டிக்கெட் புக் செய்த நாளிலிருந்து மனதில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்து கொண்டிருந்தது. Country Music எனப்படும் நாட்டுப்புற இசையின் நகரமான நாஷ்வில் செல்வதற்கான ஆயத்த இழைகள் நீண்டுக்கொண்டிருந்தன. சென்ற வருடங்களில் நண்பர் தி.கா.வுடன் நாஷ்வில் பற்றிய பேச்சுகள் அரும்பியிருந்தன. மிட்வெஸ்ட் பகுதியின் அருகாமையை கருத்தில் கொள்ளும்போது, தேங்க்ஸ் கிவிங் விடுமுறை வாரத்திற்கு ஏற்ற ஊர் என்று பேசியிருந்தோம். சரி இவ்வருடம் செல்வோம் என திடீர் முடிவு. டிக்கட் புக் செய்தது அங்கு காணவிருந்த நேரடி நாட்டுப்புற இசை நிகழ்வு, Country music Hall of Fame மியூசியம் நுழைவு சீட்டுகள் மற்றும் தங்கும் விடுதி. காரில் செல்ல தீர்மானித்திருந்தோம். 6:30 மணி நேர பயணம். காலை வீட்டிலேயே உணவு உண்டுவிட்டு, பழங்கள், பழச்சாறு மற்றும் தீனிகளுடன் வண்டி கட்டியாகிவிட்டது. காண்டீபம் - தேரோட்டி பகுதியில் என் வாசிப்பு இருந்த சமயம் அது.அன்றைய பயணத்தின் முதற்பகுதி தேரோட்டி நான்.
வானம் ஒளி கொண்டிருந்தது. வார்ஸாவில் குளிர் கூடிக்கொண்டிருந்த நாட்கள் எனினும், வெளியே காண்பவர் யாரும் நம்பாத வண்ணம், கதிர் வெளிச்சம், கோடை காலத்தை ஒத்ததாய், கண் கூச செய்தது.வழி நெடுக இண்டியானாவின் பெரும்பான்மை மரங்களான டூலிப் பாப்லர் மரங்களும், ஓக் மரங்களும் அழகான சிவப்பும், இளஞ்சிவப்பும், மஞ்சளும் என தங்கள் இலை நிறங்களில் ஆர்ப்பரித்து கொண்டிருக்க, நடுநடுவே அதே வகை மரங்கள் தங்கள் இலைகளை முற்றுதிர்த்து புத்தனை போல் காட்சியளித்தன.
மேலும் பைன் மரங்கள் இலைகள் உதிராது, நிறங்கள் மாறாது அணிவகுத்து கூடவே வந்து கொண்டிருந்தன. ஜெ-யின், ‘கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்’ என்னும் காணொளியினை கேட்டவாறே சென்று கொண்டிருந்தோம். பயணத்தை அது மேலும் இனிமையுடையதாய் ஆக்கிவிட்டிருந்தது.
இண்டியானாபோலீஸ் நெருங்குகையில் மதிய உணவிற்காய் பஞ்சாபி தாபாவில் நிறுத்தினோம். அங்கு டைனிங் இல்லை, டேக் அவே மட்டும்தான் என்று போன பின்புதான் தெரிந்தது. எல்லாம் சுட சுட தயாரித்து கொடுத்ததாலும், காரில் வைத்தே சாப்பிட்டதாலும், முழுவதுமாய் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டது அவ்விடைவேளை. ஆனால் இதுவரை அப்படியொரு பராத்தாவையோ அல்லது மலாய் கோஃப்தாவையோ நான் இந்தியாவிலும் கூட சாப்பிட்டதில்லை. சுட சுட, வெண்ணெய் மின்ன, முழுநிலவின் அளவிலான மிருதுவான பராத்தா, பேப்பர் பிளேட் போட்டு மூடியிருந்ததை திறந்ததும், அந்த மணத்திலேயே மனமும், உடலும் புத்துணர்வு கொள்ள ஆரம்பித்துவிட்டன. பின்பு அந்த கோஃப்தா-அதை ஸ்பூனில் வெட்டும்போது, அம்மா செய்யும் குளோப் ஜாமூனை வெட்டும் மிருது கிடைத்தது. பிரேம் ஆனந்த் பரமானந்தம் அடைந்துவிட்டான். பொதுவாகவே அவனுக்கு வட இந்திய உணவில் ஈடுபாடு அதிகம். மூணு நாளைக்கு மேல், சோறும், தோசையும் தேடும் நாக்கு எனக்கு.
சாப்பிட்டு முடித்தும் வழக்கத்திற்கு மாறாக நானே வண்டியை ஓட்டினேன். ஒரு மணி நேர இடைவேளையில் கைம்மாற்றிக் கொண்டோம். இரண்டு மணி நேரம் சாப்பாட்டில் போய்விட்டதே என்று அங்கலாயித்த மனதிற்கு, நாஷ்வில் சென்று அடையும் போது ஒரு மணி நேரம் லாபம் என்ற செய்தி சற்று ஆறுதலாய் இருந்தது.
ஆர்ப்பாட்டமில்லாத தேங்க்ஸ் கிவிங் மாலை நேரம். பெரியளவில் போக்குவரத்து நெருக்கடி ஏதுமின்றி, இன்னும் சொல்லபோனால் காலியான ஊருக்குள் செல்வது போல இருந்தது. வலதுப்பக்கம் அழகான வளைவுடன் கொரியன் வெட்டீரன்ஸ் பாலம் ஒளிர்ந்துக்கொண்டிருந்தது. மெளனமான அத்தருணத்தில், பியானோவில் வந்தமர்ந்த புறாவை போல லேசான சந்தம், தூரத்தில் ஒலிக்க கேட்டது. வண்டி பிராட்வே நெருங்கியது. சந்தம் சத்தமானது. சத்தத்தில் சத்திருந்தது. அதனால் அது இசையாய் தெரிந்தது. மனதில் வேகம் கூடியது. இரவு முழுவதும் நடந்து தீர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டது. குறைந்தது 10 பார்கள் ஏறியிறங்கு, அங்கு இசைக்கப்படும் நேரடி இசையை கேளு என்று தி.கா சொல்லியிருந்தார்.
இரவு மணி ஏழு ஆகியிருந்தது. நாங்கள், ஹோட்டல் சென்று புத்துணர்வு கொண்டு, டவுன்டவுனை காலில் அளப்பதற்கு தயாராகிவிட்டோம்.பத்து நிமிட நடையில் மீண்டும் பிராட்வே தெருவிற்குள் நுழைந்தோம். காரில் கடந்து செல்லும்போது பார்த்திருந்ததைவிட கூட்டம் பெருகியிருந்தது. குளிருங்கூட. கையுறைகளை பெட்டியில் வைத்து, மீண்டும் எடுத்து வெளியில் வைத்துவிட்டு வந்த என்னை நொந்து கொண்டேன்.
அந்த ஒரு தெரு. நீ கொண்டாடி தீர்ப்பதற்கு கரம் விரித்து உன்னை உள்ளிழுத்துக் கொள்வதாய் விழித்திருந்தது. எங்கு பெயர் பலகையை பார்க்கையிலும் கிட்டார்கள் மின்னிக்கொண்டிருந்தன. இருபுறங்களிலும் பார்கள் உயிர்ப்புடன். தெறிக்கும் இசையொலிகள் தெருவில் ஒன்றையொன்று மல்லுக்கட்டிக்கொண்டிருந்தன.
ஒரு பெண், தனது நாயினை, குழந்தையைப்போல் தோளில் போட்டுக்கொண்டு, வருடிக்கொண்டே வேகமாக என்னை கடந்தாள். நாங்கள் வந்த தெருவின் எதிரேயிருந்த Robert’s Western World பாருக்குள் நுழைய சென்றோம்.நியூயார்க்கில் முதன்முறையாக திவி, புவியுடன் இரவு பார் சென்றபோது அடையாள அட்டை கேட்ட ஞாபகத்தில், எல்லாம் இருக்கிறதா என்று, எண்ணத்தில் ஒருமுறை ஓடவிட்டுக்கொண்டேன். வாயிலில் ஒரு பெண்மணி வணக்கம் சொல்லி, கையை நீட்டச் சொன்னாள். கட்டை விரல் பின்புறத்தில் ரப்பர் ஸ்டேம்ப் ஸீலில் ‘R’ என்று அச்சிட்டு, இருவரையும் உள்ளே அனுமதித்தாள். குறுகிய பாதை பாரின் முற்பகுதியாய், அதுவே கூட்டத்திற்கு ஆட்டத்தரையாகவும். இடதுப்புறம் மூன்று கலைஞர்கள். கிட்டார், டிரம்ஸ் மற்றும் டபுள் பேஸ் வாசித்து, கூட்டத்தை குதூகலிக்க வைத்துக்கொண்டிருந்தனர். குறுகிய அப்பாதை, மத்தியில் சற்று விரிந்து, இடதுப்புறம் சில டேபிள்களும், வலதுப்புறம் பார் செட்டப்பும், மேலே பால்கனிக்கு செல்லும் மாடிப்படிகளுமாய் வளர்ந்தன. இன்னும், அந்த பார் நீண்டுக்கொண்டு சென்றது. ஆனால் நாங்கள், ஏதுவாய் ஓரிடம் பார்த்து படியருகில் நின்றுக்கொண்டோம். இருவரும் லெமனேட் வாங்கிக்கொண்டு,இசையை கவனிக்கலானோம். எனக்கு தொடக்கத்தில் இசையோடு, அதை ரசிக்கும் இவ்வூர் மக்களை அவதானிப்பதில் ஆர்வம் சென்றது.
இசை -ஒரு மனிதனை முக்காலத்திற்கும் முன்னும்பின்னுமாய் ஏற்றியிறக்கும் ஊஞ்சல். ஆண், பெண் ஒவ்வொருவரின் இதழும், அங்கு பாடப்பட்ட பாடல்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன. மனதில் இசைஞானியும், MSV-யும், எனது அப்பாவும் வந்து வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
சில நண்பர்கள் கூட்டம். பல ஜோடிகள்-இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது என எல்லா வயது வரம்பிலும். அதில் ஒரு ஜோடி - அந்த பெண் தன் பெற்றோருடனும், பாய் பிரண்டுடனும் வந்திருந்தாள். பெற்றோர் பார் சேரில் அமர்ந்து நால்வருக்குமான டிரிங்க்ஸ் ஆர்டர் செய்ய, அப்பெண் அவள் ஆண்மகனிடம், இசைக்கேற்ப மென்னசைவோடு, களிப்புற தொடங்கியிருந்தாள்.
பயணத்திற்கு முன்பு, நாட்டிசையின் வரலாறு மற்றும் முக்கிய கலைஞர்களை பற்றிய சிறிய அறிமுகம் செய்து கொண்டிருந்தோம். பெரும் மந்தநிலையின்போது (Great Depression) இந்த இசையானது மிகவும் பிரபலமாகியது. பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்ட அமெரிக்க மக்களால் இந்த இசை பரவலாக வரவேற்கப்பட்டது. Ken Burns-ன் Country Music என்னும் ஆவணப்படத்தில் சில பகுதிகள் பார்த்திருந்தோம்.Jimmy Rogers-யும், Carter குடும்பத்தையும், அவர்கள் ஆரம்பித்த, ஆக்கிரமித்த நாட்டிசையையும், ஜீன் ஆட்ரி பற்றியும் மற்றும் Johnny Cash-ன் பாடல்கள் சிலவும் கேட்டிருந்தோம். குறிப்பாக ‘யோடலிங்’ பாடல்முறையை ரசித்திருந்தோம்.
அந்த யோடலிங் இங்கு காதில் விழ, இப்போது கிட்டாரையும், டபுள் பேஸையும் தனித்தனியாய் பிரித்துணரவும், பின்பு அதை சேர்த்து அனுபவிக்கவும், அந்த டபுள் பேஸ் வாசித்த கலைஞர் பாடுவதும் ஒருவாறு பிடிபட தொடங்கியிருந்தன. அவர் பாட்டுக்கு, எசப்பாட்டாய் அந்த கிட்டாரும், அதற்கு பதிலாய் இவர் டபுள் பேஸும் போட்டிப்போட்டு கொண்டிருந்தன. மனதில், விஸ்வநாதன் வேலை வேண்டும், ரம்பம்பம், போட்டு வைத்த காதல் திட்டம்-இன்டர்லூட் என பாடல்கள் மீண்டும் மீண்டும் அலைமோதிக்கொண்டிருந்தன.
நாங்கள் இருந்த இடத்திலிருந்து, சற்று முன்னகர்ந்து, மத்தியில் நின்றுக்கொண்டோம். புதிதாய் உள்ளே வருபவர்கள், அங்கு ஆடிக்கொண்டிருந்தவர்களுடன், சேர்ந்து அழகாய் ஆடிக்கொண்டே உள்ளே வருவதும், கண்கள் சந்தித்தபோது சினேகமாய் சிரித்துக்கொண்டே கடந்ததும் அழகாயிருந்தது. அங்கு இரு பெண்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். பிரேமிடம் சென்று ஆடு என்றேன். என் ஆட்டம் உனக்கு தெரியாதா என்று கண்களை சுழற்றி, உதட்டை கீழிழுத்து பாவனை செய்ய, நான் புன்னகைத்துவிட்டு மேடையை நோக்கினேன்.
முப்பது வயதிருக்கும் அந்த டபுள் பேஸ் கலைஞர் ஒரு பாடலை தொடங்கியிருந்தார். அந்த பாடல் வரிகளை, அவர் பாடிய விரைவினை இப்போது மனம் ஒப்பிட்டு பார்க்க முயற்சிக்கிறது. தொடர்ந்து இடிக்கும் இடியில்கூட, சற்று டெம்போ குறைவாகத்தான் இருக்கும். தொடர்ந்து சில கணங்கள் மின்னும் மின்னலுக்கு டப்பிங் கொடுத்தால், அந்த செய்கையை மொழியில் பெயர்த்தால் என்ன விரைவை எட்டமுடியுமோ, அதனோடு ஒரு பத்து மடங்கு கூட்டிக்கொண்டால், ஒருவேளை நான் கேட்ட விரைவை, அந்த டெம்போவை, யூகிக்க முடியும் என்று சொல்லலாம்.
அம்மாதிரியான ஒரு தீவிரத்திறன் கொண்டு பாடும் நபரை நான் அப்போதுதான் பார்த்தேன். அது என்ன பாடல் என்று நினைவில்லை. அக்கலைஞர் பாடி, கடைசியில் அதன் உச்சத்தில் அந்த ஆறடி டபுள் பேஸ் மேலேயே ஏறி நின்றுவிட்டார். மிக ரசித்தோம். பின்பு, அந்த கிட்டார் கலைஞர் ஒரு பாடல் பாட, பின்பு இருவரும் சேர்ந்தொரு பாடலோடு முடித்துக்கொண்டனர். முடிந்ததும், அந்த டபுள் பேஸ் கலைஞர், நம்மூர் பால் கேன் போன்ற ஒன்றோடு ஒவ்வொருவரின் அருகிலும் வர, அதில் அவர்கள் காசு போட்டனர். அவர் எந்தவொரு சங்கடமும் உள்ளதாய் காட்டிக்கொள்ளவில்லை. என்னருகில் வரும்போது, நான் உரக்க உணர்ச்சி பொங்க கூறிய வாழ்த்தொலியில், முன்னாள் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தாள். பின்பு நாங்கள் அங்கிருந்து கிளம்பி வாசல் வருகையில், வலதுப்புறம் திரும்பி, அந்த கிட்டார் பையனிடம் வாழ்த்து சொல்லிவிட்டு வெளியேறினேன். அவர்களுக்காய், மனம் ஒரு கணம் நின்று எண்ணியது - நல்ல கலை எங்கிருந்தாலும் வாழும். கலைஞர்களும் வாழட்டும் என.
நாஷ்வில்லில், முதல் காலை. Country music Hall of Fame மியூசியம்தான் நாளின் முதல் பாதிக்கான திட்டம். பிரம்மாண்டமான இசை வரலாற்று தொகுப்பு. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு ஆரம்ப காலத்திலிருந்து தற்போதைய இசை வரையிலான, வருட வாரியான காட்சிப்படுத்தல். அமெரிக்காவில் எந்த ஒரு கலைக்கூடத்தையும் முதல் பயணத்தில் முழுவதுமாய் கண்டுவிட முடியாது. சூதர்களை கொண்டு ராஜ்ஜியத்தை வளர்த்தெடுத்த ராஜாக்களை போல, வரலாற்றை தக்கவாறு ஆவணப்படுத்துவதன் மூலம், தன்னை வளர்த்தெடுக்கும் நாடு. எங்களுக்கு ஒரு தளம் முடிக்கவே மூன்றரை மணி நேரம் ஆகிவிட்டது.அதுவே விரைவுதான். ஏனென்றால் அவ்வளவுதான் எங்களை தயார் செய்து கொண்டு சென்றிருந்தோம். Dolly Parton-ம், எல்விஸ் பிரஸ்லியும் தெரிந்திருந்தாலும் அவர்கள் பாடல்கள் கேட்டிருக்கவில்லை. எல்விஸ் பிரஸ்லியின் காடிலாக் கார் அங்கு வைக்கப்பட்டிருந்தது. தங்க கைப்பிடிகள் கொண்ட, வைரத்தில் இழைத்து பிரத்யேகமாய் தயார் செய்த வாகனம், அவர் பயன்படுத்தியது.
முதன்முதலாக ஸ்டீல் கிட்டாரை நேரில் கண்டேன்.கிட்டார், மேண்டலின் மற்றும் பேஞ்சோவின் நரம்புகள் எல்லாம் சேர்ந்து ஒரே கருவியாய் பயன்படுத்தப்பட்டதும் அங்கு இடம்பெற்றிருந்தது. மேலும், கலைஞர்கள், நிகழ்ச்சியின்போது உடுத்திய உடைகள், நூற்றாண்டுகளில் எவ்வாறு மாறி வந்திருக்கிறது எனவும் அறிய முடிந்தது.
Hall of fame அறைக்குள் நுழைந்தோம். அந்த அறை முழுதும் இடம்பெற்றிருந்தது கலைஞர்களின் உலோக முகங்கள். அவர்களை பற்றிய குறிப்புகள். அவ்வறையில் ஒரு சிறிய நீர் வீழ்ச்சி, அதில் ஏராளமான காசுகள் போடப்பட்டிருந்தன, நம் ஊர் கோவில் குளத்தில் இருப்பதுபோல். எங்கள் கண்கள் தேடியது Jimmy Rodgers-ஐ தான். அவரின் Sleep Baby Sleep பாடலுடன், காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே பாடலை ஏனோ மனம் எண்ணியது.
அன்று மதியம், உலகின் நீண்ட நடைப்பாலங்களுள் ஒன்றான, ஜான் சிகென்தாலர் நடை மேம்பாலம் சென்றிருந்தோம். அழகான கட்டுமானத்திற்கான சிறப்பு பெயர் பெற்றிருக்கும் பாலமும் கூட. அன்று எங்களுக்கு கிடைத்திருந்த சிறிய வெப்ப வானிலையில், அதில் நடப்பதற்கு இதமாய் இருந்தது. பாலத்தின் மையத்திலிருந்து, சுற்றி எழுந்து நிற்கும் நகரின் கட்டடங்களை பார்த்து முடிக்கையில், கம்பர்லேண்ட் ஆற்றங்கரையோரம் இருந்த இரு குடிசைகளையும் கண்டேன். எதிரே, காரில் கடக்கையில் கண்ட, கொரியன் வெட்டீரன்ஸ் பாலம்.
மறுநாள் காலை, நாஷ்வில் பொது நூலகத்தில் ஆரம்பம். அழகான, விரிவான நூலகம். முழுக்க வீடற்றவர்களால் நிரம்பியிருந்தது. எல்லா இருக்கைகளிலும் அவர்களே அமர்ந்திருந்தனர். பெரும்பாலும் சாப்பிட்டுக்கொண்டும்,ஏதும் குடித்துக்கொண்டும் மற்றவர்களுடன் கிசுகிசுத்துக்கொண்டும் இருந்தனர். இதற்குமுன் இவ்வாறு சிகாகோ நூலகத்தில் பார்த்திருக்கிறேன். பகல் முழுவதும் நூலகம், அவர்களையும் அரவணைத்துக் கொள்கிறது.
அங்கு ஒவ்வொரு தளமாய் பார்த்து சென்றபின், Cartier in India புத்தகத்தை எடுத்து, அமர வழியில்லாமல் இருவரும் நின்றுக்கொண்டே, பார்த்து, வாசித்து முடித்தோம்.
ஒரு நாயை தூக்கிக்கொண்டு ஒரு பெண்ணும், ஆணுமென இருவர் வந்து, நூலக உதவியாளரிடம் ஏதோ கேட்க, அதை அவர் மென்மையாக நிராகரித்தார். எங்களுக்கு எதிரே ஒரு திருநம்பி அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, பேப்பரை குப்பையில் போட்டுவிட்டு திரும்புகையில் இன்னொரு நபர் அந்த இடத்தில் பையை வைத்ததும், இவர் கோவமாய் அவ்விடம் விட்டு அகன்றார். அவர் தெரியாமல் வைத்துவிட்டேன் என்று கேட்ட மன்னிப்பு நிராகரிக்கப்பட்டது.
பின்னர், அங்கு பிரபலமான ஒருகடையின் மில்க் ஷேக்குடன், டவுன்டவுனை விட்டு வெளியேறிவிட்டோம். அடுத்த இடம் பார்தெனான். இப்பயணத்தில் இசையைத் தாண்டி, நான் எதிர்நோக்கியிருந்த இடமிது.
கி.மு.447-ல் ஏதன்ஸில் கட்டப்பட்டது. இன்று அங்கு அது, அதன் தொன்மையான மகத்துவத்தையும்,காலத்தின் பாதிப்புகளையும் பிரதிபலிக்கிறது. பழமையான கட்டுமானம், போர்கள், இயற்கை அனர்த்தங்கள், மற்றும் வரலாற்றின் தவறான பயன்பாட்டால் பெரிதும் சேதமடைந்துள்ளது.
நாஷ்வில்லின் பார்தெனான் 1897-ஆம் ஆண்டில் நடந்த ஒரு கண்காட்சிக்காக கட்டப்பட்டது. இது கிரேக்கத்தில் கட்டப்பட்டதன் முழுமையான பிரதி. அத்தேனின் பார்தெனான் போலவே, கலைச்சிறப்புகளை கொண்ட 42 அடி உயர அத்தினா சிலையுடன் இப்போது ஒரு அருங்காட்சியகமாக உள்ளது. அதன் குறிப்புகளை வாசிக்க வாசிக்க, எவ்வாறு உலக வரலாறுகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கின்றன என்று தோன்றியது. அது இன்னும் நெருக்கமாய் உணர வைத்தது. கிளம்புவதற்கு முதற்நாள், தற்செயலாய் டிராய் படம் பார்த்திருந்தேன். அது, அங்கு நான் கண்ட கிரேக்க சிலைகள் ஒவ்வொன்றுடனும் ஒரு உரையாடலை தொடர வைத்திருந்தது.
அமெரிக்க ஓவிய கலைஞர்களின் ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொன்றும் பல கதைகளையும், பண்பாட்டினையும் தாங்கி நின்றுக்கொண்டிருந்தது. வின்ஸ்லோ ஹோமரின் ஓவியம் ஒன்று. (Rab and the girls) இரு பெண்கள் மலைகளின் பின்புலத்தில், புல் தரையில், நாயுடன் நின்றிருக்கும் அந்த ஓவியத்தில், நான்கு இலை கிளோவர் இலையை ஒருவர் கொடுக்க இன்னொருவர் பெற்று கொள்ளும் ஒரு காட்சி. அயர்லாந்து மக்கள் பண்பாட்டில், இதை பெற்று கொள்ளும் பெண், அதை உண்டாலோ அல்லது தன் காலணியில் வைத்து கொண்டாலோ, அதன்பின் அவள் சந்திக்கும் முதல் ஆண், அவளது வருங்கால துணையாவான் என்றவொரு நம்பிக்கை நிலவியுள்ளது.
Sanford Robinson Gifford வரைந்த ,’Autumn in the Catskills’ மற்றும் Frederick Judd Waugh-ன் ‘Widening Sea’ ஆகிய இரு ஓவியங்களும் என்னை கவர்ந்தன. மோனேயின் Cliff மற்றும் Sunrise ஓவியங்கள் என் நினைவில் எழுந்தன. மேலும், அவர் ஒளிகளை, ஓவியத்தில் கையாளும் விதங்களை, இவ்விரு ஓவியங்களில் காண முடிந்தது.Widening Sea ஓவியம், Gustave Le Gray-ன், ‘An effect of the Sun- Normandy’ ஓவியத்தை நினைவுப்படுத்தியது. இவர் மோனேவுக்கு முன்னோடி.
அன்று இரவு, ‘Grand Ole Opry’-யில் இசை நிகழ்வு. நேரடி இசை நிகழ்வு அன்று நேரலையும் கூட. ஒவ்வொரு சனியன்றும், அவர்களின் பண்பலையில் நேரலை செய்யும் வழக்கம். 99 வருடங்களாக அது நிகழ்ந்து கொண்டு வருகிறது. அடுத்த வருடம் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யவிருக்கிறார்கள். அந்த அரங்கு பல பேர்களின் கனவு, லட்சியமாய் இன்றும் நிற்கிறது. அந்த மேடையின் மைய வட்டத்தில் ஒரு கால் வைத்து பார்ப்பதற்கு சிலிர்த்து சிலாகித்து போகிறார்கள் கலைஞர்கள்.
அன்றைய நிகழ்வில், Collin Stough என்ற இருபது வயது கலைஞர். அவர் அன்று அந்த மேடைக்கு புதிது. மிசிசிப்பி - காட்மென் பகுதியை சேர்ந்தவர். அப்பகுதியின் மொத்த மக்கள் தொகை எழுபது. அதில் அவர் நிகழ்ச்சியை காண இருபது பேர்கள் வந்துவிட்டார்கள். அவர் பாடி முடித்து, தன் ஊரை பற்றிச் சொல்லி, மேடை விட்டு திரும்புகையில் கூடுதலான கைத்தட்டல் பெருகியது. உலகம் முழுதும் மனிதன்,அடி ஆழத்தில் , ஒரே சரடாய் நீள்ந்திருக்கிறான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.