமக்கல்லாரால், எம்.ஜி.ஆருடன் மலைகளை தாண்டியதும், கல்கியின் பூங்குளம் கிராமத்தில் வாழ்ந்ததும், அருணா அக்காவின் பால்ய நாட்களை அருகிருந்து பார்த்ததும், குமரேசன், சரோஜாவை பார்த்திட வேண்டுமே என்று நான் பதற்றப்பட்டதும், மஜீதும் சுகறாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கும் அவ்விரவில், விவஸ்தை இல்லாமல் நான் அவர்களுடன் இருந்ததும் ஒரு சேர அணிவகுக்க,மென்னகையுடன் நான் நடக்கலானேன். சூரிய கிரணங்கள் என் மீது விழ, நான் மீண்டுமொரு மேடேறினேன். 

ரவுண்டு அபவுட்டின் எதிர்புறம் கடக்கையில், புல்வெளி, உதிர்ந்த செவ்விலைகளால் மலர்ந்திருந்தது கண்ணில் பட்டது. என் தலைக்கு மேல், அழகான ஓசையுடன், அணிவகுத்து, கனடியன் நாரைகளும், ஃபின்சுகளும் (குருவியினம்) கிழக்கு நோக்கி பற‌ந்தன. எனது இடது பக்கம் புதிதாக நம்மூர் பன்னீர் ரோஸ்கள் மலர்ந்திருந்தன.என் வீடு, கை விரித்து என்னை வரவேற்றது.


*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.