புதன், 31 ஜூலை, 2024

மூன்றாம் பிறை - மம்முட்டி, கே.வி.ஷைலஜா

தன் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை வாஞ்சையோடு நினைவு கூர்ந்திருக்கும் விதம், மலைமீது நடக்குபோது சினேகத்தோடு ஸ்பரிசிக்கும் மழைத்துளிகளை ஒத்தது.

சிறிய எளிய புத்தகம். நல்ல மொழிப்பெயர்ப்புடனும் ஒருசில எழுத்துப்பிழைகளுடனும் காணப்படுகிறது. 20 தலைப்புகளில் அளித்திருக்கும் அனுபவமும், தகவல்களும் நன்றாக இருந்தன. அவரின் முதல் ரசிகனை நினைவுக்கூர்ந்த விதமாக இருக்கட்டும், நள்ளிரவில் அவர் உதவி செய்து சம்பாதித்த பணமாக இருக்கட்டும், நண்பனை சந்திக்கும் இடமாக இருக்கட்டும், அனைத்துமே திரைக்கதை காட்சிகள் போல அல்லது Slow motion-ல் காட்டப்படும் Montage சாங் போலவும் கண்ணில் உலவுகின்றன.


அவர் மதத்தில் கூறியிருக்கும் ரமலான் பண்டிகை ஒட்டிய நாட்களில் கொண்டாடப்படும் விழாவும் என் மதத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவும் ஒத்துப்போவது ஆச்சரியமாயிருந்தது. உடனே  மனதில் தோன்றியது ஆசிரியர் ஜெ கூறும் வரி - ‘ஆச்சர்யம் என்பது அறியாமையின் ஒரு வெளிப்பாடு’.அதை ஒட்டிய தகவல்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. 

செவ்வாய், 30 ஜூலை, 2024

அப்பா

அள்ளி எடுத்தாய்

அவள் அன்னை ஆனாள்

அள்ளி எடுத்தாய் 

என் தந்தை ஆனாய்

அள்ளி கொடுத்தாய்

எவர் தந்தையும் ஆனாய்

இன்று தள்ளி நின்று

எங்கள் காவலன் ஆனாய்!

ஞாயிறு, 28 ஜூலை, 2024

தம்பி

அப்பா…

அவன்

ஒவ்வொரு கணமும்

ஒவ்வொரு நொடியும்

கண் நிறைந்து, 

மனம் நிறைந்து, 

எங்கும் எதிலும் 

நீக்கமற நிறைந்து, 

இந்த 

அர்த்தமற்ற வாழ்வினை கடக்க 

என் கைப்பிடித்து 

வழி செய்கிறான். 

ஆம், அவன் இயற்கையோடு கலந்துவிட்டான் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன்..


என் தலை நிமிர்ந்தால் வானமாய்..

என்னை தாங்கிப்பிடிக்கும் நிலமாய்..

என் சுவாசக் காற்றாய்..

என் உயிர் இன்னும்

உடலுடன் ஒட்டியிருக்கிறது

என்று நான் உணர

என் இரத்த ஓட்டமாய் 

உடற்சூடாய்-நெருப்பாய்..


என் கண் ‘நீராய்’..

அவன்!

அவன் மட்டுமே

இயற்கையாய்

என்னை ஆட்கொள்கிறான்.


நான் என்னை

ஆசுவாசப்படுத்திக்கொள்ள

அனுதினமும் ஆயத்தமாகிறேன்..

இயற்கையாய் அவனை

பற்றிக்கொண்டு

இப்பயணத்தை தொடர்வதற்கு..


இப்பயணத்திற்கு முடிவுண்டு

அம்முடிவிலே நமக்கு நிறைவுண்டு

பாசத்திற்கு முடிவில்லை


என் வாழ்க்கை படத்தின்

இடைவேளையில் நான் மட்டும்.

இறுதியில்

அவன் வருவான்

தேர்க்கொண்டு

என்னை வான் ஏற்ற!!!


எவ்வாறு என் கழுத்தில்

நாண் ஏற 

காத்திருந்தானோ,

அவ்வாறு

காத்திருப்பான்

எனக்காக!!

தரிசனம்

விடியலில் எழுந்து 

அமர்ந்திருக்கிறேன்

என்முன் 

விரிசலுற்ற கண்ணாடி

விரிசலின் மத்தியில் 

என் கண்கள் சிக்கிக்கொண்டன

கண்முன் கண்டேன் 

என் மூதாதையரின் தரிசனம்!

சனி, 27 ஜூலை, 2024

காட்சி

இளஞ் செந்நிறத் தீற்றல்

பின் மாலை வானில்

முயல் ஒன்றின் வாயில்;

எங்கோ இருந்த

அந்த பறவைக்கு தெரிந்திருக்கிறது,

அதன் சிறகுகள் அதற்கு சாமரமாய்

சாவதானமாய் தங்கள் வருகையை

அறிவித்தவாறே இருவரையும் நோக்கி

பயணிக்கிறது;

முயல் ஒரு ஓரப்பார்வையை

தந்துவிட்டு திரும்புகிறது!