வியாழன், 19 டிசம்பர், 2024

கடன் - ரம்யா மனோகரன்

ஜங்ஷனில் இருந்து வந்த பஸ், மேம்பாலத்திலிருந்து சரிவில் வேகமாய் இறங்கி,சடன் பிரேக் அடித்து, தேவி டாக்கீஸ் நிறுத்தத்தில் நின்றது. பயணிகள் ஏறி, இறங்கியபடி இருந்தார்கள். மஞ்சள் காப்பு கட்டிய கைகள், சித்திரை மாதத்தை நினைவுப்படுத்தின.


‘இழவெடுத்த பயக, பஸ் படிய கொஞ்சம் இறக்கமா வைச்சா, என்ன கொள்ளையில போகுமோ இந்த பயலுவளுக்கு’ என்று முனகிக்கொண்டே அந்த பாட்டி, பஸ்ஸின் இடதுப்புற சாய்வு பிடிமானத்தை பிடித்துக்கொண்டு இறங்குவதற்குள், வீர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று கண்டக்டர் கொடுத்த விசிலுக்கு பிரேக்கிலிருந்து திடுமென‌ காலை எடுத்த டிரைவர், பஸ்ஸில் இருந்தவர்கள் கொடுத்த சத்தத்தில், மீண்டும் பிரேக்கை பிடித்தான். 


சர்ரென்று ஒரு அடி நகர்ந்து நின்ற அதிர்ச்சியில் ஒரு கால் அந்தரத்தில் தொங்க, பாட்டி கடைசி படியில் அப்படியே உக்காந்துவிட்டது.


பாலு மெடிக்கல்ஸ் வாசலில், தனது வண்டிக்குள் வாங்கிய மாத்திரைகளை வைத்து மூடிய மாணிக்கம், தனது இடுப்பில் நிற்காத பேண்டினை ஏத்திவிட்டுக்கொண்டே, விருட்டென்று எட்டு வைத்து,தள்ளாடிய பாட்டியை கையை பிடித்து தாங்கி, 'பார்த்து பார்த்து மா' என்றார். 


பூ விழுந்த கண்கள் கலங்கியிருக்க‌, அவரை நோக்கி பாட்டி தனது ஒட்டிய வாய் விரித்து புன்னகைத்தாள். 


மாணிக்கம் பாட்டியை கைத்தாங்கலாய் பிடித்து, ஏறுக்குமாறாய் நிறுத்தி வைத்திருந்த வண்டிகளைத் தாண்டி, ஓரமாய் கொண்டு போய் விட்டுவிட்டு வண்டியை எடுக்க திரும்பினார்.


நல்லாருக்கீங்களா ஐயா! அம்மா, அண்ணே, அக்கா எல்லா நல்லாருக்காங்களா? என்ன ஐயா இந்த வெயில வந்திருக்கீங்க?


மாணிக்கம், தனது கண் சுருக்கி, முகத்தில் மென்முறுவலோடு, யாரென்று யோசித்தான்.


என்ன ஐயா என்ன தெரிலயா? ராதிகா யா.


இப்போது முறுவல் புன்னகையாய் மாற, 

ஹா, என்னப்பா நல்லாருக்கியா? அக்காங்களாம் நல்லாருக்காங்களா? அம்மா நல்லாருக்கா? சதீசு என்ன பண்றான்?


யெல்லா நல்லாருக்குதுங்க யா. அவன் மெட்ராஸ் வண்டிக்கு கிளீனரா போறான்யா. மோகென்னேதா சேத்து வுட்டுச்சி.


இவ்ளோ நேரம் அம்மா இங்கதான் இருந்துச்சு. இன்னிக்கு கடைசி பூவுல யா. ராத்திரி இங்கிருந்து நடந்து போறோம். அதான் வூட்டுல செத்த தலைய சாச்சுட்டு வரலானு போயிருக்கு. நா எதுத்தாப்புலதான்யா பூக்கட போட்டுருக்கேன். 


எதிரில், முத்துமாரியம்மன் கோவில் பக்கத்தில், சற்று அமுங்கியிருந்த தகர நாற்காலியில், கிழிப்பட்டிருந்த கொடைகட்டியிருக்க, கீழே நான்கைந்து டின்களை வைத்து, அது மேலே ஒரு பலகை போடப்பட்டிருந்தது. வளவளப்பான பேனரின் உட்புறம் மேல்புறமாய் அதன்மேல் விரிக்கப்பட்டிருந்தது.மல்லிகை பூ கட்டி, பந்துகளாய் சுருட்டி அதன்மேல்வைக்கப்பட்டிருப்பதும், பாதி கட்டியிருந்த பூச்சரம்கிடத்தப்பட்டவாரும், பூக்கள் ரெவ்வண்டாய் அல்லது மூணுநாலாய், அடுக்கியிருந்தது. அந்த அமுங்கிய சேரில், ஒரு குழந்தை வெறும் ஜட்டியுடன், ஒழுகிய மூக்கினை துடைத்தவாறு உட்கார்ந்துக் கொண்டு, மாணிக்கம் நிற்கும்திசையையே பார்த்துக் கொண்டிருந்தது.


ஐயா, வாங்கய்யா, ஒரு ஜூஸ் குடிப்போம் என்று சொல்லிக்கொண்டே, தன் வயிற்றின் இடதுப்புறம் சொருகியிருந்த கல்யாணி கவரிங் பர்ஸினை எடுத்தாள்.


இன்னொரு நாள் சாப்பிடலாம் பா. அவசரமா ஒரு வேலயா போறேன்.

அம்மாவா விசாரிச்சேனு சொல்லு, வரேன்.


ஐயா ஒரு நிம்சங்கய்யா...என்று கூறிக்கொண்டே, சட்டென்று ரோட்டினை கடந்து, தன் கடையிடத்திற்கு சென்று, ஒரு முழம் பூவை எடுத்துக்கொண்டு, பிள்ளையையும் தூக்கிக்கொண்டு, மீண்டும் மாணிக்கத்தின் அருகில் வந்தாள்.

ஸ்னேகா ஐயாவுக்கு வணக்கம் சொல்லு என்று ராதிகா சொல்ல, ஒழுகிய மூக்கினை மீண்டும் துடைத்தவாறே, ரெண்டுகையும் சேர்த்து குழந்தை கும்பிட்டது.


மாணிக்கம், மீண்டும் புன்முறுவலோடு, பாக்கெட்டிலிருந்து, பத்து ரூபாய் எடுத்து அந்த குழந்தையின் கையில் வைத்து, தோளில் தட்டிக்கொடுத்து புன்னகைத்தார்.


ஐயா, எதுங்குகய்யா..பரவாலங்கய்யா...

இல்ல இருக்கட்டும். பிஸ்கட் வாங்கிக்கொடு..

இந்தாங்கய்யா.. இந்த பூவ அம்மாக்கிட்ட கொடுங்கய்யா...


சட்டை பையிலிருந்து, காசு எடுக்க போன மாணிக்கத்திடம், வேண்டாம்யா... இத எடுத்துட்டு போங்க..

இல்ல இந்தா..திருவிழா சமயம், பூ கிராக்கி வேற.

இல்லயா இது அம்மாக்கு நான் தர்றது..அம்மாவ கேட்டதாசொல்லுங்கய்யா.

சரிப்பா. அந்த பக்கட்டு வந்தா,வீட்டுக்கு வா. பிள்ளைய கூட்டிக்கிட்டு வா.

சரிங்கய்யா, என்று புன்னகைத்தாள்.


ம்மா... ம்மா....

யே...யே...இறங்குடா விழுந்துடாத. கேட்ட தொறந்து வாடா...

மாரி, இங்க பாரு உன் தம்பி தங்கச்சி வந்திருக்காங்க...

இந்தா வாரே க்கா..

 

“யே....சதீசு...இங்க யேண்டா அத தூக்கிட்டு வந்த? அம்மா , ஐயரம்மா வூட்டுக்கு போயிருக்கு டா. 

அங்க போடா” என்று கொள்ளைப்புறத்திலிருந்தவாறே கத்தினாள் மாரி.


இந்தா குட்டி அங்க இருந்துக்குட்டு கத்தாத. கிட்ட போயிட்டுசொல்லிட்டு வா என்று கட்டிலிலிருந்து ஒரு அதட்டல் விழ, கிடுகிடுவென ஓடி வந்த மாரி, கட்டிலை கடந்தபோது, 'சரிங்கபாட்டி' என்று சொல்லிக்கொண்டே அவள் தம்பியை நோக்கி வேகமாய் நடந்து, கேட்டின் இந்தப்புறம் நின்றாள்.


போடா...இங்க இது அழுவும் டா...பாட்டி திட்டும் டா...


டேய் சதீஷ் இங்க வா, ராதிகா வா? இங்க தூக்கிட்டு வா என்றது ஒரு குரல். 


வாய் நிறைய சிரிப்போடு, கண்ணில் வெக்கத்தோடு, வெளிறிய முகத்தோடு, ஒட்டிய வயிறு தெரிய, பொத்தான்கள் பிஞ்சிருந்த அழுக்குப்படிந்த சட்டையை, தொப்புள் தெரியாது இழுத்து தன் இடக்கையில் பிடித்துக்கொண்டு, வலதுக்கையில் தனது தங்கச்சி ராதிகாவை தூக்கி கொண்டு, கேட் கொண்டியை மூடமுடியாமல் மூடிவிட்டு வந்தான்.


தனது அண்ணன் கையில், ஒருபுறமாக கழுத்தை சாய்த்துக்கொண்டு, கண்ணீர் காய்ந்த கன்னங்களோடு, ஒருகண் பாதி மூடியிருக்க, இன்னொரு கண்ணில் ஒரு பயம் கலந்த கலவரத்தோடு, இருப்பினும், களையான முகத்தோடு, கேட்டில் இருந்து இருபது அடி தூரத்தில் இருக்கும் வீடுநோக்கி வந்தாள், ராதிகா.


பாத்திரங்கள் கழுவிய கைகளின் ஈரம் பிசுபிசுக்க, அந்த 9 வயது சிறுமி வேகமாக நடந்து உள்ளே சென்றாள்.


என்னடா ஸ்கூல்க்கு போவலயா?

இல்லயா என்று பல்லை காட்டினான்.

ஏய் இங்க வா, இறக்கி விடுடா..

போ பிள ஐயா கூப்பிடுறாருல...

அந்த பிள்ளை, தன் அண்ணனின் கைகளிலிருந்து இறங்கியது, அவசரமாக திரும்பி, அவன் பின்னே சென்று ஒளிந்துக்கொண்டது.


யே,,,இந்தா, போ பிள ஐயா கூப்பிடுறாருல..

இங்க வா.. ஒன்னும் பண்ணமாட்டேன்..வா.. என்றான் மாணிக்கம்.


அந்த பிள்ளை முதலிரு அடிகளை தயக்கமாய் எடுத்து வைத்தாலும், அடுத்த அடியை தைரியமாய் எடுத்து வைத்து வந்து நின்றது.

ஆச்சரியமும், குரூர சிரிப்பும் தோன்ற, ராதிகாவின் இடதுகையை தனது இடது கைகளில் பிடித்துக்கொண்டே,

எங்க வந்த? ம்ம்...?எங்க வந்த? என்றான்.

ம்மா...ம்மா...

உங்க அம்மா இங்க இருக்குதுன்னு யாரு சொன்னா?

ம்மா...ம்மா....

ஆ...ம்ம்ம்ம்.....என்று குழந்தை சிணுங்கியது.

யே பிள்ள யே சும்மா இரு,...என்று அதட்டினான் சதீசு..

 

உங்கம்மா இன்னும் வரலா டா..

சாப்பிட்டுயா நீ?

இல்ல  என்பது போல் தலையாட்டி கீழே குனிந்தான்..

போ உள்ளர போ...

அம்மா இருப்பாங்க..போயி சாப்பிடு போ...

 

பளீரென்ற வெளிச்சத்தில் அவன் கண்கள் மின்ன, ராதிகாவை நடத்திக்கொண்டு, படியேறினான். அந்த ஒன்றரை வயது பிஞ்சு, தனது இடது கையை பிடித்து, தடவதெரியாமல், தடவியவாறே, தத்தக்க, பித்தக்க என்று உள்ளேசென்று, அடுப்படியில், கிரைண்டரில் மாவு வழித்துகொண்டிருந்த வீட்டு அம்மாளை பார்த்தவாறு, கவுனை வாயில் வைத்துக்கொண்டு நின்றது. சதீசு கொள்ளப்புறம், மாரியை நோக்கி ஓடிவிட்டான்.

 

மாவு வழிப்பதற்காகவே பிறவி எடுத்து வந்திருப்பதாய்,  கண்ணும் கருத்துமாய் வழித்துக்கொண்டிருக்கையில், கதவோரத்தில் நிழலாடுவதை கண்டும், எந்த அதிர்வும் காட்டாமல், அவளை பார்த்தாள் வீட்டம்மா. 

தலை சொரிந்துக் கொண்டே கதவோரமாய் நின்றாள், ராதிகா.

 

போ, போயிட்டு தட்ட எடுத்துட்டு வா என்று சொன்னதுதான் தாமதம், குடு குடுவென்று ஓடிப்போய், பின்னால் கவிழ்த்து வைத்திருந்த தட்டை இரண்டு கைகளிலும் பிடித்துதூக்கிக்கொண்டு , கண்ணில் தேங்கிய நீரோடு வந்து நின்றது.

 

தொண்டையை கணைத்துக் கொண்டு, கைலியை அவிழ்த்து இறுக்கமாய் கட்டி, பின், தன் தொப்பை, கட்டிய இறுக்கத்தில் நோகாமல் இருக்க, மீண்டும் கைலியை அதற்கு கீழே தளர்த்தி விட்டுக்கொண்டே, அடுப்படி வாசலிற்கு வந்தான் மாணிக்கம். தட்டுடன் நின்றுகொண்டிருந்த ராதிகாவின் தலையில் ஓங்கி குட்டினான். ‘மடார்’ என்ற அந்த சத்தம், கிரைண்டர் ஓடிக்கொண்டிருந்தும், தெளிவாய் கேட்டது.

 

சும்மா இருங்க..அடிக்காதீங்க...

ஏதும் ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடப்போகுது..

மாவு வழித்தக் கையோடு நின்றுக் கொண்டு, சத்தம் வராது,  அதட்டலாய் மனைவி சொல்ல, அவளை கோணப்பார்வை பார்த்துக்கொண்டு குறும்பாய் சிரித்தான், மாணிக்கம்.


தட்டை கீழே வைத்துவிட்டு தலையில் கை வைத்து தேய்த்துகொள்ளும் ராதிகாவை பார்த்து, வலிக்குதா?  “போ, அம்மாட்ட சோறு வாங்கிக்க போ...” என்று மாணிக்கம், குழுந்தையின் கன்னத்தை கிள்ளினான். 


“ஆமா, போங்க நீங்க” 

அட ஒன்னுமில்ல பிள..

என்னமோ இந்த பிள்ளய பாத்தா அடிக்க தோணுது..

எவ்ளோ அடிச்சாலும், அழுத்தமா இருக்கு பாரேன்.. அழுகவே மாட்டேங்குது..


பாவங்க...இதுலாம் பாவம் ஆமா...போங்க சும்மா...என்று புருவம் முடிச்சு விழ, கம்மிய தொண்டையில் சொல்லிவிட்டு, கை கழுவினாள் வீட்டுக்காரம்மா.


ராதிகா, இங்க வாப்பா..என்று கூறி, தட்டில் மதியம் வடிச்ச சோற்றினை போட்டு, குழம்பை ஊற்றினாள்.


போ போய் உக்காந்து, சாப்பிடு..

ஐயா சும்மா உங்கிட்ட விளையாடுறாங்க...

சோற்றை பார்த்து பிள்ளை சிரித்துக்கொண்டே, பின்கட்டுக்கு நடந்து போனது.


பாத்திரம் விளக்கி கொண்டிருந்த மாரியிடம், நீட்ட, மாரி கையை கழுவிவிட்டு, தட்டை வாங்கி கீழே வைத்துவிட்டு, சதீசு என்று கத்தினாள். கொள்ளைப்புற வாசலில், தோட்டத்தில் விழுந்திருந்த சப்போட்டா பழம் ஒன்றை உரித்து வாயில் போட்டவாறே சதீசு வந்தான். அருகில் சோற்றை பார்த்தவாறு பிள்ளை உக்காந்து, தனது கையில் சோற்றுப்பருக்கையை எடுத்தது.


ரிக்ஷா மணி ஒலித்தது..

புள்ள வந்துட்டான்... என் தங்கமகன் வந்துட்டான்.. என்று வேவகமாய் முன்வாசலுக்கு நடந்தான் மாணிக்கம்.

ரவி..பாத்து புள்ளைய இறக்குடா..மெதுவா...

சரிங்கய்யா...

பச்சை டவுசரும்,  வெள்ளை சட்டையுடனும், தனது மகன், இறங்குவதை பார்த்ததுமே துணுக்குற்றான்.


என்ன டா புள்ள சோர்ந்து இருக்கான்..

என்னனு தெரிலங்கைய்யா...உடம்பு சுடுற மாறி இருக்குதுயா...

தொட்டு பாருங்க...

அம்மாகிட்ட சொல்லி மருந்து கொடுங்கய்யா.

ம்ம்...சரி நீ கொஞ்சம் இரு..

சவாரி இருக்கா..

இல்லங்கய்யா...

வண்டி இங்கயே இருக்கட்டும், இந்தா நீ போயிட்டு வடை, டீ ஏதும் சாப்பிட்டு வா...


சரிங்கய்யா என்று மடித்திருந்த கைலியை இறக்கிவிட்டு, கும்பிட்டு, ஐந்து ரூபாய் காசை வாங்கிக் கொண்டான்.


படியேறிய குழந்தை, அம்மாவை பார்த்ததும், சென்று, புடவையை பிடித்துக்கொள்ள, அம்மா சற்று கீழே குனிந்ததும், வயிற்றில் சாய்ந்துக்கொண்டான். 

என்னங்க ஜூரம் அடிக்குதே புள்ளைக்கு என்று கூற, மாணிக்கம், கையில் வைத்திருந்த புத்தகப்பையைவிருட்டென்று ஹாலின் ஓரமாய் வீசிவிட்டு, சேரில் உட்கார்ந்துக்கொண்டு, அருகில் புள்ளையை அழைத்து,

ப்பா...என்னப்பா பண்ணுது....என்று கேட்டான்.

கண்ணில் நீர் தேங்கியிருக்க, பிள்ளை ஒன்னும்மில்லப்பா என்று

அம்மாவை பார்த்தான்.

அம்மா, “என்னய்யா?” என்றவாறே அருகில் வந்தாள்..


பய சிறுக்கீக எவளாது கீழ ஏதும் தள்ளிவிட்டுறுச்சுங்களா, அடிகிடி பட்டுருக்கானு பாருப்பா என்றார் மாணிக்கத்தின் தாயார், தன் கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டு, முந்தானையை சரி செய்தவாறே.


யாரும் கீழ தள்ளி விட்டுடாங்களா?

இல்லப்பா என்று தலை அசைத்தான் குழந்தை.

மிஸ் அடிச்சாங்களா...

......

சொல்லுப்பா மிஸ் அடிச்சாளா?

பையன் கண்ணிலிருந்து நீர் பெருகியவாறு, நோட்டு கரெக்சனுக்கு, நிக்குறப்ப, தெரியாம மிஸ் கால மிதிச்சிட்டேன்பா.. அதுக்கு மிஸ் மொரச்சி பாத்து, ஷூ கால்ல மிதிப்பியான்னு கன்னத்த கிள்ளி இழுத்துட்டே இருந்தாங்க பா..

தெரியாம மிதிச்சிட்டேன், சாரி மிஸ்‍-ன்னு சொன்னேன், கன்னத்துல அறஞ்சுட்டாங்கப்பா...என்று அழுதான்.

 

கண்டாரோலி மவ....

பச்ச புள்ளய எப்புடி அடிச்சுருக்கா பாரு. கன்னம் சிவந்து போயிருக்கே இப்புடி...

அந்த தேவுடியா முண்டைய என்னனு கேட்டுட்டு வா மாணிக்கம்.


சும்மா இருங்க அத்த... நீங்க வேற..ஏங்க, பேசாமஇருங்க...அதுலாம் ஒன்னும் வேணாம். மாத்திர கொடுத்து படுக்க வச்சா சரியாயிடும்..

எழுந்து, கைலியை அவுத்து மீண்டும் இருக்கமா கட்டிக்கொண்டே, எம் புள்ள மேல கைய வைப்பா..நா பாத்துட்டு சும்மா இருக்கணுமா..

‘படிப்பும் வேணா..மயிரும் வேணா. ரயில்வே கேட்டுட்ட ஸ்கூல் நடத்துரானுங்க..வவுத்துகில்லாத பயதான் புள்ளைய அங்க சேப்பான். எனக்கு சரியா இருக்காதுன்னு தெரியும். நீதான் அங்க சேக்க புடுங்கி எடுத்த. 


“பாலம் வந்து, ஸ்கூல இடிச்சு தள்ளப் போறானுங்க. அந்த சிறுக்கி வேல இல்லாம பிச்ச எடுக்கப்போறா பாரு. போயிட்டு அவள என்னன்னு கேட்டுட்டு, முதல TC வாங்கிட்டு வரேன்.”என்று கொதித்து போய் பிதற்றியவாறு, பேண்ட் சட்டை மாட்டிக்கொண்டு மாணிக்கம் வெளியில் வர, ரவி டீ குடித்து விட்டு சரியாக வந்து சேர்ந்தான்.


ரவி, ஸ்கூலுக்கு போவுணும்..புள்ளைய மிஸ் ஒருத்திஅடிச்சிட்டாளாம்.

அதான்யா அப்பதே நினைச்சேங்க...என்னடா புள்ள சோர்வா இருக்குதுங்களேனு. ஏறுங்கய்யா...பெரிய வகுப்புலாம் வுடுறதுக்குள்ள அந்த பொம்பளய புடிச்சிடுவோம்.


ரிக்ஷாவில், கோவத்துடன் ஏறி உட்கார்ந்த மாணிக்கம், வாயில் கவுனை வைத்தவாறு கேட்டருகில் நின்ற ராதிகாவை பார்த்தான். வண்டி நகர்ந்தது.



காலிங் பெல் அழுத்த, கதவை திறந்த மனைவியிடம், பூவை நீட்டினார் மாணிக்கம்.

என்னங்க அதான் சாயுங்காலம் பாட்டி கொண்டு வருமே..

வரவழியில நம்ம ஜெயா மவ, ராதிகா  பாத்துச்சு..அம்மாவுக்கு கொடுங்கைய்யான்னு கொடுத்துச்சி..

“ஜூஸ் குடிச்சிட்டு போவோம் வாங்கைய்யான்னு கூப்பிடுது புள” என்று புன்னகைக்க, அவர் மனைவியும் புன்னகையோடு பூவை வாங்கிக்கொண்டாள்.


“இப்போ அதுக்கு இருபத்தைஞ்சு வயசு இருக்கும்ல” 

“ஆமா...ஆமா.. அதுக்கே ரெண்டு வயசுல மவ இருக்கு”. ஆயி மா(தி)ரியே மவளுக்கும் கண்ணு.  

நம்ம தம்பி, பாப்பவலாம் விசாரிச்சுது.

மவள கூட்டிக்கிட்டு ஒரு நாள் வீட்டுக்கு வர சொல்லிருக்கேன்.


*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.