ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸே (மொ.பெ. திருலோக சீதாராம்)

 எனக்கு எப்போதும் உள்ள ஒரு கேள்வி.நான் ஏன் துன்பப்படுகிறேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? இதோ இவ்வரியை எழுதும்போதும் கூட என்னுள் அக்கேள்வி நீர்க்குமிழி போல் கொப்பளிக்க காண்கிறேன். 

உண்மையில் எனக்கு மட்டும்தான் துன்பம் நிகழ்கிறதா? அல்லது என் அகவுலகை மட்டுமே என்னால் காணக் கூடுவதால் ஏற்படும் மாயையா? சரி, அந்த துன்பங்களுக்கு பின் நான் வாழ்வில் ஒரு கணம் கூட மகிழவில்லையா என்ன? மகிழ்ந்திருக்கிறேன், நிறைந்திருக்கிறேன்.இருந்தும் நடந்தேறிய நிகழ்வுகளும், அந்த நிகழ்வுகள் பறித்த உறவுகளும், அந்த உறவுகள் கொடுக்கும் உணர்வுகளும் துன்பத்தை ஏற்படுத்துகின்றன. 


எண்ணிப்பார்த்தால், அவர்களுடனான ‘எனது’ தருணங்களுக்கும், ‘நான்’ அவர்களுடன் இருக்கும்போது அடைந்த இன்பங்களுக்கும், அந்த உறவுகள் ‘எனக்குத்’ தந்த ஆசுவாசத்திற்கும் 

பழகியிருக்கிறது மனம். ‘நான்’, ‘ நான்’, ‘நான்’ என்று மட்டுமே எண்ணக்கூடிய மனம். அந்த ‘நான்’ யார்? இந்த பிறவி எதற்காக? நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் இங்கே? தினம் தினம் எழும்பவும், ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அன்றாடத்தில் உழலவும், உண்ணவும் , உறங்கவுமா என் வாழ்க்கை? எனக்கு அது மாபெரும் சலிப்பை தருகிறது. நான் எதற்காக இங்கே இருக்கிறேன், எனக்கு என்ன தேவை? தேவையா? தேடலா? தேடல் என்ன? என்று யோசிக்கும் என்னை போன்ற ஒருவனை வரலாற்றில் இருந்து எடுத்து அருகமர்த்தி அவன் செய்த பயணம் எப்படியிருந்திருக்கும் என்று எழுதி பார்த்திருக்கிறார் ஆசிரியர். அவன் பெயர் சித்தார்த்தன்.


பிறர் வழியாய் கிடைப்பது அறிவு. உன்னிலிருந்து எழுவது ஞானம் என்பதை உணர்த்துவதற்காய், சித்தார்த்தனுடன் கோவிந்தனும் நண்பனாய் பயணப்படுகிறான். இருவரும் ஒரு தேடலை நோக்கி கிளம்பினாலும், தேடலுக்கான வழிகள் இருவருக்கும் வெவ்வேறு. அந்த வேற்றுமை வெளிப்பட்ட கணத்தில், இருவரும் இரு வேறு வழியில் பயணப்படுகிறார்கள். வாழ்வின் பாதையில் இருமுறை இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள், இருமுறையும் சித்தார்த்தனே கோவிந்தனை அடையாளம் காண்கிறான். காரணம், சித்தார்த்தன் தன்னகத்தில் நிகழ்வதிலும், புறத்தில் நிகழ்வதிலும், தானும் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறான். கோவிந்தன், தன் மார்க்கம் கற்பித்த முறைகளை பின்பற்றுபவனாய் மட்டுமே, ஒருவிதமான செயல்பாடு என்றளவிலேயே சிறுத்து அடைந்து கொள்கிறான்.புறத்தோடு அகத்தை பொருத்தியிருக்கவில்லை. ஆதலால் ஏதும் புலப்படவில்லை.


சித்தார்த்தனுக்கு தன் இலக்கை விரைவாய் அடைய வேண்டும் என்று எந்தவித பதற்றமும் இல்லை. ஓடும் நதிப்போல, வாழ்க்கை கடத்திக் கொண்டு போகும் வழியில் அவன் சென்று கொண்டிருக்கிறான். அந்த பயணத்தில் அலைக்கழிக்கப்படுகிறான். இடைவிடா ஒரு குரல் அவனுளிருந்து எழுந்து உந்தியது, ஒரு தருணத்தில் உறங்கி சோம்பியிருந்ததும் நடந்ததுதான். ஆனால், அது நடக்கும் முன்னம் அவன் உள்ளொளியின் தீண்டல், அவனவளில் சேர்ந்திட, அவனால் அவளில் முளைத்த தேடலும், அவன்பால் அவளுறைந்த துகள்களும், அவனுக்கு மீண்டும் அவ்வொளியை தூண்ட, அவன் தன் தேடலின் வழி நோக்கி மீண்டும் பயணப்படுகிறான். எங்கும், எதிலும் அவன் இப்படியிருந்துவிட்டோமே என்று நினைத்து துன்பப்படவில்லை. வாழ்க்கையை எதிர்கொள்கிறான்.


அவன் துன்பம் என்று உணர ஆரம்பித்த தருணமும் வருகிறது. தாளா துயர் கொள்கிறான். அதை மாற்றிவிட ஏதேதோ முயல்கிறான். அச்சமயம், அதற்கொத்த துன்பத்தை, வாழ்வில் அடைந்து மீண்ட ஒருவனால், அவன் மீண்டும் உந்தப்படுகிறான். தன் தேடலை நோக்கி குவிக்கப்படுகிறான். தன் ஞானத்தை அடைகிறான். பிறவியின் ஞானத்தை. இந்த ஞாலத்தின் ஞானத்தை. நதியின் ஓட்டத்தில், அதன் ஒலியில், அந்த ஒலி குவித்த சிந்தையில், அந்த சிந்தையின் ஒருமையில். இங்கு எல்லாம் ‘ஒன்றே’ என்ற மெஞ்ஞானத்தை அடைகிறான். புடவியின் மாபெரும் ஒத்திசைவு அவனுக்கு புலப்படுகிறது. அண்டத்தில் தன் அனுவையும், அனுவில் இவ்வண்டத்தையும் காண்கிறான். நித்திய மறுவாழ்வு.


ஒரு பள்ளத்தில் இருந்து மேடேறும்போது, வானத்து வளைவின் ஒரு புறமிருந்து மறுபுறம் செல்லும் அந்த விமானத்தின் பயணம் அது. அவன் மேடேறும் கணம் அதை தரிசிக்கிறான். அதை தரிசித்த கணம் மேடேறுகிறான்.


ஒரு கேள்வி. அவன் அடைந்ததுதான் ஞானம் என்பதை எப்படி உணர்ந்தான்? எப்படி நம்பினான்?- அது அப்படித்தான். அது அவன் அடைந்த ஞானம். அது எதுவென்று காண நான் என் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 


ஒரு வேளை அதை உணராமலும் போகலாம். தடுமாறலாம். தாழ்வுற்று அரற்றலாம், கோவிந்தனை போல். ஆனால், அத்தருணத்தில் அதை நான் அடைய ஒரு புற உந்துதல் கிடைத்தால், பருப்பொருளென பிரம்மம் வந்து அதை எனக்கு உணர்த்தினால், இங்கு சித்தார்த்தனுக்கு கிடைத்த வாசுதேவன் போல், கோவிந்தனுக்கு கிடைத்த சித்தார்த்தன் போல், எனக்கு கிடைக்கப் பெற்றால் அது என் நல்லூழ் எனவே கொள்வேன்.