திங்கள், 8 ஏப்ரல், 2024

முழுமையின் பாதையில்

April 8, 2024


இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை பெரிதும் உற்சாகம் கூடவில்லை. பின்பு, செய்திகள் ஒவ்வொன்றாய் கட்டமைய ஆரம்பித்தது. முழுமையின் பாதை என்று கூறப்படும் Path of Totality-யில், இண்டியானாபோலீஸ் நகர் மற்றும் அதை சுற்றி, கவுண்டி என்று கூறப்படும் சில மாவட்டங்கள் அப்பாதையில் உள்ளடங்கிய வரைபடத்தை கண்டேன். உள்ளுக்குள் லேசாய் ஆசை குமிழிகள். 

தொடர்ந்து அதன் தொடர்பான செய்திகள் வாசித்தேன். இண்டியானா மாகாணத்தில் இதற்கு முன் இம்மாதிரியான கிரகணம் 155 வருடங்களுக்கு முன் தெரிந்திருக்கிறது. முழுமையின் பாதை என்றால் என்ன என்று தேடினேன். அதன் அர்த்தம் தெரிந்ததும் குமிழிகள் சிறு அலைகளாய். 




இணைய மன்றங்களில் 300,000 மக்கள் இண்டியானாபோலீஸ் வருவதாய் நகரச் செய்திகள். வழக்கமாக 90 டாலர்கள், 100 டாலர்களுக்கு கிடைக்கும் தங்குமிடங்கள் எல்லாமே குறைந்தபட்சம் 250 டாலர்களில்தான் ஆரம்பம் ஆனது. ஆனால், அது எல்லாமே பதிவாகிவிட்டது. மீதமிருந்தவையெல்லாம் 450 முதல் 750 டாலர்கள் என எகிறிக் கொண்டிருந்தது. 

இண்டியானாபோலீஸ், எங்கள் வீட்டிலிருந்து இரண்டு மணி நேர தொலைவில். கிரகணம் அன்று காலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது என்று எண்ணி, தங்குமிடங்கள் பார்த்தேன். அந்த பணத்திற்கு, இந்தியாவே போய்விடலாம் போலயே என்று மனம் அங்கலாயித்தது. 

பிரேம்,'இதுலாம், நம வாழ்க்கையில ஒரு வாய்ப்பு. பணத்த பாக்க கூடாது,பரவால. நாம மொத நாளே அங்க போயிடலாம். நா வேற‌ மதியானம் வர வேல செய்யணும். பார்க்கிங் வேற கிடக்காது' என்று கூறினாலும், எனக்கு மனதில் எங்கோ ஓர் நம்பிக்கை. 'நம்ம காலையில போயிட முடியும். நா வண்டி ஓட்டுறேன், நீ வேல பாத்துட்டே வா' என்று கூறி, இன்றைய நாளிற்கு தயாராகி விட்டோம்.

இண்டியானாபோலீஸில் உள்ள பட்லர் பல்கலைக்கழகத்திற்கு சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். அவர்கள் தளத்தில் அங்குள்ள ஹால்கோம் கண்காணிப்பகம் மற்றும் கோளரங்கத்தின் முன், பொதுமக்களுக்கு இலவச அனுமதி என்று போடப்பட்டிருந்தது. சூரிய கிரகணம் கண்ணாடிகள் 2 டாலருக்கு விற்கப்படும் என்றும் செய்தியிருந்தது. அமெரிக்கா முழுவதும் உள்ள 13,000க்கும் மேற்பட்ட பொது நூலகங்கள் 5 மில்லியன் கிரகண கண்ணாடிகளை இலவசமாக வழங்குகின்றன என்ற செய்தியை முன்கூட்டியே படித்து, என் நூலகத்தில் கண்ணாடி வாங்கி வைத்து விட்டேன்.







காலை எந்த போக்குவரத்து நெரிசலிலும் மாட்ட‌வில்லை. பயணத்தில் எதுவும் பேச தோன்றவில்லை. மனம் கிளர்ச்சியுற்று இருந்தது. என் 'ம்'‍_மை எதிர்ப்பார்க்காமல் என்னிடம் ஒருவர் பேசிக்கொண்டு வரவேண்டும். அவர் பேச்சு என்னை ஆசுவாசமாக்க வேண்டும் என்று தோன்றியது. பதிவிறக்கத்திலிருந்து, ஆசிரியர். ஜெ_யின் 'விடுதலை என்பது என்ன?' என்ற உரையை ஒலிக்கச் செய்து, குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர்ந்தோம்.

பல்கலைக்கழக வளாகம் முழுவதும் கார்களால் நிரம்பியிருந்தது. சாலை ஓரங்களிலும் வரிசையாக கார்கள். இருப்பினும், நம்பிக்கை தளராது கோளரங்கம் நோக்கி காரை செலுத்தி, அதன் அருகிருந்த‌, பார்க்கிங் கட்டிடத்துள் சென்று நிறுத்திவிட்டு, அரங்க நுழைவாயிலுக்கு வந்து சேர்ந்தோம். 

கிரகண நேரத்தில் ஏதும் உணவு உண்ணக்கூடாது என்ற ஆண்டாண்டுக்கால பெற்றோர் போதனையை கருத்தில் கொண்டு, மதியம் 1:40 மணிக்கு முன்னரே, காரிலேயே, வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவு உண்டு, நீர், பழச்சாறு என‌ அருந்திவிட்டு இறங்கியதில், அடி வயிறு முட்ட, கோளரங்கத்தில் இருவரும் முதலில் சென்ற இடம், கழிப்பிடம். 

வயிறு இளக, இப்போது, வான நிகழ்வுக்கு தயாராகி முதலில், அங்கிருந்த அரங்கில் நுழைந்து அங்கு திரையில் தெரிந்த பகுதி கிரகணத்தை (Partial eclipse) கண்டோம்.




வெளியில் வந்து, ஏதுவாய் ஓரிடத்தில் அமர்ந்து, கண்ணாடியை போட்டுக்கொண்டு, ஒருவாறு கலவை உணர்வுடன் வானை நோக்கினேன். அப்போது கிரகணம் ஆரம்பித்து ஒரு இருபது நிமிடங்கள் ஆகியிருந்தது.  அந்த நிலையில் பார்ப்பதற்கே பிரமிப்பாயிருந்தது. சூரியன் மற்றும் சந்திரனின் அளவு மற்றும் தூரம் சரியாக ஒரே விகிதத்தில் இருக்கும் ஒளியியல் மாயையால் (Optical Illusion) மட்டுமே இது நிகழ்கிறது. சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது மற்றும் நம்மிடமிருந்து 400 மடங்கு தொலைவில் உள்ளது. 

கண்ணாடி வழி தொடர்ந்து 3 நிமிடத்திற்கு மேல் பார்க்கக்கூடாது, இடைவெளி விட்டு பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்ததால், அங்கிருந்த மக்களை அவதானித்திருந்தபடி, இடைவெளி விட்டு விட்டு வான் நோக்கியிருந்தேன்.

எவ்வளவு நேர்த்தி ஒவ்வொரிடமும். ஒரு நிகழ்வுக்கு வருவதற்கு எப்படியெல்லாம் தயார் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள், அவர்களுக்கு அறிவியல் ஊக்கம் தரும் வண்ணம், அட்டையில் ஓட்டையிட்டு 'முள் துளை ஹாலோகிராம் பிரதிபலிப்பு'  (Pin hole reflection) மூலம், கிரகணத்தை காட்டிக்கொண்டிருந்தனர். பெற்றோரை கூட்டி வந்தவர்கள், குடும்பத்திற்கே தேவையான மடிக்கக்கூடிய நாற்காலிகள், துண்டுகள், நிழற்குடைகள் என சகல ஏற்பாட்டோடு வந்திருந்தனர். இளஞ்ஜோடிகள் கைக்கோர்த்து அருகமர்ந்து வான் நோக்கியிருந்தனர். இளவட்டங்கள் சிறு பந்து கொண்டு கால்பந்து ஆடியப்படியும், சிலர் குளிர்பானங்கள் அருந்தியபடி உலவினர். 








சிறு வயதில் ஒருமுறை கிரகண சமயத்தில், சித்திரப்பட்டியில் எனது அத்தை வீட்டில் இருந்தோம். அப்போது என் சித்தி கர்ப்பமாக இருந்தார். எனது அப்பாயி, கிரகண சமயத்தில் சாப்பிடவோ, சிறுநீர் கழிக்கவோ, உடம்பில் எங்கும் அரித்தால், சொறியவோ கூடாது என்று சொல்லிவிட்டார். எனக்கா, சித்தியின் அவஸ்தையை பார்க்க பாவமாகவும், அப்பாயிடம் அவர் கடுப்பாகி திட்டுவதையும்,  சலுகை கேட்பதையும் பார்க்க வேடிக்கையாகவும் இருந்திருக்கிறது. அப்போது, என் அம்மா, என் தம்பி வயிற்றில் இருந்தபோது அவ்வாறு கட்டுப்பாடுடன் இருந்ததை கூறியும், வேறு வேடிக்கை பேச்சுகள் பேசியும் சித்தியை திசை திருப்பிக்கொண்டிருந்தது நினைவிலாடியது.

மேலும் அம்மா, தண்ணீர் தவலை, சாதம், மோர் என அனைத்திலும் தர்ப்பையை போட்டு வைத்திருப்பாள். கிரகணம் முடிந்ததும் தலையில் நல்லெண்ணைய் வைத்துவிட்டு, குளிக்க செல்ல சொல்வாள். அதன்பின் தான் உணவு.

ஒலிப்பெருக்கியில் நிலை விவரங்களை அறிவிப்பு செய்த வண்ணம் இருந்தார் ஒருவர். ' நான் சொல்லும்போது, நீங்கள் கண்ணாடியை கழற்றிவிட்டு தைரியமாக வான் நோக்குங்கள். அந்த தருணத்தை முழுதனுபவியுங்கள்' என்றார் ஆங்கிலத்தில். நான் எழுந்து சென்று, தொலை நோக்கி வழி காண நின்றிருந்தேன். அங்கு ஒரு அண்ணன், தங்கச்சி குதித்தாடி விளையாடி கொண்டு இருந்தனர். 'எதுக்கு இப்படி சின்ன பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு வராங்க, இதுங்க பாட்டுக்கு விளையாட்டா, வெறும் கண்ணுல மேல பாத்துட்டா என்ன பண்றது என்று நான் அடித்து கொள்கையில், அந்த பையன், அவன் அம்மா அருகே சென்று கண்ணாடி எடுத்து பொறுப்பாய் மாட்டிக்கொண்டு, வான் நோக்கி நின்றான், நான் எதிர்திசை நோக்கி திரும்பிவிட்டேன்.







இந்த நிகழ்வு தருணத்தில்,  Vivaldi - The Four Seasons (மேக்ஸ் ரிக்டரால் மீண்டும் தொகுக்கப்பட்டது) தொகுப்பில் இருந்து இசை ஒலித்துக்கொண்டிருந்தது. நம் இசைஞானியின் எந்த இசை இதற்கு இணையாய் தோன்றுகிறது என்று பிரேமிடம் கேட்டேன். 'இந்த இசைக்கு பொருத்தமா  மெளன ராகம் - கார்த்திக் சேசிங் சீன் BGM_மும், இந்த தருணத்துக்கு பொருத்தமா, தலைவரின் 'How to Name it'_ம் தோணுது' என்ற பதில் வந்தது. பொருத்தமாக தோன்றியது.

'You can now remove the glasses and watch the sky' என்று கூறியதும், உள எழுச்சியில் எழுந்து,கண்ணாடியை கழற்றிவிட்டு, முதலில் பிரேம் நின்ற‌ திசை திரும்பி நோக்க, அவனும் என்னை பார்த்துக் கொண்டிருந்தான். பின், இருவரும் முறுவலுடன், வான் நோக்க, வாயடைத்து போனேன். 

மினுங்கும் தங்க விளிம்புடன் கூடிய கருப்பு ரத்தின கல்லாய்,  சூரியனும், அதன் மேல் நிலவும். அந்த ஆதவனுக்கு அணிகலன் போல் விண்ணிலவு. 

அருகில் வெள்ளி முளைத்திருந்தது. பூரண அழகுக்கூடிய கரிய மங்கையின் கன்னத்தில், கண்படக்கூடாதென்று , வெள்ளி பொட்டு வைக்கபோக, அது பேரழகானது. சுற்றத்திலும், சுயத்திலும் ஒரு வித அமைதி . பிரபஞ்சத்தின் உயர் ஆற்றல் முன், வாய் திறக்க முடியா பேரமைதி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.